எளிய மனுசியின் இலக்கு : மீரான் மைதீனின் கவர்னர் பெத்தா
மேல் நோக்கிய பயணம் – இந்த வாக்கியத்தைப் பலரும் சொல்கிற போது ஆன்மீகம் சார்ந்த வாக்கியமாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நமக்குக் கிடைத்திருக்கிற – நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற - இந்த வாழ்க்கை அவ்வளவு இனிமையானது அல்ல என்ற நினைப்பு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கவே செய்கிறது. இந்த எண்ணமும் தவிப்பும் இருப்பதில் அப்பாவிகள் என்றும், அறிவார்ந்தவர்கள் என்றும் வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் மேலான வாழ்க்கை என்பதைப் புரிந்து வைத்திருப்பதிலும், அதை அடைய முடியும் என நம்புவதிலும் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.
கிடைத்திருக்கும் வாழ்க்கை மீதான அதிருப்தியின் அளவும், அதனை மாற்றிட வேண்டும் என்ற விருப்பமும், அதற்கான எத்தணிப்புகளும் எல்லாரிடமும் ஒன்று போல இருப்பதில்லை. அறிவார்ந்த தளத்திலும், நம்பிக்கைகளோடு கூடிய நடைமுறைகளைப் பின்பற்றுபவதிலும் கவனமாக இருக்கும் மனிதர்களின் எத்தணிப்புகளிலிருந்து திட்டமிட்டு வாழ்க்கையை முன்னகர்த்தும் வழியற்ற அப்பாவிகளின் எத்தணிப்புகள் பெருமளவு விலகியே இருக்கிறது.
இதைவிட இனிமையான வாழ்க்கை இங்கே கிடைக்காது ; அதை அடைய விரும்பும் ஒருவர் இந்த வாழ்க்கையில் செய்ய வேண்டிய காரியங்களும், பின் பற்ற வேண்டிய நடைமுறைகளும் எனப் பலவும் இருக்கின்றன. அதைத் தவறாது செய்யும் ஒருவருக்கு மேலான அந்த உலகம் தானாக வந்து சேரும் என்று சமய நம்பிக்கையும், அதனை உறுதி செய்ய முனையும் சமய அறங்களும் சொல்கின்றன. அந்தச் சொல்லாடல்களின் மீது படித்தவர்களும், பொருளாதார ரீதியாகத் திருப்தியான வாழ்க்கையை வாழ்பவர்களும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க, அப்பாவி மக்களும், எளிய உழைப்பாளிகளும் தீவிரமான பற்றோடு இருப்பதில்லை. அப்படிச் சொல்வதால் அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் சொல்லி விட முடியாது. அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கையும் உண்டு; வேண்டுதல்களும் உள்ளன. வேண்டுவன எல்லாம் கைகால் சுகமும் அடுத்த நாளுக்கான உழைப்பு வாய்ப்பும் உணவும் என்ற அளவில் தான் இருக்கின்றன.
சாதாரண மனிதர்கள், அப்பாவிகள், எளிய மனிதர்கள் என விளிக்கப்படும் மனிதர்கள் தங்களின் இப்போதைய நிலைக்கு முந்திய பிறவியின் செயல்களோ, வினைகளோ தான் காரணங்கள் என நினைத்துப் புழுங்கிக் கொண்டிருப்பதில்லை. அதற்குப் பதிலாக தாங்கள் கடந்து வந்த பாதையில் செய்யத் தவறிய அல்லது எடுக்காமல் விட்ட முடிவே இப்படியான வாழ்க்கைக்குக் காரணம் என நினைத்துக் கொள்கின்றனர். அது போன்ற தவறான முடிவை எதிர்காலத்தில் எடுக்கக் கூடாது என உறுதியும் கொள்கின்றனர். தனக்கான வாழ்க்கையில் மட்டும் அல்ல; தனது சந்ததிகளின் வாழ்க்கையிலும் கூட அப்படியான முடிவுகளை எடுப்பதைக் கைவிட வேண்டும் எனத் தீர்மானிக்கின்றனர். இப்படியான தீர்மானம் எடுக்கும் மனிதர்களை நேரடி வாழ்க்கையில் சந்திக்கும் வாய்ப்புகள் நேராமல் இருக்கலாம். ஆனால் இலக்கியம் அத்தகைய மனிதர்களையே நம்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது. அதுவே இலக்கியத்தின் தனிச்சிறப்பும் கூட. எளிய கிராமத்து இசுலாமிய சமூகத்து மனிதர்களைத் தனது கதைகளின் பாத்திரங்களாகப் படைத்து வரும் மீரான் மைதீனின் கவர்னர் பெத்தா அத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த கதைகளுள் ஒன்று என்பதை அதை வாசிக்கும் யாரும் உணரலாம்.
