பிள்ளை சுமத்தல் என்னும் பேரனுபவம்: ச.விசயலட்சுமியின் உயிர்ப்பு

 
இலக்கியம் என்றால் இலக்கியம்தான்; அதற்குள் எதற்கு தலித் இலக்கியம்? பெண் இலக்கியம்? என்ற குரல்களை எழுப்புவதின் நோக்கம் திரும்பத் திரும்பக் கேள்விக்குட்படுத்த வேண்டிய ஒன்று. மனிதர்கள் என்றால் மனிதர்கள்தான்; அவர்களுக்குள் வேறுபாடுகள் இல்லை என்பதை ஒத்துக்கொள்ள முடியுமா? அதுபோலத்தான் இலக்கியம் என்னும் பொதுவுக்குள் சிறப்பு அடையாளங்களோடு புதுவகை இலக்கியங்கள் தோன்றுகின்றன. அப்படித் தோன்றுவது காலத்தின் தேவை. சமூக வளர்ச்சியின் போக்கில் புதிதாக உருவாகும் சமூகக் குழு தனது இருப்பை – அடையாளத்தை முன்வைக்க விரும்பும் நகர்வின் வெளிப்பாடு.

பொது இலக்கியப் பரப்பிற்குள் புதிதாக உருவாகும் இலக்கியப்பார்வையின் – கோட்பாட்டின் வழியாக அடையாளப்படுத்தப்பட்டுப் பொதுப்பரப்பிற்குள் வந்தவர்களே பின்னர் அந்த அடையாளத்தை உதற விரும்புகிறார்கள் என்பதும் நாம் பார்ப்பதுதான். ஒருவகையில் நகைமுரண்தான் அது. வட்டார இலக்கியம் என்ற ஒன்றை அடையாளப்படுத்தி, அதன் தோற்றக்காரணிகளை நிறுவிய பிறகு அதனால் அறியப்பட்ட ஒருவர் தனது வட்டார எழுத்தாளர் என்ற அடையாளத்தைத் துறக்க நினைக்கிறார். இதேபோல் தான் மார்க்சிய எழுத்தாளர், தனக்குப் பொதுப் பரப்பில் – பொது அடையாளம் வேண்டுமென நகரப்பார்க்கிறார். இந்த நகர்வில் பளிச்செனத் தெரிவது தலித் எழுத்தாளர்களின் நகர்வும் பெண்ணெழுத்தாளர்களின் நகர்வும் என்பதைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். என்னைப் பெண் எழுத்தாளரென அடையாளப்படுத்துவதை விரும்பவில்லை என முந்திய தலைமுறைப் பெண்களான வாசந்தி, சிவசங்கரி தொடங்கி அம்பைவரை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் என்னைத் தலித் எழுத்தாளர் எனச் சொல்வதை ஏற்க முடியாது எனப் பூமணி, சோ.தர்மன் தொடங்கி இமையம் வரை பேசியிருக்கிறார்கள்.

கலை, இலக்கியப் பனுவல்களின் உருவாக்கம் பொதுநிலையில் மட்டுமே நிகழ்வதில்லை. பொதுநிலைப் பரப்பைப் பேசிவிட்டுப் போகும் பிரதி கவனிக்கப்படுவதுமில்லை. குறிப்பான நிகழ்வுகளைக் கண்டறிந்து, அந்நிகழ்வில் குறிப்பான மனிதர்கள்/ பாத்திரங்கள் என்ன வினையாற்றினார்கள் எனச் சொல்வதிலிருந்தே உருவாகிறது தீவிரமான இலக்கியப் பனுவல் உருவாகிறது. பொதுநிலைப் பார்வையிலிருந்து தனித்த பாத்திரங்களை உருவாக்குவதற்குத் தேவை அனுபவங்கள் என்பதைப் பலரும் ஒத்துக்கொள்கின்றனர். முழுமையும் அறிந்திராத ஒரு வெளியையும் காலத்தையும் கற்பனை செய்துவிடலாம். ஆனால் அந்தக் கற்பனை வெளிக்குள்ளும் காலத்திற்குள்ளும் மனிதப் பொது அனுபவங்களையும் சிறப்பு அனுபவங்களையும் எழுதுவதில் தான் எழுத்தின் தீவிரம் கூடுகிறது. ஓர் ஆண் பெண்ணாக மாறிப் பொதுநிலை அனுபவங்களை எழுதிவிடமுடியும் என்றாலும் பெண்களுக்கே உரிய தனித்த அனுபவங்கள் உள்ளன. அவற்றை எழுதுவதில் ஆண்களைவிடவும் பெண்களே சிறப்பாகவும் நம்பும்படியும் சொல்ல முடியும் எனப் பெண்ணெழுத்தின் தேவையை வலியுறுத்துபவர்கள் சொல்கிறார்கள். இந்தக் கூற்றில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது.

