நகல்களின் பெருக்கம்

நடுத்தர வர்க்கத்தின் ஓய்வுப் பொழுதின் முக்கிய வினையாக இருந்த வாசிப்பு நேரம் தொலைக்காட்சி ஊடகங்களுக்குக் கையளிக்கப் பட்டுச் சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஒற்றை அலைவரிசையாக இருந்த அரசின் தொலைக் காட்சியோடு பல அலைவரிசைகள் போட்டி போட்ட நிலையில் தொலைக் காட்சிப் பெட்டிகளை இயக்கும் விதமே மாறி விட்டதைக் கவனித்திருக்கலாம். உட்கார்ந்த இடத்திலிருந்தே தொடு உணர்வு வழியே அலை வரிசைகளை மாற்றிக் கொள்ளும் வசதிகள் கொண்ட பெட்டிகள் மட்டுமே நடுத்தர வர்க்கத்தின் விருப்பங்கள். இலவசமாக அரசு தந்த 22 அங்குல நீளம் கொண்ட வண்ண தொலைக்காட்சிப் பெட்டியில் கூட இந்த வசதி  இருக்கிறது.ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது எனப் பல மொழிகளில் ஒளிபரப்பாகும் நூற்றுக்கு மேற்பட்ட அலைவரிசைகள் தமிழகப் பரப்பில் வீட்டிற்குள் நுழைகின்றன. அவற்றுள் ஐம்பதுக்கு மேற்பட்ட அலைவரிசைகள் தமிழ் பேசுகின்றன. செய்தி அலைவரிசைகள் தினசரி நான்கந்து வெடிப்புச்செய்திகளை வெடிக்கச்செய்கின்றன. என்றாலும் ஒவ்வொரு அலை வரிசைகளின் நிகழ்ச்சித் தயாரிப்பில் வித்தியாசங்கள் இல்லை.   வேறுபாடுகள் கொண்டவைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.
தாராளமயப் பொருளாதாரப் பின்னணி கொண்ட பண்பாட்டு வாழ்க்கையில் நடுத்தர வர்க்கத் தமிழர்கள் நுழைந்துவிட்ட போதிலும், பெண்களில் பெரும்பாலோர் குடும்பப் பெண்கள் என்ற பாத்திரத்தையே விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பது நமது தொலைக்காட்சி ஊடகங்களின் கணிப்பு. எனவேதான் அவர்களுக்காகத் தொடர்கள் என்னும் குடும்பக் கதைகள் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. தொடர்கள் அடிப்படையில் பொதுப் பார்வையாளர்களுக்கானவை அல்ல. இலக்குப் பார்வையாளர்களுக் கானவை. தொடர்களைப் போலவே விடுமுறை நாட்களில் மட்டும் ஒளி பரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளும் கூட இலக்குப் பார்வையாளர்களை நோக்கியன தான். சன்னில் ஒளிபரப்பான ஜாலிவுட் எக்ஸ்பிரஸ், அசத்தப் போவது யாரு என்ற இரண்டும் திரைப்படத் துணுக்குகள் அல்ல. திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் என்பதும் இவை நடுத்தர வர்க்கத்தின் ஓய்வு நாட்களான சனி , ஞாயிறுகளில் ஒளிபரப்பப் படுகின்றன என்பதும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. இவை மட்டும் அல்ல விடுமுறை நாட்களின் முக்கிய நேரத்தில் ஒளிபரப்பாகும் திருவாளர்- திருமதி, மஸ்தானா மஸ்தானா, சூப்பர் டூப்பர் எனப் புதிய புதிய நிகழ்ச்சிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிகளிலும் கூட நகைச்சுவை அம்சம் தான் அதிகம் இழையோடிக் கொண்டிருக்கிறது.
