மழலையர் பள்ளிகளும் குறைகூலித் தொழிலாளிகளும்

புதிய கல்விக்கொள்கை விருப்பத்தேர்வாக இருந்த மழலையர் வகுப்புகளைக் கட்டாயக் கல்வியின் பகுதியாகப் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையின் பின்னால் உள்நோக்கங்கள் இல்லை என வாதிடுபவர்களுக்கு உள்நோக்கம் இருக்கிறது.
குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் வழியாக மூன்று வயதிலேயே வேதங்களைப் பாராயணம் செய்யவும், சுலோகங்களை மனனம் செய்யவும் பழக்கப்படுத்தும் குடும்பச்சூழலை மட்டுமே அறிந்தவர்களின் முன்வைப்பு இது. இதே முறையைப் பின்பற்றித் தேவாரப் பதிகங்களையும் ஆழ்வார் பாசுரங்களையும் மனனம் செய்யும் குடும்பங்களும் உண்டு. இவ்விரண்டு போக்கிலிருந்து விலகித் தினம் 10 குறள் என மனனம் செய்யும் திணிப்பைத் திறன் வளர்க்கும் கல்வியாகச் செய்துகொண்டிருக்கும் வீட்டுக் கல்வி இந்தியாவில்/தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருக்கிறது. சிறப்பான வாழ்க்கைமுறை வாய்ப்புகளைக் கொண்ட குடும்பங்களின் நடைமுறை. இந்த நடைமுறையைப் பொதுக்கல்வியின் பரப்புக்குள் கொண்டுவருவதின் நோக்கம் என்னவாக இருக்கும்? குழந்தமைப் பருவத்திலேயே தனது இயலாமையை உணர்ந்து பின்வாங்கும் கூட்டத்தை உற்பத்தி செய்யும் தந்திரம் இது எனச் சொலவது குற்றச்சாட்டல்ல. நிகழப்போகும் நடைமுறை.

மரபான குடும்பக் கல்வியை - மனனம் செய்து ஒப்பிக்கும் திறனைத் தங்கள் குழந்தைகள் பெற முடியவில்லையே என்ற தவிப்பில் தத்தளித்த நடுத்தர வர்க்கத்துப் பெற்றோர்களின் ஆசையின் வடிகாலாக வந்தன கிண்டர்கார்டன் வகுப்புகள் என்னும் மழலையர் பள்ளிகள். அதன் வருகையை ஒருவரமாக நினைத்தார்கள் நடுத்தரவர்க்கத்துப் பெற்றோர்கள். குறிப்பாகப் பெண்கள் மழலையர் பள்ளிகளில் கற்றுக்கொண்டு வந்து பாடிக்காட்டிய ஆங்கிலப் பாடல்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல வைத்துப் புளகாங்கிதம் அடைவதை இந்திய நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் காணலாம். இந்தப் புளகாங்கிதம் தமிழ்நாட்டுக் கிராமங்களின் திண்ணைகளுக்கும் இடம் பெயர்ந்துவிட்டது. நகரம், கிராமம் என எல்லா வெளிகளிலும் பரவிவிட்ட நடுத்தரவர்க்க மனோபாவத்தின் வேகம் இது. முறையான கல்வி அறிவால் வாழத்துடிக்கும் புதுவகை மனிதர்களின் கூட்டம் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்காகச் செலவழிக்கும் தொகை குடும்ப வருமானத்தில் 25 சதவீதத்திற்கும் மேலாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை. கடன் வாங்கியும் கேஜி வகுப்புகளில் நுழைத்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றன.

மழலையர் பள்ளிகளின் உலகளாவிய தோற்றத்திற்குப் பின்னால் நேர்மறையான காரணம் ஒன்றும் உண்டு. கூட்டுக்குடும்ப அமைப்பைத் துறந்து, தனிக்குடும்ப அமைப்புக்குள் நுழைய வேண்டிய நெருக்கடியை உருவாக்கிய முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கண்டுபிடிப்பு அது. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கருத்தியல் உருவாக்கத்தின் நல்விளைவுகளில் ஒன்று. பெண்களின் உரிமைகள் பற்றிய உணர்தல் நிலை. வீட்டு வேலைகளோடு முடங்குப் போகும்படி வலியுறுத்திய நிலமானிய அமைப்புக்கு மாற்றாக உருவான முதலாளித்துவம், பெண்களையும் சம்பளம்பெறும் பணிகளுக்குத் தயார்படுத்தியது. பெண்ணும் ஆணும் சம்பளம் பெறும் வேலைக்குச் செல்லும் சமூகக் கட்டமைப்பு உருவாக்கத்தோடு உருவானவை மழலையர் பள்ளிகள்.

