வீடற்றவர்களின் கதைகள்
மனிதர்களின் அகவுலகம் என்பது எப்போதும் புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட
உலகமாகவே இருக்கிறது. ஒருவரின் நேரடி அனுபவம் என்பதுகூட ஒருவிதத்தில் புனைவுதான். நேரடி அனுபவம்போல எழுதப்பெற்ற புனைவுகள்
நம்பத்தகுந்த புனைவுகளாக இருக்கின்றன என்று சொல்லலாமேயொழிய, அவையெல்லாம் உண்மை என்ற சொல் தரும்
பொருளைத் தந்துவிடுவதில்லை. எல்லாவகை எழுத்துகளுமே, நம்மைத் தவிர்த்து இன்னொருவரைப் பார்க்கும்போதும், அவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போதும், நம்மிடத்தில் நிறுத்திப்பார்த்து அவராக
நம்மை நினைத்துக்கொள்வதில் விரிகிறது புனைவு.
புனைவில் அலையும் மனிதர்களில் தன்னைக் கரைத்துக்கொள்ளும்
நிலை வாசிப்பாக மாறுகிறது. தமிழ்நாட்டு இலக்கியங்களை வாசிக்கும்போது நான் அதற்குள்
அலையும் மனிதர்களை இங்குமங்குமாகப் பார்த்த மனிதர்களோடு உரசிப்பார்த்து எனது இலக்கியவாசிப்பை
முழுமையாக்கிக் கொள்கிறேன். தமிழ்நாடு எனும் நிலப்பரப்பில் எனது காலத்தில் நான் பார்த்திராத
மனிதர்களின் அடையாளங்களோடு புனைவுக்குள் அலையும் மனிதர்களை வாசிக்கநேரும்போது கடந்த
காலத்திற்குள் நுழைய வேண்டியவனாக மாறிக்கொள்கிறேன். அந்த மாற்றம் எனது தன்னுணர்வுடன் நிகழ்கிறது
என்றுகூடச் சொல்லமுடியாது. என்னைத் துறந்து அல்லது மறக்கடித்து நிகழும் வேதிவினையாக
இருக்கிறது. அந்த
வேதிவினை ஒருவரைத் தான் வாழும் நிலப்பரப்பிற்குள் அலையும் மனிதர்களின் சாயல்களை மட்டுமல்லாமல், அவரறியா நிலப்பரப்பில் வாழும்
மனிதர்களை எழுதிக்காட்டும் இலக்கியப்பிரதிகளையும் வாசிக்கச் செய்கிறது. நிலப்பரப்பு என்னும் சொல்லிற்குப் பதிலாகக்
காலப்பரப்பையும் இட்டுநிரப்பிக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டு மனிதன் மலையாள மொழியில் அல்லது வங்காள மொழியில்
எழுதப்பெற்ற புனைவுகளை வாசிக்கும்போது தன்னை - தன் சாயலில் உலவும் மனிதர்களை வாசிப்பதாக
நினைப்பதில்லை;வாசிக்கமுடியாது. தன்னிலிருந்து விலகிய மற்றவர்களை வாசிப்பதாகவே
நினைக்கமுடியும். இதேபோல்தான் ஆங்கிலத்திலிருந்து -போல்ஸ்கியிலிருந்து - ஸ்பானிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பெற்ற
புனைவுகளை வாசிக்கும்போதும் தோன்றும். மற்றவர்களை வாசிப்பதில் ஏற்படும் தடைகளும் ஈடுபாடும் பலவிதமானவை. நான் இலங்கையென்னும் தேசப்பரப்பிலிருந்து
வரும் - தமிழிலிலேயே எழுதப்பெற்ற புனைவுகளையும்
மற்றமையின் இடத்தில் வைத்தே வாசித்துவருகிறேன்.
