உலகப்பார்வையாளர்களுக்கான தமிழ் அரங்கநிகழ்வு: சக்திக்கூத்து:

‘எதிர்பார்ப்பு’ என்ற சொல்லையும் ‘முன்முடிவு’ என்ற சொல்லையும் ஒரே அர்த்தம் கொண்ட சொற்களாக நினைப்பதில்லை. "எந்தவித எதிர்பார்ப்புகளு மற்று ஒரு கலைப்படைப்பிற்குள் நுழையவேண்டும்; கலைநிகழ்வைக் காணவேண்டும்” என்று சொல்லப்படும்போதெல்லாம் அது சாத்தியமா? என்ற கேள்விகள் எனக்குள் எழுந்துகொண்டே இருக்கும். எழுத்துசார்ந்த படைப்பாயினும்சரி, அரங்கநிகழ்வாக இருந்தாலும்சரி வாசகர் அல்லது பார்வையாளர் என்பவர் சில எதிர்பார்ப்புகளோடுதான் நுழைகின்றார். நான் ப்ரசன்னா ராமசுவாமியின் சக்திக்கூத்தைக் காணச் சில எதிர்பார்ப்புகளோடு தான் நுழைந்தேன். என்னைப்போலவே பார்வையாளர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருந்திருக்கக் கூடும்.தனக்குள் நுழையும்போது தனித் தனியான எதிர்பார்ப்புகளோடு இருப்பவர்களைத் தனியர்களாகவே நிறுத்திச் சிந்திக்கச் செய்வது எழுத்துக்கலையின் இயல்பு. ஆனால் அரங்கக்கலை அப்படிப்பட்டதல்ல. அரங்கத்திற்குள் வரும் தனியர் களைக் கூட்டுமனத்தின் பிரதிநிதியாக ஆக்குவது அதன் முதன்மை நோக்கம். பல்வேறு கலைஞர்களின் பங்களிப்பால் அரங்கக்கலை கூட்டுக் கலையாக இருக்கிறது எனச் சொல்லப்படுவதை நாமறிவோம். அந்த உண்மைக்குள் அரங்கக்கலை தனது பார்வையாளர் களைத் தனியர்களாகத் திருப்பியனுப்பாமல் கூட்டுமனத்தின் பிரதிநிதியாக மாற்றும் நோக்கத்தையும் கொண்டிருக்கிறது. இந்த ஆகப்பெரும் உண்மையும் அதற்குள் ஒளிந்திருக்கிறது என்பது சுவையான ரகசியம்.

ஆகஸ்டு மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சென்னை மாநகரத்தின் மூன்று மையங்களில் சக்திக்கூத்து மேடையேற்றம் கண்டது. நான் இரண்டாவது மேடையேற்றத்தை அல்லயன்ஸ் ப்ரான்சைஸில் பார்த்தேன். பார்த்து முடித்தவுடன் தோன்றிய முதல் மனப்பதிவு: “இந்நிகழ்வு, தமிழ்பேசும் பார்வையாளத் தனியர்களின் நுழைவை மட்டுமல்லாமல், மொழி, இனம், பண்பாடு ஆகியவற்றால் வேறுபட்ட பார்வையாளத் தனியர்களையும் கூட்டுமனத்தின் பிரதிநிதிகளாக ஆக்கிவிடும் வல்லமை கொண்டது” என்று நினைத்தது. அதனைத் தொடர்ந்து, ‘ஒரு தமிழ் அரங்கநிகழ்வு, தனது மேடைக் கலவையால் உலகப்பார்வையாளர்களுக்கானதாக ஆகியிருக்கிறது’ என்றும் குதூகலித்தது.

தமிழ் அரங்கியலோடு நீண்ட காலத் தொடர்பு கொண்ட எனக்கும் என்னோடு அரங்கில் அமர்ந்திருந்த அரங்கு நிறைந்த பார்வையாளர் களுக்கும் இப்படியொரு குதூகலத்தைத் தருவதற்கான பனுவலை உருவாக்கி, வடிவமைத்து, இயக்கிய ப்ரசன்னா ராமசுவாமிக்கு மனமார்ந்த பாராட்டுகள். அவரின் நினைப்புகளைச் சரியாக உள்வாங்கி உடல்வழியாகவும் குரல்வழியாகவும் மேடையை உயிர்ப்புள்ளதாக ஆக்கிய நடிப்புக்கலைஞர்களான ரோகிணிக்கும் ரேவதிகுமாருக்கும் ஒளியமைப்புச் செய்த செ.ரவீந்திரனுக்கும் அந்த பாராட்டு சென்று சேர்கிறது என்பதைத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை.

