கோரக்கனவைக் கலைத்தல்

 பத்மினி:

“என்னோட குரலையே நாடகத்திலெ பயன்படுத்தி இருக்கிறதாகவும், அந்தப்போலீஸ்காரப்படுபாவிங்க செஞ்ச அக்கிரமத்தெ மேடையிலெ காட்டறதாகவும் கட்டாயம் வந்து பாக்கணும்னு” நீங்க லெட்டர் எழுதியிருந்தீங்க. பாண்டிக்கு பக்கத்திலெ இருவது கல் தூரந்தான் கடலூர்.. ஆனா அப்போ வரமுடியல.. ‘ கமிஷன்’ ‘வக்கீல்’னு அலைஞ்சிக்கிட்டு இருந்தேனா.. எம்பாடே பெரும்பாடா இருந்துச்சு.. அதுக்கும் மேல நாடகம் என்ன வேண்டிக்கிடக்கின்னு வரல. இப்போ (06-02-95) மதுரைக்குக்கூடத் தற்செயலாத்தான் வந்தேன். நாடகத்தெப் பார்த்தேன்.

ராமசாமி:

பாண்டியிலெ நாடகம் நடந்தப்பவே நீங்க வருவீங்க.. நாடகம் முடிஞ்சப்புறம் ஒங்க கருத்தக் கேட்டுட்டு அதுக்கப்புறமும் திரும்பவும் ‘வார்த்தை மிருகம்’ நாடகத்தெ மேடையேத்திறதெப் பத்தி முடிவு செய்யலாம்னு நெனச்சிட்டிருந்தோம். ஆனா.. நீங்க வரல.. நாடகத்தப்பத்தின ரெவ்யூ, ‘தினமணி’யில வந்த அன்னைக்குத்தான், ‘பழனியப்பன் கமிஷன்’ ரிப்போர்ட்டும் வந்துச்சு.. ‘ மானபங்கம் செய்தார்கள்; ஆடையை உருவினார்கள்; ஆனா கற்பழிக்கப்படவில்லை’ என்பதுபோல அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. இரண்டையும் ஒன்னாப் படிச்சவுடனே நாடகத்துக்கு இன்னும் அர்த்தம் இருக்கிறதா நினைச்சோம். அதனால வாய்ப்பு கிடைச்சா திரும்பவும் போடுறதுன்னு முடிவு செஞ்சோம். மதுரை ‘தலித்’ கலைவிழாவில போட முடியுமான்னு கேட்டாங்க.. போட்டோம்.

பத்மினி:

அதுசரி.. நீங்க போட்ட நாடகம், முழுசா எனக்கு நடந்தப்பத்தி இல்லையே.. எனக்கு நடந்ததெ இப்படித்துண்டு துண்டா ஏன் காட்டுறீங்க.. அப்படியே சொன்னா போலீஸ்காரனுங்க புடிச்ச்சுக்குவானுங்கன்னு பயமா.. என்னோட குரலைப் பதிவு பண்ணின கேஸட்டெக் கூட பப்ளிக்கா போடக்கூடாதுன்னு போலீஸ் தடை பண்ணினாங்கன்னு எனக்குத் தெரியும்.

ராமசாமி:

‘ போலீஸ் புடிச்சிட்டுப்போயிடும்..’ அப்படீன்னு நாங்க யோசிக்கல… ‘ஒங்களுக்கு (பத்மினிக்கு) நடந்தது இதுதான்’னு நாடகம் போட்டு எல்லோருக்கும் சொல்லிடணும்ங்கிறதுகூட எங்க நோக்கம் இல்லெ.. இங்கெ உடல்களின் மீது பயங்கரமான வன்முறை நடத்தப்படுதுங்கிறதெ சொல்லணும். ஒங்க புருஷன் (நந்தகோபால்) ஒரு ஆம்பளையா இருந்ததினாலெ அவரெ அடிக்கிறது மூலமா – சாகிற வரைக்கும் அடிக்கிறது மூலமா அவங்கெ வெறியெ தீத்துக்கிட்டாங்க. நீங்க ஒரு பெண்ணுங்கிறதுனால, அவங்க வெறியெ வேறெ மாதிரி தீத்துக்கிட முடியுது.. ஒருசில இடங்கள்லெ நுழையெ விடாமெ தடுக்கிறது மூலமா.. ஒரு உடலின் இயங்கும் வெளியைக் குறுக்கிடறது மூலமா உடல்களின் மீது வன்முறை பாயுது.. அதுக்குக் காரணமா நம்மெ சாதிக்கட்டமைப்பு இருக்கு.

பத்மினி:

அது உண்மெதான். கோயிலுக்குள்ளாற விட மாட்டாங்க.. கிணத்தில தண்ணி எடுக்கவிட மாட்டாங்க. தெருவுல கூட செருப்பு போட்டுட்டு போகமுடியாது. துண்டெ தோள்ல போட்டு நடக்கமுடியாது

ராமசாமி:

அதுவாவது பழைய நடைமுறைன்னு சொல்லி நீட்டிக்கிறாங்கன்னு சொல்லலாம். கிராமத்து டெண்ட் கொட்டாயிலெ பெஞ்சு டிக்கெட்டெ தாழ்த்தப்பட்டவங்களுக்கு கொடுக்கிறதில்லையே. அந்த நேரத்திலெ உங்களுக்கு நடந்ததெப் பல்வேறு விதமா .. கொச்சையா எழுதி சந்தோசப்பட்ட
பத்திரிகைகள் எல்லாம் உண்டு.’ பத்மினி’ங்கிறவ ஒன்னும் ‘புனிதமானவெ இல்ல; அதனால போலீஸ் கற்பழிச்சிட்டாங்கன்னு சொல்றது தேவையில்லைன்னு கூட எழுதினாங்க. அப்படி எழுதுறவங்ககூட ஒருவிதத்தில அந்தக் கொடுங்கனவில பங்கேற்கிறவங்கதான். எழுதினதப் படிச்சிட்டு, ஆமா இந்த மாதிரிப் பொம்பளங்ககிட்டெ ‘போலீஸ்’ அப்படி நடந்துகிட்டா என்ன தப்புன்னு ஒருத்தனோ ஒருத்தியோ மனசில நெனச்சாக்கூட அவங்களும் கற்பழிப்புல பங்கேற்றவங்க தான்.

பத்மினி:

என்னோட குரலையும் சேலையையும் வச்சு சமாளிச்சிட்டீங்க. அந்த பாத்திரத்தெ நடிக்க யாரும் தயாரா இல்லையோ..

