உலகக் கோப்பைக் கிரிக்கெட்

பார்வையாள நினைவுகள் 
ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் சேர்ந்து நடத்திய 1992 உலகக் கோப்பைத் தொடக்கவிழாக் காட்சிகளைச் சொந்த தொலைக் காட்சியின் முன்னால் உட்கார்ந்து பார்த்துவிடும் ஆர்வத்தோடு காலையிலிருந்தே தயாராக இருந்தோம்.புதுச்சேரி, அங்காளம்மன் நகர், பிள்ளையார்கோவில் தெரு 52 ஆம் எண், முதல் மாடி வீட்டின் முன்னறையில் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி படங்காட்டத் தொடங்கியபோது தொடக்க நிகழ்ச்சிகள் முடிந்துவிட்டன. நான் மட்டுமே கிரிக்கெட் பார்ப்பேன் என்பதால் வாங்கவில்லை. மனைவியும் பார்ப்பார். மகளும் மகனும் பார்ப்பார்கள். நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரின் பிள்ளைகளும் கிரிக்கெட் பிரியர்கள் என்பதால் அவ்வப்போது அங்கே போய்ப் பார்ப்போம்.உலகக் கோப்பைப் போட்டிகள் தொடர்ச்சியாக நடக்கும் என்பதால் தினசரி அங்கே போய் உட்காருவதில் இருக்கும் சிரமம் உணர்த்தப்பெற்றது. 

மொத்தமாகக் கட்டினால் 10000/- ரூபாய்க்கும் கீழே தான் விலை இருந்தது. 36 மாதத் தவணைகளில் கட்டி முடிக்கும்போது சம்பளத்தில் பிடிக்கப்படும் தொகையைக் கணக்குப் பார்த்தபோது இரண்டு மடங்காக இல்லை ஆயிரம் ரூபாய் குறைவாக வந்தது. அலைவரிசைகளை மாற்றும்- ரிமோட் கண்ட்ரோல்- மாற்றியையும் சேர்த்து வாங்கியிருந்தால் இரண்டு மடங்குக்கும் மேலே போயிருக்கும். அப்போது அது மட்டுமே 1000 ரூபாய். தனிக்காட்டு ராணியாக தூரதர்ஷன் மட்டுமே ஒளிபரப்புச் செய்த காலத்தில் மாற்றியையும் சேர்த்துத் தலையில் கட்டிவிடப்பார்த்த காட்சிக்கூட விற்பனையாளரின் சாதுரியப் பேச்சுகளுக்கு மசியவில்லை.