மனித வாழ்வின் அனுபவங்களில் பொதுவான அனுபவங்களைப் பொது நிலைப்பார்வையில் எழுதுவதைத் தாண்டிப் பெண்ணெழுத்தாக முன்னிறுத்த விரும்புபவர்கள் பெண்ணுக்கே உரிய அனுபவங்களைத் தேடிக் கண்டடைந்து பதிவுசெய்கிறார்கள். அப்படித் தேடிக் கண்டடைந்தில் முதன்மையாக இருப்பது பெண்ணின் உடல். பெண்ணின் உடல் ஆண்களால் விதம் விதமாக வருணிக்கப்பட்டும் புனையப்பட்டும் கவிதைகளாக்கப்பட்டுள்ளன. அப்புனைவுகளிலும் வருணனைகளிலும் முன்வைக்கப்பட்ட பெண் உடல் ரசிக்கத்தக்கதாகவும் மாயாஜாலங்கள் நிரம்பிய போதையூட்டும் ஒன்றாகவும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனை மறுதலித்தே பெண்கவிகள் தங்களின் கவிதைகளில் பெண் உடலை வேறுவிதமாக மாற்றி முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் நீட்சியாகப் புனைகதைகளிலும் பெண் உடல் வேறுவிதமாக எழுதப்படுகிறது. அப்படி எழுதப்பெற்ற கதையாகச் ச.விசயலட்சுமியின் உயிர்ப்பு கதையைச் சொல்லலாம்.

பெண்ணுக்கே உரிய தனித்த அனுபவமாக அவர் தேர்வு செய்து முன்வைக்கும் வினை ஆணால் உணர முடியாத ஒன்று. இயல்பூக்கம் உள்ள ஒரு பெண்ணுடல் கருவைச் சுமப்பதையும், பிள்ளையாகப் பெற்றுக்கொள்வதையும் பெண்ணுக்கே உரிய அனுபவமாக வைக்க விரும்பும் ச.விசயலட்சுமி, கருவைத் தாங்கிய பெண்களின் இரவுகளை விரிவாக எழுதுகிறார். மற்ற நாட்களில் எல்லாருக்குமேயான இரவாக – இருளும் வெளிச்சமும் கொண்ட இரவாக இருந்தைத் தாண்டிக் கருவைச் சுமக்கும்போது அது தந்த அனுவங்களை எழுதும்போது இதுபோன்ற எழுத்தை ஆணொருவர் எழுத முடியாது என்பதை உறுதியாகச் சொல்ல முடிகிறது. ஆணொருவரால் எழுத முடியாத அந்த எழுத்தே பெண்ணெழுத்தின் சிறப்பு வெளிப்பாடு.

உயிர்ப்பு (காளி,2018, பாரதி புத்தகம் பேசுது வெளியீடு) என்ற தலைப்பிட்ட கதை இப்படி முடிகிறது. கருவில் சுமந்து பிள்ளையாகப் பெற்றெத்த அந்தப் பெண்ணின் கூற்றாக வரும் சொற்கள் இவை:

இது என் உடல். பெரும் அதிசயங்களை மாயாஜாலத்தோடு ஒப்பிட முடியாத, ஆற்றலைக் கொண்டு இருக்கிற உடல். இன்று பெருக்கெடுத்து நீர்மமாய் வழிந்து கொண்டிருக்கிறது

இன்னும்.. இன்னும்… இன்னும்.. எனும் மருத்துவரின் குரலை இடையீடு செய்து வீலென அலறிய சத்தத்தோடு தூக்கிக் காட்டினர். ஆதங்கத்தோடு பார்த்தேன்.. அந்த இரவிலும் விடியலின் வெளிச்சம் குருதி வாசனையோடு மெல்ல பரவியது.

