July 16, 2016

தண்ணீர்

தண்ணீர் தண்ணீர் தண்ணீர்
தண்ணீர் தண்ணீர்
தண்ணீர்
==========================================
காட்சி : 1
கண்கள் கட்டப்பட்ட நிலையில் மூன்று நபர்கள் மேடையில் உள்ளனர்.
கையில் மரத்தால் ஆன சுத்தியல்.
அதைக் கொண்டு முன்னால் உள்ள கட்டையில் தட்டுவதே அவர்களின் மொழி
முதலாமவன்                      : ஒன்று – இரண்டு – மூன்று என்ற தாளத்திலும்
இரண்டாமவன்  : ஒன்று இரண்டு - என்ற தாளத்திலும்
மூன்றாமவன்                     : ஒன்றுஇரண்டுமூன்று –என்ற தாளத்திலும் பேசுகின்றனர்.ஒளி அவர்கள் முகத்தில் இல்லை. மெல்ல பரவுகிறது.
நபர்                                    : 1 -2 -3
நபர்.2                                 ; 1,2 -1,2 -1,2         
நபர் 3                                 : 1,2,3, - 1.2.3 – 1,2,3
நபர் 1                                 :( திரும்பவும் தாளகதிப் பேச்சு)
(ஒருவன் பார்வையாளர் பகுதியில் அடித்துப் புரட்டப்படும் ஓலம்.)
அவன்                : அய்யா விட்டுடுங்க அய்யா.. அய்யா விட்டுடுங்கய்யா..
நபர்.2                 : (தாளகதிப் பேச்சு)
அவன்                : அய்யோ அடிக்காதீங்க… அய்யா.. அடிக்காதீங்க அய்யா..
நபர் 3                 :  (தாளகதிப் பேச்சு)
அவன்                : அய்யா மன்னிச்சிடுங்கய்யா… அய்யா மன்னிச்சிடுங்கயா.
(மூவரின் தாளமும் ஒன்றிணைந்து மோதுகின்றன.)
நபர்                    : (தாளகதிப் பேச்சு)
அவன்                : (மேடைக்கு வந்து விடுகிறான்)             நீரைத் தேடி நீண்ட கால்கள் எவர் கால்கள்…?
நபர் 2                 : (தாளகதிப் பேச்சு)
அவன்                : பாறைகளைப் பிளந்து நீரை உண்டாக்கிய கரங்கள் யார் கரங்கள்…?
நபர் 3                 : (தாளகதிப் பேச்சு)
அவன்                : குட்டையைத் தோண்டி குளங்களை உண்டாக்கிய கூட்டம் எந்தக் கூட்டம்..?
                           நபர்கள் மூவரும் தாளகதியில் அடித்துத் துவைத்துப் போடுகின்றனர்.
நபர்.2                 : தண்ணீர் சுத்தமானது; தண்ணீர் புனிதமானது; தண்ணீரைத் தீட்டாக்கியது பெருங்குற்றம்
நபர் 3                 : அம்மன் கலசம் கலக்கும் நீர் தீட்டானது; தீட்டைக் கழுவிச் சுத்தம் செய்யப் புனிதப் பலி அவசியம்.
மூவரும் ; ( தாளத்துடன்) புனிதப்பலி அவசியம்.. புனிதப்பலி அவசியம்..
                           அவனைக் கோணிப்பையில் அமுக்கி கயிற்றில் கட்டித் தொங்க விடுகின்றனர். மேடையின் நடுவில் கோணிப்பை ஆடிக் கொண்டிருக்கிறது. பின்னணியில்
                                           ஆராரோ ஆராரோ,,, ஆராரோ ஆரிரரோ
                           என்ற தாலாட்டின் இசை ரூபம் கேட்டுக் கொண்டிருக்கிறது
================================================================================  
காட்சி : 2
நான்கு பேர் ஒரு பெரியவரைப் பல்லக்கில் வைத்துச் சுமந்து வருகின்றனர்.
பல்லக்கின் உள்ளே இருப்பவரின் முகம் முதலில் தெரியாது.
கையில் கமண்டலத்தில் நீர் வைத்துள்ளனர்.
