ஏமாற்றங்கள்
இந்த ஏமாற்றம் ஒன்றும் புதியது அல்ல. சரியாகச் சொல்வதானால் நான் ஏமாறவில்லை என்பது தான் உண்மை. ஏமாந்தது சுந்தரமூர்த்திதான்.
‘ ப்ளீஸ் டைம் ’ என்ற குரல்தான் அவளைப் பார்க்க வைத்தது. கடிகாரத்தைத் திருப்பி நேரத்தைப் பார்ப்பதற்கு முன்னால் அவளைப் பார்த்தேன். என்னை விடக் கூடுதலான உயரம். புருவங்களை உயர்த்திப் பார்க்க வேண்டியிருந்தது. அவளைப் பார்க்க விரிந்த கண்கள் கடிகாரத்தைப் பார்க்கும் போது உதவ மறுத்தன. நேரத்தைச் சரியாகக் கணிக்க முடியாமல் போனதற்கு உள்ளே போயிருந்த ஜின் கூடக் காரணமாக இருக்கலாம். போதை அதிகம் இல்லையென்றாலும் தெளிவாக எதிலும் கவனம் செலுத்துவதில் சிரமம் இருந்தது.
அவள் கேட்டதற்கு நான் பதில் சொல்லாமல் இருந்ததைக் கவனித்த சுந்தரமூர்த்தி, என் கையை இழுத்து கடிகாரத்தைத் திருப்பி ‘ ஒன்பது நாற்பத்தி எட்டு’ என்று துல்லியமாகச் சொன்னான். அவ்வளவு துல்லியத்தை அவள் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது சிரிப்பு வெளிப்படுத்தியது. சிரித்ததோடு ‘தேங்க் யூ வெரி மச்’ என்றும் சொன்னாள். அப்படிச் சொன்னபோது அவள் முகம் என்னிடமிருந்து சுந்தர மூர்த்தியிடம் திரும்பியிருந்தது.
சுந்தரமூர்த்தி பாண்டிச்சேரிக்கு வருவது சும்மா தண்ணி அடிப்பதற்காக என்று சொல்லிவிடமுடியாது. அவன் ஒரு பத்திரிகையாளன். தினசரிப் பத்திரிகையில் தான் வேலை என்றாலும், விருப்பம் போல பிடிக்கும் விசயங்களைப் பற்றியெல்லாம் எழுதலாம். ஒவ்வொரு நாளும் இத்தனை செய்திகள் தரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எல்லாம் அவனுக்குக் கிடையாது.விரும்பினால் செய்திகளை அனுப்புவான். ஒருவாரம் ஒன்றும் அனுப்பாமல் நான்கைந்து கட்டுரைகளைச் சேர்த்து அனுப்புவான். கேட்டால், நான் பத்திரிகையாளன்; செய்தியாளன் இல்லை என்பான். அவனது எழுத்துக்கு ஓர் எதிர்பார்ப்பு இருப்பதாக அவன் நம்பினான். அவனது அலுவலகத்திலும் நம்பினார்கள்.
சுந்தரமூர்த்தி வந்து விட்டால் அன்றிரவு நானும் ஓட்டலுக்குச் சாப்பிடப் போகிறேன் என்பது என் மனைவிக்குத் தெரியும். காலை டிபன், மதியச் சாப்பாடு எல்லாம் வீட்டில் சாப்பிடுவான். இரவில் ஓட்டலில் சாப்பிடப் போகும் ரகசியம் அவளுக்குத் தெரியாததல்ல. எனது திருமணத்திற்கு முந்திய நடவடிக்கைகளை என்னிடமிருந்துதெரிந்து கொண் டதை விடவும், சுந்தர மூர்த்தியிடமிருந்தே அதிகம் தெரிந்து கொண்டாள் என் மனைவி . வெளிப்படை யாகப் பேசுவதே அவன் மீது நம்பிக்கை உண்டாக்கி யிருக்க வேண்டும். அவன் வந்து விட்டால் கேட்காமலேயே அனுமதி கிடைத்து விடுகிறது.