தமிழ்நாட்டின் பாத்திமா பீவி இருந்த போது நிகழ்ந்ததாக எழுதப்பட்டுள்ள இந்தக் கதை உண்மையில் நடந்ததாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உண்மையையும் புனைவையும் வேறுபடுத்தாமல் கதையாக்கிக் காட்டியுள்ள மீரான் மைதீன், தொடர்ந்து வெளியுலக வாழ்க்கையும் தொடர்புகளும் மறுக்கப்படும் இசுலாமியப் பெண்களின் மனதுக்குள் இருக்கும் ஆசையின் உச்சம் எத்தகையது என்பதற்கான குறியீடாகவே கவர்னர் பாத்திமா பீவியைக் கதையில் கொண்டு வந்துள்ளார் .
படிப்பறிவற்ற- தினசரிச் செய்தித்தாளின் எழுத்துக்களை இன்னொருவர் வாசிக்கக் கேட்டுப் புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கும் பீர்மா பெத்தாவைச் சுற்றிச் சுற்றி வரும் விதமாக அமைக்கப் பட்டுள்ள அந்தக் கதை, அவளின் மனதிற்குள் எப்படியொரு ஆசை இருந்தது என்பதை மௌனமாகச் சொல்கிறது. முட்டாக்குத் துணிக்குள் இருக்கும் கவர்னர் பாத்திமா பீவியின் அழகு முகத்திற்கும், அதிகாரத்துவம் நிறைந்த வேகமான நடைக்கும் காரணம் அவள் கற்ற கல்வி, அதன் வழியாகக் கிடைத்த ஆங்கிலப் பேச்சு என்று புரிந்து கொண்ட பீர்மா பெத்தா, தனக்கும் தனது சின்ன வயதில் தன் தந்தை, கல்வி கற்கும் வாய்ப்பை வழங்கியிருந்தால் தானும் பாத்திமா பீவியைப் போல கவர்னராக ஆகியிருக்கக் கூடும் என்று நம்புகிறது. அந்த எண்ணம் தான் அவளைக் கவர்னரின் வருகையை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கிறது. அவளைச் சந்தித்துக் கைகுலுக்கிப் பதிலீடு செய்து கொள்ளும் படி துரத்துகிறது எனக் கதையை அற்புதமாக நகர்த்தியுள்ளார் மீரான் மைதீன். இந்த முக்கிய நோக்கத்தோடு மீரான் மைதீனுக்கு வேறு சில நோக்கங்களும் இருப்பதைக் கதையின் காட்சிகள் காட்டுகின்றன. கவர்னரின் வருகையை ஒட்டித் தங்களின் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திவிடும் ஆசையைக் கொண்ட சிறு வியாபாரிகளாக கிராமத்து இசுலாமிய சமூகம் இருக்கிறது; அவர்களுடைய மனதிற்குள் காவல் துறையின் மீது ஆறாத ரனங்களும் இருக்கின்றன என்பதாகக் கதையின் கிளைகள் காட்டுகின்றன. இவையெல்லாம் கதையின் துணை நோக்கங்கள் தான். மீரான் மைதீனின் மைய நோக்கம், பீர்மா பெத்தாவின் மனதிற்குள் இருந்த கவர்னர் ஆசையைச் சொல்வதுதான். இதை நோக்கி நகரும் கதை தொடங்கும் போது அந்த அறிவிப்புடன் தொடங்குகிறது.
