இன்னொரு தேசத்தில்: இருப்பும் இயக்கமும்


போலந்துக்கு வந்து சேர்ந்த முதல் மாதத்திலேயே தெரிந்து கொள்ள வேண்டிய பல விசயங்களைப் பத்து மாதங்களுக்குப் பின்னர் தெரிந்து கொள்ளத் தொடங்கினேன். ஓராண்டு முடியப் போகும்போது நான் சந்திக்கும் இந்தப் பிரச்சினைகளை மற்றவர்கள் உடனடியாக எதிர்கொள்ள வேண்டி யதிருக்கும். எவர் ஒருவரும் இன்னொரு நாட்டிற்குப் போய் நீண்டகாலம் தங்க நேரிடும் போது சந்திக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் இவை என்பதால் கொஞ்சம் கூடுதலாக அவற்றை விளக்கலாம் என நினைக்கிறேன். இதனை இருப்பும் இயக்கமும் சார்ந்த பிரச்சினைகள் எனச் சுருக்கிச் சொல்லலாம். மனிதன் வாழ்கிறான் என்றால் ஓரிடத்தில் இருக்கிறான் என்பதும் அங்கிருந்து இயங்குகிறான் என்பதும் தானே பொருள்.
சொந்த நாட்டில் இருக்கும்போது நமது இருப்பையும் இயக்கத்தையும் அவ்வளவாக உணர்வதில்லை. தனி மனிதர்களால் அரசின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படாத வரை அரசு நிர்வாகம் தனி மனிதர்களைக் கண்டு கொள்வதே இல்லை. அதிலும் இந்தியா போன்ற பொறுப்பற்ற அரசுகளின்கீழ் வாழும் மனிதர்கள் எப்போதும் தங்களின் இருப்பையும் இயக்கத்தையும் உணராமலேயே வாழ்ந்திட முடியும். குறிப்பாகச் சட்டம், ஒழுங்குப் பிரச்சினைகளை உருவாக்கும் மனிதர்களை மட்டுமே இந்தியாவின் அரசு நிர்வாகம் கண்டுகொள்கிறது. இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருக்கும் மெத்தனத்தில் தொடங்கும் இந்தப் பொறுப்பின்மை, அவர்களுக்கென ஓர் அடையாள அட்டையை வழங்காமல் தவிர்ப்பதில் தொடர்கிறது. அதன் மூலம் ஒவ்வொருக்கும் அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்ற அக்கறையின்மையில் காட்டுவதோடு, கல்வி, வேலைவாய்ப்பு, திறமைகளைப் பயன்படுத்துவதில் ஆர்வமின்மை என்பதில் நீண்டுகொண்டே போகிறது. பொறுப்பற்ற அரசுகளால் பொறுப்பற்ற மனிதர்கள் உருவாகிறார்கள் என ஒருவர் அதனைச் சொல்லலாம். இப்படிச் சொன்னால் பொறுப்பற்ற மக்களால் பொறுப்பில்லாத அரசுகள் உருவாக்கப்படுகின்றன என யாராவது மாற்றிச் சொல்வார்கள். இரண்டும் உண்மைதான்; அல்லது இரண்டுமே பொய்கள் தான். அதுவும் இல்லையென்றால் இரண்டையும் புனைவு என வைத்து கொள்ளலாம்.

இருப்பு சார்ந்து நான் சந்தித்தவை குறைவான பிரச்சினைகள் தான். காரணம் நான் வந்திருப்பது அரசின் பிரதிநிதியாக அது அளித்த வெள்ளைக் கடவுச் சீட்டில் (White Passport). அந்தக் கடவுச் சீட்டு நான் இங்கு வார்சாவில் இருக்க வேண்டிய இரண்டு ஆண்டு காலத்திற்கும் உரியதாகத் தரப்படவில்லை. கடவுச்சீட்டு தந்த நாள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் என அச்சிட்டுத் தந்திருந்தார்கள். ஆனால் நான் இந்தியாவிலிருந்து அந்தத் தேதியிலிருந்து 40 நாட்கள் கழித்துத்தான் அனுப்பப் பட்டேன். இதுபோன்று கடவுச் சீட்டுச் சிக்கல் சாதாரண கடவுச் சீட்டு (Green Passport). வைத்திருப்பவர்களுக்கு ஏற்படாது. பெரும்பாலும் 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் என மொத்தமாக வழங்கப்பட்டு விடுகிறது. ஒருவர் தன்னுடைய நாடு வழங்கியுள்ள கடவுச் சீட்டு முடிந்த பின்பு அந்நிய நாட்டில் தங்க முடியாது என்பதால், நாம் வந்துள்ள நாட்டில் இருக்க வேண்டிய காலத்திற்கு சொந்த நாட்டின் கடவுச் சீட்டு அனுமதி இருக்கிறதா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். ஏனென்றால் அந்த அனுமதியை வழங்குவது இந்திய அரசின் வெளியுறவுத் துறை. அதனை நாட வேண்டும் என்றால் திரும்பவும் இந்திய அரசாங்கத்தைத் தான் நாட வேண்டும்.