ஒன்பது நாற்பத்தியெட்டுக்கு கொஞ்சம் போதை யோடு நின்றதற்கு என்மனைவி அனுமதித்திருந்தாள். ஆனால் இந்தப் பெண்ணோடு பேசுவதற்கு..? போதையையும் மீறி ஒரு பொறி. உண்மையிலேயே நேரம் தெரிந்து கொள்ளத்தான் அவள் கேட்டாளா..? நேரத்தைத் தெரிந்து கொண்டபின்னும் அவளிடம் அவசரம் எதுவுமில்லை. இந்த வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகள் ஒன்பது முப்பதுக்கு மேல் கிடையாது. நாங்கள் நின்றிருந்தது முக்கியச் சாலை யிலிருந்து சற்று ஒதுங்கிய குறுக்குச் சாலை. நாங்கள் வெளியேறிய பிராந்திக் கடைக்கு இரண்டு கட்டிடங்கள் தள்ளி இருந்த பங்க் கடையில் சிகரெட் வாங்கிப் பற்றவைத்துக் கொண்டிருந்த போதுதான் அவள் நேரம் கேட்டாள்.
சுந்தரமூர்த்தி இன்னும் பற்ற வைக்கவில்லை. அவனது நிதானம் அவள் மேலும் ஏதாவது கேட்பாள்¢ என்று எதிர்பார்ப்பதாக இருந்தது. அவள் எதுவும் கேட்கவில்லை. பிராந்தி கடையை நோக்கிப் போய்விட்டாள். அந்த இடத்தைவிட்டு அவள் நகர்ந்த பின்புதான் அவன் என்னிடம் திரும்பினான். சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டு தீப்பெட்டிக்குக் கையை நீட்டியவனின் பார்வை இன்னமும் அவள் மீது தான் இருந்தது. பின்னால் இருந்து பார்த்தாலும் கவனத்தை ஈர்ப்பவளாகவே இருந்தாள். நகைகள் எதுவும் அணிந் திருக்கவில்லை. எளிமையான அழகு அவளது உடலில் வெளிப்பட்டது. எந்தத் தயக்கமும் இல்லாமல் பிராந்திக் கடையிலிருந்து வாங்கிய பாட்டில்களை கையிலிருந்த வயர்க் கூடையில் திணித்துக் கொண்டிருந்தாள்.
“ டேய் நடராஜ் .. அந்தப் பெண்ணோட கொஞ்சம் பேசலாமா..? “
“பத்திரிகைக்காரனோட வேலையெ இந்த
நேரத்திலேயும் விடலயா.. “
“ பத்திரிகைக்காரனா இல்ல. ஒரு பிரம்மச்சாரியா.. காலம் கடந்த பின்னும் கவனமாகக் குடும்ப பாரத்தத் தூக்கத் தயங்கிற மனுசனா அவளோட பேசனும்னு தோணுச்சு “
“ நான் பிள்ளை குட்டிக் காரன். வாலிப வயசு விளையாட்டெல்லாம் நிறுத்தியாச்சு. என்னை விட்டுடு. வேண்டாம் “
“ உனக்கு வேண்டாம். எனக்கு வேண்டும் ”
எங்கள் உரையாடல் தொடரும்போது அவள் எங்களை நோக்கிவந்து கொண்டிருந்தாள். கூடையின் உயரத்திற்கு மேல் நீட்டிக் கொண்டிருந்தன இரண்டு பியர் பாட்டில் கள். அவளது கண்கள் எங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கவில்லை. திரும்பவும் எதாவது கேட்கமாட்டாளா என்ற தவிப்பு சுந்தரமூர்த்திக்கு.
கேட்கவில்லை. நாங்கள் நின்றிருந்த பங்க் கடையில் வாழைப்பழங்கள் வாங்கினாள். கடைக்காரரிடம் அதிகம் பேசவில்லை. அவரும் அவளிடம் எந்த உரிமையும் எடுத்துக் கொள்ளவில்லை. அதில் எழுந்த தர்க்கம் என்னுள் தயக்கத்தை ஏற்படுத்தியது. எப்படி அவளிடம் பேசுவது என்ற தயக்கம்.கேட்கப் போய் ஏதாவது ஏடாகூடமாய் அவள் ஏதாவது சொல்லி விட்டால்..
சுந்தரமூர்த்தி என்கைகளை இறுகப் பற்றினான். அந்த இறுக்கம் தயக்கத்தை விட்டு விடும்படி சொன்னது. அவள் குறுக்குச் சாலையில் திரும்பி, முக்கிய சாலையின் இடதுபுறமாக நடந்தாள். பின் தொடர்ந்தோம். எங்களின் தொடர்தலை உணர்ந் திருக்க வேண்டும். அவளது நடையின் வேகம் குறைந்தது. சாலையில் வாகனங்கள் அதிகம் வர வில்லை. கடைகளை அடைப்பதற்கான முயற்சி களில் கடைக்காரர்கள் இறங்கியிருந்தனர்.