ராமசாமி: அந்தச் சேலையையும் ஒங்க குரலையும் மட்டும் பயன்படுத்தாமெ, ஒரு நடிகையெ நடிக்க வச்சிருந்தா, இந்த நாடகமும் அதே தப்பத்தான் செஞ்சிருக்கும். நல்ல ஒரு ‘கற்பழிப்புக்காட்சி’யெ பார்த்த திருப்தியெ பார்வையாளர்கள் அடைஞ்சிருப்பாங்க. அது எங்களுக்கு நோக்கமே கிடையாது

பத்மினி:

சாராயங்குடிச்சிட்டு வந்த புருஷனோட கொடுமை ஒன்னக்காட்டினீங்க.. சாராயங்குடிக்காத புருஷனுங்க மட்டும் ரொம்ப யோக்கியம்கிறமாதிரி.. என்னோட புருஷன் தெனம் சாராயம் குடிப்பாரு. ஆனா அதனாலெ அடிச்சாருன்னு இல்லெ.. சாராயம் குடிக்காதப்பக்கூட அடிச்சிருக்காரு

ராமசாமி:

சாராயம் குடிக்கிற புருஷனுங்க பெண்டாட்டிகிட்டெ வன்முறையா நடந்துக்கிறாங்கன்னு காட்ட நினைச்சோம்தான்.. அதுக்காகச் சாராயங்குடிக்கிறதெத் தடுக்கணுங்கிற போதனைக்குள்ளெ நாங்க போகல. கண் முன்னால நடக்கிற கொடுமைகள்ல ஒவ்வொருத்தனும் என்ன ‘ரோல்’ எடுக்கிறாங்கக்கிறதுதான் பிரச்சினை. பக்கத்து சீட்ல, பக்கத்துவீட்டிலெ, ஒருத்திக்கோ, ஒருவனுக்கோ நடக்கிற அவமானகரமான நிகழ்வுகளைப்பத்தி கருத்து சொல்றதக்கூட மனிதர்கள் நாகரீகக் குறைவா நினைக்கிறாங்க. அதிலும் ‘கலைஞர்கள்’ அந்த மாதிரியான செயல்பாடுகள் தங்கள் ‘கலைப்படைப்புக்கு’ குந்தகம் விளைவிக்கிற ஒன்னா கருதுறதுதான் இங்கே யதார்த்தம்.

பத்மினி:

இந்தமாதிரி நிகழ்வுகளெ நாடகமாப்போடுறதுனால எதுவும் நடந்துறாதுன்னு தெரிஞ்சப்பறமும் இதெ ஏன் போடணும்னு நெனக்கிறீங்க..

ராமசாமி:

‘ஒங்கபெயர் நிலைக்கும்படியா ஒரு தரமான நாடகத்தெ – மேஜர் பிளே ஒன்னெ செய்யாமெ, இந்தமாதிரி துண்டு துக்காணியெல்லாம் எதுக்குன்னு.. ஏங்கிட்டெ என்னோட நண்பர்களே கேட்டிருக்காங்க. “ நானும் என்னோட பாதையில் நடந்து வருபவனும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிப் பொதுமக்கள் அபிப்பிராயத்தை உருவாக்கக்கூடிய நாடகங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, பெரிய கிளாசிக்ஸ்களை மேடையேத்தி.. என்ன சாதனை பண்ணப்போறேன்..? அந்த மாதிரி நாடகங்களுக்குப் பவுண்டேஷன்களும், அகாடெமிகளும், நிதிநல்கும் புரவலர்களும் ஆதரவு தரக்கூடும். ஆனால் நாடகம் போடுவது இவர்களுக்காகவா என்கிற கேள்விதான் முக்கியமானது. நடிகனும் பார்வையாளனும் மகிழ்ச்சியோடு லயிப்பில் ஈடுபட்டு, கொடுத்து வாங்கி அனுபவித்து மகிழும் ரசானுபாவங்களைத் தரும் நாடகங்களை என் மனம் எப்பொழுதாவது நாடுமா என்பது சந்தேகம் தான்.

பத்மினி:

பத்திரிகையில எழுதி, மேடைபோட்டுப் பேசி, வக்கீல்களோட குறுக்கு விசாரணைக்குப் பயப்படாமெப் பதில் சொல்லி, என்னென்னமோ பண்ணியாச்சு.. என்ன பிரயோசனம்.. விசாரணைக்கமிசன்ங்கிற பேர்ல எல்லாத்தையும் குழிதோண்டிப் புதைக்கிறாங்க.. இப்போ நாடகமாப்போட்டு என்ன ஆகிடும்கிறீங்க..

ராமசாமி:

நாடகம் போடுறதுனால உங்க பிரச்சினையில் ஏதாவது தீர்வு கிடைக்குமாங்கிறது இல்ல. நீங்க சந்திச்ச விசாரணைக்கமிசனே ஒரு மேடை நிகழ்வுதான். அவங்களே உண்டாக்கித் தர்ற வெளியில – அவங்க தர்ற எல்லைக்குள்ள நின்னு நீங்க பேசியிருக்கீங்க. அந்த ‘வெளி’யில முடிவு சொல்ற அதிகாரம் நீதிபதிக்கு இருக்கு. ஆனா நாங்க அந்த அதிகாரத்த பார்வையாளர்கள் கிட்டெ விட்டுடுறோம். சொல்லப்போனா அங்க தடை செய்யப்பட்ட விசயங்களைச் சொல்ற வெளியா எங்க நிகழ்வை அமைக்கிறோம். அந்த விதத்தில இது ஒரு விசாரணைக்கமிசனா மாறிடுது. நாடகத்த பார்த்த பார்வையாளர்கள் ‘ குற்றவாளிகள்’ யாருன்னு புரிஞ்சுப்பாங்க. அவங்க தர்ற தண்டனை என்னன்னு உடனடியா சொல்லமுடியாது. விசாரணைக்கமிசனோட எடத்த நாடகமும், நாடகத்தோட எடத்த விசாரணைக்கமிசன்களும் கைப்பற்றிக்கொள்ளுதல் தவிர்க்க முடியாததா மாறணும்..

[ ரவிக்குமார் எழுதி, அ.ராமசாமி இயக்கிய ‘வார்த்தை மிருகம்’ புதுவை, கடலூர், மதுரை ஆகிய இடங்களில் மேடையேறியுள்ளது. நாடகப்பள்ளி மாணவர்கள் நடித்த அந்த நாடகம், வழக்கமான மேடையேற்றங்களின் பாணியைப் பின்பற்றியதல்ல.


வார்த்தை மிருகம்

   

நாடகவடிவம்:ரவிக்குமார்/இயக்கம். அ.ராமசாமி

 

பாத்திரங்கள்   

பேச்சாளன்     

ஓவியன்           

எழுத்தாளன்    

பத்மினி

நந்தகோபால்   

ரவிச்சந்தர்       

சரஸ்வதி          

அமுதா 

இன்ஸ்பெக்டர்

போல¦ஸ் 1,2   

போல¦ஸ் 3,4   

குழுவினர்

 

காட்சி-1

மேடை இரண்டாகப் பிரிக்கப்ட்டிருக்கிறது நடுமேடை மையத்தில் இந்தியச் சூழலில் மனித உரிமைகளும் குடியுரிமைகளும் என எழுதப் பட்ட துணிப் பதாகை கட்டப்பட்டுள்ளது.