***

பெண்சார்ந்த அனைத்துவகையான வலியையும் வெளிப்படுத்தும் பெண்களின் குறியீடாக இருக்கக்கூடிய வலிமை பாஞ்சாலி என்ற பாத்திரத்திற்கு இருக்கமுடியும் எனக்கணித்து அவளின் வழியாகவே விவாதங்களை முன்வைத்துள்ளது நாடகம். குறியீடாக மாற்றப்பட்டிருப்பவள் பாரதக் கதையில் இடம்பெற்ற திரௌபதியல்ல. பாரதியின் பாஞ்சாலி என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. தொன்மையான மகாபாரதத்தின் முக்கியநிகழ்வைப் பாஞ்சாலி சபதமாக்கிய பாரதி, அவனது காலத்தின் தேசச் சூழலையும் பெண்களை மையப்படுத்திய சமூகமாற்றத்தையும் முன்வைத்து விவாதங்களை எழுப்பினான். ப்ரசன்னா, பாரதியின் பாஞ்சாலியை உலகமயச் சூழலில் இந்தப் பாருக்கே சொல்லாடல்களை முன்வைக்கும் சக்தியாக மாற்றியிருக்கிறார்.

தனது மேடைத்தயாரிப்பு புதுவிவாதம் எழுப்பும் நோக்கம் கொண்டது என்பதை உறுதியாக முடிவுசெய்துகொண்ட ப்ரசன்னா. பரவலான அறிமுகம் கொண்ட பாத்திரம் ஒன்றை முன்னிறுத்துவதன்மூலம் பார்வையாளத்திரளுடன் எளிமையாக உரையாட முடியும் என நினைத்துள்ளார். இந்தக் கணிப்புடன் மேடைநிகழ்வின் முதல் அசைவை உருவாக்கியுள்ளார். கதைசொல்லி, பாத்திரம், மனக்குரல், மாற்றுப்பாத்திரம் எனப் பல பரிமாணங்களை எடுக்கப்போகும் ரோகிணியை ஓர் அரைவட்டம் தரையில் உருளச்செய்து, அவர் உடலைச் சுற்றிய துணியைத் திரைச்சீலையாக்கிப் பின் எழுந்து திரையைப் பிடிப்பவர்களிடம் ஒப்படைத்துவிட்டுப் பாஞ்சாலியாக மாறும்போது பாஞ்சாலி சபதம், சக்திக்கூத்தின் இழையைப் பற்றிக்கொள்கிறது. உடனடியாகவே அவள் பாஞ்சாலி அல்ல; பாஞ்சாலியாக வேடங்கட்ட இருக்கும் நடிகை என்பதை உணர்த்தும் விலகல் உத்திமூலம், நாடகம் புதுவகைச் சொல்லாடலைப் புதுவகை நிகழ்த்துமுறையால் உருவாக்கப் போகிறது என்பதையும் புரியவைத்துள்ளார். தலையில் இருந்த நீண்ட சவரிமுடியைக் கையில் பிடித்துப் பேசும் வசனங்கள், குட்டையாக வெட்டப்பட்ட தனது தலைமுடியோடுதான் முழுமையாக நடிக்கப் போகிறார் என்பதின் வெளிப்பாடு மட்டுமல்ல; இந்நாடகம் பார்வையாளர்களைத் தன்வசப்படுத்திக் கடைசிவரைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் நடப்பியல் நடிப்புப் பாணியைப் பின்பற்றப்போவதில்லை என்பதையும் உணர்த்திவிடும் குறிப்பு அது.



