துணைவேந்தர்கள் என்னும் தோட்டத்து மேஸ்திரிகள்



நமது நாட்டின் உயர்கல்விக்குப் பொறுப்பு வகிப்பன பல்கலைக்கழகங்கள். ஒரு பாடத்தில் பட்டம்பெறவேண்டும் எனக் கல்லூரியில் நுழையும் மாணாக்கர்களுக்குக் கற்பிக்க வேண்டிய பாடத்திட்டங்களை உருவாக்குவது, கற்பிக்கின்ற முறைகளை வகுப்பது, பாடங்களை முறையாகக் கற்றுள்ளனரா? என அறியத் தேர்வுகள் நடத்துவது என மூன்று முக்கியமான பணிகளைச் செய்கின்றன. அத்துடன் பட்டமேல் படிப்பு படிக்க விரும்பும் மாணாக்கர்களுக்குத் தனது வளாகத்திலுள்ள சிறப்புத் துறைகளின் வழியே முதுநிலைப் படிப்புகளையும், அவற்றின் தொடர்ச்சியாக ஆய்வுப்படிப்பு களையும் தருகின்றன. 


குறிப்பிட்ட பாடத்தில் வல்லுநர்களை உருவாக்கும் பல்கலைக் கழகங்கள் தன்னுடைய துணை அமைப்புக்கள் மூலம் மாணாக்கர்களிடம் நாட்டு நலப்பணி, இளையோர்நல மேம்பாடு, பண்பாடு, சமுதாயம், மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு எனப் பலவற்றைக் கற்றுத் தந்து மாணாக்கர்களை நல்ல மனிதர்களாக ஆக்கும் நோக்கம் கொண்டன என்பது  நமது நம்பிக்கை; நம் நினைவில் இருக்கும் கருத்துக்கள்.

சமுதாய நல்லிணக்கத்திற்கேற்ற  மனிதர்களை உருவாக்கும் பல்கலைக் கழகங்களின் நிர்வாகத்திற்குத் தலைமையேற்றுப் பொறுப்பு வகிப்பவர்கள் அதன் துணைவேந்தர்கள். ஜனநாயக அமைப்பில் அதிகாரமிக்க பதவிகளுக்கெல்லாம் காலக்கணக்கு இருப்பது போல  பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிகளுக்கும் காலக்கணக்கு உண்டு. மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்; மையப் பல்கலைக்கழகங்களில் ஐந்து ஆண்டுகள். ஒரேயொரு வித்தியாசம் துணைவேந்தர். பதவிக்கான நபரைத் தேர்தல் மூலம் தேர்வு செய்வது இல்லை; அது ஒரு நியமனப் பதவி.நியமனம் செய்யப்படுவதால் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தரின் பதவிக்காலம் முடிந்தவுடன் அடுத்த துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டுப் பதவி ஏற்பார் என்ற உத்தரவாதம் இல்லாமல் இடைவெளிகள் ஏற்பட்டு விடுகின்றன. தொடர்ச்சியான நிர்வாகம் என்பதற்குப் பதிலாக எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் தொய்வடைந்த இடைக் கால நிர்வாகம் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது.

இன்றைய தேதிக்கு தமிழ்நாட்டில் ஆறு பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை என்பது பற்றி பொதுமக்களில் யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஆறு பல்கலைக்கழகங்களையும் அரசுத்துறைச் செயலர்களே ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் நிர்வாகம் செய்கின்றனர். கோப்புகள் சென்னைக்குப் போய்த் திரும்ப மாதங்கள் சில ஆகிக்கொண்டிருக்கின்றன.  துணைவேந்தர்கள் இல்லாமல் பல்கலைக்கழக நிர்வாகம் படும் அவதிகள் ஒரு புறம் இருக்க. துணைவேந்தர்களாக ஆகும் முயற்சியில் இருக்கும் நபர்கள் படும் அவதிகளோ விநோதமானவைகளாக இருக்கின்றன.

இதுதான் துணைவேந்தர் பதவிக்கான தகுதி என்று இந்திய அளவில் பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கும் பல்கலைக் கழக மானியக்குழு ஒரு வழிகாட்டிக் குறிப்பைத் தந்துள்ளது. அதில் குறைந்தது 10 ஆண்டுகள் பேராசிரியராக இருந்த அனுபவம் பெற்ற கல்வியாளர்களே துணைவேந்தராக ஆக்கப்படவேண்டும் என்பது முக்கியமான குறிப்பு. இந்தக் குறிப்பை இப்போதைய மாநில அரசும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு முந்திய அரசும் கண்டுகொண்டதில்லை. இப்போதிருக்கும் மத்திய அரசும் கண்டுகொள்ளாது என்ற சமிக்ஞையின் அடையாளமே திரு சுப்பிரமண்ய சுவாமி இந்தியாவின் மதிப்புமிக்க ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பிருக்கிறது என்ற வதந்திகள். வதந்திகள் பெரும்பாலும் உண்மையாகும் காலமிது.

