வரலாறுகள் எழுதப்பட்ட கதை

இந்தியர்களுக்கு வரலாற்றுணர்வே கிடையாது- என்றொரு வாக்கியத்தைக் கல்வித்துறையில் செயல்படும் பலர் அடிக்கடி சொல்வதுண்டு. இக்கூற்றை முழுமையான உண்மை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது; கொஞ்சமும் உண்மையில்லை என்று தள்ளி விடவும் முடியாது. ஒரு தேசத்திற்கு வரலாற்றுணர்வு இல்லை எனச் சொல்கிறவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் , அந்தத் தேசத்தின் வரலாற்றை எழுதுவதற்குத் தேவையான சான்றுகளைத் தொகுத்து வைக்காத நிலையிலிருந்தே இத்தகைய கருத்து உருவாகிறது என்பது புரிய வரலாம்.
ஐரோப்பியர்கள் தங்களின் வியாபாரத்தின் பொருட்டுச் சென்ற நாடுகளைக் காலனிய நாடுகளாக ஆக்கிக் கொண்ட போது அந்நாட்டிற்கேற்ற நிர்வாக அமைப்பை உருவாக்கிக் கொள்ள விரும்பினார்கள். அப்படி உருவாக்கிக் கொள்ளும் முயற்சிக்கு ஏற்கெனவே அந்நாடுகளில் இருந்த நிர்வாக முறைகள் உதவக்கூடும் எனவும் கருதினார்கள். இந்தியாவைக் காலனிய நாடாக ஆக்கிய பிரிட்டிஷார் இந்தியாவின் நிர்வாக முறைகளைக் கற்க விரும்பித் தேடியபோது பெருத்த ஏமாற்றம் அடைந்தார்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு நம்பத் தகுந்த வரலாற்று நூல்கள் எவையும் கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல; வரலாறு எழுதுதலுக்குத் தேவையான சான்றுகளும் கிடைக்கவில்லை. அந்தப் பின்னணியில் இருந்து தான் இந்தியர்களுக்கு வரலாற்றுணர்வு கிடையாது என்ற வாக்கியம் உண்டாக்கப்பட்டது.

வரலாற்று நூல்களும், வரலாறு எழுதுதலுக்கான சான்றுகளும் கிடைக்கவில்லை என்பதற்காக ஆங்கிலேய அரசாங்கம் ஒன்றும் பின் வாங்கி விடவில்லை. தங்கள் அதிகாரிகளைக் கொண்டும், தங்களின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்ட இந்திய அறிவாளிகளைக் கொண்டும் வரலாற்றை எழுதுவதற்கான சான்றுகளைத் தொகுத்தார்கள். அப்படித் தொகுக்கப் பட்ட சான்றுகளில் ஆவணப் பதிவுகளான கல்வெட்டுக்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்கப்பட்ட கடிதங்கள், பயணக்குறிப்புகள் போன்றன அதிகாரப் பூர்வமான வரலாற்றுச் சான்றுகளாகக் கருதப்பட்டன. இவையல்லாமல் சுவடிகளில் இருந்த இலக்கியப் பிரதிகளையும், வாய்மொழித் தகவல்களாகத் தொகுக்கப்பட்ட பிரதிகளையும் வரலாற்றை எழுதுவதற்கு நேரடியாகப் பயன்படும் சான்றுகளாகக் கருதவில்லை. அதே நேரத்தில் அதிகாரப் பூர்வமான சான்றுகள் கிடைக்காத நிலையில் இவைகளும் வரலாற்றுக்கான சான்றுகளாக ஏற்றுக் கொள்ளப் பட்டன.

