கலைஞர் சந்ரு

முகநூலின் வருகைக்குப் பின்னர் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் திருப்பும் பக்கங்களெல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லிக்கொள்ளும் வாழ்த்துகளும் கேட்கின்றன.

ஓவியர் சந்ரு அவர்களுக்கு நேற்றுப் பிறந்தநாள் என்பதை அவரது ரசிகர்கள் முகநூலில் நிரப்பி வைத்து விட்டனர். ரசிகர்களில் பலபேர் அவரது மாணாக்கர்களாகவும் இருந்துள்ளனர் என்பதையும் காணமுடிகின்றது. கலைஞராகவும் ஆசிரியராகவும் இருப்பதின் மகிழ்ச்சியை நேற்று முழுவதும் அனுபவித்திருக்கக் கூடும். வாழிய கலைஞர் சந்ரு. வாழ்த்துகள் 
ஓவியர் சந்ருவுடனான எனது தொடர்புக்கு வயது கால் நூற்றாண்டுக்கும் மேல் இருக்கும். 1991 அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின்னான தலித் எழுச்சியில் தனது பங்காக எழுத்தாளரும் இந்தியக் குடிமைப்பணி அதிகாரியுமான சிவகாமி புதிய கோடாங்கி என்றொரு இதழைத் தொடங்கினார். அதன் முதல் இதழைச் சென்னையில் அண்ணா அறிவாலயத்திற்கு எதிரில் இருந்த நட்சத்திர விடுதியொன்றில் வெளியிட்டார். இதழை வெளியிட்டவர் அப்போதைய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான். பாண்டிச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைப் பள்ளியின் விரிவுரையாளராக இருந்த நான் தலைமை தாங்கினேன்.

புதிய கோடாங்கியின் ஆசிரியர் சிவகாமியுடன் இணைந்து கவிஞரும் சிறுகதையாசிரியருமான ப்ரதீபா ஜெயச்சந்திரன், ஓவியரு சந்ரு ஆகியோரும் அவ்விதழ் உருவாக்கத்தில் பணியாற்றினார்கள். ப்ரதீபா ஜெயச்சந்திரன் புதுவையில் இருந்தார். அவரோடு ரவிக்குமார், நான், மதியழகன், சுகுமார் என ஒரு பட்டாளமே போனோம். கொட்டும் மழைநாளில் சென்னை அண்ணா சாலையில் இறங்கி நனைந்தபடி அந்த விடுதிக்குள் நுழைந்தபோது எங்களை வாசலில் எதிர்கொண்ட சென்னை நண்பர்களில் ஒருவராக ஓவியர் சந்ருவும் இருந்தார். அதற்கு முன்பே அவரின் ஓவியங்களும் மாணவர்களோடு கொள்ளும் அன்பான உறவும் எனக்கு அறிமுகமாகியிருந்தன. அவரது மாணவர்கள் பலரும் புதுவைக்கு வந்து இடங்களையும் காட்சிகளையும் வரைவார்கள். அப்போதைய பேச்சுகளில் தங்கள் ஆசிரியரின் அன்பையும் கற்பிக்கும் முறைகளில் இருக்கும் திட்டமிடப்படாத முறைகளையும் சொல்வார்கள். 

மாத இதழாக வந்த புதிய கோடாங்கியின் இதழ் உருவாக்கத்தில் - குறிப்பாக அட்டைப்பட வடிவமைப்பில் சந்ருவே முதன்மையான பங்களிப்பைச் செய்தார். புதிய கோடாங்கியின் பொறுப்பில் நடந்த இலக்கியக்கூட்டங்கள், பயிலரங்குகள், விவாத அரங்கு போன்றவற்றில் சந்ருவும் பங்கேற்றார். நானும் பங்கேற்றிருக்கிறேன். புதுவையிலிருந்து நெல்லைக்கு வந்த பின்னும் அந்த இதழில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்தேன். தலித் இலக்கிய ஆக்கங்கள், நாடகங்கள், கவிதைகள் என ஒவ்வொன்றைப்பற்றியும் முன்வைப்புகள் தேவைப்பட்ட காலமது. இயக்கமாகச் செயல்படும் முறைகளைப் புதுச்சேரியின் சூழல் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருந்தது.

