வடிவமைத்துக் கொண்ட வடிவேலு
===========================
வௌளிவிழாவைத் தாண்டி 200 வது நாளை நோக்கிப் பீடு நடை போட்ட ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் சொன்னார்: “அய்யோ அது ரஜினி படம் இல்லீங்க..முன்பாதி வடிவேலு படம்; பின் பாதி ஜோதிகா” படம் என்று. அவர் சொன்னது அவரது கருத்து மட்டுமல்ல; சந்திரமுகி படத்தைப் பார்த்த பலரின் கருத்து.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையும் தாண்டி பார்வையாளனின் மனதில் இடம்பிடிக்கும் வல்லமையுள்ள நடிப்பை நகைச்சுவை நடிகர் வடிவேலு வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய அம்சம்.
சந்திரமுகி என்னும் வெற்றிப் படத்தைப் பற்றி நண்பருக்கு
இருந்த கருத்தைப் போல, இன்னொரு வெற்றிப் படம் பற்றி எனக்கும் ஓர் அபிப்பிராயம் இருந்தது. கிராமீய நாயகன் எனப்
புகழ் பெற்றிருந்த ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் தான் அந்த வெற்றிப்படம். நடிகர்
செந்திலும் கவுண்டமணியும் கோவை சரளாவும் சேர்ந்து உருவாக்கிய சிரிப்பலைகள் தான் தமிழ்
நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அந்தப் படத்தை வெற்றிப் படமாக ஆக்கியவை என்று இன்றும்
கருதுகிறேன். இளையராஜாவின் இசையில் மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களும் அவற்றைக் கிராமத்துப்
பின்னணியில் காட்சிப் படுத்த முயன்ற இயக்குநரின் பணிகளும் இருந்தன என்றாலும், கரகாட்டக்காரனின் வௌ¢ளிவிழாக் கொண்டாட்டத்தில்
காமெடிக்கு இருந்த பங்கை யாரும் மறுத்துவிட முடியாது.
தமிழ் சினிமாவின் வரலாறு தெரிந்தவர்களும் படங்களின் மூலப் பிரதிகளைத்
தேடுபவர்களும் கரகாட்டக்காரன் சினிமா, கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் படத்தின் நகல் என்று சொல்லக்கூடும்.
கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற நகைச் சுவைக்
காட்சிகளும் கூட தில்லானா மோகனாம்பாள் படத்தில் டி.எஸ். பாலையா, வி,கே.ராமசாமி, நாகேஷ் என ஒரு நகைச்சுவைப் பட்டாளம் சேர்ந்து உருவாக்கிய
நகைச்சுவைக் காட்சிகளின் மறுவடிவங்கள் தான் என்றும் வாதிடலாம். அவையெல்லாம் உண்மை தான்
என்றாலும் கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற
வாழைப் பழக்கணக்கு அல்லது வாழைப் பழக்கதை தமிழ் சினிமாவின் நகைச்சுவைக் காட்சிகளில்
மறக்க முடியாத காட்சி என்றுதான் சொல்ல வேண்டும். அந்த மூலவடிவத்தை (Archytype) வைத்துக் கொண்டு மாற்று வடிவங்கள் பல வந்திருந்தாலும்
அதுதான் இன்றும் செவ்வியல் காட்சி (Classic). ஆண்-பெண் என்ற பால்பேதங்களையும், நகரம்-கிராமம் என்ற வெளி
வேறுபாடுகளையும், ஏழை -பணக்காரன்
என்ற வர்க்க முரண்களையும் தாண்டி தமிழ்ச் சமூகம் சிரித்து ரசித்த காட்சி அது.
திரைப்படங்களில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சிகளைப் பொதுநிலைப்
பார்வையாளர்கள் நடிகர்களின் வெளிப்பாடாக மட்டுமே கருதிக் கொள்கிறார்கள். பார்வையாளனைச்
சிரிக்க வைக்க அந்த நடிகர்களின் பின்னால் இருந்து அவர்களுக்கு வசனங்களை எழுதியவர்களும்
, அவற்றைக்
காட்சிகளாக ஆக்கித் தரும் இயக்குநர்களும் படுகிற
பாடுகளை நினைத்துக் கொள்வதில்லை. நடிக உடலின்
வழியாக வெளிப்படும் உணர்வுகளையும் செய்திகளையும் பெற்றுக் கொள்ளும் பார்வையாள மனம்
ரசித்துச் சிரிப்பதுடன் கைதட்டிப் பாராட்டவும் சொல்லுகிறது. அந்தக் கைதட்டல் கூட நடிக
உடலுக்கான கைதட்டல் தான். ஆனால் கைதட்டல் பெறும் காட்சியை உருவாக்கியதில் பிற படைப்பாளிகளின்
பங்கும் இருக்கத்தான் செய்கிறது. அந்தப் படைப்பாளிகளின் நோக்கம் நிச்சயம் சிரிக்க வைப்பது மட்டுமல்ல; எழுதித் தரும் சொற்கோவைக்குள்
இருக்கும் சிறிய மதிநுட்பத் திறனைக் காட்டிவிடுவதும்
தான். இதற்குத் தமிழ்த் திரைப்படங்களிலிருந்து நூற்றுக்கணக்கான உதாரணங்களை நாம் தேடிக் கொள்ள முடியும். அதே கரகாட்டக்காரன்
படத்தின் அதே நகைச்சுவைக் காட்சியின் உரையாடலைக் கொஞ்சம் நினைவுக்குக் கொண்டு
வருவோம் ,
நீ இப்போ
ஒரு பழம் வாங்கிட்டு வந்திருக்கெ.. இன்னொரு பழத்தெ எங்கெ..? ‘
‘ அதுதான்னே இந்த பழம்.. ‘
‘அடே நீ.. வாங்கின ரெண்டு பழத்தில ஒன்னு இங்கெ இருக்கு..
