கிராமங்களுக்குத் திரும்புதல் - சொந்த அனுபவங்கள் சார்ந்த பரிசீலனைகள்


சுற்றம்சூழ வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் அந்த அழைப்பிதழை மிக்க மகிழ்ச்சியோடு கொடுத்தார் அந்த நண்பர். அவரது சொந்தக் கிராமத்தில் நடக்கப் போகும் வைபவத்தில் உறவினர்களையும் நண்பர்களையும் பங்கேற்கச் செய்ய எடுத்துக் கொள்ளும் முயற்சி அலாதியானதாக இருந்தது. என்னைக் கட்டாயம் வரவேண்டும் என்று அழைத்தார்.


அழைப்பிதழ் கொடுக்க வந்த போது பலவற்றைப் பேசினோம். அவரது பேச்சு. கிராமத்தின் சிதைவு, விவசாயம் அழிந்து கொண்டிருப்பது பற்றியெல்லாம் இருந்தது. வெளிச்சம் வேண்டி மின்சாரத்தைக் கிராமத்திற்குக் கொண்டு போனதின் விளைவு நிலத்தடி நீரும் பாரம்பரியமான விவசாயமும் காணாமல் போய் விட்டது என்று அக்கறைப் பட்டார்; போடப்பட்ட உரங்களும் அடித்த பூச்சிக் கொல்லிகளும் மனித வாழ்வுக்கே எதிராகிப் போனது இந்தியக் கிராமங்களின் சோகவரலாறு. குளங்களும் கண்மாய்களும் தூர்ந்துவிட்டன. நானும் அவரைப் போலவே ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்தவன் . இந்த வருத்தங்கள் எல்லாம் எனக்கும் உண்டு; பகிர்ந்து கொண்டோம்.

நமது வாழ்க்கை கிராமங்களை நோக்கித் திரும்ப வேண்டும் என்று விரும்பு வதாகவும்,அதன் அடையாள மாகவே தனது மகன் திருமணத்தைக் கிராமத்தில் நடத்துவதாகவும் சொன்னார்அவரது ஆதங்கமும் செயல்பாடுகளும் இயந்திரமய வாழ்க்கைக்கு எதிராக மண்சார்ந்த வாழ்க்கையை நாடும்-வேர்களைத் தேடும் - ஒன்றின் அடையாளமாக எனக்குப் பட்டது. பொதுவாகத் திருமண விழாக்களில் பங்கேற்பதில் விருப்பம் இல்லை என்றாலும் வருவதாகச் சொன்னேன். கலந்து கொண்டேன்.

தெரு அடைக்கப்பந்தல் போட்டு விமரிசையாக நடந்தது. கிராமத்துக்காரன் என்பதால் எனக்கு ஒன்றும் புதிதாகத் தெரியவில்லை. சில நகரவாசிகள் திருமண மண்டபங்களில் உள்ள வசதிகள் இல்லையென்று வருத்தப் பட்டார்கள். என்றாலும் கிராமம் தரும் சுதந்திர வெளியில் கட்டுப்பாடுகளற்ற மனிதர்களாகக் குடித்து மகிழ்வதும் அதுவே நமது பண்பாட்டின் பகுதிதான் எனக் கருதிக் கொள்வதும் அவர்களுக்கு விரும்பத்தக்கதாகவே இருந்திருக்க வேண்டும்.

இந்த மனநிலைக்காகவே கூட நகரத்தில் குடியேறி விட்ட கிராமவாசிகளுக்கு கிராமியப் பண்பாடு பிடிக்கக் கூடும்.ஆனால் கிராமம் என்பது வந்து போகும் ஒருநாள் வாழ்க்கையும் நினைவுகளும் மட்டும் அல்ல என்பது அந்தக் கிராமத்திலேயே இருப்பவர்களுக்குத் தான் தெரியும்.