சனி, ஞாயிறுகளில் நகைச்சுவைக் காட்சிகளைத் தயாரித்து வழங்கும்படி சன் தொலைக்காட்சியை நிர்ப்பந்தம் செய்து அதற்குச் சரியான போட்டியாக மாறியது விஜய் தொலைக்காட்சி அலைவரிசை. அரசியல் கட்சிகளின் பின்புலத்தோடு இயங்கும் எல்லா அலைவரிசைகளும் செய்திகளின் வழியாக ஆதரவு நிலைபாட்டைப் பார்வையாளர்களிடம் செலுத்தி ஆதரவாளர்களாக மாற்றும் நோக்கத்தை தவறாமல் செய்கின்றன. அதே நேரம் வேறு சில பொதுக் கூறுகளையும் கொண்டிருக்கின்றன. இலக்குப் பார்வையாளர்கள் எத்தகையவர்கள் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு அதற்கேற்ப நிகழ்ச்சிகளைத் தருகின்றன. இந்தப் போக்கில் முன்னோடியாக இருப்பது விஜய் தொலைக்காட்சி அலைவரிசை. அந்த அலைவரிசையின் எல்லையும் தொடர்புகளும் தமிழக அளவிலானவை மட்டும் அல்ல; உலக அளவில் செயல்படும் நட்சத்திர அலைவரிசைகளின் (Star Groups) தொடர்ச்சியும் கூட. அதன் காரணமாகவே அரசியல் கட்சி சார்பற்ற அலைவரிசையாகத் தோற்றம் தரும் அலை வரிசையாகவும் இருக்கிறது. ஸ்டார் விஜய்க்கு அரசியல் கட்சி சார்பு இல்லாமலிருப்பது உண்மையாக இருக்கலாம்; ஆனால் அரசியல் சார்பு இருக்கிறது என்பதை மறந்து விட முடியாது.
மனிதர்களைச் சாதிகளாகப் பிரித்துப் புரிந்து கொண்டிருந்த இந்திய அறிதல் முறைக்கு மாறாக ஐரோப்பியக் கல்வி முறை அறிமுகம் செய்த வார்த்தை வர்க்கம். இந்த வார்த்தையை இந்தியர்கள் எந்த நேரத்திலும் ஐரோப்பிய அர்த்தத்தில் உள்வாங்கிக் கொண்டதாகவோ,அதற்கேற்ப மாறி விட்ட தாகவோ சொல்ல முடியாது.ஆனால் காலனிய ஆட்சியாளர்களும் கருத்தியலாளர்களும் அப்படி மாற்றி விடுவதிலிருந்து எப்பொழுதும் பின் வாங்கியதும் இல்லை. உயர் வர்க்கத்தாரையும், கடைநிலை வர்க்கத்தாரையும் பற்றிய கவலைகளை விடவும் நடுத்தர வர்க்கத்தைப் பற்றிக் காலனிய ஆட்சி அதிகம் கவலைப்பட்டது.
ஆசைகளோடும் கனவுகளோடும் அலையும் வர்க்கமாக நடுத்தர வர்க்கமே இருக்கும் என்பதைக் காலனி ஆட்சியாளர்கள் நன்கு அறிந்தவர்கள்.காலனி ஆட்சி, இந்தியர்களில் ஒரு பிரிவினரை நடுத்தர வர்க்கத்தினராக மாற்றும் பெருமுயற்சியில் இறங்கியிருந்தது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளை ஆவணக்காப்பகங்களில் தேட வேண்டியதில்லை. ஐரோப்பியக் கல்வியின் வழியாகத் தோன்றிய வாசிப்புப் பழக்கத்திற்குத் தீனி போடும் விதமாகத் தோற்றுவிக்கப் பட்ட பத்திரிகைகள், அரங்க நிகழ்வுகள், திரைப்பட சாதனங்கள் என ஒவ்வொன்றின் வருகையும் நடுத்தர வர்க்கத்தின் ஓய்வுப் பொழுதைக் குறி வைத்துக் கடை விரிக்கப்பட்டவை நடுத்தர வர்க்கம் என்ற சொல்லிற்குப் பொதுப்புத்தி கொண்டிருக்கும் வரையறை மாதச்சம்பளம் வாங்கும் கூட்டம் என்பது. தங்களுக்குக் கிடைக்கும் மாதச் சம்பளத்திற்காக ௲ அதனைத் தரும் எஜமானர்களுக்காக - தங்கள் உழைப்பைத் தரத் தயாராக இருக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு அதிகார வர்க்கம் எப்பொழுதும் சம்பளத்தை மட்டுமே தந்ததில்லை. வேறு வகையான சன்மானங்களையும் பலவிதமான வழிகளில் தருவதுண்டு. இன்றும் கூடத் தங்கள் ஊழியர்களுக்கு சில பத்தாயிரங்கள் தொடங்கி லட்சங்களை மாதச் சம்பளமாகத் தரும் பன்னாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் களியாட்ட ஏற்பாடுகளையும் சேர்த்தே செய்கின்றன. சேர்ந்திசைப் பாடல்கள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தொடங்கி யோகா என வெளியே தெரியும் கொண்டாட்டங்களோடு வெளியே தெரிய வராத கொண்டாட்டங்களையும் மறைமுகமாக ஏற்பாடு செய்கின்றன.