தமிழில் எழுதப்பெற்ற புனைவுகளை- புனைவுகளுக்குள் அலையும் மனிதர்களை
வாசிக்கவும் அவர்களைப் பற்றி நினைத்துக்கொள்ளவும் தொடங்கிய ஆரம்பப் புள்ளியிலிருந்தே
எனது வாசிப்பு இப்படித்தான் இருக்கிறது. இலங்கையிலிருந்து வரும் கவிதைக்குரல்களும்
புனைகதைகளையும் தமிழ்நாட்டுத் தமிழ் இலக்கியமாக நினைத்து வாசித்ததில்லை; வாசிக்கமுடிந்ததில்லை. காரணங்கள் என்னிடம் இருப்பதாக நான்
நினைக்கவில்லை. அந்தப்பிரதிகளில் - அவை உருவாக்கி முன்வைக்கும் புனைவுலகத்தில்
இருப்பதாகவே நினைக்கிறேன். அப்படியில்லாமல் யாழ்ப்பாணத்தை, கிழக்கிலங்கையை, மலையகத்தை எழுதிப் பரப்பியிருக்கும்
இலங்கைத் தமிழ் எழுத்துகளை ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியத்தின் பகுதியாக ஒருவர் முன்வைக்கக்கூடும். அப்படி முன்வைப்பவர் ஒரு மொழிக்குள்
நிலவும் இலக்கியங்களின் தனித்தன்மைகளை - வேறுபாடுகளை ஏற்கமறுப்பவர் என்ற குற்றச்சாட்டைச்
சந்திக்க நேரும் என்பது எனது கணிப்பு. ஒன்றுபடுதல் என்பது அரசியல் வெற்றிக்கும் சமூகவிடுதலைக்கும்
முதன்மைத் தேவையாக இருக்கலாம். வேறுபடுதலும் மாறுபாடு கொள்ளுதலும் இலக்கியத்தின் -பண்பாட்டின் தனித்தன்மைகளைப் பேணுவதற்கும்
கருத்தியல் தள விரிவுகளுக்கும் அடிப்படைத் தேவைகளாக இருக்கின்றன.
கடந்த 35 ஆண்டுகளாக நான் வாசித்த இலங்கைத் தமிழ் எழுத்துகள் அந்நிலப்பரப்பை
போர்க்களக்காட்சிகள் நிரம்பிய நிலமாகவே கட்டமைத்து வைத்துள்ளன. தமிழர்களுக்கென்றொரு தனிநிலம் என்றொரு
கருத்து உருவாகிப் போராட்டங்கள் நடக்கத்தொடங்கி, போர்களாக மாறியபோது கவிதைக்குரல்களாக
எம்மை வந்தடைந்த அதே காலகட்டத்தில் - இன்னும் சொல்வதானால் இடதுசாரிகளின் வழியாகத் தமிழ்நாட்டிற்கு
வேறுவகையான இலக்கியங்களும் வந்தடைந்திருந்தன. டொமினிக் ஜீவாவின் மல்லிகையின் வழியாகவும், டேனியலின் வழியாகவும் போரிலிருந்து
விலகிய இலங்கைத் தமிழ் மனிதர்களின் அறிமுகம் இருந்தது. அவ்வறிமுகத்தை அழித்துப் பெரும்போக்காக
மாறியது போர் நிகழ்வு இலக்கியங்கள். போர்களைத் தூண்டியவர்களாகவும் போர்களுக்கு உதவியவர்களாகவும், திட்டமிட்டுத் தந்தவர்களாகவும், திசைமாறிக் கொன்றவர்களாகவும் இருந்த
இந்திய/ தமிழ்நாட்டு
அரசுகளைப் பற்றித் தமிழ்நாட்டுத் தமிழர்கள் முதலில் அறியவில்லை. அவற்றின் உள்நோக்க/ ஆதிக்க மனோபாவ விளையாட்டுகளை அறியாத
தமிழ்நாட்டுத் தமிழ்த்திரள்கள் போர்க்கள இலக்கியங்களின் வாசிப்பாளர்களாக இருந்தார்கள்; எழுதப்பெற்ற போர்க்களங்களைக் காட்சிகளை
ரசிப்பவர்களாக மாறினார்கள்; கொண்டாடுபவர்களாகத் தொடர்கிறார்கள். இந்திய/ தமிழ்நாட்டு அரசுகளுக்கும்சரி அவற்றின்
கீழ் வாழும் தமிழகத்தமிழர்களுக்கும்சரி எப்போதும் ஈழத்துப் போர்களும் அவற்றின் அழிவுக்காட்சிகளும்
குற்றவுணர்வை உண்டாக்கவில்லை. அதற்குப் பதிலாகப் பண்டைத் தமிழர்களின்
வீரயுகத்தைக் கொண்டுவந்தவர்கள் என்ற பெருமிதத்தைக் கட்டமைத்துக்கொண்டார்கள்.
அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத்தியற்கை என்ற புறநானூற்று வரிகளைப் பண்டைத்தமிழர்கள்
ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொண்டு எல்லா நேரமும் போரில் ஈடுபட்டுக்கொண்டே இருந்ததுபோலக்
காட்சிச் சித்திரங்களை எழுதிக்காட்டிய புறநானூற்றை முன்மாதிரிகளாகக் கொள்ளும்போது அப்புறக்
கவிதைகளுக்குள் இருந்த போர்மறுப்புக் குரல்களைக் காண மறந்தவர்கள் நிகழ்காலத்தமிழர்கள்.‘பொய்கையும் தீயும் ஒன்று’ என வேதனைப்பட்ட கோப்பெண்டுவின் குரலை
நாம் கேட்கவில்லை. ‘கடந்த மாதம் முழுவெண்ணிலாவின்போது எம் குன்றும், எம் தந்தையும் உடனிருந்தபோது இருந்த
மகிழ்ச்சி, இந்த
வெண்ணிலாவின்போது காணாமல் போய்விட்டது;எம்குன்றும் பிறர்கொண்டார், யாம் எந்தையும் இலமாய் ஆனோம்; காரணம் இடையில் நடந்த போர் எனப் போரைச்சாடிப்
பின் வாடி வதங்கிய பாரிமகளிரின் குரல்களுக்குச் செவிகொடுத்ததில்லை.
37 சிறுகதைகளைக் கொண்ட தாமரைச் செல்வியின் இத்தொகுப்பு,
போர்க்காட்சிகளாய் விரிந்த 30 ஆண்டுக்கால ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பை வேறுவிதமாக எழுதிக்காட்டுகின்றன. போரை நியாயப்படுத்துவதையோ, போரை மறுப்பதையோ முதன்மையாக இந்தக்
கதைகள் கருதவில்லை. சிங்களப்பேரினவாதத்தை எதிர்ப்பதற்காக அணிகளைக் கட்டிய
இயக்கங்கள் எதனையும் முதன்மை இயக்கமாக முன்னிறுத்தவில்லை. இந்திய அமைதிப்படை வரவுக்கு முன்பே
ஒன்றோடொன்று மோதிக்கொண்டு தங்கள் அணிகளை நிலைநிறுத்திக்கொண்ட நிகழ்ச்சிகளை- வரலாற்றை - வரலாற்றின் நாயகர்களைப் பெயரிட்டுப்
பேசவில்லை. இந்தியப்
படைகள் ஈழத்திற்குள் வந்து செய்த அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டி அனைவரும் எதிர்த்துக்கிளர்ச்சி
செய்தார்கள்; முதன்மையான
ஒரு இயக்கத்தைப் பேரியக்கமாக மாற்றி அதன் பின் அணிதிரண்டார்கள் என்ற வரலாற்றின் கீற்றுகளையும், அதில் தற்கொலைப்படைகளாக மாறிய பெண்களையும்
ஆண்களையும் அவர்களின் சாகசங்களையும் எழுதிக்காட்டவில்லை. அவர்களின் துயரங்களையும் வலிமிகுந்த
வாழ்க்கையையும் எழுதுவதையே தனது எழுத்துப்பணியாகத் தாமரைச்செல்வி செய்யவில்லை. முதன்மையாக அவர் நினைக்காதபோதும் இவையெல்லாம்
ஒவ்வொரு கதையிலும் பின்னணியாகவும் தூரத்து இடிமுழக்கமாகவும், அண்மையில் கேட்கும் மௌன அழுகையாகவும்
கேட்டுக்கொண்டே இருக்கும்படி எழுதப்பெற்ற கதைகள் என்பதுதான் இந்தக் கதைகளின் தனிச்சிறப்பு.
இந்தக் கதைகளுக்குக் குறிப்பான இடப்பின்னணியும் காலப்பின்னணியும்
உள்ளன. கிளிநொச்சிப்
பகுதியே பெரும்பாலான கதைகளின் வெளிகள். இந்தியப் படைகள் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய 1980 களின் பின்பாதியும் தொன்னூறுகளின் முன்பகுதியும்
இக்கதைகளின் குறிப்பான காலங்கள். குறிப்பான இந்த வெளிகளையும் காலத்தையும் உணர்ந்து வாசிக்கும்போது
இக்கதைகளின் இலக்கிய நோக்கமும் அதனை வெளிப்படுத்தியுள்ள விதமும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக
இருப்பதை உணரலாம். பார்வை,சுவர்,விழிப்பு, காணிக்கை,உறவு, முகமற்றவர்கள், வன்னியாச்சி,
முற்றுகை, ஊனம், பசி, பாதணி, ஊர்வலம், அக்கா, இன்னொரு பக்கம், பாலம், இடைவெளி, ரூனா, பகிர்வு எனப் பெரும்பாலான கதைகள் ஒற்றைச்
சொற்களைத் தலைப்பாகக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் கதை பேச விரும்பியதை நேரடியாகச் சொல்வதை உறுதிசெய்துவிடுகிறார்
கதாசிரியர். போர்க்களத்தை
எழுதாமல், போரினால்
ஏற்பட்ட இடப்பெயர்வையே எல்லாக் கதைகளும் எழுதும் உரிப்பொருளாகக் கொண்டிருக்கின்றன. சொந்த ஊரை, வீட்டை, கடையை, குடித்தொழிலை, உழுதுபயிர் செய்த காணியை, உறவினர்களைப் பிரிந்து இன்னொரு ஊரில்
பெயர்த்துப் போடப்பட்ட மனிதர்களை ஒவ்வொரு கதையும் நம்முன்னே விரிக்கின்றன.