முன்பெல்லாம் துணைவேந்தர்கள் தேர்ந்தெடுக்கும் முறை வெளியில் அதிகம் தெரியாது. ஆங்கிலத்தில் செர்ச் கமிட்டியென அழைக்கப்படும்(Search Committee) தெரிவுக் குழுவினர், சிறந்த கல்வியாளர்களைத் தேடிப் பரிந்துரை செய்த காலமொன்றிருந்தது. இப்போது எல்லாம் மாறிப் போய்விட்டது. துணைவேந்தர் தேர்வுக்குழுவிற்கு ஆட்சிப் பேரவைப் பிரதிநிதி, ஆட்சிக்குழுவின் பிரதிநிதி, வேந்தரின் பிரதிநிதியென மூவரின் பெயரும் முடிவானபின் அரசு அறிக்கை வெளியிடுகிறது; செய்தித்தாளில் செய்திகள் வந்தபின் அக்குழுவினரிடம் தங்களுக்குத் துணைவேந்தராகும் தகுதியிருப்பதாக நினைப்பவர்கள் தங்களின் சாதனைப் பட்டியல் அடங்கிய வாழ்க்கைக்குறிப்பு விவரங்களைக் குறிப்பிட்ட தேதிக்குள் வழங்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ஏறத்தாழ ஒரு அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் முறையாக மாறிவிட்டது. இந்தக்குழுவில் இருக்கும் நபர்கள், துணைவேந்தர் போன்ற உயரிய பதவிக்கான நபரை அடையாளப்படுத்தக்கூடிய அளவுக்குத் திறமைவாய்ந்த கல்வியாளர்களா? என்றால் அதுவும் இல்லை. பெரும்பாலும் ஆட்சிப்பேரவை மற்றும் ஆட்சிக்குழுவிலிருந்து வருபவர்கள் கல்வியாளர்களாக இல்லாமல் ஆள்பலத்தால் போட்டியிட்டோ,போட்டியைத் தவிர்த்தோ வருபவர்களாகவே இருக்கிறார்கள்.  மூன்றாவதாகவும் ஆளுநரின் பிரதிநிதியாக வருபவர் அரசின் சார்பாளராகவே இருக்கிறார். இந்த நிலையில் கல்வியாளர்கள் இவர்களை அணுகாமல் ஒதுங்கிக் கொள்ளவே செய்கின்றனர்.

அதையும் தாண்டி அதிகாரம் மிக்க இந்தப் பதவியில் நியமனம் பெறுவதற்காகப் பலரும் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அதனைக் குறிக்கப் பயன்படும் சங்கேதக் குறிகள் பலப்பல. ‘பொட்டி கைமாறியது’ என்பது நீண்டகாலமாக இருக்கும் குறிச்சொல். 3 முதல் 10 வைட்டமின்  ‘சி’  செலவு என்பதும் கூடப் பழைய வழக்காறுதான். சென்னைக் கடற்கரைச் சாலையில் பங்களா அல்லது ஒரு பண்ணைவீடு கைமாறுவதாகச் சொல்வது புதிய வழக்கு. தெரிவுக்குழு உறுப்பினர்களே வழிகாட்டியழைத்துச் சென்று  தேர்தல் காலம் என்றால் எத்தனைத் தொகுதிக்கான செலவை ஏற்றுக் கொள்வார் என்று கேட்கப்படும் என்கிறார்கள். அதிகாரத்தின் உச்சப்புள்ளியைத் தொட்டுக் காட்டுகிறார்களாம். போகும்பாதையில் ஏற்படும் இடைத் தங்கல்களுக்கான செலவுகளைச் செய்யவேண்டியதும் தவிர்க்கமுடியாதது தானே? குற்றவாசலின் காவலர்களும், குற்றவாளிகளாக இருப்பது நமது காலத்தின் கோலம். குற்றத்தின் வாசல் வழியாக நுழைபவர்கள் குற்றங்களின் கதவைகளை அடைக்கப் போவதில்லை. கொடுத்த பணத்தை எடுக்க நினைத்து எல்லா வாசல்களையும் திறந்து வைப்பார்கள்.
பணம் கொடுத்துப் பதவி பெறுகிறார்கள் என்பதையெல்லாம் பெரிய குற்றமாகக் கருதும் மனநிலை மாறிவிட்டன. அதற்கு முன்பு அதிகாரத்திற்கு உதவக்கூடிய அறிஞர்களும், கல்வியாளர்களும், துணைவேந்தர்களாக ஆக்கப்பட்டார்கள். சில நேரங்களில் ஆளுங்கட்சியின் அதிகாரமிக்கக் குடும்பங்களிலிருந்தும் அவர்களின் உறவுக் குடும்பங்களிலிருந்தும் என மெல்லமெல்ல நகர்ந்து பணம் என்ற நிலைக்கு மாறிப் பத்தாண்டுகளுக்குமேலாகிவிட்டது. இதையெல்லாம் தாங்கிக் கொண்ட பல்கலைக்கழகங்கள் இப்போது உருவாகியிருக்கும் பேராபத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றன.

