திக்குத்தெரியாத காட்டில்…

இந்த ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் நுழைய உள்ளவர்களில் ஏறத்தாழப் பாதிப்பேர் தமிழ் வழியாகப் பள்ளிக் கல்வியை முடித்தவர்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒற்றைச் சாளர முறையின் வழியாகச் சேர உள்ள மொத்த மாணாக்கர்களில் 43.5 % பேர் தமிழ்வழியாகப் பள்ளிக் கல்வியை முடித்தவர்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 26.34 சதவீதம் தான்.  
43.5 % பேரும் தங்கள் பொறியியல் படிப்பை வெற்றிகரமாக முடித்து எதிர்காலத்தைச் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம் ; அவர்களது பெற்றோரின் விருப்பமும் அதே.  இன்னும் சொல்வதானால் இந்தச் சமூகத்தின் வேண்டுகோளும் கூட அதுதான். ஆனால் அது நடக்கப் போவதில்லை. சேர்ந்த அத்தனைபேரும் வெற்றிகரமாக வெளியேறுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அப்படி வெளியேறவில்லை என்பதே நடைமுறை உண்மையுங்கூட.

தொழிற்கல்விக்குள் நுழைந்தவர்களைப் பற்றிப் பேசும் நமது ஊடகங்களும், கல்வி நிறுவனங்களும் படிப்பை முடிக்காமல் போனவர்களையும், படிப்பு கெட்டுப் போனதால் திசைமாறியவர்களையும் பற்றி நமது சமூக நிறுவனங்களும் திட்டமிடல் பொறுப்பாளர்களும் கவலைப்படுவதில்லை; கண்டு கொள்வதுமில்லை. நமது பொதுப்புத்தியோ அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதி ஒதுக்கவும் செய்கிறது. இப்படிப் பட்ட புறக்கணிப்பால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். அவர்கள்  இந்தச் சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அண்மையில் ஊடகங்கள் வழியாகக் கவனத்திற்கு வரும் குற்ற நடவடிக்கைகளின் பின்னால் தொழிற்கல்வி மாணவர்களும், பட்டதாரிகளும், பாதியில் நிறுத்தியவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காவல் துறையின் ஆவணங்கள் சொல்கின்றன.  

பள்ளிக் கல்வியை முடித்துவிட்டுத் தொழிற்கல்வியைப் பெறும் ஆசையோடு பெரும்பணத்தைக் கட்டணமாகச் செலுத்திய பிறகும் படிப்பை முடிக்காமல் போவதின் காரணங்கள் பலவாக இருக்கக் கூடும்.  தனிநபர் சார்ந்த காரணங்களுக்கும் பலவாக இருக்க, நமது அரசும், கொள்கை வகுப்பாளர்களும் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஒரு நடைமுறையும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. தனிநபர் சார்ந்த காரணங்களுக்கே ஆலோசனைகள் வழங்கி வழி நடத்திட இன்று கல்வி நிலையங்கள் ஆலோசனை மையங்களை நடத்திக்  கொண்டிருக்கின்றன.  அதைவிடவும் கூடுதலான கவனத்துடன் செய்ய வேண்டியது மாணாக்கர்களின்  தொடர்பு மொழிப் பிரச்சினையாகும். 

பள்ளிக் கல்விக்குப் பிந்திய தொழிற்கல்விப் பட்டங்கள்  நூறு சதவீதம்  ஆங்கிலவழிப் பாடங்களாகவே கற்பிக்கப்படுகின்றன. படிப்பதற்கான மொழி மட்டுமே ஆங்கிலம் என்று நினைத்து விட வேண்டாம். பொறியியல் போன்ற தொழிற்கல்வியைத் திறம்பட முடித்துவிட்டு வெளியேறும் பட்டதாரிகளுக்குப் பணிகளை வழங்கத் தயாராக இருக்கும் நிறுவனங்களின் தொடர்புமொழியும் ஆங்கிலம் தான்.  தமிழக மாணவர்களின் ஆங்கில மொழிப் பயன்பாடு அவர்களின் விருப்பமின்றிக் கூடிக் கொண்டே இருக்கிறது.  இதைச் சரியாகப் புரிந்து கொண்ட சில கல்வி நிறுவனங்கள் ஆங்கில மொழியைத் தொடர்பு மொழி என்ற அளவில் கற்பதற்கான வழிகளை உருவாக்கி அதையும் வெற்றிகரமான வியாபாரமாக நடத்திக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் வணிகமாகப் பார்க்கும் போக்கு மிக மிக ஆபத்தானது. தமிழ் நாட்டு மாணவர்களின் மொழிப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வை முன் வைப்பதே அரசுக்கு ஆலோசனை வழங்கும் கல்வியாளர்களின் முக்கியக் கடமை மட்டும் அல்ல; அவசரக் கடமையும் கூட.

