நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்: ப்ரசன்னா ராமஸ்வாமியின் அரங்கியல் முறைமைகள்

2017, ஜூன், 19 அன்று பெங்களூருவில் நான் பார்த்த கன்னட நாடகம் “வர்த்தமானதெ சரிதே”. அந்நாடகத்திற்கு நான் அழைக்கப்பெற்ற சிறப்புப்பார்வையாளன். நான் மட்டுமல்ல; கர்நாடகாவிலிருந்து இருவர், தெலங்கானாவிலிருந்து, டெல்லியிலிருந்து தலா ஒருவர் என இன்னும் ஐந்து சிறப்பு அழைப்பாளர்கள் இருந்தனர்; பொதுப்பார்வையாளர்களும் இருந்தனர். அனைவரையும் இழுத்துவைத்துப் பார்த்து ரசிக்கச் செய்த நாடக நிகழ்வு அது.

ஹிந்தியில் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற (2011) பேரா.காசிநாத்சிங்கின் சிறுகதையான ‘கவுன் தக்வா நகரிய லூட ஹொ (Kaun thagwa Nagariya Luta ho)’ வின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து நாடகமாகத் தழுவி, வடிவமைத்து இயக்கியவர் தமிழின் முக்கிய நாடக ஆளுமையான ப்ரசன்னா ராமஸ்வாமி. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளித்த நிகழ்வு அந்தநாள். ப்ரசன்னாவோடு அந்நாடகத்தில் மேடையிலும் பின்னரங்கிலும் பங்குபெற்றவர்கள் கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிபேசும் 18 மாணாக்கர்கள். தொழில்முறை நாடகக்குழுவின் வழியாக இல்லாமல், பயிற்சிபெறும் நடிப்புக்கலை மாணவர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்நாடகத்தை - அதன் வடிவத்தை - நிகழ்த்துமுறையை- அழகியல் உணர்வையெல்லாம் இணைத்து ஒரு விமரிசனச் சொற்றொடராகச் சொல்ல நினைத்தபோது தோன்றியதே நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல் என்ற சொற்றொடர்.
 
நாடகப்பள்ளி ஒன்றின் கற்கைமுறையின் பகுதியாகப் பயிற்சி நாடகமொன்றை வடிவமைத்து, இயக்கி மேடையேற்றவரும் விருந்து இயக்குநர்கள்(Guest Directors) பெரும்பாலும் பிரதியளவில் சோதனைகளில் ஈடுபடுவதில்லை. ஏற்கெனவே நன்கு அறியப்பெற்ற செவ்வியல் நாடகங்களையோ, நல்திறக்கட்டமைப்புக்கொண்ட ஐரோப்பியப் புதுச்செவ்வியல் நாடகங்களையோ, நவீனத்துவ நாடகங்களையோ தெரிவுசெய்து பயிற்சியளித்து மேடையேற்றிக் காட்டிவிடுவர். அத்தகைய மேடையேற்றங்கள், அறியப்பெற்ற நாடகப்பிரதியின் பலமான நாடகீயக் கூறுகளினாலேயே ஓரளவு வெற்றிக்கான உத்தரவாதத்தை உறுதிசெய்யும். இயக்குநர் தரும் பயிற்சிகளின் சிறப்புகளும் வேலைவாங்கும் திறனும், பிரதியின்மீது இயக்குநர் உருவாக்கும் புத்தாக்க விளக்கங்களும் சேர்ந்து, முழுமையான வெற்றியை உறுதியாக்கும்; பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றுவிடும். இந்தப் பொதுப்போக்கிலிருந்து விலகலை விரும்புகிறவர்களுக்கு ஒரு பொதுக்குணமுண்டு. அவர்கள் தங்கள் காலத்தைப் பற்றிய விமரிசனத்தைப் பார்வையாளர்களுக்குத் தரவேண்டுமென்ற விருப்பமுடையவர்கள்; அந்த நோக்கத்தோடு நாடகக் கலைஞர்களைப் பயிற்றுவிப்பவர்கள். ப்ரசன்னாவின் இந்த மேடையேற்றம் அத்தகைய விலகலைக் கொண்டிருந்தது. நன்கு அறியப்பட்ட நாடகாசியரால் எழுதப்பெற்ற நாடகப் பிரதியைத் தனது தயாரிப்புக்குத் தெரிவுசெய்யாமல், கதையொன்றிலிருந்து பிரதியுருவாக்கம் செய்யலாம் என்பதில் தொடங்கி, நடிப்புப் பயிற்சி, உடை, ஒப்பனை, இசைக்கோர்வைகள் என அனைத்திலும் மாணாக்கர்களுக்குப் பயிற்சி அளித்ததோடு தனது அரங்கியல் கோணத்திற்கேற்ப நாடகத்தை வடிவமைத்திருந்ததை நாடகமேடையேற்றத்தின்போது பார்க்கமுடிந்தது. அடுத்தநாள் நடந்த தேர்வுக்கான உரையாடல் நிலையில் மாணவர்கள் வெளிப்படுத்திய சொல்லாடல்களிலும் அவர் உருவாக்கியிருந்த புரிதலைக் கேட்க முடிந்தது.


