மொழியின் பால் விளையாட்டு
1990- களில் பல்வேறு விவாதங்கள் நடந்தன. குறிப்பாகத் தலித் இலக்கிய உருவாக்கங்களின் போது தலித் மொழியின் அடையாளங்கள் பற்றியும், பெண்ணிய இலக்கிய உருவாக்கத்தில் பெண் மொழியின் அடையாளங்களை உருவாக்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டன. நீண்ட மரபுகொண்ட தமிழ்மொழியின் இருப்பில் இயல்பாகவே ஆணின் மொழியே பொதுமொழியாக மாறியிருக்கிறது; பெண்களின் மொழி காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறது என்ற விவாதங்களும் வைக்கப்பட்டன. அத்தகைய விவாதங்கள் இப்போது இல்லை.
இப்போது திரும்பவும் பெண் இலக்கியம், பெண்களின் உரிமைகள், பெண்களின் சமத்துவத்திற்கான கருத்துநிலைகள் போன்றன பேச்சாக மாறியிருக்கின்றன. ஆனால் முன்னெடுத்துப் பேசுகின்றவர்கள் பொதுத்தளங்களையே விவாதிக்கின்றன என்பதாகத் தோன்றுகின்றன. மொழிக்குள் பாலடையாளம், பெண்களின் சிந்திக்கும் முறைமைகள், பெண்களுக்கான சொல்முறைகள் போன்றனவற்றில் கவனம் செலுத்தவில்லை. பின்வரும் குறிப்புகள் பாலடையாளத்தைக் காட்டும் மொழிக்கூறுகள் பற்றிப் பேசுகின்றது.
பெண்ணின் எதிர்நிலை ஆண்.பெண்ணும் ஆணும் இரண்டும் பால்சுட்டும் பொதுப் பெயர்கள். பால் சுட்டும் பொதுப்பெயர்கள் பாத்திரத்தின் பெயராக மாறும்போது எதிர்ப்பாலுக்கான பாத்திரம் ஒன்றை மொழி உருவாக்கிக் கொள்கிறது. சில பாத்திரங்களுக்குப் பொதுச்சொற்களே போதும் என்றும் மொழி கருதுகிறது. குழந்தை என்ற சொல் பாலடையாளம் இல்லாத பொதுச்சொல். ஆனால் சிறுமியும் சிறுவனும் பாலடையாளங்கள் கொண்ட சொற்கள். தமிழ் மொழியில் பெண்பால் விகுதிகள் எனவும் ஆண்பால் விகுதிகள் எனவும் சொல்லின் இறுதி நிலைகள் இருக்கின்றன. அவ்விறுதிநிலைகளைக் கொண்டு தமிழின் பெயர்ச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன.
பொதுவெளியில் பொதுச் சொற்களால் அறியப்படும் பாத்திரங்கள் குறிப்பான வெளிகளாலும் குறிப்பிட்ட காலப்பின்னணியில் வெவ்வேறு பாத்திரங்களாக மாறுகின்றனர். சிறுமியாகவும் சிறுவனாகவும் அறியப்படும் பாத்திரங்களே குடும்பப் பரப்பிற்குள் மகளாகவும் மகனாகவும் மாறுகின்றார்கள். திருமணம் என்னும் நிகழ்வுக்குப் பின்னர் மருமகள் எனவும் மருமகன் எனவும் உருமாறும் நபர்களும் அவர்களே.
தமிழர்களுக்கு நிரந்தரமான புழங்குவெளியாக இருப்பது குடும்பம் என்னும் அரூபவெளியே. அவ்வரூப வெளியைப் பருண்மையாக மாற்றுவது வீடு என்னும் நிலவெளி.நிரந்தரமான குடும்பத்தை உருவாக்கும் சமூகப் பொறுப்பைச் செய்யும் இனவிருத்திக்குப் பின்னர் தாயெனவும் தந்தையெனவும் என அழைக்கப்படுகின்றனர். மரியாதையோடு சொல்லப்பட வேண்டும் என நினைக்கும்போது மொழி -ஆர் விகுதியை வழங்கி தாயாராகவும் தகப்பனாராகவும் ஆக்கிவிடுகிறது. இச்சொற்கள் பழைய சொற்களென நினைப்பவர்களால் அம்மாக்களாகவும் அப்பாவாகவும் அழைக்கப்படுகின்றனர். வயது கூடும்போது இன்னொரு தலைமுறை உறவு வந்து பாட்டி, தாத்தாக்களெனக் கதாபாத்திரங்களை உருவாக்கிப் பார்க்கிறது. தலைமுறைகளின் பின்னோக்கிய பார்வையில் பாட்டிகளும் பாட்டன்களும் பூட்டிகளாகவும் பூட்டன்களாகவும் நகர்கின்றார்கள்.தமிழ்நாட்டுக் குடும்ப வெளிக்குள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தங்கை- தம்பி, அக்காள் – அண்ணன் -அண்ணி, நாத்தனார்-மைத்துனன்- மைத்துனி, கொழுந்தியாள் -கொழுந்தன் என்பதான உறவுப்பெயர்களும் இருக்கின்றன.