“அஸ்ஸலாமு அலைக்கும். இன்று காலை சுமார் ஒன்பது மணி அளவில் தமிழக கவர்னர் மாண்புமிகு பாத்திமாபீவி அவர்கள் நம்முடைய தர்ஹாவுக்கு வருகை தர இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எல்லோரும் கலந்து சிறப்பிக்கும்படித் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.”
சுபுஹ் தொழுகைக்குப் பிறகு விடிந்து கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் தர்ஹா ரேடியோவிலிருந்து காலைக் காற்றில் கலந்து வந்த அறிவிப்பை எல்லோரும் கேட்டார்கள்.
பத்து நாட்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட செய்தி நிகழப்போகும் அந்த நாளில் பீர்மாவின் நடவடிக்கைகளும், மனவோட்டங்களும் கதையில் நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இனிக் கதையின் அப்பகுதிகளைக் காணலாம்:
“இன்னும் எட்டு நாள் பாக்கி...” “எதுக்கு...?”
“கவர்னர் வரதுக்கு...” “படச்சவனே மறந்தே போச்சி...”
கசாப்புக் கடை மாஹீன் வீடுவீடாகப் போனார். “கவர்னர் வர அன்னைக்கு மூணு கிடாய் அறுக்கப் போறேன்... கறி வேணும்னா சொல்லுங்கோ...” ‘எனக்கு ரெண்டு கிலோ’ ‘எனக்கு ஒண்ணு’ என வீட்டுக்கு வீடு ஆடர் கூடிக்கொண்டே வந்தது.
***************
வீட்டுக்குள் போய் பார்த்தாள், ஈஸிச் செயரில் மகன் சாய்ந்து கிடந்தான். கண்கள் மருமகள் இருக்கிறாளா எனத் தேடியது. மருமகள் அடுக்களையில் வேலையாக இருந்தாள். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மகனிடம் மெல்லக் கேட்டாள். “மௌனே...” நிமிர்ந்து பார்த்தான்.
“எனக்கொரு பட்டுக்கசவு வச்ச கவுணியும், சட்டையும் தச்சி தாலே...”
“இப்போ எதுக்கு...” “எனக்கு வேணும்...”
“பெருநாளுக்குத் தானே எடுத்தோம்... அதுக்கெடையில இப்போ எதுக்கு...”
பீர்மாவுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. மௌனமாக நின்றாள். மகன் அவளின் மூஞ்சியைப் பார்த்தபடி இருந்தான். “கவர்னரு... தர்ஹாவுக்கு வாரால்லா... அதான்...”
தயங்கித் தயங்கிச் சொல்லி முடிக்கும் போது மருமகள் வந்துவிட்டாள்.
“ஆமா கவர்னரு வந்து நேர உங்க கையைப்பிடிச்சித்தான் குலுக்கப்போராளாக்கும்...”
எல்லோரும் கொல்லெனச் சிரித்தார்கள். பீர்மாவின் முகம் சுண்டிப்போனது.
**************************
நாளை காலைதான் கவர்னர் வரப்போகிறார். சாயங்காலமே தர்ஹா ரேடியோ பாடியது. தர்ஹாவில் சீரியல் லைட்கள் மின்னி எரிந்தன. பீர்மா வாசலில் நின்று தெருவைப் பார்த்தாள். தெருவில் கடந்து போன ஆறேளு பேரிடமாவது கேட்டிருப்பாள்.
“காலையில் எத்தனை மணிக்கு வாராவோ?” “ஒன்பது மணிக்கு”
மறியம் சொல்லும் போதே பீர்மா நம்பிக்கை இல்லாமல் கேட்டாள். “ஆருளா சொன்னா...?”