அப்படியின்னா..
இன்னொரு பழத்தே எங்கெ.. ‘
‘ அதுதான்னே இந்தப் பழம்.. ‘
(உரையாடல் அப்படியே தரப்படவில்லை ) இந்த உரையாடலில் இடம்பெறும்
‘’ அதுதான்னே இந்தப் பழம்’’
என்ற சொற்கூட்டம் வெறும் உரையாடலாக மட்டும் வெளிப்படவில்லை.
அந்த வாக்கியம் படக்காட்சியில் வெளிப்படும்போது
நடிகர் செந்திலின் பல பரிமாணங்களையும் சேர்த்தே தான் கொண்டு வருகிறது அந்தப் படத்தில் அவர் நாயணம்
வாசிக்கும் கலைஞர்; ஆனால் நாணயம் இல்லாத ஏமாற்றுக்காரர். தவில் வித்துவானாக
வரும் கவுண்டமணி விரும்பு வனவற்றைத் தனது புத்திசாலித்தனத்தின் வழி கவர்ந்து கொள்ளும்
கள்ளன்.ஆனாலும் அவரது ஏமாற்றும் கள்ளத்தனமும் திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் அல்ல. அப்பாவி ஆனால் புத்திசாலி. திட்டும் அடியும் வாங்கக்
கூடியவர் ஆனால் காரியம் சாதிக்கக் கூடியவர் என்ற பரிமாணங்கள் அந்தப் படம் முழுக்க வெளிப்பட்டுக்
கொண்டே இருக்கும். கரகாட்டக் குழுவில் அவரை விட மூத்தவராகவும் முக்கியமானவராகவும்
இருக்கும் தவுல்காரரிடமிருந்து ஆட்டக்காரியைக் ( கோவை சரளா) காதலித்துக் கைப்பற்றிக்
கொண்டதில் வெளிப்படுவதும் அந்த அப்பாவித்தனமும் புத்திசாலித்தனமும் தான்.இத்தகைய குணம்
கொண்ட மனிதர்களை நடைமுறை வாழ்வில் கண்டு பிடித்துப் பாராட்ட பார்வையாள மனம் விரும்பிக்
கொண்டே இருக்கும். அதை முழுமையாகத் திரைப்படத்தில் பார்க்கும்போது கைதட்டி ரசிப்பதுடன், நினைத்து நினைத்துச்
சிரிக்கவும் செய்யும். ‘அதுதான்ணே அந்தப் பழம் ‘ என்ற வசனம் அப்பாவித்தனத்துடன் மதிநுட்பத்தையும் குழைத்துத் தந்த பெற்ற இடம் காலங்களைக் கடந்து நிற்கக்
கூடிய இடமாகும். வெகுமக்களின் ரசனையில் இத்தகைய
காட்சிகள் மூலப்படிவங்களாக மாறிப் போகின்றன என்பதும் கூட உண்மை. அத்தகைய மூலப் படிவங்களிலிருந்து
தான் அந்த நடிகனின் அடையாளங்களும் பாணிகளும் உருவாகின்றன. கவுண்டமணி - செந்தில் இணையின்
பாணிகள் பற்றி விரிவாகப் பேசத் தமிழ் சினிமாவில் காட்சிகள் பல உண்டு.
***********
இன்றும் கூடக் கிராமப்புற மனிதர்களில் பெரும்பாலோர் இன்னும் அதன் பிடிக்குள் வரவில்லை . அதே நேரத்தில் நடுத்தர
வர்க்கத் தமிழர்களின் வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டியின் ஆதிக்கம் தொடங்கி ஆண்டுகள் பல ஆகிவிட்டன என்பதும் உண்மைதான். அதனால் திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்காதவர்களாக
அவர்கள் ஆகி வருகிறார்கள். என்றாலும் இன்று
அவர்கள் திரைப்படப் பாடல்களையும், படங்களில் இடம்பெற்றுள்ள
நகைச்சுவைக் காட்சிகளையும் பார்ப்பதிலிருந்து தப்பிவிட முடியாது. தொலை பேசியில் அழைப்பவர்களுக்காகவும், அழைத்து வாழ்த்துச் சொல்பவர்களுக்
காகவும், நலம் விசாரிப்பவர்களுக்காகவும்
அவை தொடர்ந்து காட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. திரைப்பாடல்கள் பாடல்களாகவே வந்து
கொண்டிருக்க நகைச்சுவைக் காட்சிகளோ, காமெடி ஷோ, சிரிப்பு வெடிகள், காமெடி பார்க், சிரிப்பு முத்துக்கள், காமெடி டைம்,வேடிக்கை விநோதங்கள், கலக்கல் காமெடிகள், மீண்டும் மீண்டும் சிரிப்பு, காமெடி கிளப் என்று விதம்விதமான பெயர்களில் தொடர்களுக்கு நடுவிலும்
தொடர்களாகவும் வந்து கொண்டே இருக்கின்றன.
