பழைய புத்தகக்கடையில் கிடைத்தவை: தேடிப்படித்த புத்தகங்கள்
சில நேரங்களில் குறிப்பான நூலொன்றைத் தேடிப் பழைய புத்தகக்கடைக்குப் போவதுண்டு. சில இலக்கின்றித் தேடும் இடமாகவும் பழைய புத்தகக்கடைகள் இருக்கும். ஒன்றைத்தேடி இன்னொன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்ச்சி வாசிப்பின் போக்கை மாற்றிவிடும். அப்படித் திசைமாற்றிய இரண்டு நூல்கள் இவை.
சமுதாய இலக்கியம்ஒரு எழுத்தாளர் பல்வேறு வடிவங்களையும் முயன்று பார்க்கப் பல சாந்தி இதழின் தேவைக்காக மட்டுமல்லாமல், தனது விருப்பம் காரணமாகவே
காரணங்கள் உண்டு. இதழொன்றைத் தொடங்கி நடத்தத் தொடங்கினால் அப்படியொரு நெருக்கடி தானாகவே உண்டாகிவிடும். நவீனத்தமிழ் இலக்கியத்திற்குப் புதிய எழுத்தாளர்களையும் புதிய எழுத்துவகைகளையும் அறிமுகம் செய்த இதழ்களில் ஒன்று தொ.மு.சி.யின் சாந்தி.
எழுத்துவடிவங்கள் பலவற்றையும் முயன்றுபார்த்து வெற்றிபெற்றவர் தொ.மு.சிதம்பரரகுநாதன் . ஒவ்வொரு வடிவத்திலும் முன்னோடியாக விளங்கவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்திருக்கவேண்டும். அதன் காரணமாகத் தான் முயன்ற ஒவ்வொரு வேலையிலும் முக்கியமான எழுத்துகளைத் தந்திருக்கிறார் அவர். நேரடித் தமிழ்நாவலை வாசிப்பதைப்போல அவர் மொழிபெயர்த்த மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலை வாசித்திருக்கிறேன். அவரது பஞ்சும் பசியும் தமிழ் நாவல் வகைகளில் சோசலிச யதார்த்தவாதத்தை முன்வைத்து எழுதப்பெற்ற புனைகதைப் போக்கின் முன்னோடி எழுத்து. நாடகம், கவிதை, சிறுகதை. வரலாறு என ஒவ்வொன்றிலும் அவரது பங்களிப்புவிட்டு இலக்கியவரலாற்றை எழுதமுடியாது
பலவிதமான இலக்கிய முகங்கள் கொண்டவர் என்றாலும் ரகுநாதனின் முதன்மையான முகம் விமரிசகர் என்பதே ஆகும். அந்த அடையாளத்திற்காகவே அவருக்குச் சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது. 1983 இல் அவருக்கு அந்த விருதைப் பெற்றுத்தந்த பாரதி: காலமும் கருத்தும் என்ற நூலை வாசித்தால், இலக்கிய விமரிசனத்தை ஒரு கலையாகக் கருதி ஈடுபட்டுச் செய்தவர் அவர் என்பது புரியவரும். அடுத்தவந்த இளங்கோவடிகள் யார்? என்ற ஆய்வுநூல் கல்வித்துறை ஆய்வாளர்களுக்குச் சவாலாக அமைந்த நூல். அதனையடுத்து எழுதிய புதுமைப்பித்தன் கதைகள்: சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் என்பது இலக்கியத்திறனாய்வின் பின்னால் செயல்படும் உள்ளடி வேலைகளை வெளிச்சம்போட்டுக்காட்டிய நூல். அவர்தான் தமிழில் இலக்கிய விமர்சனம் என்றால் என்ன? என்பதைச் சொல்லும் அடிப்படை நூலொன்றை முதன்முதலில் எழுதித்தந்தார். இவையெல்லாம் பலராலும் கவனிக்கப்பட்டு வாசிக்கப்பட்ட நூல்கள். ஆனால் அவரால் எழுதப்பட்டு அதிகம் கவனிக்கப்படாத நூலொன்று உண்டு என்றால் அது “ சமுதாய இலக்கியம்” என்ற நூலே. 