உலகமயம் குறித்த முதல் விவாதம்: எதிரெதிர்த்திசைகளில்...
விஜய் தொலைக்காட்சி அலைவரிசையின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா.? நானா..? அத்துடன் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இடம் பெறும் விவாத நிகழ்ச்சிகளில் முதல் இடத்தில் இருக்கும் நிகழ்ச்சி என்றும் ஊடகக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.சமூகத்தின் பல தரப்பட்ட மனிதர்களும் பங்கேற்க வாய்ப்பளிக்கும் தன்மையுடன் கூடிய பாவனை அதற்கு உண்டு. அத்துடன், சமூகத்தின் பொதுப்புத்திக்குள் உறையும் பல்வேறு கருத்துக்களை சரி அல்லது தவறு என எதிரெதிராக அணி பிரித்து நிறுத்தி வைத்து விவாதங்களை நடத்தி இறுதியில் ஒரு தீர்வைச் சொல்லி விடும் தொலைக்காட்சிப் பட்டிமன்றங்கள் போன்றதல்ல என்பதுதான் அதன் பலம்.
தீர்ப்பளிக்கும் பட்டி மன்ற நடுவரின் இடத்தைத் தேர்வு செய்து கொள்ளாமல் பங்கேற்ற இருசாராரின் கருத்துக்களைத் தொகுத்துச் சொல்வதும், எங்காவது ஓரிடத்தில் தங்கி விடும் ஆபத்து நகரும்போது முன் நகர்த்தும் வினாவை நிகழ்ச்சியின் இயக்குநர் ஆண்டனியிடமிருந்து பெற்று லாவகமாக நகர்த்திச் செல்வதும் மட்டுமே தனது வேலை எனச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கும் கோபிநாத் அந்நிகழ்ச்சியை நடத்துவது இன்னொரு சாதகம். அத்தோடு விவாதிக்கப்படும் பொருள் சார்ந்து புலமை பெற்ற ஒரு சிலரையாவது இரண்டு பக்கமும் அமரச் செய்ய வேண்டும் எனத் தேடித் தேடிக் கண்டுபிடிக்கும் உதவி இயக்குநர்களின் பங்களிப்பும் அதற்குள் செயல்படுகிறது என்பதும் உண்மை.
நீயா.. நானா.. நிகழ்ச்சியைப் பற்றி இவ்வளவு தூரம் சொல்வதற்குக் காரணம், இதற்கு முன்பு மூன்று தடவை நான் அதில் பங்கேற்றிருக்கிறேன் என்பதுதான். ஒவ்வொரு தடவையும் அங்கே நடப்பதைக் கவனிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மூன்று தடவை பங்கேற்ற போதிலும் கடைசியாகப் பங்கேற்ற நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டு இங்கே பேச விரும்புகிறேன். காரணம் விவாதிக்கப் பட்ட பொருளும் விவாதிக்கப்பட்ட நாளும் முக்கியமானவை.
சுதந்திர தினச் சிறப்பு நிகழ்ச்சிகளுள் ஒன்றாகப் புதிய அரங்கில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நீயா..? நானா?வில் (2010,ஆகஸ்டு,15) ‘உலக மயப் பொருளாதாரம் இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள சாதகங்கள் – பாதங்கள்’ என அணி பிரித்து விவாதம் நடைபெற்றது. அதில் நான் ‘பாதகங்களே அதிகம்’ என்ற பக்கம் இருந்தேன்.
