இது நல்லது; நடந்தாக வேண்டும்

தமிழக அரசின் உயர்கல்வித்துறைக்குப் பொறுப்பான பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் மாநாடுகள் இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிறது. உயர்கல்வித்துறையின் அமைச்சர் டாக்டர் பொன்முடியே அம்மாநாடுகளைத் தொடங்கி வைத்து முன் மொழிவுகளையும், நடக்க வேண்டிய மாற்றங்களையும் வலியுறுத்தி வருகின்றார். மாற்றங்களை அவசரச் சட்டங்களாகக் கொண்டு வராமல், செயல்படுத்த வேண்டிய துணைவேந்தர்களை அழைத்துப் பேசி மாற்றங்கள் செய்யும் இந்தப் போக்கு வரவேற்கத்தக்க போக்கு என்றே சொல்ல வேண்டும்.
அண்மையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களைத் தேர்வு செய்யத் தனியான வாரியம் ஒன்றை அமைப்பது என்றும், அதன் வழியே ஆசிரியப் பணிகளுக்குத் தேவையான நபர்களைத் தேர்வு செய்வது என்றும் விவாதம் நடந்துள்ளது. விவாதிக்கப் பட்டது என்பதாக மட்டுமே செய்தித்தாள்களில் வந்துள்ளது. விவாதத்துக்கான இந்த முன் மொழிவு நல்லதொரு கருத்து. அவ்விவாதத்தைத் தொடர்ந்து நடத்தி, விரைவில் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்; அனைத்து வகையான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தேவையான ஆசிரியர்களை அவ்வாரியமே தேர்வு செய்து அளிக்க வேண்டும்.
நமது உயர்கல்விக்குப் பொறுப்பாக உள்ள நிறுவனங்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் முறையில் ஒத்த தன்மை இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அதிகப் படியான ஆசை அல்ல. உலக முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் தரும் பட்டங்களோடு சமநிலைப் படுத்தும் வகையில் பாடத்திட்டங்களை முடிவு செய்து பயிற்று வித்துத் தேர்வுகள் நடத்திப் பட்டம் வழங்கும் வேலையைச் செய்யும் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் முறையில் ஒத்த தன்மை இருக்க வேண்டும் என அரசு உத்தரவிடுவதை ஒவ்வொருவரும் வரவேற்கவே செய்வர்.
இந்தியா முழுக்க ஒத்த தன்மையும் ஒரே தகுதியும் இருக்க வேண்டும் என்பதற்காகவே பல்கலைக்கழக மானியக்குழு அடிப்படைத் தகுதியை வகுத்துத் தந்துள்ளது. துறை சார்ந்த பட்ட மேற்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்ணும், அம்மானியக்குழு ஆண்டிற்கு இரு முறை நடத்தும் விரிவுரையாளர் பணிகளுக்கான தேசிய அளவுத் தேர்வில் தேர்ச்சி ( UGC – NET / LECTURERSHIP) என்பது அந்த அடிப்படைத் தகுதி. பல்கலைக்கழக மானியக்குழுவின் விதியை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மாநில அளவில் ஒரு தேர்வை நடத்துகிறது தமிழக அரசு. ஸ்லெட் (SLET ) என அழைக்கப்படும் அந்தத் தேர்வினை நெட் தேர்வுக்குச் சமமானது என ஏற்றுக் கொள்வது என முடிவு செய்யப் பட்டது. இதுவே ஒரு விதத்தில் தரத்தைக் கைவிடும் விலகல்தான். அதன் பிறகு தேசிய அளவு அல்லது மாநில அளவுத் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற முடியாதவர்களின் வற்புறுத்தலை ஏற்று 55 சதவீத மதிப்பெண்ணுடன் எம்.பில் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருந்தால் தேசிய அளவுத் தேர்வோ, மாநில அளவுத் தேர்வோ தேவையில்லை என ஆக்கி விட்டதை இன்னொரு விலகல் எனலாம். இதனால் தொலை நெறிக் கல்வி வழியாக எம். பில் பட்டம் பெற்ற பல ஆயிரம் பட்டதாரிகள் தாங்கள் ஆசிரியப் பணிக்குத் தகுதியானவர்கள் எனச் சொல்லிக் கொள்ளத் தொடங்கினர். ஆசிரியர் பணிக்குத் தகுதியான நபர்கள் வருவதைத் திசைமாற்றிய செயலாக இவைகளையே குறிப்பிட வேண்டும்.
தரத்தை உறுதி செய்யும் வழிமுறைகளிலிருந்து இருபெரும் விலகலைச் செய்த போதிலும் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள அரசு கல்லூரி ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணியில் கறாரான வழி முறைகளைப் பின்பற்றியுள்ளதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அடிப்படைத் தகுதியோடு ஒருவருக்குள்ள சிறப்புத் தகுதிகளை மதிப்பிட முறையான விதிகளை உருவாக்கி அதன் படி நடந்து கொண்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். சிறப்புத் தகுதிகள் என எம்.பில், முனைவர் போன்ற கூடுதல் பட்டங்களையும், பயிற்றுவித்தலில் இருக்கும்முன் அனுபவம், துறைசார்ந்த வெளியீடுகள், நேர்காணல் மதிப்பெண்கள் என முறைப்படி வகுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் இவற்றில் பெற்றுள்ள மதிப்பெண்களை இணையம் வழியாக வெளியிடவும் செய்கிறது. வெளியீடுகள் எவை முன் அனுபவத்தை எவ்வாறு கணக்கிடுவது என்பதைக் கூடக் கறாராக வரையறை செய்து தந்துள்ளது. இந்த வெளிப்படைத் தன்மை வேறு எந்த முறையிலும் இல்லை என்றே சொல்லலாம்.