அந்த நிகழ்ச்சிகளுக்கு அதன் தயாரிப்பாளர்கள் வைத்துள்ள
பெயர்கள் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் காட்டப்படுவதென்னவோ
திரைப்படங்களில் இடம் பெற்ற நகைச்சுவைக் காட்சிகளின் துணுக்குகள் தான். ஒரு திரைப்படத்தை
ஒரு கலைப்படைப்பாகவோ, ஒரு செய்தியைச் சொல்ல வந்த ஊடகமாகவோ கருதுபவர்கள் அப்படிக்
கூறு போடப்படுவதற்காக வருத்தப் படலாம். ஆனால் அப்படி வருத்தப்பட வேண்டிய அவசியம் எதுவும்
இல்லை என்பது தான் எனது ஆலோசனை. ஏனென்றால் தற்போது வரும் பல படங்களில் அவற்றின் நகைச்சுவைக் காட்சிகளுக்கும்
படத்தின் மையக்கதைக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. ஒரு காலத்தில் அப்படி இருந்தது
என்னவோ உண்மைதான். எம்.ஜி.ஆர் நடித்த அன்பே
வா என்ற பொழுது போக்குச் சித்திரத்தின் வெற்றியில் அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கும்
காஷ்மீரின் பின்னணிக்கும் எவ்வளவு பங்கு உண்டோ அவ்வளவு பங்கு நடிகர் நாகேஷ் நடித்த
நகைச்சுவைக் காட்சிகளுக்கும் உண்டு. அக்காட்சிகளைப் படத்தின் கதையோட்டத்திலிருந்து
பிரித்துக் காட்டிவிட முடியாது.
நிகழ்காலச் சினிமாவில் நிலைமைகள் வேறாகவே தோன்றுகின்றன.
எந்தப் படத்திலும் இடம் பெறுவதற்கேற்ற வகையில் தான் நகைச்சுவைக் காட்சிகள் எடுக்கப்படுகின்றன.
நகைச்சுவைக் காட்சிகளைத் தனது படத்தின் பகுதியாகக் கருதி எடுப்பவர்கள் ஒரு சில இயக்குநர்கள் மட்டும்
தான்.சமீபத்திய சிறந்த உதாரணம் பாலாவின் பிதாமகன். மற்றவர்கள் எல்லாம் நகைச்சுவை நடிகரின்
கால்ஷீட்டுகளைத் தனியாகப் பெற்றுத் தனியான பின்னணியில் படம் பிடித்துக்¢ கொண்டு ஒரு சில இணைப்புக்
காட்சிகள் மூலம் படத்தில் பொருத்திக் கொள்கின்றனர் என்பதுதான் உண்மை. அத்தைகைய இயக்குநர்களே
தமிழ்த் திரையுலகில் அதிகம். அதற்கும் சிறந்த
உதாரணங்கள் உண்டு. Êஹரி இயக்கி வசூல் சாதனை நிகழ்த்திய சாமி படத்தின் நகைச்சுவைக்
காட்சிகள் அத்தகையனதான்.
நகைச்சுவைக் காட்சிகள் திரைப்படத்தின் மைய நீரோட்டத்திலிருந்து
விலகிப் போன காரணங்களை அறிந்து கொள்வதும், அறியாமலேயே அவற்றைப் பார்த்து ரசிப்பதும் வெகுமக்கள் மனம்
சார்ந்த சங்கதிகள் தான்.என்றாலும், நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள், வெகுமக்கள் மனங் களுக்குள் புகுந்து கொள்ள என்னென்ன உத்திகளையும்
நுட்பங்களையும் கைக் கொள்கின்றனர் என்று விரித்துப் பார்ப்பது சுவாரசியமான ஒன்று.
சில நடிகர்களுக்குப் பயன்பட்டது அவர்களின் உடல். வேறு சிலருக்கு குரல் மட்டும் பயன்பட்டிருக்கிறது.
இன்னும் சிலருக்கு மனம் மட்டும் பயன்பட்டிருக்கிறது. ஆனால் நிதானமாக யோசித்தால் நடிப்பின்
கருவிகளான உடல், குரல், மனம் என்ற மூன்றையும்
பயன்படுத்தும் நடிகனே சிறந்த நகைச்சுவை நடிகனாக வெற்றி பெற முடியும் என்பது புரியலாம்.