 கடவுச்சீட்டு தான் நமது இருப்பிற்கான முக்கிய ஆதாரம். இந்திய அரசு வழங்கும் கடவுச்சீட்டு ஒருவரை இந்திய அரசின் குடிமகன் என ஒத்துக் கொள்வதால் தான் இன்னொரு நாடு அந்த நாட்டில் தங்கிக் கொள்ள அனுமதிக்கிறது. நாடற்றவர்கள் என்றால் தங்க வேண்டிய இடம் அகதி முகாம்கள். எந்த நாட்டிற்கு நாம் போனாலும், இறங்கிய பிறகு நமது பாதுகாவலர்கள் அந்நாட்டில் இருக்கும் தூதரகம் தான். அந்நிய நாட்டில் வாழ நேரும் இந்திய மக்கள் அனைவரின் பாதுகாப்புக்கும் அந்தந்த நாட்டின் இந்திய தூதரகமே. எனக்கான கடவுச்சீட்டு, அதில் குத்தப்பட்ட விசா அனுமதி, விமானப் பயணச் சீட்டு என அனைத்தையும் விமானம் ஏற வேண்டிய நாளுக்கு ஒரு நாள் முந்தித்தான் இந்திய அரசின் பண்பாட்டுப் பரிவர்த்தனை தந்தது. நான் இருக்க வேண்டிய இரண்டு ஆண்டுகளுக்கும் முழுமையாகக் கடவுச்சீட்டு இல்லையே எனச் சொன்னபோது அதை வார்சாவில் இருக்கும் போலந்துத் தூதரகம் சரி செய்து தரும் எனச் சொல்லி அனுப்பி விட்டார்கள். 

என்னைப் போன்று அரசின் தேர்வில் வருபவர்களுக்கு ஒவ்வொரு நாட்டின் இந்தியத்தூதரகங்களும் கடவுச்சீட்டுக் காலத்தினை நீட்டி வழங்க முடியும். மற்றவர்களுக்கு அப்படிச் செய்ய முடியாது. நாம் தரும் இந்திய முகவரியையும் விவரங்களையும் வைத்துக் கொண்டு சோதனை செய்து எல்லாம் சரியென முடிவு செய்த பின் வழங்கவேண்டும். அப்படிச் செய்வதற்கு ஆகும் செலவு அதிகமாக இருக்கும். தவிர்க்கவே முடியாத நிலையில் தான் கடவுச்சீட்டு நீட்டிப்பை தூதரகங்கள் மேற்கொள்ளும். இல்லையென்றால் சொந்தநாட்டுக்குப் போய் வாங்கி வா என்று அனுப்பி விடும். அத்தோடு என்னைத் தேர்வு செய்து அனுப்பிய இந்திய அரசின் பண்பாட்டு பரிவர்த்தனைத்துறை போலந்தில் இருக்கும் காலத்தில் என்னுடைய சம்பளம், தங்குதல், பயணம் என எல்லாவற்றிற்கும் இந்தியத் தூதரகத்தைத் தான் தொடர்பு கொள்ள வேண்டும் எனச் சொல்லியிருந்தது. அரசின் பிரதிநிதிகளாக வருபவர்கள் அனைவருக்கும் அது தான் நடைமுறை. எனக்கு எந்தச் சோதனைகளும் இல்லாமல் வார்சாவில் இருக்கும் இந்தியத் தூதரகமே சரி செய்து தந்து விட்டது. கடவுச் சீட்டு போலவே அடுத்து முக்கியமானது நாம் பெற வேண்டியது ஒரு நாட்டிற்குள் நுழைவதற்கும் பயணம் செய்வதற்கும் திரும்புவதற்குமான அனுமதியை வழங்கும் விசா (VISA).