பொதுவாகவே, அரங்கநிகழ்வின் பார்வையாளர்கள் ஒற்றையெதிர்பார்ப்போடு வருபவர்கள் அல்ல. அவர்களின் முதன்மையான எதிர்பார்ப்பு கண்வழிப்பட்டது; இரண்டாவது செவிவழிப்பட்டது. ஆனால் நிகழ்வின் முடிவில் உருவாகும் மதிப்பீடு அல்லது விமரிசனம், செவிவழிப்பட்ட செய்திகளைக் கொண்டே உருவாகிறது என்பது சுவையான முரண்பாடு. ‘ஆதியிலே வார்த்தை இருந்தது’ என்பதிலிருந்து உண்டானது இந்த முரண்பாடு. சொல்லப்பட்ட செய்திகள் - வார்த்தைகளாகவும், இசையாகவும் தங்களை வந்தடைந்த விளக்கங்களாலும் உணர்ச்சிகளாலுமே ஒரு அரங்கநிகழ்வு பற்றிய மதிப்பீடும் பயனும் உணரப்படுகின்றன. துரியனின் சபையில் துயிலுரியப்பட்ட பாஞ்சாலி எழுப்பும் வினாக்கள் ஒட்டுமொத்த ஆண்களையும் நோக்கியது என்றாலும், முதன்மையான குறி விஷ்டுமாச்சாரியாரை நோக்கியதே. ஏனெனில் அச்சபையில் இருந்தவர்களில் மூத்தவர். ஆண்கள் நிரம்பிய சபைதன்னில் ஒருபெண்ணை இழுத்துவரவும், அம்மணமாக்கவும் நினைத்த ஆண் மனத்தைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பில் இருந்தவர். அவரோ, அந்தப் பொறுப்பையுணராமல் “எழுதிவைக்கப்பட்ட சட்டவிதிகளில் -சாஸ்திரங்களில்- சொல்லப்பட்டிருக்கிறது; அதன்படி பெண்ணை வைத்துச் சூதாடும் உரிமை அவளைக் கைபிடித்த ஆடவனுக்கு இருக்கிறது; அவளைச் சூதில் வெற்றிகொண்ட ஆடவன் எந்தவிதமான அவமானத்தையும் அவளுக்குத் தரலாம்” என்று நியாயம் பேசுகிறவராக இருக்கிறார் என்று குற்றம் சாட்டியவள் பாரதியின் பாஞ்சாலி.

பாஞ்சாலியின் இந்தக் குற்றச்சாட்டு பிரசன்னாவின் சக்திக்கூத்தில் நிகழ்காலத்திற்கும் உலகப்பரப்புக்கும் இடம்பெயர்க்கப்படுகிறது. அனைத்து அரசுகளையும் கண்காணிக்கும் அதிகாரம் இருப்பதாகப் பாவனைசெய்யும் உலகநாடுகளுக்கான மன்றம் என்பதான ஒற்றைவரி வசனம் மூலம் நிகழ்கால அரசுகளின் போர்வெறியும், சொந்த நாட்டு மக்கள் மீதே அவை செலுத்தும் அடக்குமுறைகளைப் பற்றிய விவாதங்களாகவும் காட்சிகள் அர்த்தம் தரத்தொடங்குகின்றன. அந்த அர்த்தத்தை ஈழத்துக் கவிகளான சேரன், அகிலன், திருமாவளவன் ஆகியோரது வரிகளின் மூலமும், அவற்றைப் பேசும் தொனி மற்றும் பின்னணி இசையின் மூலமும் உருவாகும் இசைப்படிமத்தோடு இணைத்து ஈழப்போரின் துயரமிக்க காட்சிகளாக மேடையில் நிரப்பிவிடுகின்றது நாடகம். கவிதைவரிகளின் தொனியை மாற்றிமாற்றி உச்சரிக்கும் நிலையில் சொந்தநாட்டு மக்கள் மீது வன்மையான ஆயுதங்களோடு ரசாயன யுத்தத்திலும் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டுகின்றன அந்தக்கவிதைகள். அந்தக் குற்றச்சாட்டு துணையாக இருந்த நட்புநாட்டு அரசுகளின் மீதும் சாட்டையடியாக விழுகின்றன. நீண்ட நெடுங்காலமாக அறம், நீதிபரிபாலனம், மக்கள்சார் அரசுகள் இருந்ததாகச் சொல்லிவந்த இந்திய அரசின்மீதும் அந்தச் சாட்டையடிவிழும்விதமாகக் காட்சியை உருவாக்கிப் பார்வையாளர்களுக்குள் கடத்தியபோது இந்தியனாகிய எனது குற்றவுணர்வு தூண்டப்படுகிறது. அரங்கிலிருந்த ஒவ்வொருவரும் விட்ட பெருமூச்சு அதனையே உறுதிசெய்தது.



பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் காட்சிவழி உருவாக்கமும், செவிவழிப் படிமங்களும் சம அளவில் தேவையென்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளும் இயக்குநர்கள் மட்டுமே அரங்கியலில் வெற்றிகரமான படைப்பாளிகளாகவும், காலத்திற்குத் தேவையான படைப்புகளைத் தந்தவர்களாகவும் கருதப்படுவார்கள். உடனடியான எதிர்பார்ப்பைக் காட்சிவழியாக நிறைவு செய்யவேண்டும்; செவிவழியாக நிறைவுசெய்யவேண்டியனவற்றைச் சொற்களாலும், சொற்களுக்கு அழகூட்டும் இசையாலும் நிரப்பித் தரவேண்டும். அரங்கநிகழ்வில் பார்வையாளர்களுக்கு வந்து சேருவனவற்றுள் முதலிடம் பிடிப்பது மேடைப்பரப்பை உயிர்ப்பாக்கும் நடிகர்களின் திறனே.

மரபான நாடகங்களின் நடிகர்கள் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களால் அறியப்படுவார்கள். பாத்திரங்களின் வழியாக உருவாகும் முரணைப் பிடித்துக் கதையாகப் புரிந்துகொள்வதில் அரங்க நிகழ்வு முழுமைபெறும். ஆனால் சக்திக்கூத்து போன்ற நவீனப்பனுவலில் நடிப்பவர்கள் அந்த முயற்சியை மேற்கொள்ளவே முடியாது. இவ்வகை நாடகங்கள் மையமான பாத்திரமொன்றை உருவாக்குவதற்கெதிரானவை. பலநேரங்களில் எதிரில் இல்லாத அரூபமான பாத்திரங்களோடு உரையாடுபவை. சிலநேரங்களில் தன்னையே எதிரிடையாக நிறுத்திக்கொண்டு உள்முகமாகப்பேசக்கூடியவை. அரூபத்தோடும் தன்னோடும் திரளான பார்வையாளர்களோடும் அரங்கிற்கு வந்திராத பொதுவெளி மனிதர்களோடும் பேசவேண்டிய நிர்ப்பந்தத்தை உள்வாங்கி நடிப்பதென்பது நடிப்புக் கலைஞர்களுக்கு பெரும் சவாலான ஒன்று. அந்தச் சவாலை ஏற்று நடித்துக் காட்டியிருப்பவர் நடிகை ரோகிணி. அரங்க நடிப்போடு ஒப்பிட்டால் சினிமா நடிப்பு குறைவான சக்தியும் மனனப்பயிற்சியும் தேவைப்படும் ஒன்று. பலகாலம் அதில் செயல்பட்ட ஒருவர் முழுநாடகத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டிய இந்தப் பாத்திரத்தை ஒத்துக்கொண்டு நிறைவேற்றியிருப்பது பாராட்டவேண்டிய சவால். அவரோடு இணைந்து இணைப்பிரதியை உருவாக்கி மாற்று அர்த்தங்களைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருப்பவர் ரேவதிகுமார். இவ்விருவரின் உடல் களைப்புக்குச் சின்னச்சின்ன இடைவெளிகளை உருவாக்கித் தந்திருப்பவர் நெல்லை மணிகண்டன். இம்மூவரின் உடல், குரல், மனம் ஆகியவற்றின் இணைவாலும், விலகலாலும் உருவாகக்கூடிய மாறுபட்ட மொழிகளின் அர்த்தங்களை இயக்குநர் தக்க அளவில் பயன்படுத்தியிருப்பது ரசிக்கத் தக்க ஒன்றாக இருந்தது.


