இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்..

கல்வி கற்பதில் அதிக அக்கறை காட்டும் மக்கள் வாழும் மாவட்டங்கள் எவை?
இந்தக் கேள்விக்கு மூன்றாவது இடத்தை எந்த மாவட்டம் பிடிக்குமோ எனக்குத் தெரியாது.முதலிரண்டு இடங்கள் எவை என நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். முதல் இடம் தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரிக்குத் தான். இரண்டாவது இடத்தை அதனை யொட்டி இருக்கும் திருநெல்வேலி மாவட்டத்துக்குக் கொடுக்கலாம்.
கல்வியின் பயன் விழிப்புணர்வு;அதனை அடையச் செய்வதன் மூலம் இந்த மாவட்டங்களின் அறியாமையை நீக்க முடியும். எனத் திட்டமிட்டுக் கல்விச் சாலைகளைத் தொடங்கிய கிறித்தவப் பாதிரிகளின் கனவுகள் நிறைவேறும் பரப்பாக இம்மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த வரலாற்றுக் காரணத்தையும் தாண்டிக் கல்வியின் மீது இம்மாவட்டங்களின் மக்கள் கொண்டிருக்கும் ஆசைக்குப் பல காரணங்கள் உண்டு என்பதைக் கண்டுபிடித்தால் ஆச்சரியம் அடையாமல் இருக்க முடியாது.

கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட மக்கள் பள்ளிக் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றனர் எனக் கருத வேண்டியதில்லை. பள்ளிக் கல்விக்கீடாகவே கல்லூரிக் கல்வியையும் கருதுகின்றனர் என்பதைப் புள்ளி விவரங்களும் எண்ணிக்கைகளும் சொல்கின்றன. பரப்பளவில் மிகச் சிறிய மாவட்டமான குமரியின் மக்கள் தொகையையும் அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள் எண்ணிக்கையையும் பிற மாவட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரிய வரும்.

பள்ளிகள்,இம்மாவட்ட மக்களின் எண்ணிக்கைக்கேற்பத் தொடங்கப் பட்டுள்ளன. கல்லூரிகளும் அப்படித்தான். தொழில் கல்லூரிகளான பொறியியல் மற்றும் மருத்துவத் துறைசார் கல்லூரிகள் தேவைக்கு அதிகமாகவே உள்ளன.அரசு தொடங்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்காமல் அறக் கட்டளைகளும் தனிநபர்களும் போட்டி போட்டுக் கொண்டு கல்விச்சாலைகளைத் தொடங்கியுள்ளனர்; இப்போதும் தொடங்கு கின்றனர்.

அன்ன சத்திரம் ஆயிரம் வைப்பதைவிடவும், ஆலயம் பதினாயிரம் நாட்டு தலை விடவும் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் மேலானது என்ற உண்மையை இங்குள்ள தனவந்தர்கள் புரிந்து கொண்டுள்ளனர் எனச் சொல்லலாமா? விழிப்புணர்வு தான் கல்வியின் முதன்மை நோக்கம்; அதன் தொடர்ச்சியாகக் கிடைப்பவை தனிமனித சுதந்திரமும் தன்னம்பிக்கையும். அதனை இம்மாவட்டத்து மக்களுக்கு வழங்கி விடுவதில் அதிக அக்கறையோடு இருக்கின்றன கல்வி நிறுவனங்கள் எனக் கூறலாமா?. உறுதியாக எந்தப் பதிலையும் என்னால் கூற முடியாது.

கல்வியின் நேர்மறைப் பயன்களை அளவுகோலாகக் கொண்டு ஆய்வு செய்யத் தொடங்கினால் கிடைக்கும் பதில்கள் ஏமாற்றம் அளிப்பனவாகவே இருக்கும்.ஏமாறுதல், ஏமாற்றுதல், கொலைகள், தற்கொலைகள், வரதட்சணைக் கொடூமைகள், சாதி மதக் கலவரங்கள் போன்ற வெளிப் பாடுகளை ஒதுக்கிவிட்டுத் தனிமனித நிலையிலும் சமூக இயக்கத்தின் போக்கிலும் இம்மாவட்டங்களில் நடக்கும் குற்றச் செயல்களையும், முறைபிறழ்வுகளையும் கணக்கில் எடுத்து ஆய்வு செய்தால் கல்வியும், கல்வி நிறுவனங்களும் அதன் எதிர்த் திசையில் பயணம் செய்கின்றனவோ என்ற எண்ணம் தோன்றுவதை மாற்றி விட முடியாது. உயர்கல்வி நிறுவனங்களான கல்லூரிகளில் அண்மையில் நடந்து கொண்டிருக்கும் கண்கூடான மாற்றம் ஒன்றைப் பார்த்த பின்பு இந்த எண்ணம் கூடுதலாகிக் கொண்டே இருக்கிறது.