ஒரு நாட்டிற்குள் நுழைவதற்குக் கடவுச் சீட்டு அவசியம் என்றால், அந்த நாட்டில் இங்கும் அங்கும் இயங்குவதற்கு விசா அனுமதி அவசியம். இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகப் பரிவர்த்தனைத்துறை இரண்டு ஆண்டுகள் போலந்தில் தங்கி வார்சா பல்கலைக்கழக மாணாக்கர்களுக்கு தமிழ் கற்பிக்க வேண்டும் என முதல் உத்தரவுக் கடிதத்தில் சொல்லியிருந்தது. ஆனால் ஓராண்டு தங்குவதற்கான விசா மட்டுமே வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தது. எல்லா நாடுகளும் அதிகபட்சம் ஓராண்டுதான் விசா அனுமதி அளிக்குமாம். போலந்து நாட்டுக்கான இந்தியத் தூதர் திருமதி மோனிகா கபில் மொக்தாவுக்குக்கூட ஓராண்டு விசா தான் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொன்னார். ஓராண்டுக்குப் பின்னர் நீட்டித்துக் கொள்ள வேண்டும். முடிவதற்கு இரண்டு மாதத்திற்கு முன் விண்ணப்பம் செய்து நீட்டிக்கலாம் நமது தூதரகம் உதவும் என்றும் சொல்லியிருந்தார்.

ஒரு நாடு தனது நிலப்பரப்புக்குள் வரும் நபர்களுக்குப் பல்வேறு வகையான விசா அனுமதிகளை வழங்குகிறது. பொதுவாக குறுகிய, நீண்ட கால அனுமதிகள் எனப் பிரித்து விடலாம். மூன்று மாத அனுமதிகளையும் ஓராண்டு அனுமதியையும் வழங்கும் நாடுகளே அதிகம். அப்படி வழங்கும் அனுமதிகளில் ஒரு தடவை மட்டுமே வந்து போகும் அனுமதி, பல தடவை வந்து போகும் அனுமதி என இரண்டு வகை உண்டு. நாம் நமது தேவையின் அடிப்படையில் இவ்வகை அனுமதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். சுற்றுலா அனுமதிகள் எப்போதும் மூன்றுமாத கால அனுமதிகள் தான். அப்படி வருபவர்கள் சொந்தப் பொறுப்பில் போவதாகச் சொல்லி வாங்கலாம்.

நாம் செல்ல விரும்பும் நாட்டுக்கான பயணச் சீட்டு, அங்கே செலவழிப்பதற்குத் தேவையான வங்கி இருப்பு, தங்கும் இட ஏற்பாடு ஆகியவற்றைக் காட்டி விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். உலக அளவில் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும் முகவர்கள் உதவியால் இதனைப் பெற்று விட முடியும். இதற்குப் பதிலாக நாம் செல்ல விரும்பும் நாட்டில் இருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்களின் அழைப்பின்பேரில் சுற்றுலா அனுமதி பெறலாம். அதன் போது வங்கி இருப்பு, தங்குமிடம் காட்ட வேண்டியதில்லை. பயணச்சீட்டை மட்டும் காட்டினால் போதும். அதற்கான அனுமதியைத் தருவார்கள். போகும் தேதியும் வரும் தேதியும் குறிப்பிட்டிருந்தால் அந்தக் கால கட்டத்திற்கு மட்டுமே அனுமதி தருவார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் பல நாடுகளைச் சுற்றிப் பார்க்க விரும்பினால் ஏதாவது ஒரு நாட்டின் அனுமதியை வாங்கினால் போதும். செங்கண் விசா என்று பெயர் அதனை வைத்துக் கொண்டு எல்லா நாடுகளையும் சுற்றிப் பார்த்து விடலாம். இங்கிலாந்து மட்டும் செங்கண் விசாவை அனுமதிப்பதில்லை. தனியாக அதற்கொரு விசா அனுமதி பெற வேண்டும்.

சுற்றுலா அனுமதியாக இல்லாமல் வேலை செய்யச் செல்லும் நபர்களுக்கும் மூன்றுமாத கால அல்லது ஆறுமாத கால விசாக்களை ஐரோப்பிய நாடுகள் வழங்குகின்றன. அந்த நாட்டில் இருக்கும் நிறுவனம் வழங்கும் வேலை உத்தரவாதத்தின் பேரில் கிடைக்கும் இந்த அனுமதியை வைத்துக் கொண்டு அந்த நாட்டில் இறங்கியவுடன் அடுத்த கட்டப் பணிகளைத் தொடங்க வேண்டும். எத்தனை ஆண்டுகாலம் அந்த நாட்டில் வேலை என்ற உத்தரவாத ஒப்பந்தப் பத்திரம் அதற்கு முதலில் தேவை. அந்தப் பத்திரத்தில் உங்களுக்கு வழங்கப்படும் சம்பளம், வருமானவரியைப் பிடித்து அரசுக்குச் செலுத்துவோம் என்ற உத்தரவாதம், உங்களுக்கான மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான காப்பீடுகளுக்கு உறுதி இருக்க வேண்டும். அதனைப் பெற்றுக் கொண்டு குடியிருப்புச் சான்றிதழை அடுத்துப் பெற வேண்டும். வேலைக்காகச் செல்பவர்கள் போனவுடன் வாடகைக்கு வீடு பார்த்துக் குடியேறிவிட்டால் உடனடியாக உங்களைப் பற்றிய தகவல் அந்த நாட்டில் அரசாங்கத்தின் பதிவுகளுக்குச் சென்று விடும். 

