சில மாயைகளும் சந்தேகங்களும்


கருத்தியல் விவாதங்களைத் தீர்மானிப்பதிலும் இலக்கியப்போக்கைத் தீர்மானிப்பதிலும் சில நூல்கள், சில ஆளுமைகள், சில நிகழ்வுகள், சில பத்திரிகைகள் முக்கியப்பங்காற்றுவதின் மூலமாக வரலாற்றின் பங்குதாரராக மாறுவிடக்கூடும். அப்படியான இரண்டை இங்கே பார்க்கலாம். இவை 2000 -க்கு முன் நடந்தவை. இப்போது இப்படியானவற்றைக் கண்டுபிடித்து முன்வைக்க முடியவில்லை.
மாயைகள்

மாயாவாதம் பற்றிய அறிதலும் விமரிசனங்களும் ஏற்கெனவே இருந்தாலும் ‘ மாயை’களை அறியும் திசையைக் காட்டியது இந்த நூல்தான். அப்போது குணாவாக அறிமுகமாகி இப்போது அறிஞர் குணாவாக உச்சரிக்கப்படும் அவர் எழுதிய அச்சிறுநூல் எழுப்பிய கேள்விகள் இவ்வளவு பெரிய ஆச்சரியங்களாகும் என்று அப்போது நினைக்கவில்லை.அடர் நீலத்தில் மூன்றில் ஒரு பகுதியையும் மென்நீலவண்ணத்தில் இருபகுதியையும் கொண்ட சாதாரண அட்டையோடு வந்த அந்தச் சிறு நூலின் (80 பக்கம்/ 8ரூபாய்) தலைப்பு: திராவிடத்தால் வீழ்ந்தோம்! (தலைப்பில் ஆச்சரியக்குறி இருந்தது) வந்த ஆண்டு தி.பி. ஆண்டு 2029 (கி.பி.1994, டிசம்பர்) தமிழக ஆய்வரண், பெங்களூர் வெளியீடாக வந்த நூல் அச்சிடப்பட்டது சென்னை, திருவல்லிக்கேணி, வெங்கடரங்கம் தெருவில் இருந்த பஃறுளி அச்சகத்தில். அதே பெயரில் பதிப்பகத்தையும் அச்சகத்தையும் நடத்தி வந்த ந.அரணமுறுவல் அவர்கள் பொறுப்பெடுத்து அச்சிட்டதோடு விற்பனைப் பொறுப்பையும் செய்து வந்தார்.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் சிந்தனைப் பள்ளியில் இருந்த அரணமுறுவல் அவரைப் போலவே மீசையும் வைத்திருந்தவர். மனிதர்களின் மீதான அன்புக்கும் பெருஞ்சிரிப்புக்கும் சொந்தக்காரர். நாங்கள் ஊடகம் இதழைத் தொடங்கியபோது அச்சாக்கத்திற்கான கணினி வடிவாக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தவர். அரசு வேலைகள் பலவற்றிற்கு முயன்றபின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் என்ற பதவி உருவாக்கப்பட்டபோது நேரடி நியமனத்தில் திருநெல்வேலிக்கு வந்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் இரண்டையும் ஒருவரே கவனித்துக் கொண்டார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் என்ற பெயர் மட்டும் பெரியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் ஒரு பிரிவாக இருக்கும் அத்துறை தமிழ் வளர்ச்சிக்காகப் பெரிதாக ஒன்றும் செய்வதில்லை. எழுதப்படும் கோப்புகளில் இருக்கும் மொழிப்பிழைகளைச் சுட்டிக் காட்டுவதோடு தமிழ்வளர்ச்சியை முடித்துக்கொள்ளும். அஃதல்லாமல் தமிழ் வளர்ச்சித்துறை வழங்கும் விருதாளர் பட்டியலுக்குப் பெயர்களைப் பரிந்துரை செய்யும்.