ஆங்கில வழியில் பாடங்களைப் படிக்கும் ஒரு மாணவர் பள்ளிக் கல்வியில் பன்னிரண்டு ஆண்டுகள் தாய் மொழியாகிய தமிழையும் ஒரு பாடமாகவும் படிக்கிறார். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் அவர்கள் நினைக்கிற ஒரு விசயத்தை அல்லது கற்ற பாடங்களைத் தமிழில் சொல்லவோ, எழுதவோ இயலாதவராகவே  வெளியேறுகிறார். இதே நிலை தான் தமிழ் வழிக் கல்வி கற்கும் மாணாக்கர்களிடமும் இருக்கிறது.பாடங்கள் அனைத்தையும் தமிழ் வழியில் படிக்கும் அவர்கள் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் பன்னிரண்டு ஆண்டுகள் படித்த பின்பும் அந்த மொழியைத் தொடர்பு மொழியாகக் கூடப் பயன் படுத்த முடியாத நிலைதான் இருக்கிறது

இந்தப் பிரச்சினை வெறும் மொழிப்பிரச்சினை என்ற எல்லையைத் தாண்டி தரமான கல்வியைத் தரமுடியாமல் தவிக்கும் உயர்கல்வியின் தலையாய பிரச்சினையாகக் கவனிக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வியில் முதன்மைப் பாடங்களான கணிதம், உயிரியல், வேதியியல், இயல்பியல் போன்றவற்றிற்குத் தரும் முக்கியத்துவத்தை விடவும் கூடுதல் கவனத்துடன் மொழிக் கல்வியைக் கற்பிக்க வேண்டும்.

நடைமுறையிலோ இதற்கு எதிரான நிலையே இருக்கிறது. மொழிக் கல்வியும் மொழி ஆசிரியர்களும் இரண்டாவது மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதே நிலவரம். பாடங்களை நடத்துவதை விட வேறு விதமான பணிகளே அவர்களுக்கு பள்ளியில் காத்திருக்கும். அவர்களும் தங்கள் கல்விப்பொறுப்பை உணராமல், நிர்வாகம் ஏவும் வேலைகளைச் செய்யும் பொறுப்பையே பெரிதாக என்ணிச் செயல்படுகிறார்கள். மொழியைக் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் ஏராளமான புதிய உத்திகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அதனை நமது பள்ளிகளின் மொழி ஆசிரியர்கள் அறிய வேண்டும். அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு நமது மொழி ஆசிரியர்கள் அனுப்பப் பட வேண்டும்.

தாங்கள் கற்ற கல்வியை- பாடங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லக் கூடியவர்களாக எழுதக் கூடியவர்களாக மாணவர்களை மாற்றுவது என்பது மொழி ஆசிரியர்களின் முக்கியமான கடமை. அக்கடமை அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கான கடமை அல்ல; இந்தச் சமூகத்திற்கும் தேசத்தின் எதிர்காலத்திற்கும் அவர்கள் செய்ய வேண்டிய கடமை. அவர்களைச் செய்யத் தூண்ட வேண்டியது கொள்கை வகுப்பாளர்களின் கடமை என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
பன்னிரண்டு வருடங்கள் தாய்மொழியின் வழியாக- தமிழ்  வழியாகக் கல்வியைப் பெற்றுக் கொண்டு உயர்கல்விக்காகக் கல்லூரிக்குள் அதிலும் பொறியியல் , மருத்துவம் போன்ற தொழிற்கல்வி வகுப்புகளுக்குள்  அடியெடுத்து வைக்கும் தமிழ் நாட்டு மாணவன் ஒருவனின் நிலையைச் சரியாகச் சொல்வதற்கு  எனக்குப் பாரதியின் இந்தக் கவிதைத் தலைப்பு தான் நினைவுக்கு வந்தது.

பாடங்களைப் பயிலும் மொழி எதுவாக இருக்கிறதோ அதுவே தேர்வுகள் எழுதும் மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதைப் பயிற்று மொழிப் பிரச்சினையாகப் பார்க்காமல், மொழிக்கல்வியின் பிரச்சினையாகவும் கவனிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன்று பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு பட்ட வகுப்பிற்கும் மூன்று பாடத்திட்டக் குழுக்கள் பாடங்களைத் தயார் செய்கின்றன.

