தமிழில் எழுதப்பெற்ற இந்தியக்கதைகள்: அம்பையின் சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை
அம்பைக்குச் சாகித்ய அகாதெமி விருது எனது பட்டப்படிப்பின்போது (1977-80) இலக்கிய இதழ்கள் வாசிப்புத் தொடங்கியது. தொடக்கம் முதலே எனது வாசிப்புக்கான கதைகளை எழுதித் தந்துகொண்டிருப்பவர் சி.எஸ். லட்சுமி என்ற அம்பை. அவருக்குக் கடந்த (2021) ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பெற்றுள்ளது. ‘சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதைத் தொகுதியைக் குறிப்பிட்டு இவ்வாண்டுக்கான விருதை அறிவித்துள்ளது அகாதெமி. அறிவிக்கப்படும் ஆண்டுக்கு முன்னால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் வந்துள்ள நூலே விருதுக்குத் தகுதியானது என்ற விதியொன்று இருப்பதால், இப்படி அறிவிக்கப்படுகிறது என்பதைத் தவிர, குறிப்பிடப்படும் நூலுக்குப் பெரிய காரணங்கள் எதுவும் இருப்பதில்லை என்பதைப் பலரும் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றனர். நானும் சில வருடங்களில் சுட்டி எழுதியுள்ளேன்.