அனைத்துப் பள்ளிகளின் சீருடைகளும் இங்கு கிடைக்கும் எனத் தங்கள் கடைகளில் எழுதி வைத்த துணிக்கடைக்காரர்கள், சில ஆண்டுகளுக்கு முன்னால் இன்னொரு வரியையும் சேர்த்து எழுதினார்கள்.எல்லாக் கல்லூரிகளின் சீருடைகளும் இங்கு கிடைக்கும் என்றும் எழுதி வைத்தனர். இனிவரும் ஆண்டுகளில் மேலும் ஒரு வரியையும் சேர்த்து எழுதிக் கொள்வார்கள். அனைத்துக் கல்லூரிகளின், அனைத்து வகுப்புகளுக்குமான சீருடைகளும் இங்கு கிடைக்கும் என்பதாக அந்த வரி இருக்கப் போகிறது.

அனைத்துக் கல்லூரி மாணவியர்களுக்கும் சீருடைகள் அளித்துக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கும் மாவட்டம் எது என்று பார்த்தால் அதிலும் முதலிடத்தில் இருக்கிறது கன்னியாகுமரி மாவட்டம் தான். பத்தாண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவிகளுக்குச் சீருடையை வலியுறுத்திய ஒரு கல்லூரி கட்டுப்பெட்டிக் கல்லூரியாகக் கணிக்கப்பட்டதை நானறிவேன். அது பிற்போக்குத் தனத்தின் வெளிப்பாடு என்று நான் மட்டும் நினைக்கவில்லை; படித்த நடுத்தரவர்க்கத்து ஆண்களும் பெண்களும் அப்படித்தான் கருதினார்கள். ஏனென்றால் நான் படித்த மதுரை மாநகரிலோ வேலை பார்த்த பாண்டிச்சேரியிலோ, பயணங்கள் செய்து கொண்டிருக்கும் தமிழகத்தின் பெருநகரங்கள் எவற்றிலும் கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்குச் சீருடைகள் வலியுறுத்தப் பட்டதில்லை. மாணவிகளும் அதை விரும்பியதில்லை.

இன்று குமரி மாவட்டத்துக் கல்லூரிகள் அனைத்திலும் பெண்கள் சீருடை அணிந்தே வகுப்புக்களுக்குச் செல்கின்றனர். குமரி மாவட்டத்தைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்துப் பெண்கள் கல்லூரிகளும் அதனைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன. அடுத்த கட்டமாக ஒரு கல்லூரிக்கு ஒரு சீருடை என்ற நிலையைத் தாண்டி ஒரு வகுப்புக்கு ஒரு சீருடை என்ற நிலைக்கும் செல்லத் தொடங்கி விட்டன கல்லூரி நிர்வாகங்கள். ஆனால் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் பெண்களுக்குக் கூட ஒரே வகையான சீருடைதான்.

கல்லூரி செல்லும் மாணவியர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாற்றத்தை எப்படிப் புரிந்து கொள்வது? இந்த மாற்றத்தை அவசியமானது என வரவேற்கும் பெற்றோர்களின் நிலைபாட்டை எப்படி விளக்குவது? செய்யப்பட்ட மாற்றத்தைச் சரியெனக் கருதி ஏற்றுக் கொண்ட மாணவியரின் மனநிலையை நல்லதொரு போக்கின் அடையாளம் எனப் பாராட்டுவதா? பிற்போக்குத் தனத்திற்கு அடிபணியும் மனநிலையின் வெளிப்பாடு எனக் கணக்கிடுவதா? கல்லூரி மாணவிகளுக்குச் சீருடையை வலியுறுத்தும் கல்வி நிறுவனங்களின் இந்தப் போக்கு தீதா? நன்றா? உறுதியாகக் கூற முடியவில்லை.

சுதந்திரத்திற்கு முன்னும்சரி பின்னும்சரி இந்தியாவில் நடந்த சமூக மாற்றங்கள் பலவற்றையும் காட்சிப் படுத்தியவர்களாகப் பெண்களே இருந்து வருகின்றனர். பெரும் மாற்றங்களை வெளிப்படுத்தும் கருவியாக மட்டுமல்ல; காரணியாகவும் இருந்தனர்; இருக்கின்றனர். எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறி மருத்துவக் கல்வியைப் பெற்றே தீருவேன் என அடம்பிடித்து வெற்றி கண்ட முத்துலட்சுமி ரெட்டி இன்று நினைக்கப் படுவதற்கான காரணங்களில் ஒன்று அவர் பெற்ற கல்வி மட்டும் அல்ல. அவர் பெண்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றமும் தான்.

