ஆலயமு மண்டபமு மன்னசத்ர சாலையும்

[முன்குறிப்பு: முனைவர் பட்டத்திற்குச் சேர்ந்தபின் எழுதிய முதல் கட்டுரை. அப்போதுதான் சத்துணவுத் திட்டம் அறிமுகமான நேரம். விலையில்லா..., குறைந்த விலைத் திட்டங்களின் காலத்திலும் கொஞ்சம் பொருத்தம் உண்டுதான்]

நாட்டில் வறட்சி ஏற்படுகின்றபொழுது கஞ்சித்தொட்டி வைத்தல், அன்னதான மண்டபம் அமைத்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது அண்மைக்காலங்களில் கண்கூடு. இதே தன்மையொத்த ‘ சத்திரம்- அதன் மூலம் உணவு வழங்கல்’ என்றொரு நிலையைக் கி.பி. 15 ஆம் நூற்றாண்டிற்குப் பிந்திய தமிழ் இலக்கியங்களில் காண முடிகிறது. கி.பி. 15 தொடங்கி 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தமிழகத்தில் ஆட்சிபுரிந்த விசயநகர, நாயக்க அரசர்களின் சமூகநலத்திட்டங்களில் ஒன்றாகவே இவை கூறப்படுகின்றன. (அ.கி. பரந்தாமனார், மதுரை நாயக்கர் வரலாறு, ப.266) இக்கட்டுரை அத்தகைய சத்திரங்களின் நிறுவன வடிவையும், சமூகத்தேவையையும், மக்கள் எதிர்கொண்ட நிலைகளையும் காண முயல்கிறது.


சத்திரத்தின் நிறுவன வடிவம்.

சத்திரம் என்ற அமைப்பு விசயநகர, நாயக்க அரசர்கள் காலத்தில் காணப்பட்டாலும், அது வேறொரு வடிவில் பிற்காலச் சோழர்கள் காலத்திலேயே இருந்துள்ளது. தர்மகாரியமாக அன்னதான மண்டபங்கள் கோயில்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்துள்ளன. அதற்கான வருமானம் அரச குடும்பத்தாரால் இறையிலியாக வழங்கப்பட்ட ‘ சாலாபோகம்’ என்ற நிலங்களிலிருந்து கிடைத்துள்ளது. ‘ சாலாபோகம்’ என்பது அபூர்விகள், அந்தணர்கள், சிவயோகிகள், முதலானோர்க்குணவு கொடுக்கும் அறச்சாலைகளுக்கு அளிக்கப்பட்ட நிலம் எனப் பண்டாரத்தார் விளக்கம் கூறியுள்ளார் (பிற்காலச் சோழர் வரலாறு, பக்.542-543). இவ்வன்னதான மண்டபங்கள் நாயக்கர் காலத்திலும் இருந்துள்ளன என்பதை அ.கி.ப. மேற்கோள் காட்டும் மதுரைத் திருப்பணிமாலைச் செய்யுள் மூலம் அறியமுடிகிறது.

முனைவேல் விழியங் கயற்கண்ணி முன்மடத்துள்
அனைவோர்க்கும் அன்னமும் - தோழியம்மிடன் அறைக்கும் அனு
தினம் மேதினியில் நடக்கும்படிக்(கு) வந்து இசையுங் கொண்டான்

என்பது செய்யுள்.

இவ்வன்ன தான மண்டபங்கள் தவிர ‘ சத்திரம்’ - மூலமும் உணவு வழங்கப்பட்டுள்ளது. இச்சத்திரங்கள் கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படாமல் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுள்ளன என்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன.

‘கத்துகடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரம்’ எனக் கார்மேகப்புலவரும் (தனிப்பாடல் திரட்டு 1:67) உடன் கொணர்ந்த நாகதேவன் ஊண்’ எனக்கூறும் அந்தகக்கவி வீரராகவ முதலியாரும் (தனிப்பாடல் திரட்டு 1:34) அரசு உதவிபெற்றுச் செயல்பட்ட சத்திரங்களையே கூறியுள்ளனர் எனலாம். அவர்களது கூற்றிலுள்ள கிண்டலும் கேலியும் அரசு நிறுவனத்தை நோக்கிய கேலியும் கிண்டலுமாகவே தொனிக்கிறது.