திருமணம் முடிந்து பந்தி தொடங்கியது. பந்தலுக்கு உள்ளே ஒரு பந்தியும், பந்தலுக்கு வெளியே ஒரு பந்தியும் என இரண்டு விதமான பந்திகள். உள்ளே உறவினர்களும் நண்பர்களும். வெளியே நடந்த பந்தியில் பணியாளர்கள். நண்பரின் குடும்பத்திற்குரிய வயல்வேலை, வீட்டுவேலை, எனப் பலவிதப் பணிகளைச் செய்யும் பணியாளர்களும் அந்தக் கிராமத்தின் தெருச்சுத்தம்( அருந்ததியர்), ஆடைச் சுத்தம் (வண்ணார்), முகச்சுத்தம் ( நாவிதர்) மயான வேலை (பறையர்) எனப் பல பணிகளைச் செய்த சேவைக் குழுக்களின் குடும்பங்களும் மகிழ்ச்சியாக அமர்ந்து சாப்பிட்டு முடித்தனர். நண்பர் உள்பந்தியைக் கவனித்துக் கொண்ட அதே அக்கறைகளுடன் வெளிப்பந்தியையும் கவனித்துக் கொண்டார். உறவினர்கள் மொய் எழுதிவிட்டுப் போனார்கள்; நண்பர்கள் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள். தாம்பூலப்பைகளைக் கொடுத்து அனுப்பினார் நண்பர்.

பெருமையும் குற்றவுணர்வும்

வெளிப்பந்தியில் சாப்பிட்டவர்களும் வரிசையாக வந்தார்கள். மொய் எழுத வில்லை; பரிசுப் பொருட்களும் கொடுக்கவில்லை. அது வழக்கம் இல்லை என்றாலும் நண்பர் கூடுதல் சந்தோசத்துடன் அவர்களுக்கும் தாம்பூலப் பையையும் சிலருக்கு வேட்டி சேலைகளையும் கொடுத்து அனுப்பினார். வாயாரவும் மனதாரவும் அவர்கள் வாழ்த்தினார்கள். என்னிடம் நண்பர் சொன்னார். இவர்களின் இந்த வாழ்த்திற் காகத் தான் எனது மகனின் திருமணத்தை இங்கே வைத்தேன் என்றார். அவரிடம் வெளிப்பட்ட உணர்வு பெருமிதம். அந்தப் பெருமிதம் எனக்கு ஏற்புடையதாக இல்லை; அதிர்ச்சியாக இருந்தது.

தன்னையொத்த மனிதர்களை வெளியில் உட்காரவைத்துத் தனிப் பந்தியில் உணவு வழங்குவது எந்தவிதக் குற்றவுணர்வையும் உண்டாக்கவில்லை என்பதுதான் எனது அதிர்ச்சிக்குக் காரணம்.கிராமத்திலேயே வாழ்ந்து இப்பழக்க மெல்லாம் இயல்பானது எனவும், இத்தகைய நடைமுறைகளை நிறைவேற்று வதற்கே நாங்கள் இருக்கிறோம் என நம்பும் எனது உறவினர்களின் வீடுகளில் இத்தகைய நடைமுறைகளைப் பார்த்தவன் தான் நான். அவர் களிடம் இதையெல்லாம் மாற்றவேண்டும் என விவாதித்த பொழுது அதை யெல்லாம் நீயிருக்கும் நகரத்தில் வைத்துக் கொள்; இங்கெல்லாம் அவர்களே அதற்குத் தயாராக இல்லை எனச் சொன்ன போது அரைமனதாக ஒத்துக் கொண்டு திரும்பி நகரவாசியாக ஆகிவிட்டவன் நான்.

அப்பொழுதெல்லாம் தோன்றாத அதிர்ச்சி எனக்கு இப்பொழுது உண்டானது. அதற்குக் காரணம் நண்பரிடம் வெளிப்பட்ட சிந்தனைத் தெளிவு தான். சமூக மாற்றத்தில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறார் என்பதை அவரது பேச்சு எப்போதும் உறுதி செய்யக் கூடியது. வேர்களைத் தேடும் கருத்தியலில் அவருக்கிருந்த பிடிமானம் பலரையும் ஈர்க்கக் கூடிய ஒன்று.திருமண நிகழ்ச்சியில் அந்தணர்களையும் அக்னிசாட்சி யையும் ஒதுக்கிவிட வேண்டும் எனக் கருதிய அவரது பகுத்தறிவுச் சிந்தனை எளிதில் புரியக் கூடிய ஒன்று. உடல் உழைப்பைக் கீழானதாகக் கருதும் அந்தணர்கள் தங்கள் நலனை உறுதிசெய்யக் கண்டு பிடித்த தந்திரங்களே இந்தச் சடங்குகள் என்று அவர் நம்பியது தவறான கருத்து எனச் சொல்ல முடியாது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்தணர்களை விலக்கி விட வேண்டும் என்று முடிவு எடுத்த அவருக்கு இரட்டைப் பந்தி முறை தொடர்வது தவறு எனத் தோன்றவில்லை.