 நிகழ்கால ஜனநாயக அமைப்பு, அதிகாரம் மிக்க/ எண்ணிக்கை பலம் மிக்க சாதிகளின் ஒத்திசைவாகவும் சமரசமாகவும் இருக்கின்றது. அதன் காரணமாகவே தேர்தலுக்குப் பின் மத்திய, மாநில அரசுகளை உருவாக்கும்போது வலிமை மிக்க சாதிக்குழுக்கள் உரிய பிரதிநிதித்துவம் பெறுகின்றன. இது பழைய செய்தி தான். உயர்கல்வி நிறுவனமான பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிகளும் சாதிக்குழுக்கள் பங்கு போட விரும்பும் அதிகார மையத்தின் அடையாளமாக  ஆகிவிட்டன என்பது பழைய செய்தியா? புதிய செய்தியா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு கட்சியிலும் மாவட்டச் செயலாளராகத் தங்கள் கட்சிக்காரர் வரவேண்டுமென நினைப்பதுபோலத் தங்கள் பகுதியில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் தங்கள் சாதியிலிருந்து ஒருவர் துணைவேந்தராவது நல்லது என நினைக்கின்றன சாதிக்குழுக்கள்.

இப்போது இட ஒதுக்கீட்டிற்கெதிரான கட்சியாகக் காட்டிக் கொள்ளும் பாட்டாளிமக்கள் கட்சிதான் அரசின் உயர் பதவிகளில் வன்னியர்கள் இல்லையென்று குரலெழுப்பிய கட்சி. அரசின் உயர்பதவிகளோடு சேர்ந்து நீதிபதி, துணைவேந்தர் பதவிகளிலும் வன்னியர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள் என்று குரலெழுப்பியதோடு, உரிய பங்கைப் பெற்ற கட்சியும் அதுதான். குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது கணிசமான வன்னியர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டார்கள். தங்கள் வசம் இருக்கும் வன்னியர் வாக்குவங்கியை இழக்க விரும்பாத நெருக்கடியின் விளைவு. அப்படி நியமிக்கப்படும்போது அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியில் நியமிக்கப்படவில்லை என்பதைக் கொஞ்சம் நேர்மறைக் கூறாகப் பார்க்கலாம். இப்போது இந்தக் கவனம்கூடப் பார்க்கப்படுவதில்லை.


இப்போக்கினால் ஏற்பட்டுள்ள பெருந்துயரம் எதுவெனக் கேட்டால், ஒரு அறிஞர் அல்லது கல்வியாளர் அதுவரை காப்பாற்றி வந்த தன்னிலையை இழந்து புதிய தன்னிலைக்குள் நுழைய நேர்வதைத் தான் சொல்ல வேண்டும். காலியாக  இருக்கும் பல்கலைக்கழகங்களில்  ஏதாவதொன்றில் தனது சாதிக்காரர் ஒருவரைத் துணை வேந்தராக ஆக்கிவிடச்  சாதிக்குழுக்கள் ஒவ்வொன்றும் துடிக்கின்றன. அதற்கென ஆகும் செலவை அச்சாதியில் இருக்கும் பெருந்தனக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் செய்திகள் உலவுகின்றன. அப்படியொரு முடிவை அச்சாதிக்குழு எடுத்த பின்பு அவர்களின் பிரதிநிதியாக முன்னிறுத்த அவர்களுக்குத் தேவை ஒரு துறையில் பாண்டித்தியம் பெற்ற வல்லுநர் மட்டுமே. அத்தகையதொரு தேடலை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் போல  அறிஞர்களும் தங்கள் பழைய அடையாளங்களை விட்டுவிட்டுப் புதிய அடையாளத்தைப் பேணிக்கொள்ளத் தயாராகி விடுகின்றனர் என்பது அதிர்ச்சி யூட்டும் உண்மை. அதற்காக ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்துறைகள், கல்லூரிகளின் முதல்வர்கள் எனத் தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களின் பட்டியலைத் தயாரித்துக் கொண்டு  அலைகின்றன ஒவ்வொரு சாதிக்குழுமமும்.