சத்திரங்கள் அரசு உதவிபெற்றன என்று கூறுகின்றபொழுது நேரிடையாக அரசனிடமிருந்து மானியம் பெற்றன எனக் கூற முடியாது. நாயக்கர்களின் நிர்வாக முறையான பாளையக்கார முறையின் கீழ் இது நிர்வகிக்கப்பட்டுள்ளது. பாளையக்கார முறையின்படி பாளையக்காரனிடம் நிலங்களை மானியமாகப் பெற்ற சமய நிறுவனங்களும் மானியதாரர்களும் நிலவரியாக விளைச்சலில் ஒரு பகுதியை பாளையக்காரர்களிடம் கொடுத்துவிட்டு, சமுதாயத்தின் கீழ்நிலையிலிருந்த பள்ளர்களைக் கொண்டு விவசாயம் செய்தனர். பள்ளர்கள் செய்யும் வேளாண்மையை மேற்பார்வை செய்யும் பொருட்டு பண்ணைவிசாரிப்பான்கள் அக்காலத்தில் இருந்துள்ளனர். இப்பண்ணை விசாரிப்பான்கள் முன்னிலையில்தான் விளைச்சல் முறையாகப் பங்கீடு செய்யப்பட்டதாக பள்ளுநூல்கள் கூறுகின்றன. அப்படிப் பங்கீடு செய்யப்படும்பொழுது, வட்டாரத்தலைவன், கோயில், அந்தணர்கள், தேவதாசிகள், சத்திரம், கலைஞர்கள் போன்ற சமூகப்பொது நிறுவனங்களும் பங்குபெற்றன என்பதையும் பள்ளு இலக்கியங்கள் தருகின்றன. சத்திரங்கள் விளைச்சலில் பங்குபெற்றதாக முக்கூடற்பள்ளு (139) மாந்தைப்பள்(88,89) வையாபுரிப்பள்ளு (91,199) பட்பிரபந்தம்(25,139), சமுத்திரவிலாசம்(139), சந்த்ர கலாமஞ்சரி (வடகரையாதிக்கத்தின் சரித்திரம்22:9-10) கூளப்ப நாயக்கன் விறலிவிடுதூது(957), போன்ற அக்காலத்து இலக்கியங்கள் தகவல்கள் தருகின்றன. நாயக்கர்கள் ஏற்படுத்திய பாளையக்கார முறையும், பாளையக்காரருக்குக் கீழிருந்த கிராம நிர்வாக முறையான ஆயங்கார முறையும் இதற்கு உதவியாக இருந்துள்ளன.அதன்படி உழவர்களிடமிருந்து நேரடியாக விளைச்சலில் பங்குபெற்று இயங்கியனவாக அக்காலத்துச் சத்திரங்கள் இருந்துள்ளன. அத்தகைய சத்திரங்களில் நிர்வாகப் பொறுப்பிலிருந்தவர்களாகக் காளமேகப்புலவரால் கேலி செய்யப்படுகின்ற நாகைக் காத்தானையும், அந்தகக்கவியால் கேலி செய்யப்படுகின்ற நாகதேவனையும் கொள்ள முடிகின்றது.

சத்திரத்தின் சமூகச்சேவை

ஒவ்வொரு அரசாங்கமும் தன்னுடைய திட்டத்தின் மூலம் தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முயலும். அத்தோடு ஒரு திட்டம் அறிமுகமாகும்பொழுது அதற்கொரு சமூகத்தேவையும் இருக்கும். இந்த அடிப்படையிலேயே சத்திரம் - அதன்மூலம் உணவு வழங்கல் என்ற திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விசயநகர, நாயக்க அரசர்களின் ஆட்சியின்போது நாட்டில் ஏராளமான பஞ்சங்கள் ஏற்பட்டுள்ளன. கி.பி. 1595 முதல் 1795 வரையிலுமான 200 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 24 பெரும்பஞ்சங்கள் ஏற்பட்டதாக வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர். (R.P.Saraf.,The Indian Society,P.180.FootNotes) படிக்காசுப்புலவர் போன்றவர்களும் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சங்களைப் பாடியுள்ளனர். நெல்லும், பொன்னும் ஒரேவிலையில் விற்ற காலம் அது என அவர் குறிப்பிடுகின்றார்(தனிப்பாடல் திரட்டு 1:674). பஞ்சத்தினால் பயிர்கள் விளைச்சல் இல்லாமல் போக தழையாக அறுக்கப்படும் எனத் திருவாரூர்க்கோவை கூறுகிறது(1). அத்தகைய பஞ்சகாலங்களில் உழவில் பூட்ட மாடுகளும் விதைக்க விதையும் கிடைப்பதரிது எனவும் சுட்டப்படுகிறது (தனிப்பாடல் திரட்டு காசுப்பிள்ளை பதிப்பு. ப. 265). இத்தகைய பஞ்சங்களினால் நாடெங்கும் மக்கள் இடம்பெயர்தலும், சிறுசிறு கலகங்களும் நிகழ்ந்துள்ளன ( W.H.Moreland, From Akbar to Aurangazeb , A Study in Indian Economic History, 1923,pp 244-245).

பொதுவாக நாட்டில் ஏற்படும் கொடிய பஞ்சமும் கலகங்களும் மக்களின் இடம்பெயர்தலும் ஆட்சியாளரின் கவனத்தை ஈர்க்கின்ற செயல்கள். பொதுமக்களின் இவ்வுணர்வு எதிர்ப்புணர்வாக மாறி ஆட்சிக்குப் பங்கம் விளைவிக்கக்கூடும் எனக்கருதி, அதனைத் தடுக்கச் சில முயற்சிகளும் மேற்கொள்ளுவர். அம்முயற்சிகளாக 1. ஆயுத ஒடுக்குதல் - சிறுசிறு கலகங்களை ராணுவத்தின் உதவிகொண்டு அடக்குதல் 2. கலாச்சார ஏமாற்றுமுறை -மக்களை எதிர்ப்புணர்வைச் சாதி, மதம் போன்ற சமூக நிறுவனங்களின் வழிச்சில சலுகைகளை வழங்கித் தடுத்துப் பழைய நிலையிலையே இருக்கச் செய்வது 3. குறுகிய காலத்தில் பயன் அளிக்கும் திட்டங்களை அறிமுகம் செய்வது; அதன் மூலம் பெரும் எதிர்ப்புணர்வைத் தடுத்துவிடுவது போன்றவற்றைக் கூறலாம்.