நண்பர்களிடமும் உறவினர்களிடமும் மொய்ப்பணமும் பரிசுப் பொருட் களையும் பெற்றுக் கொண்ட நண்பருக்கு வெளியில் உட்கார்ந்து சாப்பிட்டவர் களிடம் எதையும் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் இல்¢லை. அதற்குப் பதிலாக அவர்களுக்குக் கொடுத்தனுப்ப வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது.

இவர் கொடுப்பதும், பெற்றுக் கொண்ட அவர்கள் அவரை- அவரது மகனை-குடும்பத்தை வாழ்த்துவதும் பரஸ்பர அன்பின் வெளிப்பாடு என்று அவர் கருதியிருக்கக் கூடும். இதில் அவர் சிலாகித்துப் போற்றும் மண்சார் -கிராமியப் பண்பாட்டின் உன்னத அடையாளங்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் கிராமிய மனித உறவுகளும் வெளிப்படுவதாக அவர் நம்பியது தூக்கலாகவே தெரிந்தது. உள்பந்தியையும் வெளிப் பந்தியையும் ஒன்று போல் பாவித்த தனது நிலைபாட்டைச் சிறந்த மனிதநேய வெளிப்பாடாகக் அவர் கருதிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இதை அப்படி மட்டுமே புரிந்து கொள்ள முடியுமா..? என்று எனக்குள் தொடர்ந்து கேள்வி எழும்பிக் கொண்டே இருக்கிறது. அவர் காட்டிய அன்பும் அவர்களின் வாழ்த்தும் பரஸ்பர மனிதநேயம் சார்ந்த மனநிலையின் வெளிப்பாடு களாகத் தோன்றவில்லை. ‘தான் மேலே இருப்பவன்’ என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக அவர் இருக்க, ‘ஆம், அவர் உயர்வானவர்; அவரிடமிருந்து பெற்றுக் கொள்வது எனது இருப்பின் வெளிப்பாடு’ எனப் பணியாளர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையுமே அதில் இருப்பதாக எனக்குத் தோன்றியது.

அந்த உறவு சமநிலை சார்ந்த அன்பின் வெளிப்பாடுகள் அல்ல; கருணை சார்ந்த ஆதிக்கத்தின் வெளிப்பாடு. மேல் -கீழ் என்று அடுக்கி வைக்கப் பட்டிருப்பதாக நம்பச் செய்து விட்ட இந்தியச் சாதியக் கருத்தியலின் அடையாளம். இந்த மனோபாவத்தைப் பிராமணீய மனோபாவம் என்று கூடச் சொல்ல முடியாது. ஏனென்றால் பிராமணீய மனநிலை எப்பொழுதும் ஒதுக்கும் அல்லது ஒதுங்கிக் கொள்ளும். ஆனால் இங்கே ஒதுக்குதலும் இல்லை; ஒதுங்குதலும் இல்லை. தனது ஆதிக்கத்தையும் கருணையையும் வெளிப் படுத்தத் தனக்குக் கீழே ஒரு கூட்டத்தை வைத்துக் கொள்ள விரும்புகிறது இந்த மனநிலை. தனக்குக் கைகட்டிச் சேவகம் பண்ணும் கூட்டத்திற்குக் கருணையின் வெளிப்பாடாகப் பொருட்களைத் தர விரும்புகிறது. தனக்கு ஆலோசனை சொன்ன புரோகிதர்களுக்கும், சோதிடம், சாஸ்திரம், கலை எனச் செயல்பட்ட பிராமணர்கள், வள்ளுவர்கள், தேவதாசிகள் போன்றவர்களுக்கும் பொருட்களைக் கொடுத்து ஆதரித்துத் தங்கள் பெருமைகளைக் காத்துக் நிலமானிய மரபின் நீட்சி இதில் இருப்பதாகப் பட்டது.