நின்று இருபுறமும் பார்த்தாள். இடதுபுறத்திலிருந்து வலது புறம் போய்விட வேண்டும் என்று கருதியது தெரிந்தது. எங்களின் நெருங்குதலுக்காகவும் இருக் கலாம். குறுக்கே வந்த ஆட்டோவைக் காரணமாக்கி, வேகத்தை அதிகரித்து அவளை நெருங்கி விட்டோம். சாலையில் வலதுபுறம் தன் திசையை மாற்றிக் கொள்ளாமல் நடக்கத் தொடங்கினாள். அவளுக்கும் எங்களுக்குமான இடைவெளி வெகுவாகக் குறைந் திருந்தது. நான் தான் அவளிடம் தொடங்கினேன்.
“தனியா இந்த நேரத்தில நீங்க. ” வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை.
“ நேரடியாகவே கேட்கலாம். சுற்றி வளைச்சுப் பேசனும்னு அவசியம் இல்ல ” என்றவள், நின்றாள் .
“ நானே உங்களைக் கூப்பிடனும்னு நினைச்சேன்.. ஆனா உங்களப் பார்த்தா அப்படித் தோணல “
அவளது நினைப்பை உண்மையாக்கிவிடலாம் என்று தோன்றினாலும் செய்யவில்லை. அதற்கு பதிலாக ‘ அப்படித் தோணலயில்லைன்னா எப்படி தோணுது ‘ என்று கேட்டுவிட்டேன். அவள் சிரித்துவிட்டாள். எனது ஒழுக்கம் பற்றி அவளது சான்றிதழை வாங்கி வைத்துக் கொள்ள ஆசைப் பட்டது சிரிப்பைத் தான் வரவைக்கும் என்பது பிறகு உறைத்தது.
“ அது வந்து .. நான்.. எனக்கில்ல. இவன்.. என்னோட பிரண்டு.. மெற்றாஸிலிருந்து வந்து.. இங்க பக்கத்தில உள்ள லாட்ஜில தங்கியிருக்கான்.. உனக்கு ஆட்சேபனையில்லைன்னா அங்கே அவனோட போயி இன்னக்கி ராத்திரி தங்கலாம்.. ” தயங்கித் தயங்கிச் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்.
“ லாட்ஜ் ரொம்ப வசதியானது.. போல¦ஸ் கெடுபிடி கிடையாதுன்னு நினைக்கிறேன் ”சொன்ன சுந்தரமூர்த்தி,
“ பாண்டிச்சேரி போல¦ஸ் இதையெல்லாம் கண்டுக்கிறாங்களா என்ன ..? “என்னிடம் கேட்டான். நான் ஒன்றும் சொல்லவில்லை.
“ அங்கெல்லாம் வரமுடியாது. உங்களுக்கு விருப்பம் இருந்தா என்னோட எடத்துக்கு வாங்க.. வசதிகள் இல்லையின்னாலும் அதுதான் எனக்குப் பாதுகாப்பு ”
என்றாள் அவள். அவள் இடத்துக்கு வர நூற்றைம்பது ரூபாய் தர வேண்டும் என்றாள். இருநூறு தருகிறேன்; லாட்ஜுக்குப் போகலாம் என்று சுந்தரமூர்த்தி சொன்னதை அவள் ஏற்கவில்லை. முடிவு அவள் கையில்..
ஒலி எழுப்பிக் கொண்டே வந்த ரிக்ஷாக்காரன் எதிர்பார்த்தே வேகத்தைக் குறைத்தான். இருவரும் ஏறிக் கொண்டார்கள்.
“ நடராஜ் வாயேண்டா.. சும்மா வாயேண்டா. அங்கெ வந்து புத்தகம் படிச்சிட்டிரு “ என்றான் சுந்தரமூர்த்தி. நான் மறுத்தபோது ரிக்ஷா நகர ஆரம்பித்தது.
“ காலையில் லாட்ஜில பார்க்கிறேன்”
என்று சொல்லி விட்டு எதிர்த்திசையில் நடக்கத் தொடங்கினேன். வீட்டிற்குப் போக ஒரு ஆட்டோ பிடிக்க வேண்டும்.