குடியிருப்பின் உரிமையாளருக்கும் உங்களுக்குமான ஒப்பந்தத்தின் நகலைப் பல நேரங்களில் உங்களைக் குடியமர்த்திய வீட்டின் உரிமையாளர் அல்லது சமூக அறக்கட்டளைகளின் நிர்வாகிகள் ”இந்த எண் வீட்டில் இவர் இருக்கிறார்” என்பதைத் தெரிவித்து அந்தந்த மாவட்டப் பதிவேடுகளில் பதிந்து விடுவார்கள். பதிந்து ஒரு பத்திரத்தையும் வாங்கித் தந்துவிடுவார்கள். இது தற்காலிக இருப்பிடச் சான்றிதழ். இதனையும் பணி ஒப்பந்தப் பத்திரத்தையும் அந்த நாட்டின் குடியமர்வுத்துறையிடம் அளிக்க வேண்டும். அளிக்கும் போது நான்கு அல்லது ஆறு என அந்தந்த நாட்டின் விருப்பங்களுக்கேற்ப நிழற்படங்களையும் அளிக்க வேண்டும். நிழற்படங்களின் அளவிலும் செலுத்த வேண்டிய தொகையின் அளவிலும் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபாடுகள் உண்டு. இவையெல்லாம் சரியாக இருக்கிறது என ஏற்றுக் கொண்டு வாங்கினாலும் 45 நாட்கள் அல்லது 60 நாட்கள் கழித்துத்தான் நமக்கான நிரந்தரக் குடியிருப்பு அட்டையை வழங்குவார்கள். நிரந்தரம் என்றால் நாட்டின் குடியுரிமை அல்ல; வேலை செய்யப் போகும் காலத்திற்கான குடியிருப்பு உரிமை மட்டுமே. இந்தக் காலத்தில் நாம் தரும் அனைத்துத் தகவல்களும் உண்மையா என்ற சோதனைகளை அந்த அரசாங்கத்தின் காவல் துறை, வேலை வழங்கும் துறை போன்றவற்றின் மூலம் மேற்கொள்வார்கள். அதன் பின்பு வழங்கப்படும் குடியிருப்பு அட்டைகள் உங்களுக்கு ஒருவிதப் பாதுகாப்பு உணர்வைத் தரும்.


புது டெல்லியில் இருக்கும் போலந்து தூதரகம் எனக்கு வழங்கியிருந்த ஓராண்டு விசா அனுமதி முடிந்த பின்பு இந்தப் பத்திரங்கள் அனைத்தையும் அளித்தே இரண்டாம் ஆண்டுக்கான தங்கும் அனுமதியைப் போலந்து அரசிடமிருந்து பெற்றேன். இதனைப் பெறுவதில் என்னைப் போன்றவர்களுக்கு வந்துள்ளவர்களுக்கு அதிகம் சோதனைகள் இருப்பதில்லை. தனியார் நிறுவனங்களில் வேலை செய்யத் தேர்வு செய்யப் பெற்று அனுப்பப்படுகிறவர்களுக்கும் கூடப் பெரிய அளவில் சிக்கல்கள் இருக்காது. சொந்தப் பொறுப்பில் வந்து பிறகு வேலை தேடிக் கொள்ளும் நபர்கள் அல்லது வியாபாரம் செய்யும் நபர்கள் சந்திக்கும் சிக்கல்கள் தான் அதிகமானவை. அந்தந்த நாட்டின் மொழி தெரியாது என்கிற நிலையில் இன்னும் சிக்கல்கள் அதிகமாகி விடும்.”எனக்கு நல்ல ஆங்கிலம் தெரியும்; அதனால் எல்லாவற்றையும் நானே முடித்து விடுவேன்” என நினைத்துக் கொள்ள முடியாது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலம் செல்லுபடியாகாது. எல்லாப் படிவங்களும் அந்தந்த தேசத்தின் மொழிகளில் தான் இருக்கின்றன. நமக்கு உதவும் நபர்களின் வழியாகவே நிரப்பிடவும் அரசுப் பணியாளர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும்.
 