புதிய கோடாங்கியின் நிகழ்வுகளில் சந்ரு முன்வைக்கும் கலையியல் பார்வையில் - குறிப்பாக ஓவியம் சார்ந்த உருவாக்கப் பயிற்சி மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்பு போன்றனவற்றில் நவீனத்துவத்தோடு முரண்படும் தொனியைக் கொண்டிருந்தார். பெரிய அளவு எத்தணிப்புகளும் திட்டமிடலும் தேவையில்லை என்பதுபோலப் பேசுவார். ஆனால் அவரது ஓவியங்களும் கலைஞனாக அவரது வாழ்க்கை முறையும் நவீனத்தோடு இணைந்ததாக இருந்தன. இப்போதும் அதுவே தொடர்கின்றது. இம்முரண்பட்ட இரட்டை நிலையை அவரிடம் எப்படி விளக்குவது என்பது புரியாமல் தவித்ததுண்டு. இருவரும் புதிய கோடாங்கியின் செயல்பாடுகளில் பங்கேற்காமல் விலகியபின் அதற்குள் நானும் நுழையவில்லை. தூர இருந்த பார்த்துப் புன்னகைக்கும் நண்பர்களாக நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

***********
சந்ருவின் படைப்பாக்கம் அல்லது பாணி என்பது ஓவியத்திற்கும் சிற்பங்களுக்கும் வேறானவையாக இருந்தன. உயிரிகளையும் பொருள்களையும் முழுமைப்படுத்தி வரையாமல் குறியீடுகளையும் உள்ளோடும் ஆதாரக் கோடுகளையும் வரைந்து காட்டுவதைத் தனது பாணியாகக் கொண்ட சந்ரு, சிற்பங்களில் முழுமையைக் கொண்டு வருவதிலும் மிகை நடப்பியல் கூறுகளுடன் உருவாக்குவதிலும் சிறப்பாக வெளிப்பட்டார். நிகழ்கால நடப்புகளைத் தொன்மக்கதைகள், புராணங்கள், நாட்டார் நம்பிக்கைகள், வெளிப்பாட்டு முறைமைகள் வழியாகச் சொல்லும் அவரது ஓவியங்கள் ஒவ்வொருவருக்கும் விளக்கிச் சொல்லவேண்டிய அடுக்குகளைக் கொண்டவை. அதனை அவரே செய்வார். அவரது படங்களின் உள்ளோடும் அர்த்தங்களை உணர்ந்தவர்களும் சொல்லலாம். பாடமாக விளக்கிச் சொல்லலாம்.

விமரிசனங்களை எதிர்பார்க்காத சந்ரு, தனது படங்கள் குறித்த விமரிசனங்களைப் பொருட்படுத்தியவருமல்ல. தங்கள் ஓவிய, சிற்பக்கலைப் படைப்புகளைப் பாராட்டும் விமரிசகர்களின் அறியாமையைக் கண்டு கொள்ளாமல் ஒத்துப்போகும் கலைஞர்களை எப்போதும் பகடிசெய்து வந்தார். அந்தப் பகடியின் நீட்சியை ஓவிய விமரிசகர்களின் பக்கமும் நகர்த்தியதுண்டு. அதனால் அவர்களின் பார்வையிலிருந்து விலகினார்; விலக்கப்பட்டார் என்றும் சொல்லலாம்.
முதன்மையாகக் கலையை வணிகப்படுத்தவதில் சந்ருவுக்கு விருப்பங்கள் இருந்ததில்லை. சென்னையின் நுண்கலைக்கல்லூரியின் ஆசிரியராகவும் பின்னர் அதன் முதல்வராகவும் இருந்த அவரால் தனது கலைத்திறனையும் ஓவியத்தயாரிப்புகளையும் பயன்படுத்தி, வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றிருக்கலாம். ஏனென்றால் தனிநபர் கலையான ஓவியமும் சிற்பமும் எல்லாக்காலத்திலும் பொருளியல் வாய்ப்புகளைத் தரவல்லவை. போட்டியாளர்கள் இன்றி அதிகம் சவால் விடாதவை. என்றாலும் அத்தகையவற்றில் முனைப்புக்காட்டாமல், அரசுத்துறை சார்ந்த பணிகளைச் செய்வதில் ஆர்வம் காட்டினார். கோயில்கள் சிலவற்றின் ஓவியங்களைப் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டார். பொதுவெளிகள் நிறுவப்படும் சிற்பங்களை உருவாக்கித் தந்தார். 