“ உட்கார்ந்து புத்தகம் படி; சும்மா வாயேண்டா “ என்று சுந்தரமூர்த்தி சொன்னது வேண்டுமென்றே சொன்னது போல இருந்தது. வேண்டுமென்றே சொல்லியிருந்தாலும், அப்படிச் சொல்ல அவனுக்கு உரிமையுண்டு.
நான் அவனோடு போயிருக்கலாம். என்னை அந்த மலையடிவாரக் கிராமத்தின் குடிசைக்குள் அனுப்பி விட்டு, தூரத்தில் இருந்த பாறாங்கல்லில் உட்கார்ந்து ‘ரிஷிமூலம்’ படித்த சுந்தர மூர்த்திக்காக நானும் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்திருக்கலாம். அவனது பையில் நிச்சயம் ஒரு நாவல் வைத்திருப்பான்.
இந்த நடராசனும் சுந்தரமூர்த்தியும் அந்தக் கேரளத்துப் பெண்ணைச் சந்தித்ததும் இதேபோல் ஒரு மதுபானக் கடையில் தான். அப்பொழுதெல்லாம் நாங்கள் குடித்த அனுபவம் இல்லாதவர்கள். தேக்கடியின் ஐந்து மணிக்குளிருக்கு இதமாக ஒரு டீ சாப்பிட்டு விட்டு வருவதாகத் தான் டூர் மாஸ்டரிடம் பெர்மிஷன் சொல்லிவிட்டு வந்திருந்தோம்.
டீ சாப்பிட்டுவிட்டு சிகரெட் பற்ற வைத்தவர்களைக் கூப்பிட்டது அந்தச் சின்னப்பையன் தான். அவன் அவளது பையை சுமந்து வந்தான். அதில் மதுபானப் பாட்டில்கள் இருந்தன.
“ அண்ணே அந்த அக்கா கூப்பிடுறாங்க “ என்று சொல்லிவிட்டு அவன் அவளை நோக்கிப் போனான். நாங்களும் அவன் பின்னால் நடந்தோம். சின்னப்பையன் அவளையும் தாண்டி வேகமாக நடந்தான்.. அவளருகில் நாங்கள் போகும் வரை நின்றிருந்தவள், நடக்கத் தொடங்கினாள்.
நெடிதுயர்ந்த மரங்களைச் சுற்றிச் செல்லும் சிறிய பாதையொன்றில் நாங்கள் திரும்பியிருந்தோம். அதுவரை நாங்கள் எதுவும் கேட்டதாக நினைவில் இல்லை. அந்தப் பெண் எதையெதையோ கேட்டுக் கொண்டே வந்தாள். ‘ சொந்த ஊர், படிக்கிற கல்லூரி, பிடிக்கிற நடிகை’ என்று அந்நியோன்யமாக கேட்டுக் கொண்டேவந்தவள் , ‘ பிராந்தி குடிச்சிருக்கீங்களா..?’ என்று கேட்டாள்.
‘ குடிச்சிருக்கேன்’ என்றான் சுந்தரமூர்த்தி.. அவன் பொய் சொல்கிறான் என்பது எனக்குத் தெரியும். பிராந்திக் கடையில் நின்று இரண்டு பாட்டில்களை வாங்கி எடுத்துப் போகும் ஓர் இளம்பெண்ணிடம் ‘பழக்கமில்லை’ என்று சொல்வது ஓர் ஆண் மகனுக்கு அழகல்ல என்று நினைத்து அப்படிச் சொன்னானாம்.
அடுத்து அவளிடமிருந்து வந்த கேள்வி எங்கள் இருவரின் இளமைக்கும் ஆண்மைக்கும் பயங்கர மான சவாலாக இருந்தது. “ என்னைப் புடுச்சிருக்கா ” என்று கேட்டவள், பதிலை எதிர்பார்க்காமல், ‘இரண்டு பேரும் இருபது ரூபா கொடுத்திருங்க ‘ என்றாள். கொடுத்துவிட்டு அவளோடு போகலாமா ..? வேண்டாமா..? என்றெல்லாம் யோசிக்காமலேயே , “ இருபது ரூபாயா. . இருபது ரூபாய்க்கு எங்க ஊர்ல மூணு பொண்ணுங்க கிடைப்பாங்க என்றான் சுந்தரமூர்த்தி எந்த அனுபவத்தின் அடிப்படையில் சொன்னான் என்று எனக்குப் புரியவில்லை.