பாண்டிச்சேரி-மகாத்மா காந்தி சாலையில் இருந்த பிபிஎல் காட்சிக்கூடத்திலிருந்து தொலைக்காட்சிப் பெட்டியை மட்டுமே வாங்கினோம். அதுவரை எழுது மேசையாக இருந்தது அன்றுமுதல் தொலைக்காட்சி மேசையாக மாற்றம்பெற்றது. ஒளிபரப்பு இல்லாத போது மூடிவைக்க டர்க்கித் துவாலை துவைத்து வைக்கப்பட்டது. அந்த வருடத்துக் கோடை விடுமுறைக்குச் சொந்தக் கிராமத்திற்கே போகவில்லை. வண்ணத் தொலைக்காட்சியில் உலகக் கோப்பைப் போட்டிகள் 1992 இல் என்றாலும் கறுப்பு - வெள்ளைத் தொலைக்காட்சியில் உலகக் கோப்பை கிரிக்கெட்டைத் பார்த்தது 1987 இல். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளர் குடியிருப்பில் - பக்கத்து வீட்டில் உயிரியல் துறையில் ஆய்வாளராக நண்பர் அன்புதுரையின் வீட்டில் பத்துக்குப் பத்து அறைக்கேற்பச் சின்னதான கறுப்பு- வெள்ளைத் தொலைக்காட்சி இருந்தது. 
சொந்த ஊரில் எட்டாம் வகுப்புவரை படித்துவிட்டு விடுதியில் தங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்துத் திண்டுக்கல் போனபின்பே கிரிக்கெட் என்றொரு விளையாட்டு இருப்பது தெரியும்.டட்லி பள்ளி விடுதியில் தங்கிக் கால்பந்து விளையாடுவதற்காகக் கேரளத்தின் மூணாறிலிருந்தெல்லாம் வருவார்கள். அவர்களோடு சேர்ந்து கால்பந்து விளையாடாமல் கிரிக்கெட் விளையாடக் காரணம் கிட்டிப்புள் விளையாண்ட அனுபவம்தான். 
அதற்குமுன்பு அதிகம் விளையாண்டது கிட்டிப்புள் மட்டுமல்ல; கபாடியும். எந்தக் கருவிகளும் இல்லாமல் உடலை மட்டும் கொண்டு விளையாடும் கபாடியைவிடக் கிட்டிப்புள் பிடித்தமான விளையாட்டாக இருந்தது..ஒன்றரை அடி நீளக் குச்சியும் மூன்று அங்குல அளவில் ஒரு குச்சியும் கொண்டு ஆடும் கிட்டிப்புள்ளில் கோதுவிடுவது பெரிய குச்சி. பறந்து போவது சின்னக்குச்சி. பறக்கும்போதே பிடித்துவிட்டால் கோதியவர் ஆட்டம் இழப்பார். எதிரே இருக்கும் எல்லைக் கோட்டுக்கு ஓடும்போது குச்சியைத் தடுத்து ஒரு முனையில் வைத்துவிட்டால் ஓடுபவரின் ஆட்டம் முடிந்துவிடும். ஏறத்தாழ கிட்டிப்புல்லின் விதிகள் என்றாலும் இங்கே குச்சிகளுக்குப் பதில் மட்டையும் பந்தும். 
பள்ளிப் படிப்புக் காலத்தில் தொடங்கி பிரியமான அணியாக இருந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணிதான். விவியன் ரிச்சர்ட்ஸ், மைக்கேல் கோல்டிங், ரிச்சி ரிச்சர்ட்சன், வால்ஸ், அம்புரோஸ் போன்றவர்களின் பெயர்களுக்கு பின்னால் தான் இந்திய அணியின் வீரர்களின் பெயர்கள் உச்சரிக்கப்படும். வெங்கட்ராகவன் அணித் தலைவராக இருந்த காலத்தில் காவஸ்கர், விசுவநாத், ஸ்ரீகாந்த் போன்ற மட்டையாளர்களும் கபில்தேவ், ரோஜர் பின்னி போன்ற பந்து வீச்சாளர்களும் விடுதி அறைகளில் ஒட்டப்பட்ட படங்களாக இருந்தனர். 1983 உலகக் கோப்பையை - ப்ரூடெண்சியல் உலகக் கோப்பையைத் தட்டிவந்த கபில் தேவ் இந்திய கிரிக்கெட்டின் ஆளுமையாக ஆனார். அதுவரையிலும் பிராமணர்களின் விளையாட்டாக அறியப்பட்ட கிரிக்கெட்டை மற்றவர்களின் விளையாட்டாகவும் மாற்றியவராக கபில் நின்றார். அவர்தான் வெற்றிக்குப் பின் ஆங்கிலத்திற்குப் பதிலாகச் சொந்த மொழியில் பேசியவராகவும் இருந்தார்.மும்பை, டெல்லி, கல்கத்தா, சென்னை எனப் பெருநகரங்களின் வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்த ஹரியானாவின் கபில்தேவின் நீட்சியாக மகேந்திர சிங் தோனி 2011 இல் திரும்பவம் கோப்பையைப் பெற்று இந்தியக் கிரிக்கெட்டின் ஆகப்பெரும் அடையாளமாக வலம் வருகிறார். 