பிள்ளையைச் சுமக்கும் நாட்கள் முழுவதும் இரவாகவே கதையில் எழுதப்பெற்றுள்ளன. கதையில் எழுதப்பெற்ற ஒரே பகல் அந்தக் குழந்தை பிறந்த அந்தத் தருணம்தான்.

மேடிட்ட என் வயிற்றில் வரியோடிக் கிடக்கிறது. அவ்வப்போது நமைச்சல் காணுகிறது. கொஞ்சம் எண்ணையை எடுத்து தேய்த்து ஆசுவாசப் படுத்திக் கொள்கிறேன். அம்மா பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். என்னைத் தவிர எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். வயிற்றில் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கிற குழந்தையை ஆறுதலாய் வருடிவிட, அமைதியாய் பூனைக் குட்டியைப் போல அடங்கிவிட்டது

வயிற்றில் எடை கூடக்கூட உடம்பில் பெருத்த மாற்றம். ஆங்காங்கே சதை கூடிவிட்டது. நடந்தால் பெருமூச்சு விடுகிறேன். இரத்த அழுத்தம் சமீபமாய்க் குறைந்து இருக்கிறது. அடிக்கடி பசிக்கிறது என்பதை மீறி இரவு எனக்கும் என் குழந்தைக்குமான இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது

பிள்ளையைச் சுமக்கும் அந்த நாட்களின் ஒவ்வொரு நிகழ்வும் குழந்தையோடானதாக மாறுவிடுவதுதான் தாய்மையை உணர்தல். தாய்மையை உணர்தல் என்பதைப் பாத்திரமாக உணர்தலாகக் கருதாமல், தாயாக இருக்கும் பெண்ணுடலை உணர்தலாகக் கருத வேண்டும். ஒரு மழைநாளை எழுதுகிறார். அதில் வெளிப்படும் மெல்லிய உணர்வுக்குள் பெரும் இழப்பும், இழப்புக்குப் பின் பெறப்போகும் பெரும் ஆர்ப்பரிப்பும் கொண்ட வரிகள் அவை:

மழை அவ்வப்போது பெய்து கொண்டிருந்தது. மழைக் காற்றின் ஈரப்பதம் தூக்கத்தை மிக இலகுவாக்கியது. இன்னும் கொஞ்சம் வேண்டும் வேண்டுமெனக் கண்கள் இறைஞ்சிக் கேட்கும்படியான தூக்கத்தை துறந்து நாட்கள் ஆகிவிட்டன.

எனது இயலாமையை என் மீது செலுத்தும் வஞ்சகத்தை நினைவூட்டும் இரவுகள் வெறுப்பின் விளிம்புக்கே இட்டுச் சென்றுவிடும். தன்னைத்தானே வெறுக்கும் அவலத்தில் கடைசி விளிம்பு அது.. மீட்டுக்கொள்ளப் போராடிப் போராடி தன்னிடம் தானே தோற்கும் இரவது.

பிள்ளையைச் சுமந்த காலத்திலிருந்து பெறும் காலத்திற்கு நகர்தலில் ஒருவித அச்சமும் பயமும் கலந்து கலவரங்கள் கூடிவிடும். அக்கலவர உணர்வை இதுவரை ஆண்களின் எழுத்தில் வாசித்ததில்லை. அதை ஆண்களால் எழுதிவிட முடியாது என்பதே காரணங்கள். பிள்ளைப்பேறை எழுதிய பலரும் மருத்துவமனையின் அவசரங்களையும் மற்றவர்களின் பதற்றங்களையுமே எழுதிக்காட்டியுள்ளனர். அதற்கு மாறாகப் பெண்ணின் பதற்றத்தை – அதன் உணர்நிலையை எழுதும் வாக்கியங்களில் படிமங்களும் உருவகங்களும் தோன்றிக் காட்சிகளாக நகர்கின்றன ச.விசயலட்சுமியின் எழுத்தில்.