பல்லக்குத்தூக்கிகள் பேசிக்கொண்டும் பாடிக் கொண்டும் நகர்கின்றனர்.
தூக்கி 1              : கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை முள்ளும் புதரும் மேனிக்கு மருந்து
பெரியவர் சரணம்; பெரியவர் சரணம் (நால்வரும் வெவ்வேறு தொனியில் பாடுகின்றனர்)
தூக்கி 2              : பாதை ஒன்னும் மோசமில்லை… பாரம் மட்டும் கணமாயிருக்கு..
தூக்கி 3              : பாரம் கூடத் தாங்கிக் கொள்ளலாம். பாதை தெளிவாய் இருந்தால் போதும்
தூக்கி 4 ; ஆமாம் ஆமாம்… ஆமாம்… எத்தனை மேடு.. எத்தனை பள்ளம்..
பொசுக்கும் வெயிலில் கால்கள் வெடிக்கும் உறையும் பனியில் தோல்கள் விரியும்.. …
எத்தனை மேடு.. எத்தனை பள்ளம்..
தூக்கி.1: பெரியவர் பல்லக்கு பெரியவர் பவனி பெரியவர் சேவகம் பெரிய தியாகம்…                                     நாட்டின் தலைவர் நமது பெரியவர்; நமது சேவை நாட்டுக்குத் தேவை
தூக்கி 2: இருந்தாலும் பாதையா..? இது பாதை. கல்லுங்கரடும் முள்ளும் புதரும்
காட்டாற்று வெள்ளம் கழுத்தில் புரளும் பாதையா..? இது பாதையா..?
தூக்கி 3   : ஆமாம்.. பாதையா.. இது பாதை.
தூக்கி 1 : கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை முள்ளும் புதரும் மேனிக்கு மருந்து
பெரியவர் சரணம்; பெரியவர் சரணம்    
தூக்கி 2 : வந்தாச்சா.. வந்தாச்சா..
( பல்லக்கு நிற்கிறது; இறக்கப்படுகிறது. பெரியவர் இறங்கி வானத்தை நோக்கி
பெரியவர் :  பொழிக பொழிக மழை பொழிக             பொழிக பொழிக வானம் பொழிக!                         மழை நன்று நீர் நன்று நீரே உயிர்களின் ஆதாரம்
பொழிக பொழிக மழை பொழிக ( முடிவில் பின்னணியில் இருந்து வரும் பாடலுக்கு பல்லக்குத் தூக்கிகளும் பெரியவரும் ஆடுகின்றன)
பாடல்     : சட்டச்சட சட்டச்சட சட்டாவென்று
                தாளங்கள் கொட்டி திளைக்குது வானம்
   சட்டச்சட சட்டச்சட சட்டாவென்று
              தாளங்கள் கொட்டி திளைக்குது வானம்                எட்டுத்திசையும் அதிர மழை எங்ஙனம் வந்ததடா
தம்பி வீரா.. மழை எங்ஙனம் வந்ததடா
கண்டோம்.. கண்டோம்.. கண்டோம்..
காலத்தின் கோலத்தைக் கண் முன்னே கண்டோம்
கண்டோம்.. கண்டோம்.. கண்டோம்..
(பல்லக்குத்தூக்கிகள் வெவ்வேறு இடங்களில் அமர்ந்துள்ளனர். பெரியவர் கமண்டலத்திலிருந்து நீரைக் குடித்து விட்டு வைக்கிறார். பல்லக்குத்தூக்கிகள் ஓடைகளிலும் குட்டைகளிலும் நீர் பருகுகின்றனர். ஒருவன் மாத்திரம் பெரியவர் குடித்து விட்டு வைத்த நீரை எடுத்து குடிக்கின்றான். கோபம் கொண்ட பெரியவர் தகிட தகிட தகிட தகிட என்ற தாள கதியில் என ஆடி முடித்துச் சாபம் தருகிறார்.

பெரியவர்          : நீர் புனிதமானது.. நீர் சுத்தமானது..
                                           நீரை அசுத்தப்படுத்தியது பெருங்குற்றம்.
[ பின்னணியில் பலி.. பலி.. என்ற குரல்கள் கேட்கின்றன. தாளத்துடன் சுற்றி வந்து]
                                           புனித நீரைத் தீட்டாக்கிய நீ
                                           அண்டங்காக்கையாக ஆகக் கடவாய்..