நூலை அச்சிட்டுக் கொண்டுவந்து பாண்டிச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடந்த தலித் கலைவிழா ஒன்றின்போது கடை விரித்த அரணமுறுவல் அச்சிறு நூலை என்னிடம் தரும்போது பக்கத்தில் இருந்த நண்பர் ரவிக்குமார் அரணமுறுவலின் தனித்தமிழ்ப் பற்றைக் கிண்டலடித்து ஒரு சொற்றொடரைச் சொன்னபோதும் சிரித்துக் கொண்டே நூலைக் கையில் திணித்துவிட்டார். அந்த நூலைப் படித்த சூடு அடங்குவதற்கு முன்பே வந்துவிட்டது கருணா மனோகரனின் “திராவிடத்தால் வீழ்ந்தோமா? சாதியத்தால் வீழ்ந்தோமா?(தலைப்பில் கேள்விக்குறிகள்) மதுரை பாண்டியன் அச்சகத்தில் அச்சிட்டு திருப்பூர் சமூகநீதிப் பதிப்பகத்தின் முகவரியான 54, கண்ணகி நகர் , பெருமாநல்லூர் சாலைக்கு வந்த அந்த நாளில் நான் திருப்பூரில் இருந்தேன். ஏற்கெனவே பாண்டிச்சேரியில் விடியல் பதிப்பகம் சிவாவோடு பார்த்திருந்த கருணா மனோகரனைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அவரும் நூலைக் கையில் திணித்துவிட்டார்.

கையில் திணிக்கப்பட்ட இவ்விரண்டு நூல்களையும் வாசித்தபோது சி.என். அண்ணாதுரை எழுதிய ‘ ஆரிய மாயை’யை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்துகொண்டே இருந்தது. அதைத் தேடி வாசிப்பதற்கு முன்பாகவே கோ.கேசவனும் அ.மார்க்ஸும் சேர்ந்து எழுதிய ‘குணா: பாசிசத்தின் மறுவடிவம்’ வந்துவிட்டது. புதிய ஜனநாயகம் இதழிலும் குணாவின் நோக்கங்கள் குறித்துக் கட்டுரைகள் வந்துகொண்டே இருந்தன. தலித் இயக்கங்களை நோக்கிப் பேசும் தொனியைக் கொண்ட அச்சிறுநூலைப் பெரும்பாலும் தலித் சிந்தனையாளர்களும் களப்பணியாளர்களும் சந்தேகக் கண்கொண்டுதான் பார்த்தார்கள்; வாசித்தார்கள். நானும் வாசித்தேன். அதற்கிடையில் சுப்பு என்பவர் எழுதிய ‘திராவிட மாயை’யும் வாசிக்கக் கிடைத்தது.
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்னும் சிறுநூல் உருவாகக் காரணமாக இருந்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்பது சொல்லப்பட வேண்டிய சுவாரசியமான தகவல்.1994 சூன் 25-26 தேதிகளில் குடந்தையில் பா.ம.க. நடத்திய கருத்தரங்கில் குணாவை ‘திராவிட மாயை’ என்னும் தலைப்பில் கட்டுரை வாசிக்க அழைத்தது. அவரைக் கட்டுரை வாசிக்க அழைத்தவரொடு ஏற்பட்ட செய்திப் போக்குவரத்துச் சுணக்கத்தால் அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனால் கட்டுரையை எழுதத் தூண்டுகோல் அக்கருத்தரங்கம் தான் என எழுதுகிறார் குணா. அந்த முன்னுரையில் “குறுநூலாக வடிவெடுத்துள்ள இந்தக் கட்டுரை, நல்ல தூசியைக் கிளப்புமென்பதை நூலாசிரியன் என்னும் வகையில் நன்கறிவேன்” என்றும் நன்கறிவேன் என்கிறார். அது கிளப்பிய தூசி நல்ல தூசியா? கண்கெடுக்கும் தூசியா? என்பதை நிகழ்காலம் உணர்த்திக் கொண்டிருக்கிறது.