*********** 
அதிகாரத்தை நெருங்கும் வழிமுறையை அதன் பண்பாட்டு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வதின் வழி கண்டடைய முடியும் என உணர்ந்த கூட்டம் தான் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரிக்கெட்டைத் தங்களுக்குப் பிடித்த விளையாட்டாகக் காட்டிக் கொண்டது. இந்தியாவின் உயர் வகுப்பாராகவும், நடுத்தர வர்க்கமாகவும் நகரவாசிகளாகவும் மாறிய பிராமணர்கள் கிரிக்கெட்டை நாடிச் சென்ற கதை இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளின் கதை. ஆனால் ஒரு நூற்றாண்டுக்குப் பின் மொத்தக் கதையும் மாறிப் போய்விட்டது. 

ஓர் அணி விளையாட்டில் இருக்க வேண்டிய வேகமும் சுறுசுறுப்பும் வேகமும் இல்லாத கிரிக்கெட், தொடக்கத்தில் வானொலி வர்ணனை மூலமும், பின்னர் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புக்கான விளையாட்டாகவும் மாறியதன் பின்னணியில் வெறும் மேற்கத்திய மயமாதல் மட்டுமே இருப்பதாக ஒருவர் மதிப்பிட்டால் அது பெருந்தவறாக ஆகி விடும். ஏனென்றால் கிரிக்கெட்டைச் சுற்றிப் பல விளையாட்டுக்கள் நடக்கின்றன. அவை சிறு முதலாளிகளின் வியாபார வளர்ச்சி தொடங்கி, பன்னாட்டுக் கம்பெனிகளின் அசுர வளர்ச்சி வரை உதவும் காமதேனுவாக மாறி விட்டது. நேர்க்காட்சிக்காகச் சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் கூடும் 60 லட்சம் பேர்களோடு தொலைக் காட்சிகளின் வழியாக பல நூறு லட்சம் கண்களின் களிப்புக்கான காட்சிப் பொருளாகத் தன்னை ஊருமாற்றம் செய்து கொள்ள அனுமதித்தது தான் கிரிக்கெட் விளையாட்டின் வெற்றிக் கதை. 

