நடுத்தர வர்க்கத்தின் ஓய்வுப் பொழுதின் முக்கிய வினையாக இருந்த வாசிப்பு நேரம் தொலைக்காட்சி ஊடகங்களுக்குக் கையளிக்கப் பட்டுச் சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஒற்றை அலைவரிசையாக இருந்த அரசின் தொலைக் காட்சியோடு பல அலைவரிசைகள் போட்டி போட்ட நிலையில் தொலைக் காட்சிப் பெட்டிகளை இயக்கும் விதமே மாறி விட்டதைக் கவனித்திருக்கலாம். உட்கார்ந்த இடத்திலிருந்தே தொடு உணர்வு வழியே அலை வரிசைகளை மாற்றிக் கொள்ளும் வசதிகள் கொண்ட பெட்டிகள் மட்டுமே நடுத்தர வர்க்கத்தின் விருப்பங்கள். இலவசமாக அரசு தந்த 22 அங்குல நீளம் கொண்ட வண்ண தொலைக்காட்சிப் பெட்டியில் கூட இந்த வசதி இருக்கிறது.ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது எனப் பல மொழிகளில் ஒளிபரப்பாகும் நூற்றுக்கு மேற்பட்ட அலைவரிசைகள் தமிழகப் பரப்பில் வீட்டிற்குள் நுழைகின்றன. அவற்றுள் ஐம்பதுக்கு மேற்பட்ட அலைவரிசைகள் தமிழ் பேசுகின்றன. செய்தி அலைவரிசைகள் தினசரி நான்கந்து வெடிப்புச்செய்திகளை வெடிக்கச்செய்கின்றன. என்றாலும் ஒவ்வொரு அலை வரிசைகளின் நிகழ்ச்சித் தயாரிப்பில் வித்தியாசங்கள் இல்லை. வேறுபாடுகள் கொண்டவைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.