இடது மையத்தில் ஓவியக்காட்சி என்பது அம்புக்குறிப் பலகையில் எழுதப்பட்டுள்ளது.பின் இடதில் குடுவைகளும் தூரிகைகளும் ஓவியம் வரைவதற்கானச் சட்டகங்களும் இருக்கின்றன. மனிதனின் வெளிப்புறக்கோடுகளை ஒருவன் வரைந்து கொண்டிருக்கிறான் வெளிச்சம் அவன் மேல் அதிகம் படரவில்லை. எங்கிருந்து வருகிறது என்று தெரியாத நிலையில் குரல் வருகிறது. அந்தக் குரலைக் கேட்பவன் போல வரைவதை நிறுத்திவிட்டுக் காது கொடுக்கிறான்.

 

தெளிவற்ற நிலையில் நாம் எதை எடுத்துக் கொள்வது ?

எதில் நாம் கவனத்தைக்குவிப்பது?  மனித உரிமைகளுக்கா...?

குழப்பத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்..

இந்தியாவில் நிலவும் ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற

நிலையில்-அதன் குடிமகன்களில் ஒருவர் என்ற நிலையில் - அரசியல் சட்டம் தரும் குடியுரிமைகளுக்கு முன்னுரிமை  தரவேண்டியவர்களாக  இருக்கிறோம். குரல் தேய்ந்து மறையும்பொழுது அவன் வரைந்து வைத்திருந்த ஓவியங்களின் மேல் ஒளி படர்ந்து நகர்கிறது

 

 

காட்சி-2

வலது மையத்தில் பேச்சாளர் முகத்தைத் துடைத்துக் கொண்டு :

                    மன்னிக்கவேண்டும், ரொம்ப நேரமாப் சிக்கிட்டிருக்கேனில்ல.

                    இந்த ஒரு பக்கம் தான் முடிஞ்சிடுது. அவருக்குப் பின்னால் இருக்கும் பேனரில் HUMAN RIGHTS AND CIVIL RIGHTS IN INDIAN CONTEXT என்று எழுதப்பட்டிருக்கிறது

மேஜையில் டம்ளர்களில் தண்ணீர். அவற்றிற்குப் பின் மூன்றுபேர்.ஒருவர் பெண்.

          பேச்சாளர்:    நான் இங்கே விவரித்த மரணங்கள் எல்லாமே வெறும்புள்ளி விவரங்களாகிப் போய்விட்டன. இவற்றில் இறந்து போனவர்களுக்குத் தாங்கள் ஏன் இறந்தோம்; எதனால் கொல்லப்பட்டோம் என்பது தெரியாது,மிகவும் கொடுமையானது அவர்களது பெயர்கள் என்னவென்று கூடத்தெரியாது.

                                      (வெளிச்சம் குறைகிறது.குரல் மட்டும்)

இங்கே கூடியிருக்கும் அறிவுஜீவிகளாகிய நமக்கு இப்படி நம்மைச் சூழவும் நடக்கிற வன்முறை பற்றித் தெரியாமலா போய்விட்டது.? இவற்றைத்தடுக்க  முடியவில்லையே என்பதில்.. மௌனமாக இருப்பதால் நாமும் இந்த வன்முறைகளின் பங்குதாரர்களாக இருக்கிறோமே என்று உணர்வதில் உறுத்தாமலா போய்விட்டது.

 திரும்பவும் பேசுபவரின் வெளிச்சம்

                    உம்பர்ட்டோ ஈக்கோ என்ற அறிஞரும் மேலும் சுமார் நாற்பது அறிஞர்களும் ஒருமுறை  ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் நவநாஜிகளின் பெருக்கத்துக்கு எதிராக அந்த அறிக்கை, நாஜிகளது கூட்டங்கள், பத்திரிகைகள் போன்றவற்றில் பங்கெடுப்பதில்லையென அறிவித்தனர். 

சகித்துக் கொள்ளமுடிவதற்கும் சகித்துக் கொள்ளமுடியாததற்கும் இடையிலான எல்லைக்கோட்டை வரைந்து கொள்ள வேண்டிய அவசியத்தை  அவர்கள்  குறிப்பிட்டுள்ளனர். உலக  அளவில் சகித்துக் கொள்ள முடியாதது என்பதை எந்த  அடிப்படையில் விளக்குவீர்கள் எனக் கேட்டபோது  உம்பர்ட்டோ ஈக்கோ சொன்னார்.

.பேச்சாளர் இருட்டில் இருக்கிறார்

உடலுக்கு தரப்படும் மரியாதையின் அடிப்படையில்தான் இதைத் தீர்மானிக்கவேண்டும். உடலுக்கும் அதன் செயல்பாடுகளுக்கும் தரப்படும் மரியாதையை வைத்துத்தான் இதற்கான  அறத்தை ஒருவர் உருவாக்க முடியும். ஒருவரை ராத்திரியில் தூங்கவிடாமல் அடிப்பது , அவரைத்தலைகீழாகக் கட்டித் தொங்க விடுவது .. இதனைச் சகித்துக் கொள்ள முடியாத சித்திரவதைக்கான ஓர் உதாரணம் என்று சொல்லலாம். பிறரை இயங்கவிடாமல் செய்வது; பேசமுடியாமல் ஆக்குவது ; இவையும் சகித்துக் கொள்ளமுடியாதவைகள்தான்.

(கற்பழிப்பு பற்றிய செய்திகள் நிரம்பிய செய்தித்தாள்களால் ஆன சுவரொட்டி ஒன்றைச் செய்து வைத்துள்ளார்-

வாச்சாத்தி- ராமேஸ்வரம்- அத்தியூர்-- பத்மினி-- என அதன் மீது ஒளி நகர்கிறது.

கற்பழித்தல் என்பதும் ஒருவரது உடலுக்குச் செய்யப்படும் அவமரியாதைதான். எல்லாவிதமான நிறவேற்றுமைகளும், ஒதுக்கல்களும் முடிவாகப் பிறரது உடலை மறுத்தல் என்றுதான் பொருள்படும். அறவியல் கோட்பாடுகளின் ஒட்டுமொத்த வரலாற்றையும் உடலின் உரிமைகள், உடலுக்கும்   உலகத்திற்கும் உள்ள உறவுகள் என்பதன் அடிப்படையில் ஒருவர் வியாக்கியானப் படுத்தி விடமுடியும் என்றார் ஈக்கோ.சகித்துக்கொள்ளக்கூடாதது என்பதுபற்றிய எல்லைக் கோட்டை எப்போது வரையப் போகிறோம்..

 

காட்சி-3

=========

ஓவியக்கூடம்:

-------------------------------

கலவையாகி அரைநிலைப்படமாக கேன்வாஸின் . அருகில் ஓவியன். மேஜையில் புத்தகங்கள் பைல்களைப் புரட்டியபடி இன்னொருவர் –அவர் எழுத்தாளர். மெல்லிய இசை பரப்பும் பாக்ஸ் . குடத்தில் தண்ணீர். ஆஸ்றே மீது புகையும் சிகரெட், ஜன்னல் திரைகளின் படபடப்பு. ஓவியத்தின் அருகிலிருந்து சிகரெட்டைக் கையிலெடுத்துக் கொண்டு ஓவியனும் எழுத்தாளனும் உரையாடுகின்றனர்.