இந்த மூன்றையும் சில நகைச்சுவை நடிகர்கள் வரிசை மாற்றிப் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
வார்த்தை சார்ந்த குரலாக இல்லாமலேயே நகைச் சுவையில் உச்சத்தைத் தொட்ட சார்லி சாப்ளினின்
உடலையும் மனத்தையும் கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள்.அந்த நினைப்பே நகைச்சுவை நடிப்பின் மேன்மைகளையும் வலியையும் பொறுப்புணர்வையும்
புரிய வைக்கும்.
தனது அடுத்த படத்துக்குப் பூஜை போட்டவுடன் தனது படத்தின்
இயக்குநரிடம் அந்த நடிகர் சொன்னதாக இந்தச் செய்தியை நான் வாசித்தேன். நீங்களும் வாசித்திருக்கக்
கூடும். ‘என்னுடைய
கால்ஷீட் தேதிகளை முடிவு பண்ணுவது முக்கியமல்ல; முதலில் முடிவு பண்ண வேண்டியது அண்ணன் வடிவேலுவின் கால்ஷீட்டுகளைத்
தான்’. இப்படிச்
சொன்ன அந்த நடிகர் தொடர்ந்து வெற்றிப் படங்களைத் தந்து கொண்டிருப்பதாக நம்பப்படும் நாயக நடிகர் என்பது கூடுதலாகத் தெரிந்து கொள்ள
வேண்டிய தகவல். அவரது நடிப்புத் திறனால் தான் படம் ஓடுகிறது என்று ஊடகங்களும் தயாரிப்பாளரும்
நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ தன்னுடன் நடிக்கும் நகைச்சுவை நடிகர்களின்
உதவியால் தான் படம் வெற்றிப் படமாக அமைகிறது என்று நம்புகிறார். அவரின் நம்பிக்கை மிகைப்படுத்தப்
பட்ட ஒன்றல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது.
நகைச்சுவை என்றவுடன் இன்று தமிழ்த் திரைப்பட உலகம் உச்சரிக்கும்
பெயர் வடிவேலு. ஆனால் திரைப்படத்தில் இடம் பெறும் திருப்புக்காட்சி (flashback)யைப் போல
காலத்தைப் பின்னோக்கித் திருப்பினால் எத்தனை யெத்தனை நகைச்சுவை நடிகர்கள்; நடிகைகள். ஒவ்வொரு காலகட்டத்திலும்
கொடிகட்டிப் பறந்த அவர்களின் பெயர்கள் இன்றைய தலைமுறைப் பார்வையாளர்களுக்கு வெறும்
பெயர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் உருவாக்கிய காட்சிகளும் சொல்லாடல்களும் அவ்வக்காலத்து
வெகுமக்கள் உளவியலைக் கட்டமைத்த நிகழ்வுகள் என்பதை ஊடகவியலின் கருத்தமைவுகள் உறுதி
செய்யக்கூடியன. ஒவ்வொரு நகைச்சுவை நடிகனும் தனக்கான பாணி அல்லது அடையாளத்தை உருவாக்கித் தமிழ் மூளைக்குள்ளும் வெளிப்பாடு களிலும் செய்துள்ள
பயணங்கள் பலவிதமானவை. திரையில் தோன்றும் பிம்பங்களைப் பார்த்து வழிகாட்டிகளையும் முதல்வர்களையும்
தேடிக் கொண்டது போல நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து, இந்தத் தமிழ்ச் சமூகம்
திளைக்கத் திளைக்கச் சிரித்திருக்கிறது. கண்ணில்
நீர் முட்டச் சிரித்த காட்சிகளில் நடித்த நடிகர்களைக் கௌரவிக்கவும் செய்துள்ளது.
தங்களின் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் பயன் படுத்தி¢ இந்தத் தமிழ் சமூகத்தைச்
சிரிக்க வைப்பது மட்டும் தான் அந்த நடிகர்களின்
நோக்கமாக இருந்திருக்குமா.. ? வேறு காரணங்களும் இருந்திருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.
அந்த அக்கறைகள் அவர்களுக்குக் கிடைக்கும் பணம் மற்றும் புகழ் சார்ந்தவைகள் என்று சுலபமாக
ஒதுக்கிவிடக் கூடியன அல்ல என்று உறுதியாகக் கூறலாம்.
நாலைந்து நகைச்சுவை நடிகர்கள் இடம்பெறும் ஒரு காட்சியில்
(கமல்ஹாசன் நடித்த சிங்காரவேலன் போன்ற ) ஒல்லிக் குச்சி உடம்போடும் ஆனால் தீர்க்கமான
பார்வையோடும் கன்னங்கரேர் என்று நின்று ஒற்றைச் சொல் வசனம் ஒன்றை உச்சரிப்பதாகத்
தோன்றிய வடிவேலு இன்று தமிழ் நகைச்சுவை நடிகர்களில் முதல் இடத்தில் இருக்கிறார். அதற்குப்
பின்னால் அவர் தன் கதாபாத்திர வார்ப்பை உருவாக்கி, உருமாற்றிக் கொண்டிருக்கும் உழைப்பு இருக்கிறது. நகைச்சுவை
நடிகன் தனது பாத்திரத்தை வார்க்கிறான் என்ற கூற்று கொஞ்சம் அதிகப் பிரசங்கித் தனமாகத்
தோன்றலாம். அதிகப்பிரசங்கித் தனம் என்றாலும் உண்மை அதுதான் . தமிழ் திரைப்பட உலகில்
நுழைவதற்கு என்னென்ன உத்திகள் பயன்படும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆனால் நிலைத்து
நிற்பதற்குப் பல உத்திகள் தேவைப் படுகின்றன.