தங்களுக்கு ஆலோசனை சொன்ன பிராமணர்கள் சதிகாரர்கள்; சுயநலவாதிகள்; ஆதிக்கக்கருத்தியல் கொண்டவர்கள் எனத் தூற்றி அவர்களை மட்டும் கிராமவாழ்விலிருந்து ஒதுக்கிவிட்டுப் பழைய படி தங்களின் ஆதிக்கம் தொடர வேண்டும் என விரும்பும் எண்ணங்களின் வெளிப்பாடாகவும் தோன்றியது அந்தத் திருமணக்காட்சி. இந்தக் காட்சிகள் தொடரும் கிராமத்திற்குத் திரும்புதல் எனக்குச் சாத்தியமில்லை என்றே நகரத்திற்குத் திரும்பினேன்.

நமது கிராமங்களும் நமது நகரங்களும்
 

கடந்த ஒரு நுற்றாண்டுத் தமிழ்க் கலை, இலக்கியங்கள்- குறிப்பாக சினிமாக்கள், ‘நகரங்கள்‘ என்பதனைக் கிராமங்களின் எதிர்வுகளாகவே சித்திரித்து முடித்துள்ளன.

நகரங்கள் காங்கிரீட் வனங்கள். நல்ல காற்று இல்லை. வானத்தில் புகைப் படிவம். மரங்களில் எண்ணெய்ப் புகை. தெருக்களில் வேகம், உண்டு. மனிதநேயம் இல்லை. ஆனால் கிராமங்களோ காற்றுக்குச் சொந்தமான வீதிகள் கொண்டவை; நீலவண்ண வானம் உண்டு; வாய்க்கால்கள் உண்டு; வரப்புகள் உண்டு; ஆறுகள் உண்டு; தோப்புகள் உண்டு. எளிமை, அந்நியோன்ஆபத்து, விபத்துக்கள்யம், உறவு, நேசம் இப்படி ஏராளமான ‘உண்டுகள்‘ உண்டு.
மொத்தத்தில் கிராமங்கள் பண்பாட்டின் உறைவிடங்கள், நகரங்கள் அழிவிடங்கள், நகரங்களில் பெண்கள் இல்லை; அடங்காப் பிடாரிகள் உண்டு. கன்னிப்பெண்கள் இல்லை; யுவதிகள் உண்டு. காளையா்களும் வாலிபா்களும் இல்லை; இளைஞா்களும், சண்டியா்களும் உண்டு. அடக்கம் இல்லை; மரியாதை இல்லை; பணிவு இல்லை; கற்பு…..? என்ன அா்த்தம் ……? இப்படிப் பல இல்லைகளின் கூடாரமாக நகரங்கள்.

கிராமம் கனவு; நகரம் யதார்த்தம். வாய்ப்பு கிடைத்தால் நமது படைப்பாளிகள் கனவை நனவாக்கிவிடுவார்கள். இல்லையென்றால் கனவையாவது கண்ணில் மறைத்து வாழப் பழகுவார்கள். அப்பாவிகளான கிராமத்து மனிதா்களை, அவா்களின் உழைப்பை நகரவாசிகளின் புத்திசாலித்தனமும் ஏமாற்றுகளும் களவாடுவதில் நமது படைப்பாளிகளுக்கு உடன்பாடு இல்லை.

சேற்றில் கால் வைத்தவா்களின் உழைப்பைச் சுரண்டி, நகரத்துத் தார்ச் சாலைகளாக, பங்களாக்களாக, கார்களாக, குளிரூட்டிய அரங்குகளாக மாற்றுவதில் படைப்பாளிகள் எரிச்சல் அடைந்திருக்கிறார்கள்; கோபம் அடைந்திருக்கிறார்கள். வருத்தம் தோய எழுதியுள்ளார்கள். கவிதைகளாக, புனைகதைகளாக, சினிமாக்களாகப் படம்பிடித்துள்ளார்கள். பல்வேறு நேரங்களில், ‘பட்டிக்காடா? பட்டணமா?‘ எனக் கேட்டுப் பட்டிக்காடே சிறந்தது எனச் சொன்னது உண்டு. ‘பெரிய இடத்துப் பெண்‘ நகரத்திலிருந்து வந்தவளாகக் காட்டி, விவசாயியின் விவேகத்திற்கு முன் தோற்றவளாகக் காட்டியது உண்டு. கெட்டு ‘பட்டணப் பிரவேசம்‘ செய்தவா்களை நகரம் திரும்பவும் அனுப்பிவிடுகிறது கிராமத்திற்கு சின்னக் கவண்டா்களின் பஞ்சாயத்துத் தீா்ப்புகள், ‘நாட்டாமை‘ களின் நோ்மையான அதிகாரங்களுக்கு முன்னால், நீதிபதிகளும் அதிகாரிகளும் தலை வணங்கியதாகக் காட்டியதுண்டு. பார்வையற்ற கிராமத்துப் பெண்ணிற்கு வாழ்க்கை அளிக்க முன்வந்த தெருக்கூத்துக் கலைஞனைக் கொலைகாரனாக ‘அவதாரம்‘ செய்ய வைத்தது நகரம்தான்.

