2017, ஜூன், 19 அன்று பெங்களூருவில் நான் பார்த்த கன்னட நாடகம் “வர்த்தமானதெ சரிதே”. அந்நாடகத்திற்கு நான் அழைக்கப்பெற்ற சிறப்புப்பார்வையாளன். நான் மட்டுமல்ல; கர்நாடகாவிலிருந்து இருவர், தெலங்கானாவிலிருந்து, டெல்லியிலிருந்து தலா ஒருவர் என இன்னும் ஐந்து சிறப்பு அழைப்பாளர்கள் இருந்தனர்; பொதுப்பார்வையாளர்களும் இருந்தனர். அனைவரையும் இழுத்துவைத்துப் பார்த்து ரசிக்கச் செய்த நாடக நிகழ்வு அது. ஹிந்தியில் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற (2011) பேரா.காசிநாத்சிங்கின் சிறுகதையான ‘கவுன் தக்வா நகரிய லூட ஹொ (Kaun thagwa Nagariya Luta ho)’ வின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து நாடகமாகத் தழுவி, வடிவமைத்து இயக்கியவர் தமிழின் முக்கிய நாடக ஆளுமையான ப்ரசன்னா ராமஸ்வாமி. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளித்த நிகழ்வு அந்தநாள். ப்ரசன்னாவோடு அந்நாடகத்தில் மேடையிலும் பின்னரங்கிலும் பங்குபெற்றவர்கள் கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிபேசும் 18 மாணாக்கர்கள். தொழில்முறை நாடகக்குழுவின் வழியாக இல்லாமல், பயிற்சிபெறும் நடிப்புக்கலை மாணவர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்நாடகத்தை - அதன் வடிவத்தை - நிகழ்த்துமுறையை- அழகியல்...