இடப்பெயர்வு என்பது ஒருமுறை அல்ல;பலமுறை நிகழ்கிறது இம்மனிதர்களுக்கு.ஒவ்வொரு இடப்பெயர்வின்போதும் அவர்களின்
பொருட்சுமைகள் குறைகின்றன; ஆனால் மனச்சுமைகள் கூடிக்கொண்டே இருக்கின்றன. அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு தேவைகளும்
நடமாட்டமும் கேள்விக்குள்ளாகின்றன. வாழ்வின் முக்கியமான தருணங்களான பிறப்பு, திருமணம், திருவிழா, சாவு போன்ற பண்பாட்டு நடவடிக்கைகளும்
அவற்றில் நிகழவேண்டிய சடங்குகளும் வெறும் நினைவுகளாக மாறுகின்றன. தங்களுக்கென ஒரு தேசத்தை உருவாக்கிச்
சுதந்திரமான மனிதர்களாக வாழவிரும்பிய ஒரு கூட்டத்தின் பாடுகளும் அவற்றின் காரணங்களும்
கதைகளின் நிகழ்வுகளாகவும், விசாரணைகளாகவும் வாசிப்பவர்களை முகத்தில் அறைந்து விசிறியடிக்கின்றன. முதன்மையான கதைப்பொருளாக இடப்பெயர்வும்
அதன் காரணமான துயரங்களுமே இக்கதைகளில் பதிவாகியுள்ளன என்றபோதிலும், அரசுப்படைகளின், அவற்றின் குரூரமான தேடுதல் வேட்டைகளையும்
சில கதைகள் விரிக்கின்றன. அதேபோல் தமிழ்ச் சமூகத்திற்குள்ளேயே சுயநலப் போக்கோடும்
ஆடம்பர வாழ்க்கை விருப்பத்தோடும், பழம்பெருமைபேசித்திரியும் கூட்டமும் இந்தப் போர்க்களத்தில்
இருந்தன; செயல்பட்டன
என்பதையும் தாமரைச்செல்வி எழுதிக்காட்டுகிறார்.
ஈழத்துத் தமிழ் இலக்கியப்பரப்பு என்பது போர்க்கள இலக்கியம்
என்பதாகவும் புலம்பெயர் துயரப் பதிவுகள் என்பதாகவும் அறியப்படும் நிலையில் இன்னொரு
போக்கும் கவனிக்கவேண்டிய ஒன்றாக - சொந்த நிலப்பரப்பிற்குள் இடம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கைப்பதிவுகளாக
இருந்தன என்பதையும் கவனிக்க வேண்டும் என்கின்றன இக்கதைகள். அதனைக் கவனிக்கின்ற போதே காணியிழப்புகளும்
காணாமல் போனவர்களும் கவனிக்கப்படுவார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் தாமரைச்செல்வி. எந்தப் பாத்திரங்களும் குரலை உயர்த்திப்பேசும்
தொனியில் எழுதப்படாமல், வாழ்க்கையை எல்லா வலிகளோடும் இருப்புகளோடும் எதிர்கொள்ளும்
மனிதர்களை எழுதிக்காட்டும் நடப்பியல் எழுத்துப்பாணியின் தீவிரத்தனத்தை இக்கதைகளின்
நான் வாசித்தேன் நீங்களும் அதனை வாசித்து உணரலாம். இந்தப்புரிதலோடு, இக்கதைகளை உலகத்தமிழ் இலக்கியப்பரப்பில்
இன்னொரு வித்தியாசமான புனைவுகள் எனப் பரிந்துரை செய்கிறேன்.
கருத்துகள்