வழிநூல்களையெல்லாம் வாசித்த பின்னரே முதல் நூலான ஆரிய மாயைத் தேடி வாசித்தேன். சி.என். அண்ணா என்ற பெயரோடு முதலில் அச்சிடப்பெற்ற ஆரியமாயை வாசிப்பதற்கு முன்பே அவரது நாடகமான நீதிதேவன் மயக்கத்தை வாசித்திருந்ததால், அந்நாடகம் எழுதுவதற்காகத் தரவுகளாகத் திரட்டப்பட்டவை கொண்டே ஆரியமாயை நூல் எழுதப்பட்டிருக்கும் எனத் தோன்றுகிறது. ஆரிய மாயை சென்னை மாகாண அரசால் தடைசெய்யப்பட்ட நூல் என்றும் தண்டமாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு சிறைக்கு அனுப்பவில்லை அரசாங்கம் என்றும் அவரே எழுதியுள்ளார். அப்படிச் சிறையில் அடைக்கப்பட்டால் ஆயிரம் ஆயிரமாய்ப் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனையாகும் என்பது அரசுக்குத் தெரியும் என்பதால் தன்னைச் சிறைக்கு அனுப்பவில்லை என்கிறார். தொடர்ந்து அவரது குறிப்பு இப்படி உள்ளது:


ஆரிய மாயை வழக்குக்காக பலமுறை முக்கியமான அலுவல்களையெல்லாம் விட்டு விட்டு திருச்சிக்குச் சென்று வருகிறேன். அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். கம்பராமாயன சீலர் கலாரசிகர் தோழர் பாஸ்கரத் தொண்டைமானைத் தான் இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆரிய மாயைக்கு அவர் தடை விதித்து என்னைச் சிறையில் தள்ளினால் மறுநாளே ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஆரிய மாயை அச்சாகி எங்கும் பறக்குமே! சர்க்கார் இப்போது ஆரிய மாயை, இலட்சிய வரலாறு, இராவண காவியம் போன்ற நல்ல நூல்களைப் படித்து வருவது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.அண்ணாத்துரை உள்ளதைத்தான் எழுதினான் என்ற அவர்களுக்கு நன்று தெரிந்ததே. சர்க்கார் நூல்களின் மீது தடைவிதிப்பதை விட்டுவிட்டு முக்கியமாகச் செய்யவேண்டிய காரியங்களில் ஈடுபடுவது நல்லது.
ஒன்றைத் தொட்டு இன்னொன்றாய் எழுதுவதும் வாசிப்பதும் ஒருவிதப் பயணம். அது சுற்றுலாவியலுக்குள் அடங்காத கருத்தியல் பயணம்.


சந்தேகங்கள்


2000 -த்தின் தொடக்க ஆண்டுகளில் நடந்த விவாதத்திற்கான எதிர்வினை
=====================================================
எழுத்து மட்டுமல்ல எல்லாவிதமான கலைச்செயல்பாடுகளும் ஒருவிதத்தில் மனிதர்களின் அனுபவங்களாகவும், அனுபவங்களின்மேல் எழும் நம்பிக்கைகளாகவும் உள்ளன. அதேபோல் விமரிசனங்கள், அவற்றின்மேல் எழுப்பப்படும் சந்தேகங்களாகவும் சந்தேகங்களுக்கான காரணங்களைத் தொடுப்பதுமாகத்தான் இருக்கின்றன. விமரிசனங்களின் மேல் சந்தேகங் கொள்ளக் கூடுதலாகவே சாத்தியங்கள் இருக்கின்றன.