கமல்ஹாசன் நடித்த சிங்காரவேலனில் ஒல்லிக்குச்சி
உடம்போடு வந்து ஒற்றை வசனம் பேசிய வடிவேலு , தமிழின் மிக முக்கியமான படங்களில்
ஒன்றான தேவர் மகன் படத்தில் ஏற்ற பாத்திரத்தின் பெயர் இசக்கி. அவரது பேச்சுத் தொனியும்
உடல் மொழியும் மற்ற பாத்திரங்களின் உடல் மொழியிலிருந்தும் பேச்சுத் தொனியிலிருந்தும்
வேறுபட்டவை என்றாலும் அப்பாத்திரத்தையோ, அப்பாத்திரத்தின் வெளிப்பாட்டையோ நகைச்சுவைக்காகச்
சேர்க்கப்பட்ட ஒன்றாகக் கருத முடியாது. அத்தகைய பாத்திரங்களைக் குணச்சித்திரப் பாத்திரங்கள்
என்றும் அத்தகைய பாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்களைக் குணச்சித்திர நடிகர்கள்
என்றும் தான் கோடம்பாக்கத்தின் சினிமா மொழி வகைப்படுத்தி வைத்திருக்கிறது.
இசக்கி பாத்திரத்திற்கு எந்தவிதத்திலும் குறையாத
பாத்திரம் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த சந்திரமுகியில் வடிவேல் ஏற்றிருந்த முருகேஷ் பாத்திரம். ஆனால் முருகேஷ்
பாத்திரத்தைக் குணச்சித்திரப் பாத்திரம் என வகைப்படுத்தினால் கோடம்பாக்கத்துச் சினிமா
மொழியும் ஏற்றுக் கொள்ளாது. அவரை நகைச்சுவை
மருத்துவனாக ஏற்றுக் கொண்டுவிட்ட தமிழ் ரசிக மனோபாவமும் ஏற்றுக் கொள்ளாது . இரண்டு
பாத்திரத்திலும் அவர் வெளிப்படுத்திய உடல் மற்றும் குரல் மொழிகளில் பெரிய அளவில் வேறுபாடுகள்
இல்லை என்றாலும் இடைப்பட்ட ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் தனித்த அடையாளங்கள் கொண்ட
நகைச்சுவை நடிகராகத் தன்னை வடிவமைத்துக் கொண்டுவிட்டார் என்பது தான் ஏற்காமைக்குக்
காரணம்.
வடிவேலு மட்டுமல்ல; திரைப்படத்துறைக்குள் நுழையும் எந்த
ஒரு நடிகரும் தனக்கான நடிப்புப்பாணி ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகவே
இருக்கிறது.நாயக நடிகர்களும் வில்லன் நடிகர்களும் கூட இந்த நெருக்கடியைச் சந்திக்கிறார்கள்
என்றாலும் ,
வெவ்வேறு விதமான
நடிப்புப் பாணியைச் சோதனை செய்து பார்ப்பதன் மூலம் அந்நெருக்கடியிலிருந்து தப்பிக்க
முயல்கின்றனர். எல்லா நடிகர்களும் இத்தகைய சோதனைகளைச் செய்தார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும்
காலஞ்சென்ற சிவாஜி கணேசன் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டவர்; இப்பொழுது
நடித்துக் கொண்டிருப்பவர்களில் கமல்ஹாசன்,நாசர், விக்ரம், சூர்யா போன்றவர்களிடம் அம்முயற்சிகள் உண்டு ஆனால் நகைச்சுவை நடிகர் என்ற
முத்திரைக்குள்- அடையாளத்துக்குள்- அகப்பட்டுக் கொண்ட நடிகர்களைத் தமிழ்ச் சினிமா
வேறுவிதமாக நினைத்துப் பார்ப்பதில்லை.
இப்பொழுது வருகின்ற
படங்களில் எல்லாம் வடிவேலுவின் பாத்திரங்கள் ஒருசில வகை மாதிரிகளைக் கொண்டதாகக் கட்டமைக்கப்பட்டுத்
தரப்படுகின்றன. தன் முன்னால் நிகழ்வனவற்றைச் சட்டெனப் புரிந்துகொள்ளாத மனிதனாக- ஒருவிதமான
அறியாமையும் அதே நேரத்தில் எல்லாம் தெரிந்த மனிதனாகவும் வெளிப்படும் அவர் இவ்வகைமாதிரியிலிருந்தும் மாறி வேறு
வகைக்களுக்குள்ளும் செல்லக்கூடிய நடிகர். அவர் இன்று அடைந்துள்ள வகைமாதிரிக்கு முன்னால், வேறுசில வகைமாதிரிகளையும்
வகை மாதிரிகள் அற்ற பாணிகளையும் கடந்து வந்தவர் என்பதைப் பின்னோக்கிச் சில படங்களை
நினைவுக்குக் கொண்டு வருவதன் மூலம் உணரலாம்.