நிரந்தரமான குடும்பவெளியைத் தாண்டி தற்காலிகமான வெளிகளுக்குள் நுழையும் மகள்களும் மகன்களுமே அந்தந்த வெளிகளுக்கேற்ப் பாத்திரப்பெயர்களைத் தாங்குகின்றனர். கல்விச்சாலைகளில் மாணவியாகவும் மாணவனாகவும் மாறும் நபர்களே பணியிடங்களில் பணிகளின் தன்மைக்கேற்ப பாத்திரப்பெயர்களைத் தாங்குகின்றனர். வேலைக்காரியாகவும் வேலைக்காரனாகவும் சொல்லிப் பழக்கப்பட்ட மொழி, பணியிடங்களில் இருபால்பெயர்ச்சொற்களை உருவாக்காமல் இருப்பதையும் பார்க்கிறோம்.உழவர்களும் உழத்திகளும் இருக்கிறார்கள். கவிதாயினிகளும் இருந்திருக்கிறார்கள்; கவிஞர்களும் இருந்திருக்கிறார்கள். பொதுவாக் கவிகளும் இருக்கிறார்கள். பாடினிகளும் பாணன்களும் அலைந்து திரிந்த மொழி இது.
இதே நேரத்தில் பரத்தை இருந்திருக்கிறாள்; பரத்தன்களைப் பழைய கவிகள் சுட்டவில்லை. உழவன் நிலக்கிழாராகவும் வேளாளனாகவும் மாறியபோது பெண்ணுக்கு அந்த அடையாளம் தரப்படவில்லை. அமைச்சன் இருந்தான்; அதற்குப் பெண்பாலாக அமைச்சி அப்போதும் இல்லை; இப்போதும் இல்லை. கம்மியன், கொல்லன், தச்சன், கம்மாளன் எனக் கைவினைத் தொழில்களுக்குப் பெண்பால் சொற்கள் இல்லை. குரு உண்டு; அது ஆணையே குறிக்கும். நர்த்தகிகள் உண்டு அது பெண்ணையே குறிக்கும். ஆண்கள் நடனம் ஆடாமல் இருந்திருக்கிறார்கள். தொழிலாளி என்ற இகர ஈற்றுச் சொல் விநோதமாகப் பெண்ணைக் குறிப்பதாக இல்லாமல் ஆணைக் குறிக்கும் ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆசிரியன் இருக்கிறான்; ஆசிரியை இப்போதுதான் உருவாக்கப்பட்டிருக்கிறாள். ஓட்டுநர், நடத்துநர் என்பன பொதுச்சொற்களாக இருபாலாரையும் குறிக்கின்றன. அமைச்சர்கள் இருக்கிறார்கள்; அமைச்சிகள் இல்லை. பெண்ணில் தளவாய்களும் தளபதிகளும் இல்லை .
ஒரு மொழியில் சில வகையான உறவுப்பெயர்களும் பாலடையாளப் பெயர்களும் இல்லை என்றால் அம்மொழியின் அத்தகைய பாத்திரங்களும் இல்லையென்றே கொள்ள வேண்டும். தமிழின் அகராதிகளில் கைம்பெண் இருக்கிறாள்; விதவை இருக்கிறாள்; அறுதலி இருக்கிறாள். இவற்றிற்கான ஆண்பால் சொற்கள் இல்லை. அதனால் தான் தமிழும் ஆண் மொழியாகவே இருந்தது; இருக்கிறது என்கின்றனர் பெண்ணியவாதிகள்.எதிர்பால் அடையாளச் சொற்களை மொழி தானே உருவாக்கிக் கொள்கிறது என்று சொல்வதைவிடச் சமூகத்தின் தேவை கருதியே உருவாக்கப்படுகின்றன. விதவைகளை உருவாக்கிய இந்திய/தமிழ்ச் சமூகம் விதவன்களைக் கொண்டிருக்கவில்லை. தாரத்தை இழந்தவன் மறுதாரத்தைச் செய்து கொண்டான். புற உடலில் கைம்மை அடையாளத்தோடு மனைவிக்காக நோன்புகள் நோற்ற ஆண்களைப் பாடவில்லைப் பெண்கவிகளும் ஆண்கவிகளும். ஆனால் உடன் கட்டை ஏறிய பெண்களைச் செவ்வியல் பாடல்களே காட்டுகின்றன. திருமணத்தில் பெண்களுக்கு மட்டுமே தாலி கட்டப்பட்டதால் அவளது கணவன் இறந்தவுடன் தாலையை அறுக்கும் சடங்கும் நடந்தது. ஆனால் ஆண் மனைவியை இழந்ததற்காக எந்த அடையாளத்தையும் இழக்கவேண்டியவனாக இல்லை. இந்த வேறுபாடு முக்கியமான வேறுபாடு. இந்த வேறுபாட்டை உணரச்செய்ததின் பின்னணியில் இருந்தது ஐரோப்பியக் கல்வியின் பயனாக உருவான பகுத்தறிவு. இதன் தொடர்ச்சியில் பெண்ணியத்திறனாய்வு என்னவெல்லாம் செய்யும் என்பதைப் பட்டியலிடும் பெர்ரி பீட்டரின் இந்தக் குறிப்பைத் தெரிந்துகொள்வது தேவையான ஒன்று.