       ஓவி: இதை நீங்கதான் எழுதணும்னு தோணிச்சு. சொல்லப் போனா நீங்கதான் இதை எழுத முடியும்

       எழு: வண்ணங்கள் சொல்ல முடியாததை வார்த்தைகள் சொல்லிட முடியுமா என்ன .         

       ஓவி: ஆனா.. பேஸிக்கல்லி வீ யார் வெர்பல் அனிமல்ஸ் இல்லையா..?

       எழு: இருக்கலாம் . ஆனா நிறங்களுக்கு மொழியைப்போல எல்லைகள் குறுகியது கிடையாது.

       ஓவி: அப்படித்தான் நாம நம்பிக்கிட்டிருக்கோம். கலாசாரம்தான் நிறங்களோட அர்த்தத்தைத் தீர்மானிக்குது. சிவப்பு

என்கிற நிறம் துணிவு, ரத்தம் என்கிறவிதமா ஆப்கானிஸ்தான், இத்தாலி, பல்கேரியா, சிலே போன்ற நாடுகளில் அர்த்தமாகுது. ஆனா.. பொலிவியாவில சிவப்பு நிறம் மிருகங்களைக் குறிக்குது ; எத்தியோப்பாவில சிவப்புன்னா நம்பிக்கைன்னு அர்த்தம்.  நான் ஏன் ஒரு ஸ்கிரிப்ட் வேணும்னு சொல்றேன்னா வார்த்தைகள் தான் வலிமையைத் தீர்மானிக்குது. இத்தாலி நாட்டு எழுத்தாளன் த்ரியோஃபோ சொன்னான்:

தொழிலாளிக்கு நூறு வார்த்தைகள் தெரியும்னா முதலாளிக்கு ஆயிரம் வார்த்தைகள் தெரியும் . அதனாலதான் அவன் முதலாளியா இருக்கான்.அதனாலதான் சொல்றேன். என்னைப் போல ஓவியனைவிடவும் உங்கள மாதிரி எழுத்தாளர்கள் செய்யவேண்டியதுதான் அதிகம். ஜனங்களோட வார்த்தைகளை அதிகமாக்குங்க.. இந்த வன்முறை எல்லாத்தையும் முடிவு கட்டுற மாதிரி வார்த்தைகள்

வேணும். இதைச் செய்ய வேண்டியது தான் உங்களோட வேலை.

ஓவியன் தரும் ஓவியங்கள் ஒவ்வொன்றையும் வாங்கிப்பார்த்து எழுத்தாளன் அடுக்கிக் கொள்கிறான்.ஓவியன் பிளாஸ்கிலிருந்து டீயை ஊற்றிவிட்டு கேஸட்டை மாற்றுகிறான் . அதிரும் டிரம்ஸ் ஒலியின் அளவைக் குறைத்து விட்டுத்திரும்பவும் டீயை எடுத்துக் கொள்கிறான்.தேநீர்க் கோப்பையை வைத்து விட்டு சிகரெட்டைப் பற்றவைத்து இழுக்கிறான்.இரண்டு மூன்று தடவை இழுத்துப் புகையை விட்டபடி யோசிக்கிறான். சிகரெட்டை ஆஸ்றேயில் நசுக்கியபடி:

எழு: எழுதிடலாம்னு தோணுது . ஆனா அது ஒரு கட்டுரையா இருக்குமாங்கிறது சந்தேகம்தான்.

ஓவி:அது உங்க விருப்பம் .எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது.

எழுத்தாளனின் கைகளும் சிகரெட்டை நசுக்குகிறது. கண்ணாடியைக் கழற்றி கவரில் போடப்போனவவன் ஏதோ

ஞாபகமாய் பையைத்துளாவி ஆடியோ கேசட் ஒன்றை எடுத்துத் தருகிறார்.

எழு: இதை என்னோட நண்பர் ஒருத்தர் அனுப்பியிருக்கார். நேற்று வந்தது. கேட்டு பாருங்கள்.

இசையை நிறுத்தி விட்டு கேஸட்டைச் சொருகிறார் ஓவியர். எழுத்தாளர் ஓவியங்களை புரட்டிக்கொண்டிருக்கிறார்.ஒரு ஓவியத்தைத் தொடரநினைத்து அதனருகில் சென்று தூரிகையை எடுத்துக் கொள்கிறார். ஒலிநாடாவிலிருந்து வார்த்தைகள் வருகின்றன.

 

வெளிச்சத்தில் டேப்ரிகார்டர். அந்த அறையில் இருவரும் நிழல்களாக உறைந்த நிலை.ஒலிநாடாவின் ஒலி மெல்ல மெல்லக் குறைய கலைந்து டேப்ரிகார்டர் ஆட்டோவாக மாறுகிறது. டேப் ரிகார்டரிலிருந்து வெளிச்சம் ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிப் பெட்டிகளின் மேல் தங்கியிருக்கும் போது

·        அன்னைக்கி நடந்த சம்பவத்தை அப்படியே கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்கம்மா. என்ன நடந்துச்சு.. எப்போ கூட்டிக்கிட்டுப் போனாங்க.. எல்லாத்தையும் சொல்லுங்க..வீட்டுக்காரரெ கூட்டிக்கிட்டுப் போனதையா.. இல்ல.. என்னைக்கூட்டிக்கிட்டுப் போனதையா.. எல்லாம் ஆரம்பத்திலேயிருந்து சொல்லுங்க. வீட்டுக்காரரெ என்னைக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க...?

 வெள்ளிக்கிழமை ராத்திரி மூனு மணிக்கு..மூனு.. மூனரை இருக்கும்.வீட்டில படுத்திக்கிட்டு இருந்தோம். ஒரு ஆறேழு போலீஸ்காரங்க வந்து இறங்கினாங்க. இறங்கி வந்து பக்கத்துவீட்டுப் பொம்பளகிட்டெ வந்து , ' இது நந்தகோபால் வீடான்னு' கேட்டாங்க. அவங்கவந்து இந்தவீடு இல்லேன்னு சொல்ல எங்க வீட்டெக் காண்பிச்சி விட்டாங்க. தூங்கிக்கிட்டிருந்த என்வீட்டுக்காரரை அந்த பாய் போலீஸ்காரர் முடியப்பிடிச்சி தூக்கி எழுப்பினாரு..

 

காட்சி-4

இரவுக்கான ஒளியமைப்பு - குடிசை வீட்டுக்கான அரங்க அமைப்பு அலறலுடன் ஆட்டோ.. தொடரும் பைக்  பாதி மட்டும் நபர்கள் தெரியவேண்டியதில்லை. வாகனங்கள் நிற்க பூட்ஸ் அணிந்த கால்கள் இறங்குகின்றன..விசில். தடியால் குடிசைக்கதவைத்தட்டும் போலீஸ். அறைந்து சாத்தப்படும் ஓசை.