அவரது நகைச்சுவைப் பயணத்தில்
சில நாயக நடிகர்களுடன் இணைந்து வெளிப்பட்ட பரிமாணங்கள் முக்கியமானவை. கடைசியாகச் சந்திரமுகியில்
தனது மனைவியை நாயக நடிகரான ரஜனியின் பறிகொடுத்து விடுவோமா என்ற பதற்றத்தையும், பேயாய் அலையும் சந்திரமுகியிடம்
மாட்டிக்கொண்டு உயிரைப் பறிகொடுத்து விடுவோமோ என்ற பயத்தையும் வெளிப்படுத்திய முருகேஷ்
கதாபாத்திரத்தைவிட நடிகர் பார்த்திபனுடன் இணைந்து வெளிப்பட்ட காட்சிகள் ரசிகர்களின்
அடிவயிற்றிலிருந்து சிரிப்பலைகளை எழுப்பக் கூடிய காட்சிகள். குறிப்பாகச் சேரனின் இயக்கத்தில்
வந்த பாரதி கண்ணம்மாவிலும், வெற்றிக் கொடி கட்டு படத்திலும் வரும் காட்சிகளில் வார்த்தைகளை வைத்து அவர்கள்
இருவரும் நடத்தும் உரையாடல்கள் எவர் மனதையும் புண்படுத்தாத உரையாடல்கள். அந்த உரையாடல்களில்
பார்த்திபன் - வடிவேலு என்ற இரண்டு நடிகர்கள் இடம்பெற்றிருந்தாலும் இன்றும் அக்காட்சிகள்
வடிவேலுவின் காமெடிகளாகக் கருதப்படுவதற்குக் காரணம் அவரது உடல் மொழியின் பயன்பாடு
தான் என்றால் யாரும் மறுக்க முடியாது.
' கையக் காலா நினைச்சுப்
பிடிச்சிக்கிட்டுச் சொல்றேன் ' என்று சொல்லும் வடிவேலுவிடம் பார்த்திபன், ' கையைக் காலா நினைச்சா கைய என்னவா நினைப்பே ' என்று ஒரு கேள்வியைக் கேட்பார். அதற்குப் பதில் சொல்வதற்கு முன்னால் வடிவேலுவின்
கண்களும் உதடும் வெளிப்படுத்தும் பாவம் தான் அந்தக் காட்சியை வடிவேலுவுக்குச் சொந்தமாக
ஆக்குகிறது. தொடர்ந்து இடம் பெறும் , ' அடி உதவறமாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்' என்பதைத் தொடர்ந்து வரும் நான் உனக்கு அண்ணனா, அப்பாவா, தாத்தாவா என்றகேள்விகளுக்கெல்லாம்
முழிக்கும் முழிகள் முக்கியமானவை.எள்ளுண்ணா எண்ணெயா வருவேன் என்று சொல்லிவிட்டு அவர்
தவிக்கும் தவிப்பும் ரசிக்கத் தக்க முகபாவங்கள்.
பாரதி கண்ணம்மாவில்
வெற்று நகைச்சுவை என்பதாக வலம் வந்த வடிவேலு-பார்த்திபன் இணை வெற்றிக்கொடி கட்டு படத்தில்
கூடுதலாக ஒரு சமூகவிமரிசனப்பார்வையையும் சேர்த்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.
துபாய்க்கு போவதற்கு முயன்று தரகர்களிடம் ஏமாந்த இரு இளைஞர்களின் சோகக் கதையைச் சொல்லும்
அப்படத்தில் வடிவேலு துபாய் சென்று திரும்பிய கதாபாத்திரமாக இடம்பெறுவார். பொதுவாக
வெளியூர் களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று திரும்பிய மனிதர்கள் அவர்கள் சென்று வந்த
இடங்களின் பெருமையை ஒன்றுக்குப் பத்தாகக் கூட்டிச் சொல்வது நடைமுறை. அத்தகைய கதாபாத்திரமாக
- துபாய் உடையுடனேயே அலையும் வடிவேலு, பார்த்திபனைச் சந்திக்கும் முதல் சந்திப்பே கலக்கல் காமெடியாக அமைக்கப்பட்டிருந்தது
அப்படத்தில். துபாயில் பார்த்திபன் இருந்த இடத்தை வடிவேலு கேட்க, பார்த்திபன் : ' நம்பர் 6, விவேகானந்தர், துபாய் குறுக்குத் தெரு, துபாய் மெயின் ரோடு, துபாய்' என்று சொல்லுவார். அப்படியொரு இடம் துபாயில் இல்லையே என்று சந்தேகப்படும்
வடிவேலு எங்கெ திருப்பிச் சொல்லு என்று கேட்க, துபாய், துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்குத் தெரு, விவேகானந்தர் வீதி, நம்பர் 6, என்று சொல்லுவார்.