சக்திக்கூத்து முழுநிகழ்வும் ஒன்றை, இன்னொன்று பின் தொடர்வது என்ற நிகழ்த்துமுறையைக் கைக்கொண்டதாக இருக்கிறது. வசனம், பாடல், இசை, அசைவு என்பன ஒன்றிலிருந்து ஒன்றாக உருவாகித் தொடர்ந்துள்ளன. நிகழ்வின் மொத்த நேரம் 80 நிமிடம். தொடக்கத்தில் நுழையும் ரோகிணியும் ரேவதிகுமாரும் முழுமையாக நிகழ்விடத்தில் அசைபவர்களாக இருக்கிறார்கள். வன்மையான வசனங்களின் வழியாகவும் வேகமான ஆட்டங்களின் வலியாகவும் ரோகிணி ஒன்றை உருவாக்கித்தருகிறார். அந்த உருவாக்கம் சில நேரங்களில் தொன்ம நிகழ்வுகளைக் கவனப்படுத்தும் பாத்திரங்களாகவோ, யுத்தத்தால் சிதைக்கப்பட்ட பெண்ணுடலாகவோ, கூட்டுப்புணர்ச்சியால் ரத்தவாடையைக் கக்கிய யோனியின் அழுகையாகவோ இருக்கின்றன. அந்த உருவாக்கத்தைத் தனது உடலுக்குள் வாங்கித் தனது மென்னசைவால் அதன் அடுத்த பரிமாணத்திற்குள் நகர்த்திக் கொண்டுபோகிறார் ரேவதிகுமார். தேர்ந்த நடனக்கலைஞராகவும் பாடகராகவும் இருக்கும் அவரது உடல்மொழி, அசைவு மற்றும் குரலின் ஏற்புப்பெட்டகமாக மாறி வாங்கிக் கொள்கிறது. இந்த மாற்றத்தின் மூலம் பெண்சக்திக்குள் இருக்கும் வன்மை, மென்மையின் இரட்டைநிலையாகவும் அர்த்தம் கிடைக்கிறது. இரண்டு பெண்களின் மேடையிருப்பும் சம அளவில் இருப்பதின் மூலம் சக்தியின் வெளிப்பாடு சமநிலைப்பட்டது என்று கருதிவிடும் ஆபத்தை உணர்ந்த இயக்குநர், வன்மையின் பங்கே கூடுதல் என்பதைக் காட்ட மூன்றாவது நபராக ஆண் ஒருவரை மேடைக்குள் அவ்வப்போது அலையவிட்டுள்ளார். அவரது வருகையும் அவரிடம் இருக்கும் தோல்கருவியின் வல்லோசையும், அதற்கேற்ற நடன அசைவுகளைத்தரும் ரோகிணியின் உடல்மொழியும் இணைந்து சக்தியின் கூத்து ஆக்ரோசத்தின் வெளிப்பாடு என்பதைக் கவனமாக முன்வைக்கின்றன.

நவீன நாடகமேடைகளில் நவீன ஓவியங்கள் மேடைப்பொருட்களாக மட்டுமே இடம்பெற்று அர்த்தம் தராமல் நின்றுபோவதைப் பலநாடகங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த நிகழ்வில் பயன்படுத்தப்பெற்ற ஓவியத்திரைகள் மேடைப்பொருட்களாக இல்லை. அவற்றோடு இணையும் வசன உச்சரிப்புகளின் மூலம் திரளின் மனச்சாட்சியோடு பேசும் பாத்திரங்களாக மாறியுள்ளன. கண்டதுண்டங்களாக ஆக்கப்பட்ட பெண் உடலோடு ஓரோவியம் இணையும்போது பழங்கிரேக்கப் பாத்திரமொன்றை நினைவூட்டுகிறது. இன்னொரு ஓவியம் வாயுக்கூடத்தில் நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணோடு ஒட்டிக்கொள்கிறது. பேருந்தில் கிழிக்கப்பட்ட நிர்பயாவின் உடலை மூட மறந்த துணியாக மற்றொரு ஓவியம் தன்னைச் சொல்கிறது. இவற்றை உருவாக்கிய ஓவியர் கிருஷ்ணப்பிரியாவின் தூரிகை, காட்சிக்கான ஓவியத்தை உருவாக்கிய ஒன்றாக இல்லாமல், பாத்திரத்தை எழுதிய எழுதுகோலாக ஆகியிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.


குறைவான நடிகர்கள், குறைவான மேடைப்பொருட்கள், ஒற்றைத் தாளக்கருவி, பிரமாண்டங்களை உருவாக்காத ஒளியமைப்பு, ஆகியவற்றின் துணையோடு நடிப்பவர்களின் முழுத்திறனையும் பயன்படுத்தி உருவாகியுள்ள சக்திக்கூத்து தமிழ்நாட்டின் கல்விக்கூடங்கள் ஒவ்வொன்றிலும் மேடையேற்றப்படவேண்டிய அரங்கியல் நிகழ்வு. மிகச்சிறிய அறிமுகத்தோடு எந்த மொழியிலும் இந்த நிகழ்வை மேடையேற்றலாம். அரசதிகாரமும், ஆணதிகாரமும் வன்மத்தோடு செயல்படும் நிலமாகப் பெண்ணுடல் இல்லாத தேசம் எங்கேனும் உண்டா? அதனை நோக்கிய பயணத்தைக் கூடத் தொடங்காத இந்த உலகத்திற்குச் சக்திக்கூத்து - சக்திகளின் கூத்துகள் - தேவையான ஒன்று.
===============================

நன்றி ; உயிர்மை/ செப்டம்பர், 2015

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்