மனதை உடலை அனுபவங்களை அசைபோடத் தக்க தனிமையை படரவிட்டு இருக்கிற இருள். எனக்கு என்னை உணர்த்திக் கொண்டிருக்கிறது. மதகுகள் உடைபட்டுப் பேராறு உருவாகிக் கொண்டிருப்பது போல உணர்ந்தேன். காலிடுக்கில் தட்டுப்பட்ட ஈழப் பிசுக்கு அருவருப்பாக இருந்தாலும் வேறெதுவும் செய்துவிட முடியாதே எனத் தேற்றிக் கொண்டேன். வலியின் முனகலைக் கட்டுப்படுத்திக் கொள்ள உதடுகளை அழுந்தக் கடிப்பதும் கைக்கு அகப்பட்டவற்றை பலம் கொண்ட மட்டும் அழுத்திப் பிடிப்பதுமாக ஓடிக்கொண்டிருந்த வழியை பார்ப்பவர் மனங்களுக்குக் கடத்திக் கொண்டிருந்தேன்.

ஒரே நேரத்தில் வலியாகவும் இன்பமாகவும் மாறும் பிரசவத்தின்போது முன் அனுபவங்கள் கொண்டவர்களின் பேச்சுத்துணையும் திசை திருப்பல்களும் பெண்ணின் உடலை ஆசுவாசப்படுத்துபவை. அதிலும் புரிதலும் உதவுதலும் கொண்ட மனத்தோடு அருகிருக்கும் பெண்களின் இருப்பு கூடுதல் சுகம். அப்படியான ஒரு பாட்டியின் அருகிருப்பைச் சொல்லும் வரிகளும் அதற்குப் பின்னான பிரசவமும் கதையின் போக்கில் இனம்புரியாத இன்பியல் நிகழ்வை வாசிக்கின்ற அனுபவங்களாகக் கதையில் விரிக்கப்பட்டுள்ளன.

இரவெல்லாம் தூங்காமல் நடந்தும் உட்கார்ந்தும் என்ன செய்வதெனப் புரியாமலும் அவளின் முந்தைய பிரசவங்களை நினைத்துக் கொண்டுமிருந்து பிறரைத் தொந்தரவு செய்யத் தயங்கிய அந்த இரவை விவரித்தாள் பாட்டி. எனக்கு வலி தோன்றும்போது நிறுத்திவிடுவதும் குறைந்ததும் கூறத் தொடங்குவதுமாக இருந்தாள் .

சுகப்பிரசவம் என்று முன்பே கூறியிருந்தார்கள். நர்ஸ் வந்து எனிமா குடுக்கணும் என்றாள். மணி இரண்டை தொட்டுவிட்டது வலியில் உடனே பிறந்து விட்டால் நன்றாக இருக்கும். நேரமாக நேரமாகத் தாங்கிக் கொள்ள வேண்டிய வலி ஆயாசத்தை தந்தது.

முழுக்கதையையும் பிள்ளையைச் சுமப்பதையும் பெறுவதையும் இரவின் நகர்வாக முன்வைக்கிறது. பெண் உடலோடு இரவுப்பொழுதுக்கு உள்ள உறவையும் அவ்விரவுகளில் பெண்ணுடல் அடையும் பாலியல் சார்ந்த இயல்பூக்கத்தையும், பாலியல் வேட்கையின் விளைவான கருத்தரிப்பையும் பிள்ளைப் பேற்றையும் எதிர்மறையாகப் பார்க்காமல் வாழ்க்கை தந்த பேறாகப் பார்க்கும் பெண்ணின் மனத்தை இந்தக் கதையில் வாசிக்க முடிகிறது. அந்த வாசிப்பு ஒருவிதத்தில் கொண்டாட்டமான பெண்ணுடலை வாசிப்பதாகவே இருக்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்