கதாபாத்திரங்கள் அவர்கள் இயங்கிடும் பிரதேசம், அதற்கான காலம் என நிகழ்ச்சிகளை உருவாக்கும் நாடகம், நாவல், போன்றன ஒருவிதத்தில் வரலாறுதான். கவனம் ஒரு வரலாறுதான்.படைப்பாளியின் பார்வையில் படைப்பில் இடம்பெறும் நிகழ்வுகள் எல்லாமே நடந்தவைகளாகக்கூட இருக்கலாம். இவைகள் தவிர இன்னும் பல நடந்திருக்க கூடும், அவர்கள் அறியாமல். நடந்த எல்லாவற்றையும் பதிவுசெய்வது ஒரு படைப்பாளியின் வேலையும் அல்ல. ஆனால் பதிவுகள் அந்தப் படைப்பாளியின் கோணத்தில்தான் வாசகனிடம் வந்து சேர்கிறது என்பது விளக்கவேண்டிய ஒன்றல்ல.

தன் வரலாறாக எழுதப்பட்ட கருக்காக இருந்தாலும்சரி, சிலுவைராஜ் சரித்திரமாயினும்சரி படைப்பாளியின் கோணம் இருக்கத்தான் செய்கிறது. பிரக்ஞைபூர்வமாக சொல்லுவதிலும் சொல்லாமல் தவிர்ப்பதிலும் வேறுபாடுகள் இருக்கலாம். பாமாவிடம் எல்லாவற்றையும் சொல்லி விடவேண்டும் என்ற பிரக்ஞை கூடுதலாக இருந்திருக்கிறது; ராஜ்கௌதமனிடம் சொல்லாமல் தவிர்ப்பது குறித்தபிரக்ஞை கூடுதல். அதுதான் வேறுபாடு. அனுபவங்கள் எல்லாவற்றையும் சொல்லாமல்விட்டது ஏன் எனக் கேள்விகள் எழுப்பலாமேயொழிய சொல்லித்தான் ஆகவேண்டும் எனக் கட்டளையிட முடியாது. தன்வாழ்க்கையின் எந்தெந்தப் பகுதிகளையெல்லாம் சொல்லவேண்டும்; எவையெல்லாம் மறைக்கப் படவேண்டும் என்பது படைப்பாளியின் நம்பிக்கை, நோக்கம், விருப்பம் சார்ந்தது. கௌதமன் கவனமாக இருந்திருக்கிறார் என்பதை சிலுவைராஜ் சரித்திரத்தில் காண முடிகிறது. கவனமாக எழுதப்பட்டவைகளே சிறந்த எழுத்துக்கள் என்று நம்புவதும், மறைக்காமல் எழுதப்பட்டவைகளே சிறந்த எழுத்துக்கள் என்று நம்புவதும், வாசகர்களின் பாடுகள்.


பாமாவின் வன்மத்திலும், சுமதியின் கல்மண்டபத்திலும் சொல்லப்படுவனவும் படைப்பாளிகளின் கோணத்தில் சொல்லப்பட்ட வரலாறுகள். அவர்களின் எண்ணப்படி-மனச்சாட்சிப்படி உண்மைகளும் கூடத்தான்.ஆனால் இந்தப்படைப்பாளிகள் சார்ந்த சாதி மற்றும் வெளிவரும் காலம்சார்ந்து இவைகளுக்கு வேறு நோக்கங்கள் இருக்கக் கூடும் என்பது விமர்சகனின் சந்தேகம். இவ்விரு படைப்பாளிகளுக்கும் உண்மையில் அந்த நோக்கங்கள் இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்ட சூழலில் அவர்களது படைப்புகளுக்கு வெவ்வேறு நோக்கங்கள் வந்து சேர வாய்ப்புக்கள் உண்டு என்பது எனது வாதம்.

வெங்கட் சாமிநாதன், சுமதியின் நாவலை முன்வைத்து இடஒதுக்கீட்டை விவாதிக்கும்பொழுது (கணையாழி) கல்மண்டபம் இதற்காகத்தான் எழுதப்பட்டுள்ளதோ என ஐயப்பட்டார். அதேபோல் பாமாவின் வன்மம் வந்தவுடன் குமுதம் போன்ற பெரும் பத்திரிகைகளில், இந்நாவலில் தலித்துக்களிடையேயுள்ள உள்சாதி முரண்பாடுகள் முன் வைக்கப்பட்டுள்ளன என சுட்டிக் காட்டப்பட்டதை மறக்கமுடியுமா..? உள்சாதி முரண்பாடுகளைப் பேசவே கூடாது எனச் சொல்லவரவில்லை. அப்படிப் பேசும்பொழுது சொந்த சாதி ஆதரவு என்பதைவிட அதன் மேலான விமரிசனம்தான் படைப்பாளியிடம் எதிர் பாக்கப்படுகிறது.
 