எனக்குப் பல நேரங்களில் எனது மாணவிகள் தான் உதவி செய்தார்கள். வங்கிக் கணக்கு தொடங்குதல், நீண்ட பயண அட்டை வாங்குதல், அதனை நீட்டித்தல், குடியிருப்புப் பதிவு, வருமான வரி செலுத்துதல் எனப் பலவற்றிற்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கதவுகளைத் தள்ளிக்கொண்டு போக வேண்டும். இங்கு தட்ட வேண்டியதில்லை. பல இடங்களில் தானியங்கிக் கதவுகள் என்பதால் நாம் போய்ப் பக்கத்தில் நின்றால் போதும் கதவுகள் தானாகத் திறந்து வழி விடும். உள்ளே போனவுடன் போல்ஸ்கி பேச வேண்டும். திறந்த கதவைத் தட்டுவேன் அப்போதெல்லாம் என் மாணவிகள் உடன் வருவார்கள்.. பிறகு கையொப்பம் இடுவேன். மற்றபடி எல்லாம் அவர்கள் தான் பேசுவார்கள். என்னிடம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசிவிட்டு அங்கிருக்கும் நபர்களிடம் போல்ஸ்கியில் பேசுவார்கள்.

 நமது வார்த்தைகள் இன்னொரு மொழியின் வார்த்தைகளாக மாற்றப்படும் போது உருவாக்கும் உடல் மொழியையும் முகபாவனைகளையும் ரசிப்பேன். அதனை ரசிக்கும்போது ரசிக்கப்படுவது நமது மொழியின் சொற்கள் தந்த அர்த்தமா? பேசப்படும் போல்ஸ்கி மொழியின் ஏற்ற இறக்கமா? பேசும் மனித உயிரியின் முகபாவனைகளா? நான் பேசும்போது இவ்வளவு உடல் மொழியை வெளிப் படுத்தவில்லையே என நினைத்துக் கொள்வேன். மனிதனின் கண்டுபிடிப்பில் அதியற்புதமான கண்டுபிடிப்பு மொழி தான் என்பதைத் திரும்பவும் உறுதி செய்யும் தருணங்கள் அவை.
 


ஒரு தடவை மாணவி காஸ்யாவுடன் பணத்தை இந்தியாவுக்கு மாற்றுவதற்காகப் பல்கலைக்கழகத்திற்குப் பக்கத்தில் இருக்கும் சிட்டி வங்கியின் கிளைக்குப் போனேன். நான் தமிழில் சொல்ல அவள் அங்கிருந்த வங்கி அதிகாரியான பெண்ணிடம் போல்ஸ்கியில் சொன்னாள். நான் இரண்டு மூன்று வாக்கியங்களில் சொன்னதை காஸ்யா ஓரிரண்டு வார்த்தைகளில் சொன்னாள். எல்லாவற்றையும் சொன்னீர்களா என்று திரும்பவும் கேட்டேன். அந்தப் பெண் காஸ்யாவிடம் ‘என்ன?’ என்று கேட்க காஸ்யா, எனது சந்தேகத்தை சொன்னாள். இருவரும் சிரிப்பதை நான் வேடிக்கை தான் பார்க்க முடிந்தது. அந்த சிரிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. உடனே அதையும் சொல்லி விட்டுச் சிரித்தேன். காஸ்யா அப்படியே மொழி பெயர்த்துச் சொல்ல மூவரும் ஒன்றாகச் சிரித்துக் கொண்டோம்.

நான் குடியிருக்கும் ஜி.601,சாக்ரட்டஸ், 02-678, வார்சாவா, உள் சிம்ஸிகோவா,9., என்பதை அந்த இடம் இருக்கும் மொகட்டோ மாவட்டப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய இந்திய தூதரகத்தில் பணியில் இருக்கும் போலந்துப் பெண் யோலா எனக்குத் துணையாக வந்தார். செய்ய வேண்டிய பணியின் தன்மையை அறிந்தவர் என்பதால் தேவையான படிவங்களை எடுத்தார்; நிரப்பினார்; கையொப்பம் பெற்றார்; இரண்டு நிமிடம் காத்திருக்க ரசீது பெற்றுத் தந்து விட்டார். தூதரகத்தின் அருகில் இருக்கும் அந்த அலுவலகத்திற்கு நடந்து போய்வர இருபது நிமிடம். அந்த அலுவலகத்தில் நாங்கள் இருந்தது 10 நிமிடம் தான். அதில் 5 நிமிடம் எனது வரிசை எண் வருவதற்கான காத்திருப்பு. அலுவலகப் பணிகளை இவ்வளவு விரைவாக முடிக்க முடியும் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இந்தியாவில் எனது குடிமை அட்டையைப் புதுப்பிக்கவும், பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் எனது தொலைபேசி எண்ணை இரண்டு ஆண்டுகள் பாதுகாத்து வைக்கவும் அலைந்த அலைச்சல்கள் நினைவில் வந்தன.