பாதகங்கள் அல்லது சாதகங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்பதாக விவாதிக்க வேண்டும் என்று அதன் அமைப்பாளர்கள் சொல்லியிருந்தால் நான் நிச்சயம் கலந்து கொண்டிருக்க மாட்டேன். எதையும் தடுத்து விடும் நோக்கம் கொண்ட விவாதங்களில் பங்கேற்பதை அண்மைக்காலங்களில் தவிர்த்து வருகிறேன். ஏனென்றால் இப்படி விவாதித்து முடிவு கட்டுவது - ஜனநாயக சமூகத்தில் நடக்கக் கூடாது என்ற எண்ணம் இப்போதெல்லாம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. காரணம் தமிழ்நாட்டில் மொழிகளுக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் என்னுடைய தலைமுறைத் தமிழர்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று விட்டது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளேன். இனி உலகமயமாதலுக்குள் நுழைவோம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பொருளாதாரமும், அதனைக் கட்டுப்படுத்திய அரசாங்க நடைமுறைகளும், நிர்வாகம் செய்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழியர்கள், பயன் அடைந்த மக்கள் என அனைவரிடமும் ஒருவித தேக்கமும், அதிருப்தியும் ஏற்பட்ட நிலையில் தோன்றிய மாற்று முயற்சி தான் திறந்த பொருளாதார நடைமுறை என்பதை நாமறிவோம். திறந்த பொருளாதார முறைக்கு முன்பிருந்த கட்டுப்படுத்தப் பட்ட பொருளாதார முறையில் விளைந்த நன்மைகளை விடத் தீமைகளும் தடைகளும் தான் அதிகம் எனப் பொருளாதார வல்லுநர்களும் புதிய சிந்தனையாளர்களும் எழுதினார்கள்; பேசினார்கள்.
இதனை மறுத்துப் பேசிய - எழுதிய சிந்தனையாளர்களும், அரசியல்வாதிகளில் ஒருசாராரும் -குறிப்பாக இடதுசாரிகளும் தங்கள் கருத்துக்களை வலுவாகச் சொல்லி மக்களை நம்பச் செய்ய முடியாமல் தவித்த நிலையில் தான் திறந்த நிலைப் பொருளாதாரம், இந்திய அரசின் மையக் கொள்கையாக மாறியது. அத்தோடு உலக அளவில் சோசலிசக் கட்டுமானங்கள் கொண்டிருந்த ரஷ்யா, போலந்து போன்ற நாடுகளில் ஏற்பட்ட பின்னடைவுகளும், அதனை உலக ஊடகங்களும், தேசிய ஊடகங்களும் ஊதிப் பெருக்கிய விதமும் பெரும்பான்மை மக்களைத் திசை மாறச் செய்தன. அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்களின் ஏற்புக்கு முக்கியமான பங்கு உள்ளது என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். பெரும்பான்மையின் கருத்து தவறானது என நினைக்கும் தனிநபர்களும் இயக்கங்களும் தங்களின் சரியான கருத்தைப் பெரும்பான்மையின் கருத்தாக மாற்றும் முயற்சியில் இறங்கி வேலை செய்ய வேண்டுமே ஒழிய, இந்த மக்கள் புரிந்து கொள்ளும் ஞானம் இல்லாதவர்கள்; எனவே அவர்களுக்குத் தேவையான கருத்தைத் திணிப்பதே சரியானது என நினைப்பது தன்னகங்காரத்தின் - பாசிசத்தின்- வெளிப்பாடு. அதன் பக்கம் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் நிற்க முடியாது.
உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என வெவ்வேறு பெயர்களில் அறிமுகமாகிப் பரவிக்கொண்டிருக்கும் திறந்தநிலைப் பொருளாதாரம் இந்தியப் பரப்பில் ஏற்படுத்தியிருக்கும் சாதகங்களும் பாதகங்களும் எத்தகையன என்று விவாதிக்க வேண்டிய தருணம் இதுதான். தரப்பட்ட கால அவகாசம் போதுமானது என்றே கருதலாம்.இருபதாண்டுகளுக்கு முன்பு பெரும்பான்மை மக்களின் ஏற்புடன் நுழைந்த அல்லது நுழைக்கப் பட்ட திறந்த நிலைப் பொருளாதாரம் அதன் சாத்தியங்களைப் பலவிதமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனைப் பெருநகரங்களில் முழுமையாகவும், சிறுநகரங்களில் ஒன்றுக்குப் பாதியாகவும் காணலாம். வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும் எதாவது ஒரு ரூபத்தில் தனது அடையாளத்தைக் கிராமங்கள் அளவிற்கும் கொண்டு போய்விட்டது உலகமயம்.