“தொழுதுட்டு போவத்துல... முக்கூட்டுப் பயலும் கரிச்சட்டிக்குப் பேரனும் பேசிட்டுப் போனானுவோ... நான் அந்தாக்குல கூப்ட்டுக் கேட்டேன்... அவ வரதுக்கு ஒன்பதாவுமாம்... பப்பனாபுரம் கோட்டைக்கும் சுசீந்திரம் கோயிலுக்கும் போயிட்டுத்தான் இங்க வாராளாம்... ” “கோயிலுக்கு போவாளா...” பீர்மாவுக்கு வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. “அவ கவர்னருல்லா...”
“பிள்ளா ஒரு விசயம் தெரியுமாளா...?” பாக்கு பெத்தா சொன்ன உடன் எல்லோர் முகங்களும் ஆவலாயின. “அவோ இங்கிளிஸ்லதான் பேசுவாளாம்... தமிழ் தெரியாதாம்...”
“பேப்பர்ல தமிழ்தானே போட்டிருந்தானுவோ...” அஸ்மா மடக்கினாள்.“என்ன எளவோம்மா... இங்கிளிஸ்லதான் பேசுவாளாம்... எனக்க மருமவன் சொன்னாரு...”
**************************
ஒன்பது மணிக்கு மேலே கார்கள் அணி வகுத்து வர கவர்னர் வந்து இறங்கினார். அதிகாரிகள் சுற்றிக்கொள்ள, ஒருவர் குடையை விரித்துப்பிடித்துக் கொண்டார். கவர்னர் பாத்திமா பீவி முட்டாக்கும் போட்டுக் கொண்டு கம்பீரமாய் நடந்து நாலா பக்கமும் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்து புன்னகையுடன் திரும்பினார்கள்.
ஐமா-அத் தலைவர் பொன்னாடை கொடுத்து வரவேற்றார். கவர்னர் புன்னகையுடன் நடந்துவர வாசல் அருகே வரும்போது பெண்ணின் பக்கம் கவர்னர் திரும்பிப்பார்த்து ஒரு புன்னகை சிந்திவிட்டுத் திரும்பும்போது பீர்மா பளிச்சென்று கவர்னரைப் பார்த்துக் கையை நீட்டினாள். கவர்னரும் பீர்மாவின் கரத்தைப் பற்றிக் குலுக்கினார்.
தர்ஹாவிலிருந்து திரும்பி நடந்து வரும் போது பீர்மா மறியத்திடம் சொன்னாள்.
*********************
“நாசமா போனதுவோ... நம்மள படிக்க வைக்காம உட்டுட்டுதுவோ... நம்மளமாதித்தானே இருக்கா... எங்கம்மாகாரி நெலையளிஞ்சி நின்னுட்டா.. பள்ளிகோடத்துக்கு போட்டாளாள்னு கேட்டதுக்கு... பொட்ட புள்ள படிச்சி பெரிய கவர்னராட்டா ஆவப்போறா...ன்னா...”
வேதனையும் எரிச்சலும் ஒருசேர எழுந்தபோது அவளின் உம்மாவின் முகமும் வாப்பாவின் முகமும் நினைவில் வந்தது.
*******************
இந்துக்கள், கிறித்துவர்கள், இசுலாமியர்கள் என மூன்று சமயத்தவரும் கணிசமாக வாழும் திருநெல்வேலியில் இப்போதெல்லாம் எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் இசுலாமியப் பெண்கள் கல்வி கற்க வருகின்றனர். இந்த எண்ணிக்கை நான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலிக்கு வந்தபோது இருந்ததைவிடப் பல மடங்கு கூடியிருக்கிறது. இசுலாமியப் பெண்களுக்குப் படிக்கும் ஆசை இந்தத்தலைமுறையில் தான் வந்திருக்கிறது என்ற எனது நினைப்பு தவறு என்பதை மீரான் மைதீனின் கவர்னர் பெத்தா கதை உணர்த்தியது.
கருத்துகள்