ஐரோப்பிய நாடுகளின் அரசு அலுவலகங்களில் வெளிநாட்டுப் பணியாளர்களுடன் தொடர்பு கொள்ள ஒரு பொதுமொழியும் குடியேற்ற நாட்டு மொழியும் தெரிந்தவர்களின் உதவியால் தான் எந்தப் பணிகளையும் நிறைவேற்ற முடியும். அதே போல வெளிநாட்டிலிருந்து வந்து அங்கு வேலை செய்பவர்கள் பணமாற்றச் சிக்கல்களையும் சந்திக்க வேண்டியதிருக்கும். நாம் வேலை பார்க்கும் நிறுவனம் அந்த நாட்டுப் பணத்தைச் சம்பளமாகத் தந்தால் செலவழிப்பதில் சிக்கல் இல்லை. பணத்தை ஊருக்கு அனுப்புவது அல்லது எடுத்து வருவது போன்ற நேரங்களில் மாற்றிக் கொள்ளலாம். அதற்கு மாறாக டாலர் அல்லது யூரோவில் சம்பளம் பெறும் அந்நியர்கள் அந்தந்த நாட்டுப் பணத்திற்கு மாற்றிக் கொண்டுதான் செலவழிக்க வேண்டும். அந்தப் பரிவர்த்தனை எல்லா இடத்திலும் ஒன்று போல இருப்பதில்லை. பணப் பரிமாற்றமே ஒரு வியாபாரம் போல நடக்கிறது. 

வார்சாவில் கோந்தர் என்ற சொல்லால் அழைக்கப்படும் பணப்பரிமாற்றக் கடைகள் எங்கு பார்த்தாலும் இருக்கும். அதில் நம் கைவசம் இருக்கும் பணத்தைக் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். இந்திய ரூபாயைக் கொடுத்தால் வாங்க மாட்டார்கள். அமெரிக்க டாலர், யூரோ, இங்கிலாந்தின் பவுண்டு போன்றன உடனே பெற்றுக் கொள்ளப்படுகின்றன. சைனா, ஜப்பான் போன்ற நாடுகளின் பணம் கூட நேரடிப் பரிவர்த்தனையில் மாற்றப்படுகின்றன. ஒரு நாட்டில் குடியிருக்கும் அந்நிய நாட்டு மக்களின் எண்ணிக்கையும் சம்பாதிக்கும் பணமும் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன.


அந்நிய நாட்டில் குடியேற்றம் மற்றும் இருப்பிடம் சார்ந்த பிரச்சினைகளை அடுத்துத் தெரிந்து கொள்ள வேண்டியன போக்குவரத்து விதிகள். இவற்றுக்குப் பிறகு தான் உணவு, உடை மற்றும் பண்பாட்டுப் பிரச்சினைகளில் கவனம் கொள்ள நேரிடும்.. அயல் நாட்டில் இருக்கிறேன் என்ற தன்னுணர்வோடு அந்நியனாக இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்வதற்கு அந்த நாட்டின் அடிப்படை விதிகளை முதலில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டு விதிகளுக்கும் நாம் வந்துள்ள நாட்டு விதிகளுக்கும் வேறுபாடுகள் இருந்தால் கட்டாயம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். போக்குவரத்து விதிகள் பெரும்பாலும் வாகனங்களில் செல்பவர்களுக்கானவை என்ற நினைப்பில் தான் இந்தியர்கள் வாழ்கிறார்கள். இங்கு வந்த பிறகுதான் நடந்து செல்பவர்களுக்கும் விதிகள் தெரிந்திருக்க வேண்டும் என்பதும், கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதையும் உணர முடிந்தது.
 