விஜய் தொலைக்காட்சியின் நீயா.. ? நானா..? வில் நடக்கும் விவாதங்களில் எப்போதும் நடக்கும் போக்கு இந்த விவாதத்திலும் இருந்தது. குறிப்பான ஏதாவது ஒரு அம்சத்தைப் பெரிது படுத்தி குறைகளை அடுக்கி - உதாரணங்களை வரிசைப்படுத்தி- இப்படிப் பட்ட நிலை தேவையா எனக் கேள்வி கேட்பார்கள். அல்லது அதன் சாதகமான ஒரு அம்சத்தை விளக்கி அதன் விளைவுகளைப் பட்டியலிட்டுக் காட்டி இவையெல்லாம் வேண்டாமா? எனக் கேட்பார்கள். எதையும் எதிரும் புதிருமாக விவாதிக்க வேண்டும் என்ற நிலை வந்தால் அப்படித் தான் விவாதிக்க நேரும்; அதனைப் பெருமளவு தவிர்க்க முடியாது.
ஆனால் பொதுநிலைப் பட்ட விவாதம் என்பது இப்படி விவாதிப்பதல்ல. விவாதப் பொருளை ஒரு முழுமைக் கோணத்தில் பார்ப்பது தான் சரியான விவாதமாக அமையும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் பார்த்ததின் விளைவாகவே நான் உலகமயம் உண்டாக்கிய விளைவுகளில் சாதகங்களை விடப் பாதகங்களே அதிகம் என்பதின் பக்கம் அமர நேர்ந்தது. மற்றபடி நான் உலகமயத்தைக் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் நபர் அல்ல. அந்நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு என்னிடம் விவாதிக்க வந்த பலபேரிடம் இப்படித்தான் நான் சொல்ல முடிந்தது.
உலகமயப் பொருளாதாரம் சாதகமான ஒன்று எனச் சொன்னவர்கள் கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியைப் பட்டியலிட்டுக் காட்டியும், தனிநபர் வாழ்க்கை வசதிகள் கூடியுள்ளது எனச் சொன்னதையும் இங்கே நினைவுபடுத்திக் கொண்டால் நான் சொல்வது புரியவரலாம். இன்று சில பிரிவுகளில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் தங்கள் பணியைச் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. அரசின் தேர்வு வாரியங்களும் கூட இன்னும் சில ஆண்டுகளில் தேவையில்லாமல் போய்விடக் கூடும். ஏனென்றால் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் வேலைவாய்ப்புக் கண்காட்சிகளை நடத்திக் காட்டித்தான் மாணவர்களைத் தங்கள் நிறுவனத்தின் பால் ஈர்த்துக் கொண்டிருக்கின்றன.
உலகமயப் பொருளாதாரம் சில புதிய துறைகளில் அதிகப் படியான வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதற்கென உருவாக்கப்பட்ட நபர்களுக்கு எளிதில் கிடைக்கும் படி செய்கிறது என்பதை மறுக்க முடியாது. மின்னணுவியல் சார்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு, சொகுசு வாழ்க்கைக்குத் தேவையான் ஆடம்பரப் பொருட்கள் தயாரிப்பு போன்றன வளர்ந்துள்ளன, தகவல் தொழில் நுட்பம், தொடர்பியல்துறை, நுகர்வோர் வணிகம் ஆகிய ஏராளமான இளைஞர்களுக்கும் , யுவதிகளுக்கும் வேலை வாய்ப்பை வழங்குவதோடு கூடுதலான சம்பளத்தையும் வழங்கு அவர்களை நுகர்வுக் கலாசாரத்தின் பங்காளிகளாகவும் ஆக்கி விட்டது.