அவன் அப்படிச் சொன்னதைக் கேட்டதும் சட்டென்று அவள் நின்றாள். நின்றவளைக் கவனித்த போது எங்களை விட வயதில் மூத்தவளாக இருப்பாளோ என்று தோன்றியது. சுந்தரமூர்த்தியின் தைரியம் வேறு எனக்கு ஆச்சரியத்தைத் தந்து கொண்டிருந்தது.
“ சரி போய்க்கோ “ என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று நடந்து போய் அந்த கூரை வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள். அவள் நுழைந்த வீட்டிலிருந்து நூறு கெஜ தூரத்துக்கப்பால் மலைச்சரிவின் இறக்கத்தில் மேலும் சில கூரை வீடுகள் தெரிந்தன. அங்கும் அப்படியான பெண்கள் இருக்கக் கூடும் என்ற நினைப்பு அப்பொழுது வரவில்லை.
“ வழிய வந்தவள விட்டுட்டோம்டா ” சுந்தரமூர்த்தி சொன்ன போது அவனது தைரியம் எனக்கும் தொற்றிக் கொண்டது. திரும்பவும் போய்க் கேட்டாள் என்ன சொல்வாளோ என்று பயம் வேறு . கூடுதலாகப் பணம் கேட்கும் வாய்ப்பும் உண்டு.. இரண்டு பேரிடமும் சேர்த்து இருந்தது நூறு ரூபாய் தான். இன்னும் டூரில் இரண்டு நாள் பாக்கி இருக்கிறது. கல்லூரிக்குப் போய் விட்டால் யாரிடமாவது கடன் வாங்கிக் கொள்ளலாம்.
‘குடிச்சிருக்கேன்’ என்று பொய்யாகச் சொன்ன சுந்தர மூர்த்தி, ஒரு பெண்ணின் உடல் பரிசத்தை உணர்ந்து விடுவது என்பதில் என்பதில் பிடிவாதமாக இருந்தான். இந்த அனுபவத்தையும் பொய்யாக வைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை. பெண்ணின் நெருக்கமும் கூடுதலின் சுகமும் புத்தகங்களில் படித்துத் தெரிந்து கொண்டது தான். நேரடியான அனுபவத்திற்கு விலை இருபது ரூபாய் தான். அது நம்மைப் பொறுத்தவரை அதிகம் என்றாலும் தரலாம் என்பது அவனது வாதமாக இருந்தது. எனக்கும் அது சரியென்றே பட்டது. சம்மதம் சொல்லிவிட்டு அவனுக்கு ஒரு கட்டுப்பாடு போட்டேன். அவளிடம் நீ பேச வேண்டாம்; நான் பேசுகிறேன். நீ சொன்ன வார்த்தைகளில் அவள் எரிச்சல் அடைந்தாள் என்பதை உணர்ந்தேன் என்று சொன்னேன். அவனும் சரியென்றான்.
கதவைத் தட்ட நினைத்து நெருங்கிய போது உள்ளே யிருந்து மலையாளத்தில் நடக்கும் உரையாடல் தயக்கம் கொள்ள வைத்தது. தயக்கத்துடன் தட்டிய போது உரையாடல் நின்றது. யாரும் கதவு திறக்க வரும் ஓசையும் கேட்கவில்லை. காத்திருந்து திரும்பவும் தட்டலாம் எனக் கைவைக்க எத்தணித்த போது,
“ எந்தா.. ஏது வேணம்.. திரிச்சு வந்து ” மலையாளத்தில் சொன்னது அவளாக இருக்குமா.. ? வேறு யாராவது இருக்கலாமா..? சந்தேகத்தோடு நின்ற எங்களைக் கதவு திறந்து பார்த்தாள். அவள் கேட்ட இருபது ரூபாயைத் தருவதாகச் சொன்னேன். அவள் என்னைக் கூர்மையாகப் பார்த்துவிட்டு ,
“ பத்து ரூபாயெனிக்கு மதி; யான் ஈயாள வேண்டிட்டில்லா “ என்று சுந்தரமூர்த்தியைப் பார்த்துச் சொன்னாள்.