கிளித்தட்டும் ஆடிய தெருக்களில் பிளாஸ்டிக் மட்டையை வைத்துக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் சிறுவர்கள். ஒரு மணி நேரத்திற்குள்ளாக வெற்றி தோல்வியைத் தெரிந்து கொண்டு தோட்ட வேலைக்குச் செல்லும் வசதி கொண்ட சடுகுடு விளையாட்டைக் கைவிட்ட கிராமத்து வாலிபர்கள், உள்ளூர் முதலாளிகளின் தயவில் உருவாக்கப்பட்ட டிராபிகளுக்காக ஒருநாள் ஆட்டங்களை ஆடிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி, விஜய் படம் போட்ட உள்பனியன்களுக்குப் பதிலாக மட்டை சுழற்றும் கோலியும், கிளவுஸ் மாட்டிய தோனியின் சிரிப்பும், புவனேஷ்குமாரின் பந்துவீச்சும், குல்தீப் யாதவின் சுழற்சியும் காட்சிகளாகி விட்டன. 
காதல், அன்பு, பாசம், தியாகம், இனிமை, பசுமை... இப்படியான சொற்களால் வருணிக்கக்கூடிய காட்சிகளைக் கொண்ட நாடகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டால் தான் பார்வையாளர்கள் நாற்காலியின் நுனியில் வந்து அமர்வார்கள். நாயகன் சரியாக மாட்டிக்கொண்டுவிட்டானே? இப்படியொரு சதியில் சிக்கியவன் தப்பிப்பானா? அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் நாயகியைக் கைகழுவித்தான் ஆகவேண்டும் எனப் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்து ஆர்வத்தை உண்டாக்கவேண்டும். இதனை இவ்வகையான நாடகம் எனச் சொல்லத் தமிழில் சரியான சொல்லொன்று இல்லை. ஆங்கிலத்தில் அதனை மெலோடிராமா (Melo-drama ) என்று வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். இவ்வகை உணர்வை உண்டாக்கக் காட்சி அமைப்புகளுக்கும் அதில் பங்கேற்று நடிப்பவர்களுக்கும் உதவும் விதமாகப் பாடல்களும் இசைக்கோர்வைகளும் ஒளியமைப்புத் திட்டமும் இணந்து கூடுதல் லயத்தை உண்டாக்கும் 
என்ன நடக்குமோ? ஏது நிகழுமோ? என்பதுதான் மெலோடிராமாவின் அடிப்படை உணர்வுத்தூண்டல். வகையிலான ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டங்கள் ஒரு மெலோடிராமாவின் கச்சிதத்தோடு இப்போதுதான் நடந்துமுடிந்திருக்கின்றன 
************************* 
எந்தக் கோப்பையாக இருந்தாலும் இந்திய அணியே வெல்ல வேண்டும் எனத் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக் கடன் சொல்கிறார்கள்; வேத மந்திரங்கள் ஓதி யாகம் வளர்க்கிறார்கள். இந்திய அணிக்குக் கோப்பை கிடைக்க வில்லையென்றால் தோல்விக்குக் காரணமான வீரர்களின் வீட்டின் மீது கல்லெறிகிறார்கள்; கொடும்பாவி கொளுத்திக் கோபம் கொள்கிறார்கள். அதிலும் பாகிஸ்தானோடு மோதி இந்திய அணி தோற்றுப் போய்விட்டால் கையை வெட்டிக் கொள்ளவும், காலை உடைத்துக் கொள்ளவும் கூடத் தயாராகி விட்டது இந்திய ரசிக மனோபாவம். தேசப்பற்றின் ஊற்றாகவும், வெற்றி தோல்விக்காக விடுமுறை அளிக்கும் நிகழ்வாகவும் ஆகி விட்ட கிரிக்கெட்டின் பின்னணியில் அசைவது என்ன? பெரும் கும்பல் மனோபாவம் தான். இந்தக் கும்பல் மனோபாவம் தன்னெழுச்சியாக உருவான கும்பல் மனோபாவம் அல்ல என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்று. 

வெவ்வேறு நோக்கங்களுடன் புதியபுதிய அலைவரிசைகளைத் தொடங்கும் தொலைக்காட்சி குழுமங்கள் மாநில மொழிகளில் வர்ணனை சொல்வதற்காகவும் அலைவரிசைகளையும் தொடங்கியுள்ளன. சென்னையில் உட்கார்ந்து கொண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்துப் போட்டிகளைக் கச்சடாவான தமிழில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்கள். அந்தப் பேச்சுகளில் வழிவது கிரிக்கெட்டின் நுட்பங்களும் புள்ளிவிவரங்களும் மட்டுமல்ல. போலியான உணர்ச்சிகளைத் தூண்டும் சொற்களால் தேசப்பற்றும் வட்டாரப்பற்றும். விளையாட்டை அரசியல்மயப்படுத்தி விற்பனைச் சரக்காக்கி நாடுகளிடையே பகைமுரணை உருவாக்குவதில் ஊடகங்கள் முன்னணியில் நிற்கின்றன. 

கிரிக்கெட் ஆடியவனாகப் பார்க்கத் தொடங்கிய ஆர்வம் இப்போது அதன் விமரிசகனாகப் பார்க்கும்படி மாற்றியிருக்கிறது. நோக்கம் எதுவாக இருந்தாலும் பார்வையாளர்களைத் திளைக்கச் செய்யும் களியாட்டக்கூறுகள் கொண்டதாகக் கிரிக்கெட் மாற்றம் பெற்றுள்ளது என்பதை மறுக்கமுடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்