குரல் மட்டும்

 பெண்:           ஏன்சார் இழுக்கிறீங்க..

 போலீஸ்:      ரெண்டுபேரப் புடிச்சு வச்சிருக்கோம். சந்தேகமாயிருக்கு.                  விசாரிச்சிக்கிட்டுக் காலையில விட்டுடுறோம். அடிகள் விழுகின்றன .ஆண் ஆட்டோவிற்குள் திணிக்கப்படுகிறான் குடிசைக்குள்ளிருந்து பெண்ணின் ஓலம். அந்த அழுகையை அமுக்கிவிட்டு பைக் -ஒலி- ஆட்டோ சக்கரம் சுழற்சி. ஒலி மட்டும் .. கதவு மட்டும்

             போலீஸ் .1: ஏய் ஆளு எப்படி இருப்பா..

             போலீஸ். 2: ஆள் நல்லாத்தான் இருப்பா..

             போலீஸ். 1: மூஞ்சில லைட் அடிச்சு பார்த்தியா..

ஸ்டேஷன் அறையில் நான்கு போலீஸாரின் நடுவில் அவன் கிடக்கிறான்.பந்தாடப்பட்ட நிலை. சுற்றிலும் நிற்கும் கால்கள் மட்டும் தெரிந்தால் போதும். பூட்ஸ் கால்கள். அறையைச் சுற்றி வரும் காமிரா.துப்பாக்கி, கைவிலங்கு, தொப்பி, சிறைக் கம்பி, காவல் என்ற போர்டு மீதெல்லாம் ஒளிபடுகிறது. நகரும்போதெல்லாம் அடி விழுகிறது..

தலைமயிரைக்கொத்தாகப் பிடித்து தூக்கி முகத்தில் தண்ணீர் அடிக்கின்றனர்.தலைமயிரைப் பிடித்த கை விடும்பும்பொழுது அப்படியே விழுகிறான். அவனது வேட்டியும் பனியனும் அவன்மீது வீசப்படுகிறது. இப்போது திரும்பவும் ஒலிபெருக்கிப் பெட்டியின் மீது ஒளி வெள்ளம்.   

மத்தியானம் ஒரு மணி இருக்கும். அந்தப் பாய் போலீசும் , கிழப்போலீஷும்  வந்தாங்க.தூங்கிக்கிட்டு இருந்த என்னை அவங்க கையில இருந்த தடியால   படார்னு சூத்தாம்பட்டையில அடிச்சாங்க..

நான் அலறி அடிச்சிக்கிட்டு எழுந்தேன். என்னால முடியல. என்னை அடிக்காதீங்க, அடிக்காம கேளுங்க சொல்றேன்னுசொன்னேன். ஆனா அவரு என்னடி சொல்றேன்னு கோபமா  கத்திக்கிட்டு காலைப்பிடிச்சு பரபரன்னு வாசலுக்கு இழுத்துக்கிட்டு வந்தாரு.. அப்புறம் அவங்களே கதவைச் சாத்திட்டு, என்னை அடிச்சு ஆட்டோவில ஏறச்சொன்னாங்க. அப்போ ரெண்டு ஆட்டோ வந்திருந்திச்சி.. ஒரு ஆட்டோவில நாலு போலீஸ் காரங்களும், இன்னொரு ஆட்டோவில  எங்க வீட்டுக்காரரும் சுப்பிரமணியமும் இருந்தாங்க.நான் அந்த  ஆட்டோவில உட்கார்ந்துக்கிட்டேன். போகும்போதே ஸ்டேஷனுக்கு வாடி உன்னைக் கவனிச்சிக்கிறேன்.. இனிமே உன்னை விட்டாத்தானேன்னு என் வீட்டுக்காரர் முன்னாலேயே திட்டிக்கிட்டே வந்தாரு..


ஸ்டேஷனுக்குப்போனதும் என் வீட்டுக்காரரையும் சுப்பிரமணி யத்தையும் அடிச்சு  லாக்கப்பிலே தள்ளிட்டாங்க. என்னை அடிச்சி உள்ளே இழுத்துக் கிட்டு   போனாங்க. வலிதாங்க முடியாம கதறிக்கிட்டே அங்கே இருக்கிற            போலீஸ்காரங்க கால்லே போய் விழுந்தேன்.. என்னை அடிக்காதீங்க' ன்னு சொன்னேன். அதுக்கு அந்தப் போலீஸ்காரரு ஒன்னுமே சொல்லல. அப்புறம்  அவங்க என் ஜாக்கெட்டப் புடிச்சி அது கிழியற வரைக்கும் அடிச்சாங்க.

=================

   காட்சி. 5. ஓவியக்கூடம்- பகல்.

===================

பெண்ணின் அழுகுரல் டேப்பிலிருந்து வருகிறது.கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஓவியர் திகைப்புடன் எழுகிறார்.

கேஸட் முடிந்திருக்கிறது.

 

                ஓவியர்:   யூதர்களை நல்லபடியாகத்தான் நடத்தறோம்னு காட்டுறதுக்காக ஒரு பிரசாரப் படம் எடுத்தானாம். வதைமுகாமிலயிருந்து எல்லா யூதர்களையும் அழகழகான ஆடைகளை உடுத்தி பூச்செண்டெல்லாம் கொடுத்து அழைச்சிட்டு வந்து படம் எடுத்து முடிஞ்சதும் கேஸ் சேம்பர்ல போட்டுக் கொன்னாங்களாம்..இதெயெல்லாம் கேக்கிறப்போ இந்தமாதிரி ஓவியங்கள், கட்டுரைகள் இதெல்லாம் வேஸ்ட்டுன்னு தோணுது. இந்தப் பொண்ணு போலீஸ் செஞ்ச கொடுமைகளைச் சொல்றா..  

கேஸட்டை வெளியே எடுத்தபடி

வன்முறை கூடாதுன்னு நான் ஒரு படம் வரையலாம். நீங்க ஒரு கதை எழுதலாம். இன்னும் ஒருத்தர் மைக்ரோபவர்ன்னு கட்டுரை எழுதலாம்.

                 எழுத்தாளர்:    நீங்க சொல்றது சரிதான். ஒருவிதத்தில நாம வரையறதும் எழுதுறதும் வன்முறைக்குத் தகவமைக்கிறதா மாறிக் கிட்டிருக்கோன்னு கூடத்தோணுது. ஆனாலும் நாம இதைச் செய்யத்தானே வேண்டியிருக்கு..எதுக்குமே ஒரு விதமான  விளைவுகள் மட்டும்தானா இருக்கு. இன்னொரு விதமாக்கூட இது செயல்பட முடியுமில்லையா..கேஸட் திருப்பிப் போடப்படுகிறது. ஓடத்தொடங்கும்போது ஓவியர் ஓவியம் ஒன்றை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

எழுத்தாளர் புகைத்தபடி கேஸட் சுழல்வதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

கேஸட்டிலிருந்து குரல் : ராத்திரி ஒன்பது மணி இருக்கும். ரோட்ல யாரும் போகல. அந்த போலீஸ் ஸ்டேஷன்ல

முற்றம் மாதிரி இருக்கு. அந்த இடத்துக்கு என்னைக் கூட்டிக்கிட்டுப் போயி என் வீட்டுக்காரரை அங்கேயே கூட்டிக்கிட்டு வந்து அடிச்சாங்க..