இந்தியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமான சாலை விதிகளில் முக்கியமான வேறுபாடு இடம் -வலம் மாறுபாடு. சாலையின் இடதுபுறமாகச் செல்லவும் எனச் சொல்லிப் பயிற்சி அளிக்கப்பட்ட நாம் இங்கே அதை முதலில் விட்டு விட வேண்டும். சாலைகளின் வலதுபுறம் நமக்கானவை என்பது ஐரோப்பிய நாடுகளில் மிக முக்கியமான வேறுபாடு. பிரிட்டானியர்கள் ஆண்ட நாடுகளில் பின்பற்றப்படும் இடதுசாரிப் பயணம் மற்ற ஐரோப்பிய நாடுகளில் செல்லுபடியாகாது. வாகன ஓட்டிகளின் இருக்கைகள் இடது புறத்தில் இருக்கும். நடந்தே செல்பவர்களாக இருந்தாலும் வாகனத்தில் சென்றாலும் வலது பக்கமாகத் தான் செல்ல வேண்டும். வாகனங்கள் மோதினால் உயிருக்கு ஆபத்து. நபர்கள் மோதினால் உயிருக்கு ஆபத்தில்லை என்பது மட்டும் தான் வித்தியாசம்.

நான் குடியிருக்கும் வீட்டிற்குப் பக்கத்தில் தனித்தனிப் பொருட்களுக்கான கடைகள் நிரம்பிய சந்தை ஒன்று உண்டு. நகல் எடுக்கும் கடை, பூட்டு கடை, பல்பு கடை, பேட்டரிகள் கடை, எண்ணெய் அல்லது தோலில் தடவும் குளம்புகள் கடை ஜட்டிகள், பனியன்கள், மார்புக் கச்சைகள் என உள்ளாடைகள் ஒவ்வொன்றுக்குமான கடை, நாய் பூனை, மனிதர்களுக்கான ரொட்டிக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்களான கத்திகள், மிதியடிகள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கடைகள் கொண்ட அந்தச் சந்தை பல திருப்பங்கள் கொண்டது. பத்து கடைகளுக்கு ஒரு திருப்பம் எனத் திரும்பிக் கொண்டே இருக்கும். உள்ளே நுழைந்து திரும்பித் திரும்பிப் பொய்க்கொண்டே இருந்தால் திசைக்குழப்பம் ஏற்பட்டு விடும். அந்த சந்தைக்குள் வலது புறம் மட்டும் நடக்காமல் விருப்பபடி நடந்தால் எதிரே வருபவர்கள் மீது கட்டாயம் மோதவே செய்வோம். 

இந்தச் சந்தைக்குள் நாலைந்து மோதல்களுக்குப் பிறகு தான் வலதுசாரியாக மாறினேன் அப்படி மோதும் போது ஆண்களும் ஆண்களும் மோதாமல் பால் மாறி மோதினால் சிக்கல் தான். இளைஞர்களுக்குள் மோதல் ஏற்பட்டால் காதலாக மாறுவதெல்லாம் தமிழ் சினிமாவின் காட்சிகளாக இருக்கலாம். மோதிக் கொண்டதும் இறக்கை கட்டிப் பறக்கும் நினைவுகளுக்குப் பதிலாகக் கிடைக்கும் கோபப்பார்வைக்குப் பலதடவை மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இங்கு ஓடும் பெரும் வாகனங்களான பேருந்துகள், டிராம்கள், மெட்ரோக்கள் போன்றவற்றில் வளர்ப்புப் பிராணிகளான நாய்களையும் பூனைகளையும் எடுத்துச் செல்லலாம். நீங்கள் வைத்திருக்கும் சாமான்களை உள்ளே ஏற்ற முடிந்தால் அதற்கெனக் கட்டணம் வாங்க வேண்டியதில்லை. ஆனால் பொருட்களை வைப்பதற்கென இருக்கும் இடத்தில் தவிர வேறிடத்தில் வைக்க முடியாது. மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் நுழையக் கூடிய வாசல்கள் பெரும் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாதவை. தானியங்கி மூடிகள் கொண்ட. அவை பயணிகள் மட்டும் நுழையக்கூடிய வாசல்களாகவே அவை இருக்கும்.

ஐரோப்பிய நகரங்களின் சாலைகள் அகலமானவை. பெருநகரங்களின் பெரும் சாலைகள் எட்டுப் பாதைகள், பத்து வழிகள் என வசதிகள் கொண்டவை. வார்சாவில் இருக்கும் ஐந்து முக்கிய பாதைகளின் ஓரத்திலேயே டிராம் வண்டிகளுக்கான தடங்களும் இணையாகச் செல்கின்றன. இதில் இறங்கி அதில் ஏறிக் கொள்ளலாம். பெட்ரோல் போன்ற எரிசக்தியால் ஓடக்கூடிய சின்ன கார்கள், பெரிய கார்கள், பேருந்துகள், இரண்டு சக்கர வாகனங்கள் என ஒவ்வொன்றுக்குமான கோடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. வாகனங்களுக்கான சாலைகளிலிருந்து கொஞ்சம் மேடான பாதைகள் நடப்பவர்களுக்கும் மிதிவண்டி ஓட்டிகளுக்குமானவை. அந்தத் தளமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட சிமெண்ட் ஓடுகள் பதிக்கப் பட்டவை மிதி வண்டிகளின் வேகப் பயணத்திற்கு. நிறமற்ற பாதைகள் நடப்பவர்களுக்கு. குழந்தைகளைச் சுமந்து வரும் தள்ளுவண்டிகளும் நடைபாதைகளில் தான் வரும். 