இமையத்திடம் கோவேறுகழுதைகளில் வெளிப்பட்டது சுயசாதி விமரிசனமும் வெறுப்பும். தன்சாதி மனிதர்கள், அவர்களின் துணிகளையெல்லாம் வெளுத்த ஆரோக்கியத்தின் மேல் செலுத்திய அதிகாரத்தை அவர் சரியென நியாயப்படுத்தவில்லை. சிவகாமியின் பழையன கழிதலும், ஆனந்தாயி நாவல்களின் வெளிப்பாடுகளும் சொந்த சாதிக்காரர்களின் மேல் பச்சாதாபங்கள் அல்ல. விமரிசனங்கள்.ஆண்கள்-தந்தையர்கள்- குடும்பத்துப் பெண்கள் மேல் செலுத்தும் அதிகாரம் குறித்த விமரிசனங்கள்.ஆனால் சுமதி போன்ற முற்பட்ட சாதிக்காரர்கள், தன் சொந்தசாதி மனிதர்களிடம் பச்சாதாபம் ஏற்படும்படி எழுதவில்லையென நம்பினால் நம்புபவரது நம்பிக்கை கேள்விக்குரிய ஒன்று .

அதேபோல் வன்மத்தில், இரண்டுசாதிகளும்-பள்ளர்,பறையர்- ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டியவர்கள் ஆதிக்க சாதியினரான ரெட்டிகளும் நாயக்கர்களும் தான் என்கிற குவிமையம் விலக்கப்பட்டு இவர்களுக்குள்ளேயே கலவரம் நடக்கிறதே என்னும் ஆதங்கம் மட்டுமா பாமாவால் முன்வைக்கப்படுகிறது..?அதிகம் பாதிக்கப்பட்டவர்களாகச் சித்திரிக்கப்படுவர்கள் பறையர்கள்தான் என்பது சாதாரணமான முதல் வாசிப்பிலேயே வெளிப்படுகிறது. பள்ளர்கள் அதிகம் முரண்டு பிடிப்பவர்களாகவும் புரிந்து கொள்ள மறுப்பவர்களாகவும் பதிவு செய்யப் பட்டுள்ளனர். பறையர்சாதிப் பெண்களின் வலியும் துயரமும் பதிவு செய்யப்பட்ட அளவுக்கு பள்ளர் குலப்பெண்களின் வலியும் துயரமும் பதிவாகாமல் போகக் காரணங்கள் என்னவாக இருக்கமுடியும்..? பாமாவுக்குள் இருந்த உள் நோக்கம் என்று சொல்லவரவில்லை. இந்த இடங்கள் எல்லாம் சொந்தசாதியின் பக்கம் சார்ந்து விடாமல், விமரிசனம் செய்திட வாய்ப்புள்ள இடங்கள் என்பதுதான் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று. அந்த வகையில் தான் வன்மம் தலித் விரோதத் தன்மையின் அருகில் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்தச் சந்தேகம் எஅப்படித்தான் தோன்றுகிறது.
தலித் எழுத்தாளர்கள் சொந்தசாதிகளின் மீது விமரிசனம் செய்பவர்களாக இருக்க வேண்டும் எனச் சொல்லும் பொழுது தலித் அல்லாத சாதி எழுத்தாளர்கள் எப்படி எழுதுவது என்று யாருக்காவது கேட்கத்தோன்றும். தலித் அல்லாதவர்கள், அவர்கள்-பிராமணர்களாக இருந்தாலும்சரி, பிராமணர்களையே எல்லாவற்றிற்கும் காரணமாகச் சொல்லித் தப்பித்துக் கொண்டிருக்கும் இடைநிலைச் சாதியினராக இருந்தாலும்சரி சொந்த சாதிகளை விமரிசனம் செய்தால் மட்டும் போதாது. சுயசாதிஎதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டும். தலித்துக்களின் துயரத்தை அவர்களை விடவும் அசலாகப் பதிவு செய்ய எம்மால் இயலும் எனப்போட்டி போடுவதை விட்டுவிட்டு தங்கள் சாதி மனிதர்களிடம் தங்கியுள்ள மேட்டிமைத் தனத்தைக் களைவது எப்படியென யோசிக்கலாம். தங்கள் வீட்டுப் பெண்கள், மாறிவரும் நகர நாகரீகத்திற்குத் தக்க மாறுவது எப்படியெனக் கதையெழுதுவதை விடவும், அடுத்த வீட்டில் வாழும் குடும்பத்தினருடன் சாதி வேறுபாடு காட்டாமல் பழகுவது எப்படியெனக் கதை எழுத முயற்சி செய்யலாம்.