ஓ.. அந்தத் திருப்பியா என்பதிலிருந்து தொடங்கி, 'துபாய் ரிடேண் என்ற பந்தாவை உண்டு / இல்லை என்று பண்ண' வடிவேலு 'துண்டக் காணோம் ;துணியக் காணோம்' என்று ஓடுவார். அந்தப்
படம் தான் வடிவேலுவின் அடையாள வார்த்தை களையும் உருவாக்கித் தந்தது. வந்துட்டான்யா..? வந்துட்டான்யா.. என்பதும்
குண்டக்க மண்டக்க என்பதும் இன்று வடிவேலுவோடு சேர்த்துக் காணப்படும் வார்த்தைகளாக
இருப்பதற்கு அந்த வார்த்தைகளை உச்சரித்த விதமும் அப்படி உச்சரிக்கும்போது அவர் வெளிப்படுத்திய
பாவனைகளும் தேர்ந்த நடிப்புக் கலைஞனின் வெளிப்பாடுகள். பார்த்திபன் போட்டு வாங்கும்
- கிவ் அண்டு டேக் பாலிசி என்று சொல்லி வார்த்தைகள் மூலம் விளையாடும் விளையாட்டுக்கள்
தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கக் கூடிய நகைச்சுவை விளையாட்டுக்கள் என்பதைக் காலம்
உறுதிப்படுத்தும் என்றே சொல்லலாம்.
வடிவேலு&பார்த்திபன் இணை அளவுக்கு
இல்லையென்றாலும் வடிவேலு&முரளி (அதர்மம், சுந்தரா டிராவல்ஸ், மனுநீதி, நம்ம வீட்டுக்கல்யாணம்
போன்ற படங்களில்) , வடிவேலு &சரத்குமார் ( அரசு, திவான், போன்ற படங்களில்) வடிவேலு & அர்ஜுன் இணைகளும்
குறிப்பிடத்தக்க நகைச்சுவைக் காட்சிகளைத் தந்துள்ளன.சரத்குமாருடன் வடிவேலு நடித்த அரசு
படத்தில் கோயில் மணி அடிக்கும் வேலை பார்த்தவருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது என்ற
தகவல் கிடைத்தவுடன் அடையும் மகிழ்ச்சி மற்றும் ஆர்ப்பாட்டத்தை வடிவேலு தனது உடல், பேச்சு, மனம் என அனைத்திலும்
கலந்து வெளிப்படுத்துவார். அந்த வெளிப்பாடுகள் நடிப்பு என்ற எல்லையைத் தாண்டி நேரடிக்
காட்சி என்பதாகவே வெளிப்பட்டிருக்கும் என்பதைத் திரும்பவும் பார்த்து உறுதிப் படுத்திக்கொள்ளலாம்.
உடனடியாகச் சென்று கோட்,ஷூட் வாங்கி அணிந்து
கொண்டு ஓசி பைக்கில் பின்னால் அமர்ந்து வந்து
அக்கிரகாரத்தில் இறங்கி அங்குள்ள அனைவரிடமும் விடை பெறும்போது ஆர்ப்பாட்ட நடிப்பின்
உச்சத்தைத் தொடுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதே போல் சத்யராஜுடன் இணைந்து
நடித்த இங்கிலீஸ்காரன் சக்திவேல் வெற்றிவேல் போன்ற படங்களில் இரண்டு பேருடைய நக்கலும்
தெனாவட்டும் பார்வையாளர்களுக்குத் திளைப்பையும் திகட்டலையும் தந்த நகைச்சுவைக் காட்சிகள்
எனலாம்.
நாயக நடிகர்களுடன் செய்த
இத்தகைய காட்சி ஒன்றை அவர்களின் துணை இல்லாமலேயே நேசம் புதிது படத்தில் செய்து காட்டியும்
உள்ளார். பக்கத்து ஊர்ப்பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்ததை விசாரிப்பதற்காக அழைத்துவரப்பட்ட
வேலுவை, ஊர்த்தலைவர் என்ன பிரச்சினை
என்று கேட்டுத் தொடங்க, இவரும் அதே வார்த்தைகளைத் திரும்பச் சொல்லி எரிச்சல் உண்டாக்குவார். அடுத்தடுத்து
தலைவர் கேட்கும் கேள்வி ஒவ்வொன்றுக்கும் என்ன ? என்ன? என்ன? என்று கேட்டு டென்சனாக்கி
நெஞ்சு வலி வர வைத்து விடுவார். அவரது டென்சனைக் குறைக்கப் போன அய்யர் கோபப்படாதீங்க
என்பதைத் திரும்பத்திரும்பச் சொல்ல மயங்கி விழுந்துவிடுவார். பஞ்சாயத்தே ரசாபாசாமாகி
விடும். இப்படி ஆர்ப்பாட்டம், ரசாபாசம், அடாவடித்தனம், அறியாமை, அடங்கிப் போதல் எனப்
பலவிதமான பாவங்களைப் பயன்படுத்தி நகைச்சுவையை உண்டாக்கும் வடிவேலு சின்னப்பட்ஜெட்டில்
குடும்பப்படங்கள்? எடுக்கும் வி.சேகரின்
படங்களில் ஏற்ற பாத்திரங்கள் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியவை. நகைச்சுவை நடிகை
கோவை சரளாவின் கணவராக வந்து வெளியே செய்யும் அடாவடித்தனத்திற்கு மாறாக மனைவியிடம்
வாங்கும் அடிகள் அனுதா பத்துக்குரியனவாக அமையாமல் நகைப்புக் குரியனவாகவே அமைந்து வேடிக்கை
காட்டியுள்ளன.