இவையும், இவை போல்வனவும்தான் கிராமங்கள் x நகரங்கள் என்கிற கட்டமைப்புகள். இதன் இன்னொரு உதாரணம் சேரனின் பாண்டவர் பூமி. அதைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் அப்படம் சார்ந்த ஒரு நிகழ்வு.

அப்போதெல்லாம் திருப்பூருக்குப் பல தடவை போக நோ்ந்துவிட்டது. வருடத்தில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று தடவைக்குக் குறையாமல், சொந்தக் கிராமத்திற்குப் போவது போலத் திருப்பூருக்கும் போக வேண்டியுள்ளது. காதுகுத்து, கல்யாணம், சடங்கு, இல்லையென்றால் சாவு….. இப்போது எனது கிராமத்தின் மூன்று பங்கு வீடுகள் சிதைந்து கிடக்கின்றன. விளக்குப் போடக்கூட ஆட்கள் இல்லை. திருப்பூா்தான் அவா்களின் வாழிடமாக மாறிவிட்டது. திருப்பூரிலிருந்து எங்கள் கிராமம் 200 கி.மீ. தூரம்.

அந்தத் தடவை போனது தம்பியின் வீட்டுப் பால் காய்ச்சல் விசேஷத்துக்கு. தம்பி சித்தப்பாவின் மகன். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் சித்தப்பாவிடம் சொல்லிக்கொள்ளாமல் திருப்பூா் போனவன். கூலிவேலை, காண்ட்ராக்ட் வேலை எனக் கடுமையாக உழைத்து, வாடகை இடத்தில் சாயப் பட்டறை போட்டான். சொந்தமாக நிலம் வாங்கிப் போட்டான். இப்பொழுது கீழே வீடுகள். தொழிலாளா்கள் குடியிருப்பதற்கேற்ப ஓா் அடுப்படி; அடுத்து ஓா் அறை. வரிசையாக நான்கோ, ஐந்தோ. மாடியில் பட்டறை. மனிதா்களின் கடுமையான உழைப்பின் வெளிப்பாடுகள். இனி அவா்கள் கிராமத்திற்குத் திரும்ப மாட்டார்கள் என்பது முடிவாகிவிட்ட ஒன்று. திரும்ப வேண்டிய தேவைகளும் இல்லை. மதுரையில் பஸ் ஏறியபோது மணி பதினொன்று. காலை நாலுமணிக்கெல்லாம் போய்விடலாம். எல்லாரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துப் போன எனக்கு ஆச்சரியம். புதிதாகக் கட்டிய கட்டடத்தின் முன்னால் பரப்பப்பட்ட மணலில் அமா்ந்து “டூரிங் தியேட்டரில்“ படம் பார்ப்பது போல் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். திரைக்குப் பதில் டி.வி. பெட்டியும் சி.டியும் இருந்தன. இரண்டு படங்கள் ஓடி முடிந்து போன நிலையில் திரும்பவும் முதலில் பார்த்த ‘பாண்டவா் பூமி‘ யைப் பாரத்துக் கொண்டிருந்தார்கள். படம் பார்த்தபோதே பலரின் கண்களில் கண்ணீா். முதலில் பார்த்தபொழுது வராத கண்ணீா் திரும்பவும் பார்க்கின்ற பொழுது அதிகமாகிவிட்டது. பாண்டவா் பூமி படம் சொந்தக் கிராமங்களில் வாழ முடியாமல், நகரத்திற்கு - திருப்பூருக்குப் போனவா்களின் கதையாகப் பார்க்கப்பட்டதின் விளைவு, அவா்களின் அழுகையாக வெடித்தது.