இதே மாதிரியான வெளிப்படைத் தன்மையைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திப் பல்கலைக்கழக மானியக்குழு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பியிருந்த போதிலும் பல்கலைக் கழகங்கள் அதைப் பின்பற்றவில்லை என்பதுதான் நடைமுறை யதார்த்தம். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் பணி நியமன முறைகளில் அரசு கல்லூரிகளுக்கான நியமனங்கள் மட்டுமே முறைப்படியாகவும், வெளிப்படையாகவும் நடந்துள்ளன. அதற்குப் பொறுப்பாக இருந்தது ஆசிரியர் தேர்வு வாரியம் என்பதால் அதன் எல்லைகளை விரிவாக்கி அனைத்து வகையான உயர்கல்வித்துறைக்கும் அதன் பொறுப்பிலேயே ஆசிரியர்கள் தேர்வை நடத்தலாம் என அமைச்சர் முன் வைத்துள்ள இந்த முன்மொழிவு அவசியமானது; அவசரமானது.
அரசு முன் மொழிந்துள்ள இந்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் எல்லைக்குள் அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகக் கல்லூரிகள், பல்கலைக்கழகத்துறைகள் என அனைத்தையும் கொண்டு வருவதோடு சுயநிதிக் கல்லூரிகளையும் உள்ளடக்க வேண்டும். மாநில முழுவதும் பொதுத்தன்மை கொண்ட விருப்பமுறைத் தெரிவு முறை எனப்படும் புதிய கல்வி முறைக்குள் தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அடக்கப்பட்டு வரும் இக் காலகட்டத்தில், அவற்றில் பணி புரியும் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் முறையிலும் ஒரு பொதுத் தன்மை இருப்பது அவசியமானது.
குறிப்பாக அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் நிலவும் கோளாறான பணித் தேர்வு முறையைக் கட்டுப் படுத்தாவிட்டால் உயர்கல்வியின் பயன் மாணவர்களுக்குப் போய்ச் சேராது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஒவ்வொரு ஆசிரியர் பதவியும் அரசின் கல்வித் துறையிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் அடிப்படைத் தகுதியை மட்டுமே கவனத்தில் கொள்கின்றன. பிற தகுதிகளைக் காற்றில் பறக்க விட்டு விடுகின்றன. முனைவர் பட்டம் பெற்றவர் என்பதற்காகவோ, நூல்கள் எழுதியவர் என்பதற்காகவே ஒருவ்ர் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்குள் கூட வராமல் போகும் நிலையெல்லாம் நடந்துள்ளது.
தனியார் நிர்வாகங்கள் தாங்கள் விரும்பும் நபர்களைக் கொண்டு வரும் நோக்கத்தோடு விதிகளை மாற்றிக் கொள்ளும் நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன. எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துத் தாங்கள் விரும்பும் நபர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்து கொள்கின்றன. தமிழகத்திலும் சரி இந்திய அளவிலும் சரி, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் மத அமைப்புகளாலும், சாதி அமைப்புகளாலுமே நடத்தப் படுகின்றன. சில இடங்களில் தனியார்களின் அறக்கட்டளைகளின் பொறுப்பில் அவை நடத்தப் படுகின்றன.
இந்த அமைப்புகள் தங்கள் அமைப்பு சார்ந்த நபர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காகவே விதிகளிலும் நடைமுறைகளிலும் அம்மாற்றங்களைச் செய்கின்றன. அல்லது நிறுவனத்திற்கு நன்கொடை வாங்குதல் என்ற பெயரில் பெருந்தொகையைப் பெற்றுக் கொள்வதற்காகச் செய்கின்றன. இவையெல்லாம் அரசுக்கும் அரசின் கண்காணிப்பைத் தன் வசம் வைத்திருக்கும் பல்கலைக் கழகங்களும் அறியாதவை அல்ல.
அறியாமல் நடக்கின்ற தவறுகளை விட்டு விடலாம். தவறுகள் நடக்கின்றன என்பதை அறிந்தபின் அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளில் இறங்குவதுதான் சரியான அரசின் கடமை. முன் மொழியப் பட்டுள்ள உயர்கல்விக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் கடமையுணர்ந்த அரசின் நல்ல முயற்சி. நல்லது உடனே நிறைவேற்றப் படவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்தாளர்களின் உளவியலும் தன்னிலையும் : இமையம் - தி.ஜானகிராமன்- ஜெயகாந்தன்

பிக்பாஸ் -8. ஐம்பது நாட்களுக்குப் பின் ஒரு குறிப்பு

தங்கா்பச்சான்: சொல்ல விரும்பாத கதைகள்