1964 இல் அச்சான நூல் பின்னர் 1980 இல் மீனாட்சிபுத்தக நிலையத்தால் திரும்பவும் பதிப்பிக்கப்பெற்றது.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இலக்கியத்தில் செயல்பட்ட புலவர்களும் கவிஞர்களும் தம் காலத்தின் பெரும்போக்குகளையும் நிகழ்வுகளையும் -தந்தியின் வரவு, பணத்தின் வரவு, ஆடம்பரவாழ்க்கை மோகம், பெரும்பஞ்சம் போன்றனவற்றைக் கவனிப்பவர்களாகவும் அவற்றைக் குறித்து அக்கறையோடு எழுதிக்காட்டுபவர்களாகவும் இருந்தார்கள் என்பதை விரிவாக விளக்கும் நூல் அது. தகவல்கள், விளக்கங்கள், விமரிசனங்கள், விவாதங்கள் என ரகுநாதனின் எழுத்துமுறையைக் காட்டும் சமுதாய இலக்கியம் பலரது கவனிப்பைத் தவறவிட்ட நூல். ரகுநாதனின் மொத்த எழுத்துகளையும் தொகுத்து ரகுநாதவியம் என்னும் இருபெருந்தொகுப்பாக்கியுள்ள காவ்யா பதிப்பகத்தின் அண்மை வெளியீட்டில் இந்நூல் இடம்பெற்றுள்ளது. வாசிப்புப் பசிகொண்டவர்கள் தேடிப்படித்துப் பார்க்கலாம்.
வடகரை ஆதிக்கத்தின் சரித்திரம்
இதனைத் தேடிப்படித்த நூல் என்று சொல்வதைவிட தேடியபோது கிடைத்த நூல் எனச் சொல்லலாம். நூறாண்டுகளுக்கு முந்திய புத்தகம். அட்டை இல்லை. நூலின் பெயர்: வடகரை ஆதிக்கத்தின் சரித்திரம். உள்ளே போனால் வரலாற்றுப்புத்தகமாக இல்லை. தொகுப்புநூல். ஒரு வட்டாரத்தைப் பற்றிய நூல்களின் தொகுப்பு. வடடகரை நாடு என்பது 17 ஆம் நூற்றாண்டில் ஒரு பாளையமாக இருந்து பின்னர் ஜமீனாக மாறிய ஒரு பகுதி. அதனை ஆண்டவர்களின் பரம்பரையில் ஒருவர் சின்னனஞ்சாத்தேவர். அவர் மீதும் அவர் ஆண்ட நாட்டின்மீதும் பாடப்பட்ட பிரபந்த இலக்கியங்களின் தொகுப்பே இந்த நூல். வடகரை, தென்கரை போன்ற பெயர்களுடன் திருநெல்வேலி மாவட்டத்தில் ஊர்கள் இருக்கின்றன. பெரிய கிராமங்கள் என்று சொல்லத்தக்கன. அவைதான் அப்போதைய ஒருநாட்டின் தலைநகரம். இப்போது தென்காசி வட்டாரத்திற்குட்பட்டதாக இருக்கலாம்.
இத்தொகுப்பில்1. சவ்வாதுவிடு தூது, 2.சந்திரகலா மஞ்சரி, 3.பட்பிரபந்தம், 4.திருமலைக்கறுப்பன்பேரில் காதல்,5.நொண்டிநாடகம்,6. பருவப்பதம்,7. பிள்ளைத்தமிழ், 8.வருக்கக்கோவை 9.கோவைச்சதகம்,10 விறலிவிடுதூது எனப் 10 பிரபந்தங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு வட்டாரத்தைப் பற்றிய நூல்களின் தொகுப்பு என்ற வகையில் தமிழில் கிடைக்கும் வட்டார இலக்கியத்தின் முன்னோடி எனச் சொல்லலாம். அவற்றிலிருந்து ஒரு சிறிய வட்டாரத்தின் வரலாற்றை அறியமுடியும். சமூகவரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் இலக்கியவாசிப்போடு அணுகினால் நுண்வரலாறொன்றை எழுதலாம்.
கருத்துகள்