எந்தப் படைப்பும் - எழுத்தானாலும் சரி, காட்சிரூப வெளிப்பாடானாலும் சரி - வாசகனை உள்ளிருந்து வாசிப்பவனாக (Inside Reader) பார்வையாளனாக மாற்றி விடும்நிலையில் அவனைத் தனக்குள் இழுத்துக்கொள்ளும் மாயத்தைச் செய்துவிடும். அதன் பின்பு அவன் வெறும் ‘பார்வையாளன்‘ என்ற நிலையிலிருந்து மாறி பங்கேற்புப் பார்வையாளனாக (Participatory Audience) மாறி விடுவான். அப்படி மாறும் நிலையில், அவன் சிந்தனைபூர்வ நிலையிலிருந்து தவறி, உணா்வுபூர்வ நிலைக்குள் நுழைவதும் நடந்துவிடும். அதன் பின்பு அவனது பயணம் அப்படைப்பாளியின் பயணத்தோடு இணைந்து, அந்தப் படைப்பு தரும் முடிவோடு ஒன்றிவிடும் நிலைக்குத் தள்ளப்படும். இதுதான் அங்கு நடந்து கொண்டிருந்தது.

இரண்டு குடும்பங்களுக்கிடையே பெண் கொடுத்தல், காதலுக்குத் தடை, அதன் காரணமாகக் கொலை, அதனைத் தொடா்ந்து கிராமத்தை விட்டு வெளியேறி திருப்பூருக்குப் போய் பதிய தொழிலில் இறங்கிப் பணம் சம்பாதித்துவிட்டுத் திரும்பவும் கிராமத்திற்கு வந்து, சொந்தமாக வீடு கட்டி, அதில் தங்கையின் மகளைத் தம்பிக்குத் திருமணம் செய்து வைத்து, இழந்த பெருமையைத் திரும்பவும் கொண்டுவர விரும்பும் ஒருவனின் (ராஜ்கிரண்). கதை; திருப்பூருக்கு பிழைக்கப்போன கிராமத்தான் ஒவ்வொருவனின் கதையாகவும் பார்க்கப்பட்டதின் பின்னணியில் நவீன யுகத்தின் கிராமம் நகரம் என்கிற எதிர்வு நிலை செயல்பட்டுள்ளது.

தன்விருப்பம் போலக் கணவனைத் தோ்ந்தெடுக்கப் பெண்ணை அனுமதிக்காத குடும்பம், அதை மீறியவளைத் தண்டிக்கிறது. காதல் செய்த இருவரும் கொலை செய்யப்படுகின்றனா். அவளைக் காதலித்தவன் மரபான விவசாயத்திற்கு எதிரான நவீன உழவுக் கருவியான டிராக்டரை ஊருக்குள் கொண்டுவந்தவன், கிராமத்துக் கூலி விவசாயிகள் வேலை இழந்து இடம்பெயரக் காரணமானவன் எனக் கதை பண்ணுவதின் மூலம் சேரன் தன்னை எந்திரமயமாதலுக்கு எதிரானவராக நிறுத்திக்கொள்கிறார்.

மரபான வேளாண்மை, கூலி விவசாயிகளுக்கு ஆதரவு, அன்பான தாயின் பிரிவுக்குக் காரணமானவனைப் பழிவாங்கல், உறவுக்குள் பெண்ணுக்குத் திருமணம் என்கிற தளங்கள் சொந்தக் கிராமத்தை நேசித்தல் என்பதோடு இணைந்து நிற்கின்றன. இதற்கு மாறாக காதல் திருமணம், பொறாமை, பழிவாங்கல், எந்திரமயமாக்கிக் கூலித் தொழிலாளா்களின் வயிற்றில் அடித்தல், பாசமான, தாயில்லாத , தங்கைகள் இல்லாத குடும்பம் என்பதை நிறுத்துவதன் மூலம் எதிர்வைக் கட்டமைக்கிறார் சேரன். இந்தப் படத்தின் கதைக்குள்ளேயே - குறிப்பான வெளிக்குள்ளேயே கூட கிராம வாழ்வு இறந்த காலத்தில் வன்முறை நிரம்பியதாகவும், நிகழ்காலத்தில் நம்பிக்கைகள் அற்றதாகவும், எதிர்காலத்தில் பெண்களின் தியாகங்களை வேண்டுவனவாகவும்தான் இருக்கிறது.

