சாருவின்மயானக் கொள்ளை :கலவையான நிகழ்த்துதலைக் கோரும் நாடகப்பிரதி

   

தன்னை உள்ளிருத்திக் கதைகள்(Auto -Fictional) எழுதும் சாருநிவேதிதா அதே பாணியை நாடகப் பிரதி ஆக்கத்திலும் கையாண்டுள்ளார். புதுவைப் பகுதியில் அங்காளம்மன் திருவிழாவில் நடக்கும் ”மயானக் கொள்ளை” என்னும் சடங்கியல் நிகழ்வின் காட்சிகள் அவற்றின் பின்னிருக்கும் நம்பிக்கைகளோடும் மாயத் தன்மையோடும் உள்ளோட்டமாக இடம்பெற்று நிகழ்த்துப் பிரதியாகியுள்ளது. முதல் அங்கம் வசனக் கதைசொல்லலாகவும் இரண்டாவது அங்கம் குரூர அரங்கியலாகவும் மூன்றாவது அங்கம் பழக்கங்களின் மீதான அங்கதமாகவும் கடைசி அங்கம் சடங்கியல் அரங்காகவும் எழுதப்பட்டுள்ளது. 

இந்தியக் குடும்பவாழ்வில் பெண்களும் பெண்ணுருக்களை அடையாளப் படுத்தும் உடல்கூறுகளும் கொண்ட மனிதர்களின் வாழ்க்கையை - அதன் குரூரத்தை நடித்துக்காட்டக் கோரும் பிரதிநிதியாக எழுதியிருக்கிறார். உரையாடல், காட்சி, அங்கம் என நாடகப் பிரதிக்கான இலக்கணச்சுத்தம் கொண்டுள்ள இப்பிரதியின் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு வகையான சொல்முறையையும் நிகழ்த்துமுறையையும் கொண்டிருக்கிறது. 

முதல் அங்கம் முழுவதும் எடுத்துரைப்பு முறை(Dialogue play.) ஆய்வுக்கட்டுரை அல்லது செய்திக்கட்டுரை எழுதுவதற்காக வரும் கல்பனாவிடம் விஜி என்னும் திருநங்கை தனது இப்போதைய இருப்பை, திருநங்கையாக உணர்ந்த தருணத்தை, அதனால் அந்த உடல் அடைந்த கிளர்ச்சியை, சந்தித்த துயரத்தை, வீட்டை விட்டு வெளியேறிய பின் சந்தித்த மனிதர்களைக் கதைபோலச் சொல்வதற்கு உரையாடலைப் பயன்படுத்தியிருக்கிறது. நாடகம் என்பது நிகழ்வின் வழியாகக் காட்சிப்படுத்த வேண்டிய கலைவடிவத்தைப் பேச்சின் வடிவமாகத் தந்துள்ளாரே என்று தோன்றும் அளவிற்குக் கல்பனாவும் விஜியும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பேச்சின் வழியாக விஜியின் கதை சொல்லப்படுவதுபோலக் கல்பனாவின் குடும்பக்கதையும் சொல்லப்படுகிறது. அதைச் சொல்வதற்கு அங்காளம்மனின் அருள் தான் காரணம் எனக் காட்டும்போது நாடகம் அடுத்த அங்கத்தை வாசிக்கவும் பார்க்கவும் கோருகிறது. 

இரண்டாவது அங்கத்தில் இன்னொரு திருநங்கையின் - சங்கரியின் கதை.சங்கரியின் உரையாடலாக இல்லாமல் முழுக்கவும் நிகழ்த்தப்படும் காட்சிகளாக அடுக்கப்பட்டுள்ளன. அந்த அடுக்குதலில் குரூர அரங்கின்(Theatre of Cruelty) தன்மையை கொண்டுவந்திருக்கிறார். சங்கரியும் பூங்கோதையும் தங்கள் உடலை வழியாகவும் உரையாடல்க வழியாகவும் குரூரத்தின் எல்லைகளைத் தொடுகிறார்கள். 

மூன்றாவது அங்கம் அங்கதத்தின் விவரிப்புகள் - நடைமுறைகளுக்குப் பின்னிருக்கும் அங்கதங்கள்(Comedy of Manners ) என அடையாளப்படுத்தத் தக்க காட்சி. வல்லாள ராஜனின் நீதிபரிபாலனக் காட்சியில் நம்காலத்து நீதி முழுக்கவும் பெண்களுக்கு எதிராக - பெண்களை மனுசியாகவும் உயிரியாகவும் கருதாத கோளாறுகளோடு இருப்பதை முன்வைக்கிறார். நிகழ்காலத்தைக் கடந்த காலத்திற்குள் வைத்து எள்ளல் தனத்தை உண்டாக்கும் அந்த அங்கம் 23 ஆம் புலிகேசியின் அவைக்களக்காட்சியை நினைவூட்டிக் காட்டுகிறது. அக்காட்சிக்குள் சாருநிவேதாவின் கேணத்தனத்தையும் பகடிசெய்துகொள்வதில் நிற்கிறார் சாரு. 

கடைசி அங்கம் முழுவதும் சடங்கியல் அரங்காக (Ritual theatre) எழுதப்பெற்றுள்ளது ரிச்சர்ட் செக்னர் சொன்னதுபோலபார்வையாளர்கள் ஒவ்வொருவரும் நிகழ்த்துநராக மாறும் வேதியியல் வினையைக் கட்டியெழுப்பும் இசைக்கோலம், வண்ணக்கலவை என விரியும் அக்காட்சியில் அங்காளம்மன் மயானக் கொள்ளை என்னும் சடங்கியல் அரங்கு முழுமை அடைகிறது. தனது கட்டுரைக்காகச் சங்கரியைப் பார்க்க வந்த கல்பனா சந்நதம் ஏறிச் சடங்கில் கரைந்துவிடுகிறாள். இந்தியச் சமூகம் பெண்ணிற்கு வழங்கும் அடையாளத்தைத் தனதாக்கித் தப்பிக்கும் நிலை. தெய்வமேறும் நிலையில் தனது உடல் அனுபவித்த வலிகளையும் பெண் மனதையும் தொலைத்துத் தெய்வத்தின் அம்சமாக ஆகிக் கொள்ளும் சாத்தியங்களை நிறைவேற்றும் சடங்கோடு முடிகிறது. 

***************** 

நீண்ட காலத்திற்குப் பின்னொரு நாடகப்பிரதியை - தமிழில் எழுதப்பெற்ற நாடகப்பிரதியை வாசித்த அனுபவம் மகிழ்ச்சியானது. இரண்டாம் ஆட்டம் என்னும் உரையாடல் குறைவான நாடகப்பிரதியைத் தந்த சாரு நிவேதிதாவிலிருந்து மாறுபட்டு இந்தப் பிரதியைத் தந்துள்ளார். நாடகப் பிரதிகளைத் தேடும் இயக்குநர்கள் இதனை மேடையேற்றிப் பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…

நவீனத்துவமும் பாரதியும்

புள்ளிவிவர ஆய்வுகளின் தேவை.