தனது பணி ஓய்வுக்குப் பின்னர் அவரும் நெல்லையில் தான் இருக்கிறார். பெருநகர வாசனையைத் தவிர்த்துள்ள திருநெல்வேலி நகரின் ஒரு ஓரத்தில் அவர் இருக்கிறார். நான் இன்னொரு ஓரத்தில் இருக்கிறேன் . எப்போதாவது எங்காவது சந்தித்துக்கொள்கிறோம். அவரது பெயரையும் திறமையையும் பயன்படுத்திக்கொள்ள இங்குள்ள பல குழுக்கள் முயல்கின்றன. அவற்றிற்கு உண்மையிலேயே அவரின் கலையியல் சார்ந்த புரிதல்களும் வெளிப்பாடுகளும் தெரிந்துதான் இருக்கின்றனவா ? என்ற சந்தேகம் எனக்குண்டு. அவரை முன்னிறுத்தி நடக்கும் நிகழ்வுகள் பலவற்றை நான் ஒரு பார்வையாளனாக ஓரத்தில் நின்று பார்த்துவிட்டு வந்துவிடுவேன். அவரிடம் உரையாடும் மொழி எனக்கு வசமாகவில்லை என்று இப்போதும் உணர்கிறேன். 

தீவிரமாக அவரிடம் அன்பு பாராட்டும் அவரது மாணவர்களுக்கு விடுக்கும் ஒரு வேண்டுகோளோடு இப்பிறந்தநாள் குறிப்பை நிறைவுசெய்யலாம் என்று தோன்றுகிறது. அவரை ஓர் ஆசிரியராகவும் கலைஞராகவும் கொண்டாடும் நீங்கள் அவரின் செயல்பாட்டு முறைகளையும், கலைஞராகச் செயல்படும்போது அவரது மனப்பாங்கையும் பதிவுசெய்யுங்கள். அந்தப் பதிவுகளின் போது அவரது ஆசிரியத்துவம் எவ்வாறு வெளிப்பட்டது என்பதையும் எழுதி வையுங்கள். ஒரு ஆசிரியர் ஆசிரியராகவும் கலைஞராகவும் அதற்கான வெளிகளை எவ்வாறு கட்டமைத்தார் என்பது எதிர்காலச் சந்ததிக்குத் தேவை.வேலைத்தளத்தில் கலைஞர்கள் (Artist at Work ) என்பது போன்ற நூல்கள் ஆங்கிலத்தில் நிறைய இருக்கின்றன. அதனைச் சந்ருவை மையமிட்டுச் செய்வது தமிழின் ஓவியக்கலையில் நடக்கவேண்டும் என்பது என் ஆசை. அவரது மாணவர்கள் சிலருக்கு இத்தகைய திறமை இருக்கிறது. இதுபோன்ற பதிவுகள் நாடகம், சினிமா, இசை, கவிதை, புனைகதை என்றும் பரவவேண்டும். அவ்வகை எழுத்துகள் தமிழில் ஒரு புதுவகை எழுத்துவகைமையாக அமையும். 




.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்