இதன் அடுத்த கட்டத்தை அரசியல் கட்சிகள் எடுத்துக் கொண்டு விட்டன. மக்களிடம் தங்கள் அரசியல், பொருளாதார, சமூகக் கொள்கைகளைப் பேசுவதற்காகத் தெருமுனைப் போராட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள், மாநாடுகள் நடத்திக் கொண்டிருந்த அவை இப்போது வேலை வாய்ப்பு முகாம்களைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதன் மூலம் அந்தக் குடும்பத்தின் ஒட்டு மொத்த வாக்குகளையும் திருப்பி விட முடியும் என நம்புகின்றன.
நமது அரசுகள் - மைய, மாநில அரசுகள் இரண்டுமே- பெருந்தொழில் நிறுவனங்களுக்குச் சலுகைகள் வழங்கி அவற்றை வளர்த்த பின்னர் அவர்களிடமிருந்து வரிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் வாங்கி மக்கள் நலனுக்குப் பயன்படுத்த முடியும் என நம்புகின்றன. அந்த நம்பிக்கை ஓரளவு நிறைவேறவே செய்துள்ளது. பெருநகரங்களில் தொடங்கும் நான்குவழிச்சாலைகளும், அவற்றில் கட்டப்படும் பெரும்பாலங்களும் கிராமங்களுக்கும் போகின்றன. வண்ணத் தொலைக்காட்சிகளை விளிம்பு நிலை மக்களும் பார்க்கவே செய்கின்றனர். புது வகை ஆடைகளையும் கல்வியையும் அவர்கள் பெற்றுக் கொள்ளத் தடைகள் எதுவும் இல்லை. ஆனால் எப்படிப் பெறுவார்கள் என்று கேட்டால் உடனடியாகப் பதில் சொல்ல முடியாது.
நகரங்களை மையமிட்டுத் தொடங்கப்பட்ட புதுவகைக் கல்வி நிறுவனங்கள் விளிம்புகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. வகைவகையான பாடங்களை அவை அறிமுகப் படுத்துகின்றன. இவையெல்லாம் வியாபார உத்திகளின் நீட்சி எனக் குற்றம் சாட்டப்படும் வாய்ப்புகள் என்றாலும் அவை நடக்கின்றன. ‘வழிகளைப் பார்க்க வேண்டாம்; விளைவுகளைப் பாருங்கள் ’ என்று சொல்லும் அற மறுப்புவாதிகளின் பேச்சு என்றாலும் மாற்றங்கள் நடந்துள்ளன. மாற்றங்களே நடக்கவே இல்லை என்று வாதிட்டால் நான் உண்மையின் பக்கம் இல்லாதவன் என்பது உண்மையாகி விடும்.
மாற்றங்களும் வளர்ச்சியும் உலகமயப் பொருளாதாரத்திற்குப் பின் ஏற்பட்டுள்ளன என்றாலும் அவை எல்லாம் ஓர்மைப்பட்டனவாக இல்லை என்பதுதான் அடிப்படையான குற்றச்சாட்டு. ஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகையையும் ஒன்றாகக் கருதாமல் குறிப்பிட்ட வகை மனிதர்களை மட்டும் மேன்மைப் படுத்தும் ஒரு கொள்கையை ஏற்க முடியவில்லை என்பதால் தான் அதன் வெளிப்பாடுகள் பாதகமானவை என்று சொல்ல வைக்கிறது. இதையெல்லாம் விட எனக்கு உலகமயம் எல்லா வகையிலும் தோல்வியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்ல வலுவான ஒரு காரணம் இருக்கிறது. அதைத் தான் அந்த விவாதத்தின் கடைசியில் சொன்னேன்.