அன்னையின் அன்பையும் சகமனிதர்களோடு பழக வேண்டிய கட்டாயத்தையும், ஒவ்வொருவரின் தனித்தன்மையை அங்கீகரிக்கவேண்டும் என்ற உணர்வையும் உருவாக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தருவதுதான் மழலையர் பள்ளிகளின் முதல் நோக்கம். இந்நோக்கத்தோடு இணைந்தது கூட்டாக விளையாடுதலும் கூட்டாகப் பணிசெய்தலும் என்பதை உணரச்செய்தல் இரண்டாவது நோக்கம். மழலையர் பள்ளிகளின் மூன்றாவது கடமைதான் எழுத்தும் எண்ணும் கற்றுத்தருதல். சிறுவயது முதலே கற்பித்தலில் அக்கறையோடு இருக்க வேண்டும்.

இதற்கு மாறாக இந்தியாவில் குழந்தைகளைப் பராமரிக்கும் பணியைச் செய்கின்றன மழலையர் பள்ளிகள். மாணவர் சேர்க்கைக்குக் கட்டுப்பாடு கிடையாது.குழந்தைகளுக்குப் போதிய இடவசதி கிடையாது. பால் மணம் மாறாத சிறார்களைப் பேணும் ஆசிரியர்களுக்குப் போதிய பயிற்சிகளும் இல்லை. பெற்றோர்களின் வேலைநேரத்தில் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை எடுத்துக் கொண்டு அதற்குக் கூலிபெறும் நிறுவனங்களாக இருக்கின்றன. மழலையர் பள்ளிகளுக்கான அடிப்படை நோக்கத்தை உணர்ந்தவர்களாக இருப்பதில்லை. யோகா, கராத்தே, பரத நாட்யம், இசை வகுப்புகள் என அனைத்தையும் மழலையர் பள்ளிகளின் பாடத் திட்டத்தின் பகுதியாக மாற்றி ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகப் பணம் வசூல் செய்கின்றன இந்திய மழலையர் பள்ளிகள். ஆமாம் இந்தியாவின் மழலையர் பள்ளிகள் பணம் காய்க்கும் மரங்கள். விரைந்து பலன் தரும் ஒட்டு மரங்கள்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில மழலையர் வகுப்புகள் நடக்கும் முறையைப் பார்த்திருக்கிறேன். பள்ளிக்கு முன், மழலைக் கல்விக்கு முன், மழலைக் கல்வி என மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தும் பள்ளியைப் பள்ளியென்றுகூடச் சொல்வதில்லை. கலையகம் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். அங்கு எல்லா நாளும் குழந்தைகளை வரச் சொல்வதில்லை. தொடக்க நிலையில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே. பின்னர் மூன்றுநாட்கள். ஆனால் கலையகம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரே இடத்தைப் பலருக்கும் பயன்படும் விதமாக மாற்றிக் கொள்கிறார்கள். மழலையரோடு மழலையராகக் கலந்துவிடும் ஆசிரியைகள், விளையாட்டுக் கருவிகள், வண்ணந்தீட்டிகள், படங்கள் நிரம்பிய புத்தகங்கள், விளையாட்டு மைதானம் என அந்தச் சூழலில் பொருந்திப்போய்விட்டுத் திரும்புகிறது குழந்தை.

பள்ளியொன்றின் அலுவலகப் பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தபோது அவள் சொன்னாள். லாபநோக்கமற்று நடக்கும் இந்தப் பள்ளிக்கட்டிடமே லாபநோக்கத்தோடு இசைவகுப்புகள், யோகா வகுப்புகள், ஓவிய வகுப்புகள் என வேறு நேரங்களில் நடக்கும் இடமாக இருக்கிறது என்றாள். ஒன்றைப் பலவாகப் பயன்படுத்தும் நோக்கத்தால், மாணவர்களின் கல்விக்காகப் பணம் வசூலிப்பது குறைவுதான் என்றார். இந்தப் புரிதலையெல்லாம் நமது புதிய கல்விக்கொள்கையின் வரைவறிக்கை பேசவில்லை. அதன் நோக்கம் 3 வயதிலேயே கற்பித்தலின் சுமையை ஏற்றிச் சுமைக்க முடியாதவர்களாக உணரச் செய்வதுதான். கற்பித்தலிலிருந்து விலகுபவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்திற்குப் பின்னால் குறைந்த கூலிக்கு வேலை செய்யும் மனிதக் கூலிகளை உருவாக்க முடியும் என்ற தீர்மானமான நம்பிக்கை அதற்கு இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்