எல்லாச் சாலைகளிலும் வெள்ளைக் கோடுகளும் மஞ்சள் கோடுகளும் இருக்கின்றன. மஞ்சள் கோடுகள் இட வலம் பிரித்துக் காட்டுபவை. தாண்டக்கூடாதவை. வெள்ளைக்கோடுகள் வாகனங்களின் வகைகளுக்கானவை. கொஞ்சம் விலகலாம். நடப்பவர்களுக்கான கோடுகள் வெள்ளை வரிக்கோடுகள், பல சாலைகள் சந்திக்கும் முனையங்களிலும் நாற்சந்திகளிலும் முச்சந்திகளிலும் வெள்ளை வரிக்கோடுகளில் மட்டுமே நடக்க வேண்டும். நீண்டு கொண்டிருக்கும் சாலையின் குறுக்கே கூட வரிக்கோடுகள் இருக்கும். வாகனங்கள் வரவில்லையென்பதை உறுதி செய்து கொள்வதோடு, அதன் பக்கத்தில் இருக்கும் கம்பத்தில் கை அடையாளம் இட்ட கருவிகளின் மீது கை வைத்து அழுத்தி விட்டுப் போகலாம். வரும் வாகனம் நின்று நிதானமாக வழிவிட்டுப் பின் நகரும். எல்லாச் சாலைகளின் ஓரத்திலும் நடைபாதைகளும் மிதிவண்டிகளுக்கான வசதிகளும் இருப்பதில்லை. ஏதாவது குறிப்பிட்ட இடத்தில் இவ்விரண்டிற்கும் மாற்றுப் பாதைகள் ஏற்படுத்தி அங்கு திருப்பி விடப்பட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.
 


குடியேற்ற விதிகளும் சாலைவிதிகளும் பல நேரங்களில் ஒன்றோடொன்று தொடர்புடையனவாக இருக்கின்றன. போக்கு வரத்து விதிகளை அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். போலந்து நாட்டில் இரண்டு ஆண்டுகள் வாழ வேண்டிய கட்டாயத்தில் வந்திருக்கும் நான் அந்த நாட்டைப் பற்றிய பழைய வரலாற்றைத் தெரிந்து கொண்ட அளவுக்கு நிகழ்கால இருப்பைத் தெரிந்து கொள்ளாமல் வந்திருக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டு ஒவ்வொன்றாகச் சரி செய்யத் தொடங்கினேன். பயணம் செய்யும்போது ஒவ்வொருவரும் பயணச் சீட்டு அல்லது சலுகைவிலைப் பயண அனுமதி அட்டையுடன் ஒவ்வொருவருக்கும் அரசு வழங்கியிருக்கும் குடிமை அட்டையின் நகலையும் வைத்திருக்கிறார்கள். அது இல்லாத வெளிநாட்டவர்கள் விசா அனுமதியை வைத்திருக்க வேண்டும். பயணச் சீட்டு இல்லையென்றாலோ, தவறியிருந்தாலோ அந்த அட்டை தான் முக்கியம். 

அதில் உள்ள எண்ணைக் குறிப்பிட்டே தண்டத் தொகைக்கான ரசீதை வழங்குகிறார்கள். கையில் பணம் இல்லை என்றால் அந்த எண்ணுக்கான ரசீதைப் பின்னர் காட்டிப் பணத்தைச் செலுத்தலாம். செலுத்தாமல் தப்பித்து விடுவது அவ்வளவு சுலபமல்ல. காரணம் தண்டத்தொகைக்கான ரசீதில் குடிமை அட்டையில் உள்ள எண் கையால் எழுதப்படுவதில்லை. கணிணி வழியாகப் பதிவு செய்யப்படுகிறது. ரசீதில்லாமல் தண்டம் வசூலிக்கப்படுவதில்லை; தருவதும் இல்லை. நான் வந்திருப்பது இரண்டு ஆண்டுகள் போலந்தில் தங்கியிருக்க. ஓராண்டுக்குப் பின் தான் எனது இருப்பின் நிலையையும் இயங்கும் முறைகளையும் புரிந்து கொண்டவனாக ஆகியிருக்கிறேன்

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
விரிவான தகவலை பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்