நடுத்தர வர்க்கமாக மாறும் மனிதர்களுக்கு இவை எல்லாம் இலவசமாகக் கிடைக்கின்றன என்பதினால் பெரிய அளவு தயக்கமின்றி நுழைந்து விடுகின்றனர். நடுத்தர வர்க்கம் நுகர்வுத்திரளாக மாற்றப்படும் ரசாயனத்தில் வங்கிகள் தரும் கடன் வசதிகளும், தவணை முறைத் திட்டங்களும் அடங்கும். பொதுப்புத்தியின் வரையறைக்கு மாறாகச் சமூகவியலாளர்களும், போராட்டத்தின் வழியாகச் சமூகத்தை மாற்றி விட முடியும் என்று நம்புகிறவர்களும் நடுத்தர வர்க்கம் பற்றி வைத்திருக்கும் மதிப்பீடுகள் வேறானவை. இந்த வர்க்கம் எப்பொழுதும் ஒருவித குற்ற உணர்வுடன் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. படிப்பு காரணமாக உறவினர்களின் வாழ்நிலையிலிருந்தும் முறையிலிருந்தும் பிய்த்துக் கொண்டு வந்த கூட்டம் நடுத்தர வர்க்கம். நடுத்தர வர்க்கப் பரப்பிற்குள் நுழைவதற்கு முன்பு வாழ்ந்த பரப்பு பெரும்பாலும் ஊரகப் பகுதிகள். தொடர்ந்து ஊரகப் பகுதிகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பெற்றோர்களையும் உறவினர்களையும் விடக் கூடுதல் வசதிகளை அனுபவிக்கும் வாய்ப்பை நடுத்தர வர்க்கப் பரப்பு தருகிறது.
தங்களது கடும் உழைப்பின் மூலமாக உயர்த்தி அனுப்பிய உறவுக்கார மனிதர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்த போதும், நுகர்வியப் பண்பாட்டிற்குள் நுழைய நேர்ந்ததின் காரணமாக அது இயலாமலும் போகும். அதன் தொடர்ச்சியாக ஏற்படும் குற்ற உணர்வுடன் வாழ நேர்வதால் அந்த வர்க்கத்தினருக்கு சமூக பிரக்ஞை என்பது இயல்பானது என நம்புகின்றனர். குற்ற உணர்வும் விருப்பமும் சேர்ந்து அதிகார எதிர்ப்புக் குரல்களாகவும் விமரிசனங்களாகவும் அமையும் கலை இலக்கியங்களை ஆதரிக்கும் நிலைபாட்டிற்கு தள்ளும் என்பது நடுத்தர வர்க்கம் பற்றிய கணிப்பாக இருக்கிறது. ஆனால் இந்திய நடுத்தர வர்க்கம் நடைமுறையில் இதற்கு மாறானதாக இருக்கிறது. எல்லை மீறிய தன்னலத்துடன் இருப்பதோடு, பொறுப்பற்ற வெளிப்பாடுகளை ஆதரிப்பதாகவும், பிரமாண்டங்களின் அணி வகுப்பிலும் நகல்களின் பெருக்கத்திலும் மூழ்கிக் கிடக்கிறது.