ஆயுத ஒடுக்கல் முறை பயனளிக்காமல் எதிர்விளைவினையும் ஏற்படுத்தக் கூடும். கலாச்சார ஏமாற்றுமுறையோ விரைவில் பயனளிக்கும் எனச் சொல்ல முடியாது. ஆனால் மூன்றாவது முறை விரைவில் பயனளிப்பதோடு அவ்வரசின் மீது ‘மக்கள் நல அரசு’ என்ற கருத்தையும் தோற்றுவிக்கும். இந்த அடிப்படையில் தான் விசயநகர, நாயக்க அரசர்கள் காலத்தில் சமூக நலத்திட்டமாக, ‘ சத்திரங்கள்- அதன் மூலம் உணவு வழங்கல்’ என்ற திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டதாகத் தோன்றுகிறது. அத்தோடு முடியரசர்கள் மதத்தின் காவலர்களாகவும் விளங்கக்கூடியவர்கள்; அதன் காரணமாகக் கோயில்களுக்குச் செல்லும் பயணிகளுக்குப் பாதுகாப்பும், உணவளிக்கும் பொறுப்பையும் அவர்களது கடமையாகக் கொண்டனர். இதுவும் சத்திரங்கள் ஏற்படுத்தக் காரணமாக இருந்தது.

சத்திரம்: குறைகளும் எதிர்கொள்ளலும்

அரசின் திட்டமாக, அதன் மானிய உதவியோடு தனியார்களின் நிர்வாகப்பொறுப்பில் இருந்த சத்திரங்களில் பலகுறைபாடுகள் ஏற்பட்டன. சரியான முறையில் உணவு வழங்கப்படவில்லை. விநியோக முறையில் சீர்கேடுகள் ஏற்பட்டன. இதனையும் அக்காலப்புலவர்கள் சுட்டிக்காட்டினர். சத்திரங்களில் மட்டரகமான உணவு வழங்கப்பட்டது. கல்லும் நெல்லும் கலந்த சோறு; வாடிப்போன கத்தரிக்காய்; அதில் உப்பில்லை; ஈக்கள் விழுந்துகிடந்தன என நாகதேவன் பொறுப்பிலிருந்த சத்திரம் பற்றிய சித்திரத்தை அந்தகக்கவி வீரராகமுதலியார் தருகிறார்(தனிப்பாடல் திரட்டு 1:34). இத்தகைய உணவும் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை என்பதைக் காளமேகப்புலவர்,

கத்துங்கடல் சூழ்நாகைக் காத்தான்றன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும், குத்தி
உலையிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிட வெள்ளி எழும்

எனக்கிண்டலாகக் கூறியுள்ளார் (தனிப்பாடல் திரட்டு 1:67). இப் பாடல்களிலெல்லாம் கூடப் புலவர்களின் கண்டிப்பு சத்திரப் பொறுப்பாளனாகிய தனிநபர்களை நோக்கியே அமைந்துள்ளது. நாயக்கர்கள் காலத்தில் “ வெள்ளைநிற அரிசியை செல்வர்களும் சிவப்புநிற அரிசியை எளியோரும் உண்டனர்” (ந.க. மங்கள முருகேசன், இந்திய சமுதாய வரலாறு,ப.318) என்கிற நிலை இருந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கான சத்திரங்களில் சத்தான உணவு வழங்கப்பட்டிருக்குமா? என்ற கேள்விக்கு இல்லை என்பதுவே பதிலாக அமைய முடியும். ஆனால் இரண்டுவிதமான அரிசியையும் உற்பத்தி செய்தது சிவப்புநிற அரிசியை உண்ட எளியர்களே என்பது உண்மை. இங்கு உற்பத்தியின் பயனை உற்பத்தியாளன் அனுபவிக்க முடியாதநிலை இருந்தமை புலப்படுகிறது.
====================================================================

* தலைப்பு வரி‘சந்திரகலா மஞ்சரி’ என்னும் பனுவலில் இடம்பெற்றுள்ளது. வடகரை ஆதிக்கத்தின் சரித்திரம் (ப.22:10)]


**இக்கட்டுரையை எனது முதல் ஆய்வுக்கட்டுரையென்று சொல்லலாம்.1983 -இல் ஆய்வைத் தொடங்கி ஓராண்டுக்குப் பின் எழுதித் தமிழாசிரியர் மன்ற மாநாட்டில் வாசிப்பதற்காக எழுதப்பெற்றது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி

காவல்கோட்டம்: இந்தத் தேர்வு சரியென்றால் இதைத் தொடர என்ன செய்யப் போகிறோம்?