பொது நிலையிலும் கூடத் தமிழ்நாட்டுக் கிராமங்கள் இப்படித் தான் உள்ளன. தமிழகக் கிராமங்களின் கடந்த காலம் வன்முறைகள் நிரம்பியதுதான். பெரும்பான்மை மக்கள் - குறிப்பாகத் தலித்துகளும் பெண்களும் அடிமைகள்தான். அவா்களின் மூக்கிற்குள் சுத்தமான காற்று நுழைந்திருக்கலாம். கைகளைச் சுற்றியிருந்த கயிறுகள் நாக பாஷாணங்கள். பண்ணையடிமைகளாகவும், வைப்பாட்டிகளாகவும் வாழ்ந்த காலம், இறந்த காலம். நிகழ்காலமும் நம்பிக்கைகள் எதையும் தந்து விடவில்லை வெண்மணிகளில் எரிபட்டதும் ஊஞ்சனைகளில் கொளுத்தப்பட்டதும் மறந்துபோனவை அல்ல. கொடியங்குளங்களும் குண்டுபட்டிகளும் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. பாப்பாபட்டியும் - கீரிப்பட்டியும் நிகழ்கால ஜனநாயக சமூகத்தைக் கேலி செய்யும் அடையாளங்கள். எதிர்காலம் இவா்களின் தியாகத்தால் தன்னை எழுதிக் கொள்ள முடியுமே ஒழிய அதனை அவா்கள் மறுக்கின்ற பொழுது, எதிர்காலம் என ஒன்று இல்லாமல்தான் போகும். விடுதலை உணா்வு கொண்ட தலித்துகளும் பெண்களும் தியாகங்களுக்குத் தயாராய் இல்லை; ஆக தமிழ் நாட்டுக் கிராமங்களுக்கு எதிர்காலமும் இல்லை.

ஒரு தலித், கிராமத்தை விட்டு வெளியேறிய பின்பு அடிமைத் தளையிலிருந்து விடுபடுதலின் சாத்தியம் அதிகம். இந்து மதம் நகர உருவாக்கத்தின் போது கூட சாதிவாரியான தெருக்களை முன்மொழிந்த கடந்த காலம் முடிந்து கொண்டிருக்கின்றது. நகர விரிவாக்கங்கள் பல சாதி மனிதா்களின் தொகுப்பாக - கலப்பாக - மாறிக்கொண்டிருக்கின்றன. அதில் குடியேறி, செருப்புப் போட்ட கால்களுடன், மணிக்கட்டு வரை மூடிய சட்டையுடன் வீதிகளில் நடந்து மாசு நிறைந்த நகரக் காற்றைச் சுவாசித்தாலும், கிராமங்களுக்குத் திரும்பப் போவதில்லை. திரும்பிப் போய் காலணிகளைக் கையில் தூக்கிக்கொண்டு, மேல்சட்டையைக் கழற்றி இடுப்பில் கட்டிக் கொண்டு, ஒதுக்குப்புறமாக நடக்கப் போவதில்லை.

நகா்மயமாதலுக்கும் எந்திரமயமாதலுக்கும் எதிராகக் கிராம வாழ்க்கையை - மரபான வேளாண்மையை - மனிதநேயமும் சகிப்பும் கொண்ட பண்பாட்டை முன்வைக்கும் நவீன எழுத்தாளா்கள் இனியும் அதைத் தொடா்வது பற்றிச் சிந்திப்பார்களாக. அப்படி நீங்கள் தொடா்கிறீா்கள் என்றால் அது உங்கள் கிராமங்கள்தான். அவா்களுடையன அல்ல. அதாவது இடைநிலை ஆதிக்க சாதிகளின் கிராமங்கள். அவா்களுக்குத்தான் வயல்கள் உண்டு. அவா்களுக்குத் தான் உத்திரம் போட்ட வீடுகள் உண்டு. ஊஞ்சல் கட்டிய முற்றங்கள் உண்டு. பெரிய எழுத்துப் புராணங்கள் அடுக்கிய பரண்கள் உண்டு.

கிராமங்களை நகரங்களின் எதிர்வுகளாகக் கட்டமைக்கும் காலம் முடிந்துபோவதாக.

