அறிவுசார் மண்டலம் என்னும் கனவு.
நெருக்கடிகள் எப்போதும் நினைப்புகளையும் கனவுகளையும் தான் குறி வைக்கின்றன. சென்னை கொட்டிவாக்கம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை ஒருமுறை பார்த்து விட்டு வார்சா வர வேண்டும் என்பது நினைப்புகளில் ஒன்று. அந்த நினைப்பு புதிதாகத் தோன்றிய ஒன்றல்ல; அதன் வயது மூன்று. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அப்படியொரு நினைப்புத் தோன்றக்காரணம் எனது புத்தக ஆசையோ! படிக்கும் விருப்பமோ அல்ல. அரசின் செயல்பாடு தான் காரணம். அப்படியொரு நம்பிக்கையை ஏற்படுத்திய அரசுச் செயல்பாடு வேறொன்றும் அதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. கிளம்புவதற்கு முன்பு சென்னையில் தங்கியிருந்த மூன்று நாட்களில் ஒருநாள் அதன் வழியாகப் போன போது வார்சாவிலிருந்து திரும்பி வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றொரு தற்காலிகக் காரணத்தை உருவாக்கிக் கொண்டேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய அந்த நினைப்பும் கிளம்பும் போது உருவாக்கிக் கொண்ட தற்காலிகக் காரணமும் கரைந்து கொண்டிருக்கின்றன. இரண்டு ஆண்டுகள் கழித்துத் திரும்பவும் சென்னைக்குப் போகும் போது அண்ணா நூலகம் எந்த இடத்தில்? எப்படி இருக்கும்? என்பதை யார் உறுதியாகச் சொல்ல முடியும்? நிர்வாகம் சார்ந்த சட்டங்களுக...