மாற்றம் என்பது எப்போதும் முன்னோக்கியதாக மட்டுமே இருக்க முடியும். என்ற உண்மையை நாம் எப்போதும் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். இந்திய மனிதர்களின் ஆடைகளில் ஏற்படுத்திய மாற்றத்தைப் பளிச்செனக் காட்டியவர்கள் பெண்கள் தான். நாகரிகம் என்ற பெயரில் ஆடைக்குறிப்புச் செய்வதை மாற்றம் என்று சொல்ல வேண்டியதில்லை. நான்கு சுவர்களைத் தாண்டிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்ட போது பெண்கள் மாற்றத்தின் களனாகவும், தன்னம்பிக்கையின் அடையாளமாகவும், சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பவர் களாகவும் வெளிப்பட்டார்கள். அன்றாட வாழ்க்கைக்குத் தடையாக இருந்த ஆடை வகைகளைக் கைவிட்டுவிட்டு வாகனங்களில் ஏறிப் பயணம் செய்யவும், வாகனங்களை ஓட்டுவதற்கும் ஏற்ற வடிவம் கொண்ட ஆடைகளைத் தேர்வு செய்து பெண்கள் அணியத்தொடங்கிய மாற்றத்தைத் தான் நல்ல மாற்றம் எனச் சொல்ல வேண்டும்.

இப்போது கல்லூரிகளில் வலியுறுத்தப்படும் சீருடைகள் எவ்வகை மாற்றத்தை நோக்கியன? இந்தக் கேள்வியை எழுப்பிக் கொண்டு யோசித்தால் கிடைக்கும் விடைகள் எவை? கல்வி நிறுவனங்கள் உண்டாக்க விரும்பும் கட்டுப்பாடும் ஒழுங்கும் முதன்மையானவை என்பது புரிய வரலாம். ஒழுக்கமும் கட்டுப்பாடும் உயர்கல்வி நிறுவனங்களின் முதன்மையான நோக்கமா? என்று கேட்டால் கல்வியாளர்களும் சமூக வியலாளர்களும் நிச்சயம் இல்லை என்றே சொல்வார்கள்.பள்ளிக் கல்வியில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் அறிவுறுத்தலும் முதன்மை யானவை களாக இருக்கலாம். ஆனால் கல்லூரிக் கல்வியிலும் அதுவே தொடர வேண்டும் என்பதில்லை.

உயர்கல்வியான கல்லூரிக் கல்வியில் உண்டாக்கப்பட வேண்டியவை தன்னைப் பற்றிய அறிதலும், தான் வாழும் சமூகத்தைப் பற்றிய புரிதலும் ஆகும், தான் கற்கும் பாடங்களின் வழியாகத் தன்னை அறிந்து தான் மாறு வதோடு, தான் சார்ந்த சமூகத்தை விளக்குவதற்கும், அதனை மாற்று வதற்கும் பயன்படுவதாகத் தான் கற்ற கல்வியை எவ்வாறு பயன் படுத்தலாம் எனச் சிந்திக்க வைப்பதுமே ஆகும்

கல்லூரிக் கல்விக்குள் நுழையும் ஒருத்திக்கு அல்லது ஒருவனுக்கு அந்நிறுவனம் வழங்க வேண்டியது கல்வியின் அனைத்துப் பரிமாணங் களையும் என்பதை மறந்து விட்டுப் பள்ளிக் கல்வியின் தொடர்ச்சியாகவே கல்லூரிக் கல்வியை கல்வி நிறுவனங்கள் கருதுகின்றனவோ என்ற ஐயம் பல நிலைகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாடத்திட்டங்களை உருவாக்குவது; பயிற்றுவிப்பது; தேர்வுகள் நடத்துவது எனப் பல நிலைகளில் பள்ளிக்கல்வியின் தொடர்ச்சியாக இருக்கும் கல்லூரிக் கல்வி, பள்ளியில் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் உண்டாக்கப் பயன்படும் சீருடைகளையும் தொடர்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மாறிவரும் உலகமயச் சூழலில் எந்தவித எதிர்ப்புணர்வையும் காட்டாமல் பன்னாட்டு நிறுவனங்கள் முன் வைக்கும் ஆடைக்கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டு ” ஆமாம் ஐயா ” வாழ்க்கையைத் தொடரப் போகும் நமது அடுத்த சந்ததியைக் கல்வி நிறுவனங்கள் தயார் செய்யத் தொடங்கியுள்ளதின் வெளிப்பாடாகவும் கூட இதனைப் புரிந்து கொள்ளலாம். எது எப்படி இருந் தாலும் ஒன்றை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை என்பதை மட்டும் சொல்லியே ஆக வேண்டும்.

என்னுடைய கேள்வி, கண்காணிப்பை முதன்மை நோக்கமாகக் கொண்ட சீருடைக் கலாசாரத்தைப் பெண்களுக்குரியதாக மட்டும் நினைப்பது ஏன் என்பதுதான்.அதன் தொடர்ச்சியாக ஆண்கள் சுதந்திரத்தின் சொந்தக் காரர்கள்; பெண்கள் கட்டுப்படுத்தப் படவேண்டியவர்கள் என்ற எண்ணும் உள்நோக்கம் இருக்கிறது என்ற குற்றம் சாட்டினால் யாராவது மறுக்க முடியுமா? கற்பு நிலை என்பதை மட்டும் அல்ல; எதுவாக இருந்தாலும் இருபாலருக்கும் பொதுவாக வைக்க வேண்டும் என்பதாகப் புரிந்து கொள்வதுதான் பாரதியைச் சரியாகப் புரிந்து கொள்வதாக இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்