================== ==================

காட்சி-6 போலீஸ் ஸ்டேஷன்- இரவு

================== ==================

  ஆண் பின்புறம் தெரிய ஜன்னல் கம்பிகளில் கட்டப்பட்டுள்ளான். இடுப்பில் டவுசர் மட்டும்.உடம்பெங்கும் தடியால்

வீங்கிய காயங்கள்.கணுக்காலுக்கு மேல் உள்ள சதையில் அடிபோலீஸ் உதை.லத்தியால் முதுகில் அடி .ஒரு போலீஸ்காரன் தண்ணீர் தருகிறான். அவன் கையிலிருந்து குடிக்கும்போது வெறியோடு பார்க்கிறான். அந்த ஆண்

                   பெண் : அடிக்காதீங்க .. உங்களுக்கு பாவபுண்ணியம் இல்லையா.. 

            ஆண்  : தண்ணி..தண்ணீ..

                   பெண் : உடம்பு கறியாக் கிடக்குதே.. இன்னும் அடிக்கிறீங்களே..

                   ஆண்  : தண்ணி..தண்ணீ..

                   பெண்  : அவருக்குத் தண்ணி குடுங்க சாமி....

சேலை உருவப்படுகிறது. அவன் வாயிலிருந்து நீரைக்கொப்பளித்து போலீஸ்காரன் மீது துப்புகிறான். கோபம் கொண்ட போலீஸார் சேர்ந்து அடிக்கின்றனர். இன்ஸ்பெக்டரின் முதுகு தெரிகிறது. அவது காலிடுக்கில் அவளது முகம். அவனது கையில் சேலையின் நுனி. .

                 ஆண்: ஐயோ.. ஐயா அவள விட்டுடுங்கய்யா...

ஆறு கால்களுக்கு இடையில் அவள் தலை கவிழ்ந்து கூந்தல் கலைந்து.

             ஆண்: (குரல் மட்டும்) அவள ஒண்ணுஞ் செஞ்சிடாதீங்கய்யா..

மிரண்டு விளிக்கும் கண்களில் கண்ணீர்

              ஆண்: நாங்க எதுவுமே செய்யலீங்கய்யா..

சேலையை உருவும் கையாலேயே இன்ஸ்பெக்டர் அவளைத்தூக்கி அணைக்கிறான். அவள் திமிறுகிறாள்

           போலீஸ் : ஏய் நாங்க சொல்றா மாதிரி செஞ்சீன்னா உன்னையும் உன் புருஷனையும் விட்டுடுவோம்.    

இன்ஸ்பெக்டர் கைதட்டி போலீஸாரை வெளியேறிச்சொல்கிறான். நான்குபேரும் போகும்போது ஐந்தாவதாக இன்ஸ்பெக்டர் தன் சட்டை, தொப்பி வாசல் ஆகியனவற்றைக் கழற்றி எறிய அவை தரையில் விழுந்து கிடக்கிறது

இன்ஸ்பெக்டர் பெண்ணின் மீது பரவிக் கிடக்கிறான் அவள்மீது இன்ஸ்பெக்டர் உடையும் தொப்பியும் கிடக்கிறது. அவள் அசைவு நிற்கும்போது உடையும் தொப்பியும் எடுத்து அணிந்து கொள்ளப்படுகிறது.

வாசல்வழியே இன்னொரு போலீஸ் உடை தொப்பி அவள் மீது விழுகிறது. அலறல்- அசைவு-நிலை

வெளியே உடை , தொப்பி அணிதல் மேலும் ஒரு உடை, தொப்பி அவள்மீது; வெளியே உடை மாற்றுதல் இன்னும் ஒரு உடை அவள் மீது; வெளியே உடை மாற்றம். காவல் என்ற போர்டிலிருந்து வெளிச்சம் விலகி மேஜையின்மீது இருக்கும் சாராயப் பாட்டில்களில் விழுகிறது.

போலீஸ்காரர்களின் முகம் எப்பொழுதும் தெளிவாகத்தெரிய வேண்டியதில்லை.ஒரு போலீஸ்காரன் கையில் உள்ள பாட்டில் மூடியைச் சுழற்றிவிடுகிறான். கேஸட்டிலிருந்து வார்த்தைகள் ஒலியாக வருகின்றன.

அந்தக் கிழப்பொலீஸ்காரன் ஒரு துண்டுக் கழியெ எடுத்திட்டு வந்து 'இம்மாம்பெரிசு போவுமா'ன்னு  பச்சையா கேட்டான்.கேட்டிட்டு என்னை உயிர் நிலையிலேயே அடிச்சான்.

எனக்கு வலிக்குது, என்னை விட்டுடுன்னு கதறினேன்.

இப்பதாண்டி ஆரம்பம்னு அந்த நாலுபேரும் ஒருத்தருத்தா....

================

காட்சி-7 ஓவியக்கூடம்

================

கோபத்தோடு ஓவியன் ம்யூசிக் சிஸ்டத்தை நிறுத்துகிறான்.அவன் கையிலிருந்த தூரிகை தட்டியின் மீது வண்ணங்களைச் சிதறுகிறது.          

                         ஓவியன்:     இப்படி நடந்துக்கிட்டிருக்கு. நாமெ என்னடான்னா வண்ணங்கள் பற்றியும் வார்த்தைகள் பற்றியும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கோம்.

           எழுத்தாளர்:    (கசப்புடன் சிரித்தபடி) நான் கூடப் பள்ளிச்சிறுமிகளின் பாலியல் விருப்பங்களைப் பின்னணியாக வைத்து ஒரு நாவலை எழுதிக்கிட்டிருக்கேன். ஒருவகையில் நாமெ நம்மோட கவனத்தை திசை திருப்புவதன் மூலமா கண்ணையும் காதையும் மூடிக்கொள்ளப்பார்க்கிறோம். இன்னொரு வகையில பார்த்தால் இது நமக்கு நாமே கொடுத்துக்கிற தண்டனையாகவும் இருக்கு.

           ஓவியன்:      தையெல்லாம் கேக்குறப்போ அந்த இடத்தில நாமெ இல்லாமெப் போயிட்டோமே .. இருந்திருந்தா தடுத்திருக்கலாமே...அப்படீன்னு நாமே நினைக்கிறதில்ல..'நல்ல வேளையா நாமெ அந்த இடத்தில இல்லை என்கிறமாதிரி ஆறுதல் உணர்வு தான் தோணுது,பயம்..நமக்கே அது நடந்திருமோங்கிற பயம்.