பகுதி -I தமிழ் பாடத்திட்டக்குழு, பகுதி -II ஆங்கிலமொழிப் பாடத்திட்டக் குழு, அப்பட்டத்தின் முதன்மைப் பாடத்திட்டக்குழு என்பன தான் அவை. இம்மூன்று குழுக்களும் கூடும் நாட்களும் வேறு வேறு; பாடங்களைத் திட்டமிடும் நோக்கங்களும் வேறு வேறு. வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு நோக்கங்களுடன் கூடித் தயாரிக்கப் படும் பாடத்திட்டங்கள் வேறு வேறு வகையான பாதையில் தான் செல்லும். அதற்குப் பதிலாக இம்மூன்று குழுக்களும் இணைந்து ஒற்றை நோக்கத்துடன் பாடத்திட்டத்தைத் தயாரித்தால் அடைய வேண்டிய இலக்கைச் சுலபமாக அடையும் வாய்ப்புக்கள் உண்டு.

மொழிக்கல்வியில்  ஆங்கிலேயர்கள் முன் வைத்த நோக்கங்களே இன்னும் நோக்கங்களாக உள்ளன. ஒரு பட்டப்படிப்பை முடிக்கும் இந்தியன், ஆங்கில  மொழியைப் பயன்பாட்டு மொழியாகக் கற்பதோடு  ஆங்கில இலக்கியத்தின் சிறப்பான பகுதிகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அதன் வழியாக ஆங்கிலேயர்களின் மேலான பண்பாட்டை அறிந்து கொள்வான். அறிந்து கொண்ட நிலையில்  இந்தியர்கள் அவர்களின் ஆதிக்கத்தை ஒத்துக் கொள்வார்கள் ; எதிர் மனநிலைக்குச் செல்ல மாட்டார்கள் என்பது மறைமுக நோக்கமாக இருந்தது.
அந்த மறைமுக நோக்கத்தை நமது கல்வி முறை இன்றும் ஒத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் தொடர்பு மொழியாக வேண்டும் என்பதில் இன்று மாற்றுக் கருத்துக் கூற முடியாது; ஆனால் ஷேக்ஸ்பியரும் மில்டனும் தேவை என்று சொன்னால் அதை அபத்தம் என்று தான் சொல்ல வேண்டும். ஆங்கில இலக்கியத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்காத ஒரு மாணவர் உலக இலக்கியத்தைக் கற்க விரும்பினால் அவர் நாட வேண்டியது நூலகங்களாகத் தான் இருக்க வேண்டும்; வகுப்பறைகளாக இருக்க வேண்டியதில்லை.

இதே அணுகுமுறையைத் தான் தமிழ் மொழியைப் பயிற்றுவிப்பதிலும் பின்பற்ற வேண்டும். ஆங்கில வழியாகவோ, தமிழ் வழியாகவோ தான் கற்ற கருத்துகளை- செய்திகளை- தமிழ் வழியாகப் பேசவும், எழுதவும் கூடியவராக மாற்றும் விதத்தில் தமிழ் மொழிக்கல்வி அமைய வேண்டும். அவர்களுக்குச் சங்க இலக்கியத்தின் சில பகுதிகளையும் சிலப்பதிகாரத்தின் ஒரு காதையையும் தேவாரப் பதிகங்கள் சிலவற்றையும் கற்றுத் தருவதால் அவர்களுக்கு தமிழ் இலக்கிய ஆர்வம் எதுவும் வந்து விடாது. மொழிக் கல்வியை முழுமையாகக் கற்பிக்கும் நிலையில் - மாணாக்கர்களின் முதன்மைப் பாடங்களோடு தொடர்புடைய மொழிப் பாடங்களாகக் கற்பிக்கும் போது தான் இவற்றின் முழுப் பயனும் மாணாக்கர்களுக்குப் போய்ச் சேரும். அப்படியில்லாத மொழிப்பாடக் கல்வி தொடர்ந்து விழலுக்கு இறைக்கும் நீர்தான்.


கருத்துகள்

ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கருத்து, கட்டுரை அய்யா
ஆனால் எதார்த்த வாழ்வில், மென்பொருள் நிறுவனங்கள் அனைத்தும் வெளிநாட்டு (ஆங்கில மொழி நாட்டு) நிறுவனப் பணிகளை நம்பியே உள்ளன. எனவே ஆங்கில மொழியில் புலமை இல்லாதவர்கள் வேலைக்கான நேர்முகத் தேர்வில் வெற்றி பெறல் கடினம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்