பெண்ணியத்திறனாய்வு
1.பெண்களால் எழுதப்பட்ட பனுவல்களைக் கண்டுபிடித்து அவற்றின் நோக்கத்திற்கேற்ப வகைப்படுத்த வேண்டியது பற்றி மறுபரிசீலனை செய்யும்.
2.பனுவல்களில் வெளிப்படும் பெண்களின் அனுபவங்களை மறுமதிப்பீடு செய்யும்
3.பெண்களாலும் ஆண்களாலும் எழுதப்பட்ட இலக்கியப் பனுவல்களில் இடம்பெறும் பெண்பாத்திரங்களை ஆய்வுக்குட் படுத்தும்
4.இதுவரை எழுதப்பட்டபிரதிகளில் இடம் பெற்றுள்ள பெண்பாத்திரங்கள்,' இயல்பானவர்களாக'[ nature]' குறையுடையவர் களாக' [lack]' மற்றவர்களாக' [other] சித்திரிக்கப்பட்டிருப்பதின் காரணங்களைக் கண்டறியும் கேள்விக்குட்படுத்தும்.
5.நடப்பு வாழ்க்கைக்கும், பனுவலில் காட்டப்படும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டும் விதமாகப் பனுவலைக் கட்டுடைத்து, அதனை அரசியல் பிரதியாக முன்வைத்து, அதில் செயல்படும் தந்தைவழி ஆணாதிக்க அதிகார நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டும்.
6.இலக்கியத்திலும், சமூகத்திலும் பெண்களின் இயல்புகளை அல்லது இயல்பான பெண்களின் குணம் என்று காட்டப் பயன்படும் மொழியின் பாத்திரத்தைக் கண்டறிதல்.
7.உயிரியல் ரீதியாகவும் சமுகவியல் ரீதியாகவும் பெண்கள்,ஆண்களிலிருந்து வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மை இயல்பான உண்மையா.?அல்லது கட்டமைக்கப்பட்ட உண்மையா என்பதைக் கேள்வியாக எழுப்பி ஆய்வு செய்தல்.
8.பெண்ணிய மொழி என்பது பெண்மையைக் கொண்டாடுவதாக இருக்கும் என்பதும், அப்படிக் கொண்டாடுவது, ஆண்களுக்கும் தேவையாக இருப்பது என்பதையும் கேள்விக்குள்ளாக்குவது.
9.ஆண் அடையாளம், பெண் அடையாளம் என்பதிற்குள் செயற்படும் சாராம்சம், குறியீடுகளை உளவியல் பகுப்பாய்வுக் குட்படுத்துவது.
10. கறுப்பின அல்லது ஓரினப் பெண் எழுத்தில் அவர்களின் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது நிருபிக்கப் பட்டபின் வந்துள்ள ஆசிரியரின் சாவு என்னும் சொல்லாடலும் நிலைபாடுகளும் கட்டமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை என்ற கோணத்தில் ஆய்வு செய்தல்.
11.இலக்கிய விளக்கம் தரும் பொதுப்போக்குப் பார்வை அல்லது நடுநிலைப்பார்வை என்பவற்றில் இருந்து விலகி சரியான,உறுதியான கருத்தியல் அடிப்படைகளை உருவாக்குதல்.
[Barry Peter, “Beginning Theory-An Introduction to Literary and Cultural theory” First Indian edition, 1999,Manchester University Press, Manchester and Newyork (1995)

கருத்துகள்