 எழுத்தாளன்:             சரி நான் வர்றேன்..எழுத முயற்சி பண்றேன்..

   ஓவியர் வெளியில் வந்து அவரை வழியனுப்பிவிட்டு வாசலில் நிற்கிறார்.தூரத்தில் புள்ளியாக அவர் மறைவதைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து கேஸட்டைப் போடுகிறார். வார்த்தைகள் வருகின்றன.

 

    §   "சரிம்மா.. உன்னை வெளியில விட்டது திங்கட்கிழமை காலையிலயா..?
§    புதன்கிழமை காலையிலயா..?"
§   "வெளியில வரும்போது நீ உன் புருஷனப்பார்க்கலியா..?"
§   " இல்ல நான் லாக்கப்பில பார்த்தேன். அங்க யாரும் இல்ல"           
§   "யார் யாரெல்லாம் உங்களக் கெடுத்தாங்கன்னு சொல்லமுடியுமா.?. ஒரு எஸ்.ஐ நாலு
போலீஸ்காரங்களா"
§    "ஆமாம்."
§    " ஆளப்பார்த்தா அடையாளம் தெரியுமா..? "
§   " ம்....தெரியும் "   

=================

காட்சி-8

-----------

தெரு வெளியில் -இரவு.

 

எழுத்தாளர் நடந்து வருகிறார். தெருவில் ஒன்றிரண்டுபேர் .அவரைத்தாண்டிச் செல்கின்றனர். சைக்கிள் ஒன்று எதிர்ப்புறத்தில் கடந்து செல்கிறது. தெருவோரத்தில் அடுப்பு மூட்டிச் சமைக்கும் குடும்பம் ஒன்றைத்தாண்டி நின்று பார்த்துச் செல்கிறார்.

        குழந்தை:             ம்ம்.. அம்மா..

        எழுத்தாளர்:        ஏம்மா.. ஏன்.. அழுதுக்கிட்டிருக்கே..

                  குழந்தை :                   அம்மா.. அம்மா..

                 எழுத்தாளர்:                என்ன அம்மாவுக்கு என்ன..

                  குழந்தை :                   அம்மா...அப்பா...அப்பா..

அம்மாவெ கையைப் பிடித்து இழுத்துச் செல்கிறது .வெளிவாசலின் கொக்கியைத் திறக்கின்றனர்.

திரும்பவும் மூடப்படவில்லை.

    =============                

காட்சி:9

-----------

இரவு-ஒரு வீட்டின் முன் அறை

 

ஒரு இளம்பெண் வயது முப்பது முப்பத்தைந்துக்குள் இருக்கும். உட்கார்ந்து அவள் தாடையைப் பிடித்துக் கொண்டிருப்பவனின் ஒரு ஷூ உருவப்பட்டுள்ளது. அவள் இன்னொரு ஷூவை உருவிக் கொண்டிருக்கிறாள். இரண்டையும் எடுத்துக்கொண்டு போய் ஷூ ஸ்டேண்டில் வைத்துவிட்டு வருகிறாள். ஷூ வெள்ளை சாக்ஸை உருவி டீப்பாயின் வைக்கிறாள். அதுவும் வெள்ளை சோபாமீது கிடக்கும் வெள்ளை டர்க்கி டவலை உதறிவிட்டு திரும்பவும் அதன்மீதுபோர்த்தி உட்காருகிறான். டீப்பாய் வெள்ளை மதில்கள் வெள்ளை..மேஜைமீது வெண்மைநிற துணிகள் போர்த்தப்பட்டுள்ளன.டி.வி. , ப்ரீஷர். வெள்ளை மண் பொம்மை. தராசைத் தூக்கியபடி. கண்களில் கறுப்புத்துணிக்குப் பதிலாக வெள்ளைத் துணி அதன் கீழே சீவிய பென்சிலின் துகள்களும் சுருள்களும் குவியலாக- கறுப்புத் திட்டாக.

   ஆண்: இதென்ன வீடா..? குப்பமேடா.. அழுக்கு.. கறுப்பா.. ஒரே தூசி. வீட்டில ஒருத்தி எதுக்கு இருக்கியாம் ..

     அவள்: இல்லங்க.. இப்போதான் அமுதா பென்சில் சீவினா. இதோ இப்போ எடுத்துடுறீங்க. அவள் துடைப்பத்தாள் துடைக்கும்பொழுது .கதவு-பாத்ரூம் கதவு சாத்தப்படும் ஓசையால் அவள் திரும்பிகிறாள். 

குழாயிலிருந்து விழும் தண்ணீரின் ஓசை. கழுவி வைக்கப்படும் கோப்பைகள் வெள்ளை நிறக் கோப்பைகள் அலம்பிய கையில் எடுத்து காபியை கலந்து வரும் அவளது உடைகள் கூட தூக்கலான வெண்மையாகவும் மென்மையான பச்சையாகவும் பூஜை அறைக்குள் முனகும் ஒலி." வெண்ணீறு" என்பது மட்டும் தெளிவாகக் கேட்கிறது.அவன் வெளியே வரும்பொழுது வெள்ளை வேட்டி ; வெள்ளை பனியன் நெற்றி, கை , கழுத்து என திருநீறு தூக்கலாகத் தெரியவேண்டும். அவள் கொண்டுவரும் காபி கோப்பையைக் கையில் வாங்கித் தூக்கிப் பார்க்கிறான்.கழுவியதில் ஏதோபடிந்துள்ளது. காபிக்குள் காறித்துப்பி அவள் மீது விசிறி அடிக்கிறான்.அவன்: அழுக்கு .. அழுக்கு.. சுத்தம்கிறது சுட்டுப்போட்டாலும் வராதோ..கோப்பையுடன் திரும்பும் அவள் போனபின்பு விசும்பும் ஒலி மட்டும் கேட்கிறது.கோப்பையில் காபியை ஊற்றிக் குடித்துவிட்டுத் துப்புகிறாள். சிதறி வீடு முழுக்க பரவிக்கலைகிறது.

திருப்புக்காட்சி   

ஒரு வீட்டுக் கதவைத்திறந்துவிட்டு ஒருவர் ஒதுங்குகிறார். முகப்பு அறை வெள்ளைச்சுவர் வாஸ்பேஸின்,தரை, எல்லாம் வெள்ளையாகவே இருக்கிறது. அடுப்படி- கறுப்புக்கல்.பாத்ரூம்- வெள்ளை மார்பிள்ஸ்.படுக்கையறை- அலமாரிகள் என எல்லாமே வெண்மை போர்த்தியனவாக உள்ளன. 

                                      அவன்       : என்ன சரசு ..வீடு புடிச்சிருக்கா..

                                     சரசு           : ஒரே வெளிச்சமா இருக்காமாதிரி இருக்குங்க. ராத்திரியிலகூட இருட்டாகாது போல இருக்கு..

       அவன் : அப்போ புடிக்கலங்கிறீயா..