கருத்துகள்

தென்றல் இவ்வாறு கூறியுள்ளார்…
ஐயா,

உங்கள் நண்பர் எடுத்துக்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது.

தங்கள் "நண்பரின் மனநிலை" இங்குள்ள பெரும்பாலனவர்களின் எண்ணங்களையே பிரதிபலிக்கிறது.
ஒரு வேளை.. திருமண வைபவம் என்பதால்கூட உங்கள் நண்பர் அவ்வாறு திட்டமிட்டு இருந்திருக்கலாம்.

/இந்தக் காட்சிகள் தொடரும் கிராமத்திற்குத் திரும்புதல் எனக்குச் சாத்தியமில்லை என்றே நகரத்திற்குத் திரும்பினேன்./

கிராமத்திலாவது அப்படி ஒரு முயற்சி சாத்தியம். நகரங்களில் .....?!!
அரவிந்தன் நீலகண்டன் இவ்வாறு கூறியுள்ளார்…
//திருமண நிகழ்ச்சியில் அந்தணர்களையும் அக்னிசாட்சி யையும் ஒதுக்கிவிட வேண்டும் எனக்
கருதிய அவரது பகுத்தறிவுச் சிந்தனை எளிதில் புரியக் கூடிய ஒன்று. உடல் உழைப்பைக்
கீழானதாகக் கருதும் அந்தணர்கள் தங்கள் நலனை உறுதிசெய்யக் கண்டு பிடித்த தந்திரங்களே இந்தச் சடங்குகள் என்று அவர் நம்பியது தவறான கருத்து எனச் சொல்ல முடியாது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்தணர்களை விலக்கி விட வேண்டும் என்று முடிவு எடுத்த அவருக்கு இரட்டைப் பந்தி முறை தொடர்வது தவறு எனத் தோன்றவில்லை.//

அய்யா, அந்தணர்களையும் அக்கினி சாட்சியையும் ஒதுக்குவது என்பதும் தன்னுடைய மரபில் ஒரு பகுதியை இழப்பதுதான். சமுதாய தளங்கள் உருவானதென்பது பொதுவாக சமுதாய-பொருளாதார-அரசியல் காரணிகளால் சமயக் கோட்பாட்டினால் அல்ல. சமயக்கோட்பாட்டினை சமுதாய அடுக்குகளுக்கு காரணமாக சொல்லும் essentialist பார்வை மிஷினரிகளால் வைக்கப்பட்டது. திராவிட இயக்கத்தினரால் பகுத்தறிவின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. உங்கள் நண்பரிடம் கேட்டுப்பாருங்கள் அந்தணர்கள் ஆரியர்கள் என்பார். இனவாதக்கோட்பாடு சமூகவியலால் தூக்கி எறியப்பட்டு குப்பைக்கூடையை போய் சேர்ந்த essentialist கோட்பாடு போன்றவற்றால் உருவான ஒரு காலவதி கதையாடலைக் கொண்டு வேர்களைத் தேடுகிறேன் பேர்வழி என்றால் இப்படித்தான். சாதியத்தை ஒழிக்க இத்தகைய வேர்தேடல்களால் முடியாது. இரண்டாவதாக நீங்கள் கூறுவது போல கிராமங்கள் அப்படி ஒன்றும் மாற்றமுடியாத அடக்குமுறையின் இருண்ட வெளிகள் அல்ல. உங்களைப் போன்றவர்கள் அல்லது உங்கள் நண்பர்களைப் போன்றவர்கள் முழுமையான பார்வையுடனும் புரிதலுடனும் முயன்றால் நம் மரபிலிருந்தே தரவுகளைக் கொண்டு சாதியக்கொடுமைகளும் சாதியமும் அற்ற சமுதாயத்தை கிராமங்களில் உருவாக்கலாம். ஆனால் எல்லா பழியையும் "பார்ப்பனியத்தின்" மீது போடும் வெறுப்பியல் வேர் தேடலால் அது இயலாது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்தாளர்களின் உளவியலும் தன்னிலையும் : இமையம் - தி.ஜானகிராமன்- ஜெயகாந்தன்

இந்தியத்தன்மை கொண்ட முதலாளியப்புரட்சி

தங்கா்பச்சான்: சொல்ல விரும்பாத கதைகள்