அவனுக்காக நான் மன்னிப்புக் கேட்பதாகவும், இன்னும் ஐந்து ரூபாய் அதிகம் தருவதாகவும் சொன்னேன். மென்மையாகச் சிரித்தாள். அவள் மனம் மாறுவதாக இல்லை. சுந்தரமூர்த்தியைப் பழி வாங்க நினைத்தாளோ என்னவோ.. அவனை உள்ளே அனுமதிக்க முடியாது என்றாள். ஒருபுறம் தயக்கம். சுந்தரமூர்த்தியை வெளியில் விட்டுவிட்டு நான் மட்டும் அவளோடு போய் பெண்ணின் உடல் தரும் வாசனையைப் பூசிக் கொண்டு வருவதா.. பேசாமல் இரண்டு பேரும் திரும்பி விடுவதா என்ற குழப்பம்.
விரும்பினால் உள்ளே வா என்று சொல்லி விட்டுப் போய்விட்டாள். சுந்தரமூர்த்தி என் கையில் இருந்த ரிஷி மூலத்தைப் பறித்துக் கொண்டு உள்ளே தள்ளி விட்டு நடந்து விட்டான்.
கதவை அடைத்து விட்டு அவள் என்னருகில் வந்த பொழுது, சுந்தரமூர்த்தி என்றொரு மனிதன் வெளியில் இருப்பது மறந்து விட்டது. வியர்வையும் புழுக்கமும் சேர்ந்த ஒரு நெடியோடு வெளியில் வந்தேன். தூரத்தில் சுந்தரமூர்த்தி பாறாங்கல்லில் உட்கார்ந்து புத்தகத்தின் பக்கத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
பத்து வருடங்களுக்கு முன்பு செய்ததற்குப் பரிகாரமாக இன்று அந்தப் பெண்ணோடு அவனை அனுப்பி விட்டுப் புத்தகம் படித்துக் கொண்டிருந்திருக்கலாம். எப்பொழுதும் சுயநலத்துடன் என்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்பதை நினைத்தால் கூச்சமாக இருந்தது.
காலையில் லாட்ஜின் கதவைத் தட்டிய பொழுது உடனே திறந்து சுந்தரமூர்த்தி சிரித்தான். ராத்திரி இருந்த உற்சாகத்தில் இன்னும் தூங்குவான் என்று எதிர்¢ பார்த்தேன். கையில் சிகரெட்டுடன் வந்தான். குளித்து முடித்திருந்தான் என்பதும், ஏதோ எழுதிக் கொண்டி ருந்தான் என்பதும் புரிந்தது.
“ நடராஜ்..! ராத்திரி நீ எங்கூட வந்திருந்தால் நாந்தான் வெளியில் உட்கார்ந்து நாவல் படிச்சிட்டிருந்திருப்பேன் “
“ என்னடா என்ன நடந்தது.. என்ன விசயம்.. போல¦ஸ் ரெய்டு ஏதாவது நடந்துச்சா.? “
சிகரெட்டை அணைத்தான். சிரிப்பு மாறாமல் சொல்ல ஆரம்பித்தான். கதை சொல்லும் தொனியை வர வழைத்துக் கொண்டான்.
“ ரிக்ஷாவில ஏறினோமா.. மெயின் ரோட்டில இருந்து வடக்குப் பக்கம் திரும்பி குறுகலான சந்துகளுக்குள் நுழைந்தது. ஒன்னரை அடி உயரமான மதில்களின் மேல் கூரைகள். சுற்றிலும் கூரை வீடுகள். நடுவில் ஒரு முற்றம் போல.. நுழையும் போது சாராய நெடி. ஒவ்வொரு கூரை வீட்டிற்கும் இரண்டு வாசல்கள். ஒன்றின் வழியாக நுழைந்து மறு பக்கத்தின் வழியாக வெளியேறி விடலாம். ரிக்ஷாவில் போகும் பொழுதே நூறு ரூபாயை வாங்கிக் கொண்டாள். படுக்கை தலையணைக்காக அங்கிருப்பவனிடம் இருபத் தைந்து ரூபாய் தந்து விட வேண்டும் என்ற தகவலையும் சொல்லி விட்டாள். இருபத்தைந்து ரூபாய் கொடுத்து கூரைவீடுகளின் நடுவில் இருந்த முற்றத்தை அடைந்த பொழுது, என்னை நிறுத்தி விட்டு ஒரு வீட்டிற்குள் நுழைந்து பாய் ஒன்றை விரித்துப் போட்டாள் அவள். அந்தப் பாயின் ஓரத்தில் ஒரு தலையணை ஒன்று வந்து விழுந்தது. அதில் இனிய கனவுகள் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கனவுகள் யாருக்கு என்று நினைத்துக் கொண்டிருந்த போது .. “
“ என்னடா சுந்தா .. ரிப்போர்ட்டா இது ..? “ நான் கேட்டபோது , “ ஆமாம் ரிப்போர்ட் தான், குறுக்கே பேசாதே . ஏமாந்து திரும்பிய ஒரு அபலை ஆடவனின் சோகக்கதை“ என்று சொல்லி விட்டு மேலும் சிரித்தான். தொடர்ந்து சொன்னான்.