       சரசு     : அப்படிச் சொல்லல.. மதிலுக்கு வேறெ கலர்ல ஸ்நோசெம் அடிச்சிருக்கலாம்னு சொல்ல வந்தேன்.கதவு திறந்து விட்டவர் நுழைகிறார்

     அவன்   : வீடு எனக்குப் புடிச்சிருக்கு..ஆனா ஒரு சின்ன மாற்றம் செய்யணும்..

      சரசு      : என்னங்க...

     அவன்   : அடுப்படியில- சுவரில இருக்கிற டைல்ஸும் வெள்ளையா மாத்தனும்..

     சரசு       : ஐயோ வேண்டாங்க.. புகை படியும் ..    

திருப்புக்காட்சி கலைந்து முடியும்பொழுது அவள் முகம் அலம்பி பவுடர் பூசிய முகத்துடன் அவள் வருகிறாள்

அவன்         : எங்கே குழந்தையெக்காணோம்.. தெருவில திரியற கழுதங்களோட சேர்ந்து புரண்டுட்டு வந்தா.. இந்த வீடு என்னவாகும்..? புழுதியும்..குப்பையுமா .. சீ... என்ன ஜென்மமோ..போ 

    சரசு        : தோ வாராங்க..

வாசலுக்குப் பார்க்கப் போகும் அவசரத்தில் டீப்பாயின் அடியில் இருந்த விளையாட்டுச் சாமான்களைத்தட்டி விடுகிறாள்.

ஹால் முழுவதும் கோலிக்குண்டுகள் உருண்டு ஓடுகின்றன.கோபம் கொண்ட அவன் முகம் அவன்: அடி மூதேவி .. பொறுக்குடி.. பொறுக்குடீ...உருளும் குண்டுகள். அடிக்கிறான்

    அவன் : ஏண்டி முழிக்கிறே...பொறுக்குடீ..

அழுகையுடன் ஓடியோடிப் பொறுக்கிக் கொண்டிருக்கிறாள்.பொறுக்கி ஒரு டப்பாவுக்குள் போடுவதற்காக ஒரு ஷெல்பைத்திறந்து வைத்து விட்டு கோலிக்குண்டுகளைப்போட்டு மூடுகிறாள்.

      அவன் : இதெ முதல்லேயே செய்றதுக்கென்ன.. எல்லாம் கொட்டி.. நாசமாகணும்.

அவள் ஷெல்பிற்குள் வைக்க அவன் கதவைப்பட்டென்று மூடுகிறான்.அந்த ஷெல்பிற்குள் ஏதோ உருள்கிறது. உள்ளேயிருந்து இங்க் கொட்டி வழிகிறது

     அவன்: வீடெல்லாம் கறையாயிடுச்சேடீ..

மதிலில் சாரைசாரையாக..தரையில் நீலப்பாம்பாக இங்க்..

     அவள்: மதில்லே பட்ட கறையெப்போக்கிடலாம்.. ஆனா.. உங்க கையில பட்ட கறையெ போக்க முடியுமா..?  அவளது தலைமுடியைப் பற்றி இழுத்து அந்த இன்க் படிந்த இடத்தில் மோதுகிறான்.கைகளைக் காலால்  மிதிக்கிறான் கோபம் கொப்பளிக்கும் அவன் முகத்துடன் கோலிக்குண்டுகளை சிதறி விட்டு அதன் மீது அவளை எத்தித் தள்ளிவிடுகிறான். அவனது காலைக் கெட்டியாகப் பிடிக்கிறாள். அவன் எட்டி உதைக்கிறான்.உள்ளே சிறுமியுடன் நுழையும் எழுத்தாளன் - அருகில் இருந்த ஸ்டூலால் அடித்து விட்டுத் திகைக்கிறான். அழுதபடி அவள் திகைத்து நிற்கிறாள் அவன் அவளது காலடியில் கிடக்கிறான். தலையிலிருந்து ரத்தம் அவள் எழுத்தாளரின் கையைப்பிடித்து அழுகிறாள் எழுத்தாளர் குழந்தையை ஆதரவாகத் தடவுகிறார்.

===============

காட்சி: 10

------------

ஓவியக் கூடம்- பகல்

====================

எழுத்தாளரிடம் வாங்கிய பிரதியைப் புரட்டியபடி,சிகரெட்டை நசுக்கிவிட்டு 

              ஓவியர்    : ஒரு கட்டுரை போல இருக்காதுன்னு சொன்னது உண்மைதான். அந்தக்   கேஸட்டில கேட்ட குரல் உங்க ஃப்ரண்ட் ஒருத்தியப் பேசவச்சு பதிவு  செஞ்சதுன்னு சொல்றதெ இப்பக்கூட என்னால நம்ப முடியல்ல

எழுத்தாளர் : அது உண்மையில நடந்ததா இல்லையா அப்படீங்கிறது பிரச்சினை இல்ல. அன்னைக்கு அது நடக்காமெ

இருந்திருக்கலாம். நேற்றோ இன்னைக்கோ  அது நடந்துகிட்டுத்தான் இருக்கு.. நாமெ போய் கேஸட்டில பதிவு செய்யலேன்னாலும் கூட அப்படிப் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களோட வலியை வாக்குமூலமா எங்கேயோ சொல்லிக்கிட்டுத்தான் இருக்காங்க.. ஆக கதையா..நிஜமாங்கிறது இல்லெ இப்போ முக்கியம். 

            ஓவியர்       ஆமாம்.நீங்க சொல்றது சரிதான். ஒரு ஆச்சரியமான ஒற்றுமை பாருங்க.. நீங்க ஒரு பெண்ணைக் காப்பாத்தினதா எழுதியிருக்கீங்க.. பாருங்க.. அதேமாதிரி   நியூஸ்.. பேப்பர்ல வந்திருக்கு...

(தினசரி ஒன்றை எடுத்துக் காண்பிக்கிறார்)

ஒரு ஆள் கொலை செய்யப்பட்டிருக்கான். அவனோட மனைவியைப் போலீஸ் கைது செஞ்சிருக்கு.. அவங்களோட குழந்தையை சமூகசேவகர் யாரோ வந்து கூப்பிட்டிட்டுப் போயிட்டாராம்.

எழுத்தாளர்:                 (புன்னகையுடன்) நாம் வாழுகிற காலம் அப்படி..  கதை எது ? நிஜம் எது ? ன்னு பிரிக்க முடியாமக் குழம்பிப் போயிருக்கிற காலம்.

ஓவியர்       : ஆக உங்க ஓவியத்தொகுப்புக்கு இந்த ஸ்கிரிப்ட் போதுமில்லையா..?

 

ஓவியர் போதும் என்பதாகத் தலை அசைக்க எழுத்தாளர் கைகுலுக்கி விடைபெறுகிறார்

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் காலம். இயல் . 5 தமிழுணர்வு

மனுஷ்யபுத்திரன்: அவசரப்பட்டு எடுத்த முடிவு

சுஜாதாவின் அரங்கியல் பார்வை: எழுத்துப் பிரதிகளின் ஊடாக