[அவன் காகமாய் மாறிப் பறக்கின்றான். ஒளி மங்குகிறது]
” ஆராரோ.. .. ஆராரோ.. ஆராரோ.. .. ஆராரோ..” ஒலிக்கிறது. கோணிப்பை தொங்குகிறது. பை மேலே உயரும்போது…
======================================================================================= 
காட்சி: 3
கடலோரக் கிராமம் ஒன்றின்                                
பிம்ப அடுக்குக்குள் தொட்டிலில் போட்டு ஒரு குழந்தையைத்  
தாலாட்டும் காட்சிப் படிமம் பின்னணியில் தெரிகிறது. குரலில் சோகம் கரைய
பாடல்                :               தாழைமரவேலி… தள்ளி ஒரு சிறு குடிசை..
சிறுகுடிசைக்குள்ளே தூங்கும் ஒரு குழந்தை
ஆராரோ.. .. ஆராரோ.. ஆராரோ.. .. ஆரிரரோ..
[கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் ஒருவன் மேடையில் தள்ளப்படுகின்றான். அவனது ஓலம் முடியும் நிலையில்]
                சாதி மேலாளர் குளிக்கிற குளமடா.. அது  சாதி மேலாளர் குளிக்கிற குளமடா
                அந்தக் குளத்தில் இறங்கிக் குளிச்சான்னு – உங்க மாமன் எறங்கிக் குளிச்சான்னு-
                தென்னை மரத்தோட சேர்த்து வச்சுக் கொன்னாங்க .. உங்க மாமனெ
                சேர்த்து வச்சுக் கொன்னாங்க - பாவிங்க
                சேர்த்து வச்சுக் கொன்னாங்க
[ அவன் மரத்தில் கட்டப்பட்டு மரத்தோடு வெட்டி வீழ்த்தப்படுகிறான்]
                காற்று பெருங்காற்று… காற்றோடு கும்மிருட்டு..
[ மேடை இருளாகிறது.. காற்று புயலாகச் சீறுகிறது.]
                காற்று பெருங்காற்று.. காற்று கும்மிருட்டு.
கும்மிருட்டோ குலைநடுங்க கோசமிட்ட கடல்பெருக்கு
கல்லுவைத்த கோயிலெல்லாம் வரம் இரந்த அந்த இரவு.. அந்த இரவு…
[ கலவரம் நடக்கிறது.. வெட்டு,.. குத்து… பிணங்களாய்.. மனிதர்கள்]
அந்த இரவு … அதற்குள் மறக்காது..  அந்த இரவு … அதற்குள் மறக்காது
பாடல்                     : தானாய் விடிவெள்ளி..  தோன்றுகின்ற சங்கதிகள்
வானத்தில் மட்டும்தான் வாழ்வில் இருள் தொடரும்
[ ஆராரோ.. ஆராரோ.. என்ற தாளகதியின் பின்னணியில் கோணிப்பை தொங்குகிறது, பிணங்களாய் இருந்தவர்களிடமிருந்து குரல் ]
குரல்கள்  : நாங்கள் வளருவோம்; நாங்கள் நிமிருவோம்
                                அந்த மரத்தின் இலைகளைத் தொடுவோம்
                                இந்தக் குளத்தில் இறங்கிக் குளிப்போம்
                                மீண்டும் ஓர் சிறுவன் அந்தக் குளத்தில்
                                கல்லெறிவான். நாங்கள் வளர்வோம்.
நாங்கள் நிமிர்வோம்.
===========================================================================================   காட்சி: 4
பள்ளிக்கூட மணி அடிக்கிறது. நடிகர்களில் ஒருவன் ஆசிரியராக .. மற்றவர்கள் மாணவர்களாக அமர்கின்றனர்.
ஓரெண்டா ரெண்டு..                ஓரெண்டா ரெண்டு..
ஈரெண்டா நாலு      ஈரெண்டா நாலு
முவிரண்டா ஆறு     முவிரண்டா ஆறு
ஆசிரியர் சொல்லச் சொல்ல மாணாக்கர்கள் திரும்பச் சொல்கின்றனர். சொல்லிய ஆசிரியர் மாணவராக .. இன்னொரு நடிகர் ஆசிரியராகின்றார், கோலாட்ட ரூபத்தில் பாடம் நடக்கிறது.