“ உள்ளே இருந்து ஒருத்தி வந்தாள். அவளின் அக்காவாக இருக்குமோ என்று நினைத்தேன். என் கையைப் பிடித்து அழைத்துப் போனாள். பாயில் உட்கார வைத்தாள்.உள்ளே போனவளை எதிர் பார்த்து அந்த வாசலைப்பார்த்து விட்டுப் பார்வை யைத் திருப்பிய போது அருகில் நின்ற அந்தப் பெண் சேலையை கலைந்து விட்டு நின்றாள் “
“ அந்தப் பெண் என்ன ஆனாள்..? “ கேட்டான் நான்.
“ இதையே தான் நானும் கேட்டேன்,”அவளோ நிதானமாகச் சொன்னாள். அந்தப் பெண்ணோ, “அவளது வேலை முடிஞ்சு போச்சு; அத்தோட அவளுக்குப் பரீட்சை இருக்கு. “ என்றாள். “ இந்த இடத்திற்கு ஆண்களை அழைத்து வருவது மட்டுமே அவள் வேலை. ஒரு நாளைக்கு மூணுல இருந்து ஐஞ்சு பேர் வரைக்கும் கூப்பிட்டு வருவா. அதுக்கு அவளுக்குக் கமிஷனெக் கொடுத்துருவோம். நிதான மாகச் சொன்ன அவளின் கைகள் மற்ற ஆடைகளைக் களைவதிலும் இறங்கி இருந்தன. ”
“ வேண்டாம் . தயவு செய்து உங்கள் ஆடையை உடுத்திக் கொள்ளுங்கள் என்றேன். அவள் சிரித்தாள். நான் வந்து வலிய வந்து கூப்பிட்டாலும் நீ வரமாட்டேங்கிறது எனக்குத் தெரியும்யா.. சரி சரி வந்தது வந்துட்டே.. ஒரு ஐம்பது ரூபாயக் கொடுத்துட்டு வந்த ஜோலியெ முடிச்சிட்டு நடையக் கட்டு” என்றாள் அந்தப் புதிய பெண். அவளுக்கு வயது முப்பதுக்கு மேல் இருக்கும். ஆனால் களைப்புற்ற உடல். அலுப்பான பேச்சு.
டைம் பிளீஸ் என்றவள் கண்ணில் படுவாளா என்று தேடினேண். தென்படவில்லை. புத்தகத்திற்குள் வைத் திருந்த ஐம்பது ரூபாயை எடுத்து இவளிடம் கொடுத்து விட்டு வெளியே வந்தேன்.. நான் போன ரிக்ஷாவே நின்றிருந்தது. ஏறி உட்கார்ந்து லாட்ஜ் பேரைச் சொன்னேன்.
வேகமாக ஓட்டினான் ரிக்ஷாக்காரன். என்னிடம் எதுவும் பேசவில்லை. அவனாக எதையோ பேசிக் கொண்டான்.. எதிரில் ஒரு ரிக்ஷாவில் ஒரு கனவான் போய்க் கொண்டிருந்தான். அந்தக் கனவானின் அருகில் ஓர் இளம்பெண். அந்தக் கனவானிடம் அவள் நேரம் கேட்டபோது பத்து நாற்பத்தி எட்டு என்று துல்லியமாகச் சொல்லியிருப்பான். எனது ரிக்ஷாவை விலகிவிட்டுப் போன அந்த ரிக்ஷாவிலிருந்து புழுக்கமும் வியர்வையும் கலவாத மல்லிகைப் பூவின் வாசமும் மோதி விட்டுப் போனது.
சொல்லிவிட்டுச் சிரித்தான் சுந்தரமூர்த்தி. ஏமாந்தது சுந்தரமூர்த்தி அல்ல; நான் தான் என்று தோன்றியது.
கருத்துகள்