வரலாற்றுக் காலகட்டங்களைப் பகுத்தாராய்ந்து, வரலாற்செய்திகளைச் சொல்வதற்கு வரலாற்று அறிஞர்களுக்குத் தேவை சான்றுகள். ஒரு வரலாற்று ஆய்வாளன் எத்தகைய சான்றுகளைப் பயன்படுத்தி வரலாற்றை எழுத முற்படுகின்றானோ , அதற்கேற்பவே அவனது வரலாறு பற்றிய புரிதல் இருக்கும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. இந்திய தேசத்திற்கான ‘ஒற்றைவரலாறு’ எழுதப்படுவதற்குத் தேவையான வரலாற்று ஆதாரங்கள் முறையாகத் தொகுத்து வைக்கப் படவில்லை என்று குற்றம் சாட்டுபவர்கள் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் ஒற்றை வரலாற்றுக்குப் பதிலாக ‘பன்மை வரலாறுகள்’ எழுதப் படுவதற்குத் தேவையான வரலாற்றுச் சான்றுகள் , தேடுகிறவர்களுக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கின்றன என்ற உண்மை தான் அது. பன்மை வரலாறு கொண்ட தேசம் என்பதால் இங்கே வரலாற்றைப் பற்றிய பார்வைகளும் கூடத் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் இருந்த காலனிய கால கட்டத்தில் இந்தியர்களால் எழுதப் பட்ட வரலாற்று நூல்களில் ஆங்கிலேயர்களிடம் இந்திய வரலாற்றை விளக்கிக் காட்டும் தொனியும், இந்தியர்களின் ‘தொன்மை’ காலத்தால் மிக முந்தியது எனக் காட்டும் நோக்கம் வெளிப்பட்டன. இந்த நோக்கம், 1947- இல் சுதந்திரம் கிடைத்த பின்பு வேறுவிதமாக மாற்றம் அடைந்தது.பல்வேறு சிற்றரசுகளின் தொகுதியால் உருவாக்கப் பட்ட இந்தியாவை ஒற்றை நாடு எனக் காட்டும் நோக்கத்தில் வரலாற்று நூல்கள் எழுதப்பட்டன. சாராம்சமான பொது அடையாளம் கொண்ட நாடாக இந்தியாவைக் காட்டும்- தேசியத்தைக் கட்டமைக்கும் பார்வையை ஏ.எல். பாஷ்யம், ஆர்.சி. பண்டார்கர், கே.வி.அய்யங்கார், பி.என்.பானர்ஜி போன்றோரின் வரலாற்று நூல்களில் காணலாம்.

தொடக்ககால வரலாற்றை எழுதுவதற்குத் தேவையான அடிப்படை வரலாற்றுச் சான்றுகள் கிடைக்காத போது சமஸ்கிருதத்தில் கிடைத்த வேதங்களும் உபநிஷத்துக்களும் வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்ளப்பட்டன. தமிழக வரலாற்றுக்குள் வந்தால் தொடக்கக் கால வரலாற்றுக்குத் தேவையான சான்றுகளாக இருந்தவை சங்ககால வீரயுகக் கவிதைகளே. தொடக்ககாலச் சமஸ்கிருதச் சான்றுகளும் சங்க இலக்கியச் சான்றுகளும் பாரதூரமான வேறுபாடுகள் கொண்டிருந்தால், இந்தியாவில் தனித்தனியான இரண்டு மரபுகள் இருந்தன என்ற கருத்துநிலை உருவானது. வேறுபாடுகள் கொண்ட இரண்டு பண்பாட்டு மரபுகளும் தனித்தன்மைகளும் இந்தியாவில் இருந்தன என்ற கருத்தை நிலைநாட்டுவதில் கால்டுவெல் , ரேனியஸ், ஜி.யூ. போப்,ஹிராஸ் போன்ற பாதிரிகளின் கருத்துகளும், கில்பர்ட் ஸ்லேட்டர் , போன்றவர்களின் கண்டுபிடிப்புக்களும் பெரிதும் காரணங்களாக இருந்தன. ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்ற கனகசபைப் பிள்ளையின் நூல் அத்தகைய நோக்கத்திலிருந்து எழுதப் பட்ட ஒரு நூல் என்பதை இங்கே ஞாபகப் படுத்திக் கொள்ளலாம். சமஸ்கிருத மரபு, திராவிட மரபு என்ற இரண்டும் பல நேரங்களில் கொடுக்கல் வாங்கல் செய்தாலும், தனித்தன்மைகளைப் பேணுவதிலும் கவனம் செலுத்தியும் வந்துள்ளன என பின்னர் வந்த வரலாற்றாசிரியர்கள் தங்கள் நூல்களில் எழுதினார்கள்.

பொதுவாகத் தமிழக வரலாற்றை எழுதியவர்கள் அரசமரபினரின் வரலாற்றைச் சொல்வதிலேயே அதிகக் கவனம் செலுத்தியுள்ளனர். சங்ககாலம் குறித்து எழுதிய என். சுப்பிரமணியன், பல்லவர்காலம் பற்றிய டாக்டர் மா.இராசமாணிக்கனார், சோழர் காலம் பற்றி எழுதிய சதாசிவ பண்டாரத்தார், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி போன்றோரின் பார்வைகள், தமிழக வரலாற்றை அரச மரபினரின் வரலாறாகவே சொல்லியிருக்கின்றன. விஜயநகரப் பேரரசைப் பற்றியும் நாயக்க மன்னர்கள் பற்றியும் எழுதிய டி.வி. மகாலிங்கம், எஸ்.கிருஷ்ணசாமி ஆகியோரின் நூல்களிலும் அத்தகைய பார்வைகளே கிடைக்கின்றன. காரணம் இவர்கள் பயன்படுத்திய சான்றாதாரங்கள் அப்படிப்பட்டவை. அரசர்கள் வழங்கிய பிரமதேயங்கள், தானங்கள், உரிமைகள், தண்டனைகள் பற்றிய செய்திகளைப் பதிந்து வைத்த கல்வெட்டுக்களையும், அரசர்களின் பரம்பரைகளைச் சொல்லும் செப்பேடுகளையும் பயன்படுத்தி எழுதப் பட்ட வரலாறுகள் அவ்வாறுதான் விளங்க முடியும்.