ஆசிரியர் ( பாடல்); சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி
மாணாக்கர்கள் சேர்ந்து சொல்கின்றனர். மணி அடிக்கிறது . மாணாக்கர்கள் வெளியேறுகின்றனர். பானையில் உள்ள தண்ணீரை மொண்டு குடிக்கின்றனர். இரண்டு மாணவர்கள் சேர்ந்து ஒருவனை இழுத்து வருகின்றனர்.
ஆசிரியர்                  : ஏண்டா.. கொழுப்பேறிப்போச்சா.. டம்ளரைத் தொட்டு பானைக்குள்ள கையைவிட்டுத் தண்ணீர் குடிப்பீங்களோ.
அவன்                     : சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் ……. பாடலாக
                ஆசிரியர்  : ஏண்டா .. அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்னு நினைப்போ..
                                                நான் சொன்ன பாடத்தெ எனக்கே சொல்ல வந்துட்டயோ..
                [அடிக்கிறார். அவன் அடிதாங்க முடியாமல் குதிக்கிறான். திடீரென்று கண்களை மூடிய படி]
                அவன்                     : அய்யோ.. என் கண்ணு போச்சே.. என் கண்ணு போச்சே..
கண்ணு கண்ணு தெரியலயே…. கண்ணு..
                எல்லாரும்                : கண்ணு தெரியலயா.. ? கண்ணு தெரியலயா?
                                                கண்ணு போச்சா.. கண்ணு போச்சா..
                                [ ஆராரோவின் பின்னணியில் பிணமூட்டை இறங்குகிறது]
                பாடல்                     : (குழுவாக)
                                                கண்ணு வித்து வாங்கப் போற சித்திரத்த – அந்தக்
                                                கண்மாய்க் கரைமேல போட்டுவிடு கண்மணியே –
நீ பச்சத் தண்ணி குடிச்சதனால் பழிகாரி ஆன கதை
பார்த்திருந்த பாவிகளை என்ன செய்ய கண்மணியே – ( கண்ணு)
                தனிக்குரல்               : வகைவகையாய் வீச்சரிவாள் அண்ணன் வடிச்சாந்து வச்சிருக்கான்
                                                பகையாளி கொடியறுக்க கண்ணே நீயும் ஒண்ணு கொண்டு போம்மா..(கண்ண வித்து0
                                                சேதாரம் இல்லாம ஒரு நகை செய்ய முடியாது. நல்ல நகை செய்ய முடியாது.
                                                கலகந்தான் செய்யாமெ ஒரு நியாயந்தான் பிறக்காது; நல்ல நியாயந்தான் பிறக்காது
                குழு                          : கண்ணு வித்து வாங்கப் போற சித்திரத்த – அந்தக்
                                                கண்மாய்க் கரைமேல போட்டுவிடு கண்மணியே –
நீ பச்சத் தண்ணி குடிச்சதனால் பழிகாரி ஆன கதை
பார்த்திருந்த பாவிகளை என்ன செய்ய கண்மணியே ( பாடல் மெல்ல குறைகிறது.
ஆராரோ… ஆராரோஒ என்ற தாள கதியின் பின்னணியில் கோணிப்பை தொங்குகிறது)
                குரல்கள்  : நாங்கள் வளருவோம்; நாங்கள் நிமிருவோம்
                                                அந்த மரத்தின் இலைகளைத் தொடுவோம்
                                                இந்தக் குளத்தில் இறங்கிக் குளிப்போம்
                                                மீண்டும் ஓர் சிறுவன் அந்தக் குளத்தில்
                                                கல்லெறிவான். நாங்கள் வளர்வோம்.
நாங்கள் நிமிர்வோம்.

நன்றி: இந்தக் குறுநாடகத்தில் இடம் பெற்ற பாடல் வரிகளை எழுதிய கவி பாரதி, கவி வ.ஐ.ச. ஜெயபாலன், கவி கோடாங்கி ஆகியோர் நன்றியுடன் நினைக்கப்படுகிறார்கள்