வடிவேலுவின் நகைச்சுவைக்
காட்சிகளை இவ்வளவு தூரம் பாராட்டிச் சொல்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது
காரணம் நகைச்சுவை என்ற பெயரில் உடல் ஊனமுற்றவர்களைக் கேவலப் படுத்துவதும் சமூகத்தில்
கீழ்நிலையில் இருப்பவர்கள் என்று கருதப்படும் மனிதர்களைக் கேலி செய்வதும் அவர் உருவாக்கும்
காட்சிகளில் இல்லை. அதற்கு மாறாக அவர் ஏற்கும் பாத்திரங்களையே சுயவிமரிசனமும் செய்யும்
தன்மையுடன் சுய எள்ளலை முன்னிலைப் படுத்தும் தன்மையில் அவ்வெளிப்பாடுகள் அமைக்கப் படுகின்றன.
இரண்டாவது காரணம் அவர் இடம் பெறும் நகைச்சுவைக் காட்சிகள் தமிழ் வாழ்விலிருந்து பிரிக்க
முடியாத அம்சங்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றன என்பதும்தான்.
பாக்ஸர் வடிவேலு ( கோவில்)
கைப்பிள்ளை (வின்னர்) போன்ற பாத்திரங்கள் தமிழ் நாட்டுக் கிராமங்களில் தெனாவட்டுடன்
அலையும் மனிதர்களுடன் இயல்பாகப் பொருந்தக் கூடிய பாத்திரங்கள். ஒரு படத்தில் தன் மனைவியுடன்
இரண்டாம் ஆட்டம் சினிமாப் பார்த்துவிட்டுத் திரும்பி வருவார். அவரது வேட்டி மடித்துச்
சுருட்டிக் கட்டப்பட்டிருக்கும்.வேட்டிக்குள் இருக்கும் டவுசர் வெளியே தெரிய அவர் நடந்து
வரும் காட்சி அனாயாசமானது. சட்டைக்காலரில் செருகப்பட்ட கர்சீப், பட்டன் கழற்றப்பட்ட
சட்டை, வாயில் பீடி சகிதம்
அவர் பெருவிரலை ஊன்றி குதிகாலைத் தூக்கி நடப்பதன் மூலம் பின்புறம் ஏறி இறங்க நடந்து
வருவதும், இன்ஸ்பெக்டரைக் கண்டவுடன்
சப்த நாடியும் ஒடுங்குவதும் என அவர் வெளிப்படுத்தும் காட்சி நிகழ்காலத் தமிழ் சமூகத்தில்
காணப்படும் கிராமத்துச் சண்டையர்களைச் சட்டென நினைவுக்குக் கொண்டுவரும் காட்சி ஆகும்.
பல நேரங்களில் வெட்டிப்பந்தாவாகவும், சிலநேரங்களில் பரம்பரைச் சொத்து அல்லது ஆதிக்கசாதி
மனோபாவம் சார்ந்து வெளிப்படும் இந்தத் தெனாவட்டு மனிதர்கள் கிராம சமுதாயத்தில் பல
நேரங்களில் வெறுக்கப்படும் மனிதர்களும் சில நேரங்களில் அந்தக் கிராமங்களுக்குத் தேவைப்படும்
மனிதர்களாகவும் இருப்பர். இத்தகைய மனிதர்களைத் தென்மாவட்டக் கிராமங்கள் ஒவ்வொன்றிலும்
சிற்சில மாற்றங்களுடன் சந்திக்கலாம். நிலையான வேலை எதையும் செய்யாமல் சோம்பேறியாக
அலைவதும் வெட்டிக் காரியத்தனங்கள் பார்ப்பதும், திடீர்த் திடீரென்று புதுப்புது
வேலைகளில் ஈடுபடுவதுமாக அலையும் இவர்களின் பிம்பங்களை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தும்
வடிவேலுவுக்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டப் பேச்சு மொழி கூடுதல் பலமும் கூட.
எள்ளல் என்பது இகழ்ச்சி ; வீரத்தெழுந்த
வெகுளி .
நகையும் எள்ளல் நகையென்றே அடக்க வேண்டும்.
எள்ளலென்பது தான் பிறரை எள்ளி நகுதலும்,
பிறரால் எள்ளப்
பட்டவழித் தான்நகுதலுமென இரண்டாம்,
தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியல் சூத்திரத்திற்கு
(3) பேராசிரியர்
எழுதிய உரை
உயிர்மை,ஜனவரி, பிப்ரவரி, 2006 ======================================================== சிரித்த கதைகள் இன்னும் வரும்
கருத்துகள்