இத்தகைய பார்வைகளைக் கேள்விக்குட்படுத்தியதோடு மக்களின் சமுதாய வரலாறு எழுதப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்த இடதுசாரிகள் வரலாறு எழுதப்படுவதற்குப் பயன்பட்ட சான்றாதாரங்களையும் கேள்விக்குட்படுத்தினார்கள். அதிகாரப்பூர்வச் சான்றுகளோடு அவ்வக்கால மக்களின் மனச்சாட்சிகளாக இருக்கும் படைப்பாளிகளின் படைப்புகளைச் சான்றுகளாகப் பயன்படுத்துவதன் மூலமே சமுதாய வரலாற்றை எழுத முடியும் எனக் கூறியதோடு அத்தகைய ஆய்வுகளைச் செய்தும் காட்டினர். க.கைலாசபதியின் பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், க.சுப்பிரமணியனின் சங்ககாலம், நா.வானமாமலையின் கதைப்பாடல்களும் சமூகமும், கா.சிவத்தம்பியின் இலக்கணங்களும் சமூக உறவுகளும், கோ.கேசவனின் மண்ணும் மனித உறவுகளும், பள்ளு இலக்கியம்- ஒரு சமூகவியல் பார்வை , தி.சு.நடராசனின்,தமிழகத்தில் வைதீக சமயம், பொ.வேல்சாமியின் பொற்காலங்களும் இருண்டகாலங்களும் போன்றன குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஆய்வுகள். மே.து. ராஜ்குமார், வெ.கிருஷ்ணமூர்த்தி,போன்றோர் பிற்காலச் சோழர்கள் காலங்குறித்த ஆய்வுக்கட்டுரைகளும் இந்த வகைப்பட்டனவே. இவர்கள் செய்த சமுதாயவரலாற்று ஆய்வுகளுக்குத் தேவையான அடிப்படைப் பார்வைகளைத் தந்தவர்களாக பர்டைன் ஸ்டெயின், நொபுரு கரஷிமா, ஒய். சுப்பராயலு ஆகிய மூன்று வரலாற்றாசிரியர் களையும் சுட்டிக் காட்ட வேண்டும். இவர்களே, பின்னிடைக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் பதிவு செய்யப் பட்டுள்ள சமூக நிகழ்வுகள், சமூக இயக்கங்கள்,சமூகப் படித்தரங்கள் ஆகியவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தனர்.

இந்தப் போக்கிலிருந்து பெரிய மாற்றத்தோடு விளிம்புநிலை வரலாறுகள் ( SUBALTERN HISTORY) என்றொரு பார்வை இருபதாம் நூற்றாண்டின் பிந்திய ஆண்டுகளில் தோன்றியது. கிடைத்த வரலாற்றுச் சான்றுகளான கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆவணப்பதிவுகள் போன்றவற்றைப் பதிவு செய்தவர்களும் சரி, இலக்கியங்களைப் பயன்படுத்திச் சமுதாய வரலாற்றைச் சொல்ல வேண்டும் எனக் கிளம்பிய இடதுசாரிகளும் சரி, கிடைத்த எல்லா வரலாற்றுச் சான்றுகளையும் பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாகத் தங்களின் வர்க்க மற்றும் சாதிய நலன் சார்ந்தே வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி வரலாற்றுப் புனைவுகளை எழுதியிருக்கிறார்கள். அவர்களின் நலன்களுக்கு எதிராக இருக்கக் கூடிய சான்றுகளைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்திருக்கிறார்கள்; அல்லது திசை திருப்பி இருக்கிறார்கள்; சில நேரங்களில் அழிக்கவும் செய்துள்ளனர் என்பதை இப்போது எழுதப்படும் விளிம்புநிலை வரலாற்றுப் பார்வைகள் உறுதிப் படுத்துகின்றன.