உலகம் தழுவிய நோக்கம், அமைப்பு, வாழ்க்கை முறை, சிந்தனைப் போக்கு என வளர்த்தெடுக்க வேண்டிய உலகமயப் பொருளாதாரம் இவை எல்லாவற்றிலும் எதிர்த் திசையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதை அதன் ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பதில் தவறு ஏதேனும் இருக்கிறதா?
உலக அரசுகளின் ஒரு கிளையாக இந்திய அரசும் இருக்கிறது; எனவே உலகத்தின் சட்டதிட்டங்களுக்கு இந்தியர்களும் கட்டுப் பட வேண்டும் எனப் பேசும் அதே நேரத்தில் நமது அரசு அமைப்பின் கடைக்கோடியான உள்ளாட்சி நிர்வாகங்களும் மாவட்ட நிர்வாகங்களும் எந்தவிதச் சுதந்திரமும் இல்லாமல் தனிநபர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிலை உருவாகிக் கொண்டிருப்பது நன்றா? தீதா?
இந்தக் கேள்வியின் தொடர்ச்சியாக இங்கே தோன்றிக் கொண்டிருக்கும் வட்டார ஆதிக்க மனோபாவமும் அதன் தொடர்ச்சியாகப் பழைய சாதிப்பெருமைகளின் வளர்ச்சியும் நன்றா? தீதா? இதற்கும் உலகமயப் பொருளாதாரத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லி விட முடியுமா?
நவீனத்துவ வரவின் மூலம் விடுதலை அடைந்தவர்களாகக் கருதிய பெண்கள், ஒடுக்கப்பட்ட குழுவினர், இடம் சார்ந்த சிறுபான்மைக்குழுவினர் தங்கள் விடுதலை உணர்வைத் தொலைத்து விட்டு அச்ச உணர்வில் வாழ நேர்ந்துள்ளதற்கும் உலகமயத்திற்கும் தொடர்பு இல்லையா?
அரசியல் தளத்தில் புதுவகைப் பண்பாடு எதுவும் நுழைந்து விடாமல் தடுக்கும் வாய்ப்பே உலகமயப் பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னும் தொடரும் என்றால் எதற்காக அதனை நாம் வரவேற்க வேண்டும்?
கல்வி, வேலைவாய்ப்பு, தங்களுடைய இருப்பைக் காட்டிக் கொள்ளத் தேவையான அடையாளங்களை உருவாக்குதல் போன்றவற்றை மறுப்பதாகப் பெரும்பான்மை மக்கள் நம்புவதாக மாறிப் போனால் உலகமயத்தின் பின் விளைவுகள் எத்தகைய ஆபத்தைச் சந்திக்கும் என்பதை உணரவேண்டியது அவசியமில்லையா?
இப்படிப் பல கேள்விகளை எழுப்பி நம் காலத்தை விசாரிக்கும் போது நன்மையும் தீமையும் எதுவெனப் புரியவரலாம். அதற்கான தூண்டுகோலை அந்த நிகழ்ச்சி வழங்கியது என்பதால் அதில் பங்கேற்றது மகிழ்ச்சி. அந்த வகையில் அது தீதன்று. ஆனால் அந்நிகழ்ச்சியைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை வழக்கமான எண்ணிக்கையை விடக் குறைவு என்ற உண்மையை ஏற்பாட்டாளர்கள் சொன்ன போது வருத்தமாக இருந்தது. அதன் எதிராக நிறுத்தப் பட்ட நிகழ்ச்சி அண்மையில் வந்த புதிய திரைப்படம் என்கிற உண்மையை நாம் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். அந்தத் திரைப்படம் போடப்பட்டதால் இதனைப் பார்க்கவில்லை என்றே பலரும் சொன்னார்கள்.
நன்மையும் தீமையும் தொலைக்காட்சிகள் வழியாகவே வழிந்து கொண்டிருக்கின்றன.
கருத்துகள்