தாராளமயப் பொருளாதாரத்தின் மையமாக விளங்கும் நடுத்தர வர்க்கம் தான் இன்றைய முக்கியமான நுகர்வோர் கூட்டம். அதனைப் பொருள் உற்பத்திக் குழுமங்களும் உணர்ந்துள்ளன. அவைகளின் உதவியோடு புதிய புதிய நிகழ்ச்சிகளைப் புதிய புதிய அரங்குகளில் தயாரித்து அளிப்பதன் மூலம் சன் தொலைக்காட்சி அலைவரிசையின் ஏகபோகப் பார்வையாளர்களைத் தன் வசப்படுத்தும் வேலையைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்த விஜய் தொலைக்காட்சி நடுத்தர வர்க்கத்திற்குத் தேவையான புத்தம் புதிய பொழுதுபோக்கு அம்சங்களைத் தரும் திட்டத்தில் இருப்பதை அதன் நிகழ்ச்சிகள் சொல்கின்றன.
அதன் தொடக்கத்தைச் சரியாகச் சுட்டிக் காட்டுவதென்றால் இப்போது மூன்றாவது கட்டத்தை அடைந்திருக்கும் கலக்கப் போவது யாரு என்பதைச் சொல்லலாம். அதன் தொடர்ச்சியாக ஜோடி நம்பர் ஒன், ஜில்லென்று ஒரு காதல், ஜில்லென்று ஒரு சவால், சூப்பர் ஸிங்கர் , சூப்பர் ஸிங்கர் ஜூனியர், காபி வித் அனு என அதன் புதுவகைத் தயாரிப்புகள் விரிகின்றன. இவை எல்லாவற்றிலும் ஒரு பொதுத் தன்மை உண்டு. போட்டி நிகழ்ச்சி போலத் தோற்றமளிக்கச் செய்து பார்வையாளர்களின் நேரடிப் பங்கேற்பையும், தொலைபேசி வழிப் பங்கேற்பையும் கோருவன அவை. தரம், தரத்தை நாடுதல் என்பது கூட நுகர்வியப் பண்பாட்டின் ஒர் அங்கம் தான்.அவற்றின் உச்சகட்டமாக சென்னையின் அழகுப் பெண்ணையும் ஆணையும் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து நடத்திக் காட்டி முடித்திருக்கிறது விஜய். இந்தப் பரப்பிற்குள் கனாக் காணும் காலங்கள் என்ற பள்ளிக் கூட மாணவர்களின் மனங்களைப் பேசும் புகழ் பெற்ற தொடரையும், நீயா? நானா? எனச் சமகாலப் பிரச்சினைகளை விவாதிக்கும் விவாத மேடையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
புதிய வாழ் முறைகளுக்குள் நுழையும் நடுத்தர வர்க்கத்தைப் பின்னிருந்து இழுக்கும் பழைய மதிப்பீடுகள் பற்றிய எந்தக் கேள்விகளுக்குள்ளும் நுழையாமல், நடுத்தர வர்க்கத்தை முழுமையான நடுத்தர வர்க்கமாகக் கணித்துக் கொண்டு இந்த நிகழ்ச்சிகள் தயாரிக்கப் படுகின்றன. இதற்கு மாறாக நிற்பது மக்கள் தொலைக்காட்சி. நடுத்தர வர்க்கத்தை பழைய மதிப்பீடுகளுக்குள் திருப்பி விடும் நோக்கத்தோடு மரபு சார்ந்த மொழிப்பயன்பாடு, கலைகளின் தேய்வு,சங்க இலக்கியக் காட்சிகள், தமிழ் நிலப்பரப்பின் அவலம் என இன்னொரு திசையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தால்¢ போட்டி விஜய்¢ X மக்கள் என்று தான் சொல்ல வேண்டும். மற்ற அலைவரிசைகள் இந்த அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் நகல்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன.

கருத்துகள்

Vignesh இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்