அதிகாரப்பூர்வமான வரலாறு மற்றும் இலக்கியச் சான்றுகளில் விடுபட்டவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வதோடு புதிதாக வாய்மொழி மரபுகளிலிருந்து திரட்டப்படும் சான்றுகளை முக்கியமானதாகக் கருதும் விளிம்பு நிலை ஆய்வுகள், விளிம்பு நிலை மனிதர்களை மையப்படுத்தி, வரலாறு எழுதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. அத்தோடுவிளிம்புநிலை வரலாற்றுப் பார்வை அடிப்படையான ஒரு முறையியல் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதுவரையிலான வரலாற்றுப் பார்வைகள், சான்றுகளைத் தொகுத்துக் கொண்டு ஒரு பெரும் பரப்பைக் குறித்த வரலாற்றுக் காட்சிகளை உருவாக்கித் தருவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தன. நுட்பங்களைப் பற்றி அலட்டிக் கொண்டதில்லை. எங்காவது ஒரு நுண் அலகை விவரித்து விட்டுச் செல்லும் பாணியைச் சில நேரங்களில் அவை செய்வதுண்டு. ஆனால் விளிம்புநிலைப் பார்வை என்பது நுண் அலகிலிருந்து கிளம்பி அதை விளக்கும் விதமாகப் பெரும்பரப்புக்குள் பயணம் செய்யும் முறையியலைப் பின்பற்றுகிறது.

திரு.ரவிக்குமார் அவர்கள், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவாக ஆற்றியதிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள நந்தன் கதை: மீளும் வரலாறு என்னும் நூலில் வெளிப்படும் பார்வை விளிம்புநிலை வரலாற்றுப் பார்வை என்பதை அதன் முறையியலிலிருந்தும் முன் வைக்கும் முடிவுகளிலிருந்தும் உணரலாம். திரிக்கப்பட்ட நந்தன் கதை என்ற சிறிய புள்ளியிலிருந்து தனது விவரிப்பைத் தொடங்கும் ரவிக்குமார். அயோத்திதாசப் பண்டிதர் முன் வைத்த தரவுகள் ஏன் ஒதுக்கப்பட்டன என்ற கேள்வியிலிருந்து ஆய்வை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து நந்தன் என்ற கதாபாத்திரம் பல்வேறு குறியீடுகளாகவும், பிம்பங்களாகவும் தமிழ்ச் சமூகத்தின் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் அலைந்து கொண்டிருப்பதின் பின்னணிகளை நோக்கிக் கவனத்தைத் திருப்பும் காத்திரமான ஆய்வுப் பார்வையை இந்நூல் முழுக்க வெளிப்படுத்தியுள்ளார். தேர்ந்த கல்வித்துறை ஆய்வாளரின் ஈடுபாட்டுக்குச் சற்றும் குறையாத ஈடுபாட்டையும், முடிவை நோக்கி நகர்த்திச் செல்லும் இயங்கியல் பார்வையும் வெளிப்படும் இந்நூல் தமிழில் விளிம்புநிலை வரலாற்றுப் பார்வையை அறிமுகப்படுத்தும் ஒரு மாதிரி நூலாக அமையப் போகிறது என்பதைப் படிப்பவர்கள் உணரக்கூடும்.

இதுவரை வரலாற்றுச் சான்றுகள் எனக் கருதப்படாமல் ஒதுக்கப் பட்ட சான்றுகளிலிருந்தும், ஏற்கெனவே கிடைத்திருந்த போதிலும் அவற்றைப் பயன்படுத்தினால் மைய நீரோட்ட வரலாற்றில் திசை மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற காரணத்தால் விலக்கி வைக்கப் பட்ட சான்றுகளிலிருந்தும் உருவாக்கப் பட்டுள்ள இந்த நூல் இனிவரும் சமுதாய வரலாற்றாய்வாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முறையியலை உருவாக்கித் தந்துள்ளது. மறைக்கப் பட்டதாகவும், திரிக்கப்பட்டும் உலவி வந்த நந்தன் கதைகளையும், நந்தன் குறித்த பதிவுகளையும் தேடிக் கண்டுபிடித்து விளக்கும் ரவிக்குமார், நந்தனின் வரலாற்றை மீட்டுக் கொண்டு வருவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இந்நூலின் வழியாக இடைக்காலத் தமிழ்ச் சமூக வரலாற்றையே மாற்றி எழுதிட வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பௌத்தம் மற்றும் சமணத்திற்கெதிராக வைதீக இந்து சமயத்தின் பிரிவுகளான வைணவமும் சைவமும் நடத்திய யுத்தத்தின் பதிவுகள் தமிழகம் எங்கும் பரவிக்கிடக்கின்றன. ஓவியங்களாக, சிற்பங்களாக, சமயச் சடங்குகளாக, திருவிழாக்களின் காட்சிகளாக, இலக்கியப் பிரதிகளாக, வாய்மொழிக் கதைகளாக என அவற்றின் வடிவங்கள் பலதிறமானவை. பல திறமான ஆதாரங்களை நந்தன் என்ற மையப்புள்ளியைச் சுற்றி இழுத்து வந்து பரப்பிக் காட்டுவதன் மூலம் விரிக்கப்பட்டுள்ள இந்த மீளும் வரலாறு இன்னும் எழுதப்பட வேண்டிய பல்வேறு மீள்வரலாறுகளுக்கு ஒரு முன்னோடி என்பதை இங்கே சுட்டிக் காட்டுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்