மனிதனின் வாயில் மலத்தைத் திணிப்பதைத் தங்களுக்கு நேர்ந்த துயரமாகத் தலித் எழுதும் பொழுது வெளிப்படுவது இயலாமையாகவும் ஆவேசமாகவும் இருக்கும். அதைவிடவும் அதனைச்செய்த ஆதிக்கசாதி எழுத்தாளன், குற்ற வுணர்வும் அச்சமும் வெளிப்பட எழுதும் கதைதான் இன்றைய அவசரத் தேவை என நினைக்கிறேன். இனமரபுப் பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கும் மண்சார்ந்த அடையாளங்களை எழுதும் எழுத்தாளர்கள், தங்களின் மூதாதையர்கள், சேரி மக்களூக்குச் செய்த துரோகத்தை எழுத முன்வரவேண்டும்.

தலித்துக்களாக உணராத நிலையிலேயே கூடத் தலித் சாதிகளில் பிறக்க நேர்ந்த டி.செல்வராஜுவும் (மலரும்சருகும்), பூமணி (பிறகு, வெக்கை) போன்றவர்கள் தங்கள் நாவல்களில் பல்வேறு சாதி மனிதர்களை அவரவர் இயல்புகளோடு உலவ விட்டுள்ளனர். ஆனால் இடைநிலைச்சாதி எழுத்தாளர்களும் (கி.ரா.,நீலபத்மநாதன், நாஞ்சில்நாடன், சி.ஆர்.ரவீந்திரன்.), பிராமண எழுத்தாளர்களும் (சி.சு. செல்லப்பா, தி.ஜானகி ராமன்...) போன்றவர்கள் தங்கள் குல மனிதர்களுக்குள்ளேயே நின்று கொள்கின்றனர். எல்லையைச் சுருக்கிக் கொள்வதுகூட தப்பித்துக் கொள்வதற்கான வழிகளில் ஒன்றுதான். அவர்கள் உண்மையான வரலாற்றையெழுத விரும்பியிருந்தால் மனிதாபிமானத்தோடு கூடிய குலப் பெருமைகளை எப்படியெழுதியிருக்க முடியும். சாதியபிமானம் நிரம்பிய கீழ்மைகளையல்லவா எழுதிக் குவித்திருக்க வேண்டும்.

தனிமனித சுதந்திரத்தையும் சமூகத்தில் வேறுபாடுகள் களையப் படவேண்டும் என்பதையும் முன்மொழிந்த நவீனத்துவத்தை உள்வாங்கியதிலேயே இந்திய சமூகம் ஏராளமான தவறுகளைச் செய்திருக்கிறது. அந்தத்தவறுகள் முதலில் களையப்பட வேண்டும்.
அதுவரை சந்தேகப்படுவதைத்தவிர்க்கவேண்டியதில்லை.


சந்தேகங்களின் தொகுதிகள் பெருகுவதாக.!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்