வாழ்தலின் ரகசியத்தைத் தேடுவது?

நகுலன் பற்றியும் நகுலன் கவிதைகள் பற்றியும் நடக்கும் பல விவாதங்களைப் பலநேரங்கள் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு வாசிப்பின்போதும் அவை ‘நான்’ அல்லது ‘தன்’ னின் இருப்பு பற்றிய கேள்வியாகவும், விடை தெரியாத நிலையில் ஏற்படும் குழப்பமாகவும் புரியும். அப்புரிதல் பெரும்பாலும் பிழையானதல்ல என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.

‘நான்’னின் இடத்தில் ‘நின்’னையும் ‘அவன்’ ‘அவள்’ அல்லது ‘அது’வையும் வைத்து விதம்விதமாகக் கேள்வியெழுப்பிக் கவிதை விளையாட்டு செய்பவர் நகுலன். ராமச்சந்திரன் அல்லது சுசிலா என்பன இம்மூவிடப் பெயர்களில் ஒன்றை மாற்றீடு செய்வன என்பதைத் தாண்டி வேறில்லை.

இந்தக் குழப்பத்தைக் கருத்து முந்தியது அல்லது பொருள் முந்தியது எனப் பேசும் இயங்கியல் தத்துவவிசாரணையாகவும் பேசிக்கொண்டிருக்கலாம். அல்லது “ஆதியிலே வார்த்தை இருந்தது; அது வார்த்தையாக இருந்தது; வார்த்தை ஆதியாக இருந்தது; ஆதி பகவானோடிருந்தது; பகவான் வார்த்தையாக இருந்தார்; பகவானின்றி வார்த்தையில்லை; பகவானே வார்த்தை” என்ற சமயவியல் விசாரணையாகவும் ஆக்கிக்கொள்ளலாம். புதைவடிவப் பொருண்மை, புறவடிவப் பொருண்மை என மொழி விளையாட்டும் விளையாடலாம். கவிதையை வைத்துக் கொண்டுவிளையாட விரும்புபவர்களுக்குத் தேவை ஒருவிளையாட்டு.

நகுலனின் பெரும்பாலான கவிதைகளின் இக்குழப்பம் அல்லது மயக்கம் அர்த்தக் குழப்பமா? தோற்றமயக்கமா? என்று தரைக்குமேல் மிதந்த கேள்விகளோடு இப்போது அவரின் சீடர்களென நம்புபவர்கள் அவரைத் தரையில் இறக்கி நடக்கச் செய்யவும் முயற்சிக்கின்றனர். குடிப்பிரியர்களிடம் வெளிப்படும் குளறலும், தத்துவவிசாரணையோடு சேர்த்தி என இணைத்துவிடும் ஆர்வமாக இது தோன்றுகிறது.

நான் -ஐ அல்லது நின் -ஐத் தேடும் கவிகளுக்குக் குடியும் போதையும் கூட நானாகவும் நின்னாகவும் தோன்றுவது ஒருவித பித்தநிலை. எல்லாப் பித்தநிலைகளையும் தத்துவமாகப் பார்க்கும் பலர் தங்களின் படைப்புகளைத் தரையில் கால்வீசி நடக்கும் படைப்புகளாக எழுதிக் கொண்டே நகுலனையும் கொண்டாடுகின்றார்கள் என்பது இன்னும் சுவாரசியமான முரண். சுவாரசியமான முரண்கள் இல்லையென்றால் வாழ்க்கையின் ரகசியத்தை எப்படித்தேடுவது?


நிஜத்தைத் தேடுவதற்கான குறுக்குவழி

திறந்து வைத்த
சாளரங்களின் வழியே
தென்றலும் வந்தது.
தென்றலோடு தென்றலாய் நீயும்....
தென்றலுக்குத்
தேன் தடவிய நினைவுகளால்
நெஞ்சம் நிறைகிறது.
சாளரங்கள் மட்டுமல்ல கண்களும்...
கண்களின் இமைகளும் கூடத்
திறந்து கிடக்கின்றன
நினைப்பு நிஜமென்றால் நீயும் நிஜமே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்