அதிர்ச்சியூட்டும் இந்தச் செயலைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாட்சியை கேட்டுப் பலர் அதிர்ச்சியடையக்கூடும். ஆம் கிரவுட் பண்டிங் (Crowd Funding) என்ற ஆங்கிலச் சொற்றொடர் பயன்படுத்தப் படுகிறது. மக்கள் பணம் அல்லது கூட்டுப்பணம் என்னும் பொருளைத் தரும் இதனை நான் முதன் முதலில் அம்ம அறியான் என்னும் படத்தை இயக்கிய ஜான் ஆப்ரஹாமோடு சேர்த்தே கேள்விப்பட்டேன். முதலாளிகளின் மூலதனத்தில் எடுக்கப்படும் ஒரு சினிமா அவர்களின் விருப்பப்படி இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பார்கள். மக்களுக்கான படத்தை மக்களின் பணத்திலிருந்து - அவர்கள் தரும் மிகச்சிறிய தொகையின் பெருக்கத்தால் கிடைக்கும் பணத்திலிருந்து எடுப்பேன் என உறுதியோடு எடுத்தார் எனக்கேள்விப்பட்டு, கிரவுட் பண்ட் என்பது நன்மையின் பாற்பட்டது எனக் கருதிவந்தேன். ஆனால் இப்போது தீமையின் மொத்தமாக அது மாறி நிற்கிறது.

தேச அளவில் சிறந்த விஞ்ஞானியெனத் தன்னை நிரூபித்து, ஆய்வுகள் நிகழ்த்திக் கண்டுபிடிப்புகள் செய்த ஒருவர் தனது சாதிக்குள் நானே சிறந்த அல்லது மூத்த விஞ்ஞானியென வரிசையில் நிற்க நேரிடும் அவலத்தை என்னவென்று சொல்வது.? இளைய தலைமுறையின் முன்மாதிரி எனக் கருதப் பட்ட பேராசிரியர் ஒருவர், தான் அந்த நிலையிலிருந்து கீழே இறங்குகிறோம் என்பதில் குற்றவுணர்வே இல்லாமல் தன் சாதியைச் சேர்ந்த அரசியல்வாதிகளைச் சந்திக்க அவர்களின் வீட்டு வாசலில் நிற்கத் தொடங்குவதை விளக்குவது எந்தத் தத்துவத்தின் அடிப்படையில். ?

சாதி சமய வேறுபாடற்ற சிந்தனையின் வெளிப்பாடு என அடையாளப்படுத்தப்படும் ஒரு சிந்தனையாளனோ அல்லது படைப்பாளியோ தனக்குத் துணைவேந்தர் பதவி வேண்டும் என்பதற்காக நிழல் தலைவர்களையும் சாதிச் சங்கப் பொறுப்பாளர்களையும் சந்திக்க நேர்வதை விளக்குவதற்கு உதவப் போகும் சமுதாயவியல் சிந்தனை எது.?

தனது சொந்த சாதி அடையாளத்தைக் காட்டித் துணைவேந்தராகும் ஒருவர் பதவிக்கு வந்தபின்பு எல்லாருக்கும் பொதுவான துணைவேந்தராகச் செயல்படுவார் என்று எதிர்பார்ப்பது வண்ணக் கனவுகளை வரைந்து விடத் துடிப்பதற்கொப்பானது தான்.

இந்த மாநிலத்தின் மிகச் சிறந்த கல்வியாளர்களுள், நிர்வாகிகளுள், விஞ்ஞானிகளுள், படைப்பாளிகளுள், சிந்தனையாளர்களுள் ஒருவராக அறியப்பட்ட நபர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் என்னும் மதிப்பு மிக்க  பதவியைப் பெறவேண்டும் என்பதற்காக  சொந்த சாதி அடையாளத்தைச் சுமந்து கொண்டு அலைய நேரிடுவதும்;  அலையும்படி வலியுறுத்தப்படுவதும்  ஒருவிதத்தில் மகாத்துயரம். நிதானமாக யோசித்தால் இந்த மகாத் துயரத்தை ஒருவரது தனிப்பட்ட துயரமாக நினைக்க முடியவில்லை. இந்தத் தேசத்தின் துயரமாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது. 

===========================================

தோட்டத்து மேஸ்திரிகள் : பசுவய்யாவின் ஒரு கவிதைத் தலைப்பு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்