தொழில்மயமாதல், நகரியமாதல் என்பதை வளர்ச்சியாகக்கருதி உருவாக்கப்பெற்ற பொருளாதார நடைமுறைகள், 1990 -களில் நுழைந்த தாராளமயமாதல், தனியார் மயமாதல், உலகமயமாதல் போன்றவற்றால் பெருவீக்கங்களை உருவாக்கியுள்ளன. நகரங்களாக இருந்தவை பெருநகரங்களாகவும், பெருநகரங்கள் மாநகரங்களாகவும் வளர்ந்து கிராமங்களை இல்லாமல் ஆக்கிக்கொண்டிருக்கின்றன. கிராமத்து மனிதர்களை நகரங்களின் பெருவயிற்றுக்குள் இழுத்துச் சக்கையாக்கிப் பிழிகின்றன. எளிய வாழ்க்கைமுறைமைகளைச் சிதைத்துவிட்ட நகரியப்பிருமாண்டங்களால் தொலைந்துபோனவற்றுள் முதன்மையானது சுற்றுச் சூழல். பிருமாண்டங்களால் மட்டுமல்லாமல், நாகரிகம், பொழுதுபோக்கு, கூட்டத்தோடு இணைதல் போன்றவற்றின் பெயரால் திசை திருப்பப்படும் மக்கள், தங்களின் அடிப்படை ஆதாரங்களான நிலம் நீர் காற்று காடு என அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். அதன் விளைவால் அவர்களது வாழ்க்கையின் நகர்வுகள் நகரங்களை நோக்கியதாகிவிட்டன என்பது இந்தியா சமூகத்தின் நிகழ்கால இயங்குநிலை. இந்த இயங்குநிலையில் பலன்பெறும் அரசியல் சக்திகளை அம்பலப்படுத்துவதை வர்த்தமானதெ சரிதெ நாடகம் முதன்மையாகக் கொண்டிருந்தது. அரசு என்ற அமைப்பின் மீதான விமரிசனத்தை வெளிப்படையாக முன்வைக்கும் நாடகம், அந்த அமைப்பைக் கைப்பற்றுபவர்களின் -அரசியல் கட்சிகளின் - உள்நோக்கங்களையும் அவர்களைப் பின்னின்று இயக்கும் பன்னாட்டு நிதிமூலதனக் குழுமங்கள், அவற்றின் உற்பத்திப் பொருட்களின் வழியாகக் கிடைக்கும் கொள்ளை லாபம், அதனைப் பங்கிட்டுக்கொள்வதின் வழியாக நடைபெறும் சுரண்டல் என விரிவாகப்பேசுகிறது.
 
இதையெல்லாம் பேசும் நாடகங்களை எளிமையான தெருநாடகங்கள் அல்லது பிரச்சார நாடகங்கள் என்று வகைப்படுத்திக் கண்டுகொள்ளாமல் ஒதுக்குவதுண்டு. தினசரித் தாள்களில் வாசிக்கப்படும் செய்திகளைக் கொஞ்சம் உரத்த குரலில் வாசித்துக்காட்டுவதுபோல நடிகனின் குரலை மட்டும் பயன்படுத்திச் சொல்லும் நாடகங்கள் பலவற்றைப் பார்த்தவர்கள் அப்படி ஒதுக்குவதைக் குறையென்று சொல்லவும் மாட்டார்கள். அன்றாட நடப்புகளை -அரசியலைச் சொல்வதுமட்டுமே முதன்மையான நோக்கம்; அதை நிறைவேற்றினால் போதும் என்ற அளவில் நிகழ்த்தப்படும் நாடகங்களை அப்படி ஒதுக்கியதில் எனக்கு வருத்தம் இல்லை; உடன்பாடே. அத்தகைய நிகழ்வுகளை எப்படித் தனது அரங்கேற்றங்களில் சுலபமாகக் கடக்கிறார் என்பதற்குப் ப்ரசன்னாவின் நாடகப் பார்வையைக் கவனித்து அறியவேண்டும். அப்படிக் கடப்பதற்காகப் பலநேரங்களில் கவிதை, ஓவியம், இசையொழுங்கு போன்றவற்றின் உதவியை நாடுகிறார். அத்தோடு சடங்குகளோடு தொடர்புடைய அடவுகளின் அசைவுகளையும் அதன்வழியாகக் கடந்துவரும் மெய்ப்பாடுகளின் நீட்சியையும் பயன்படுத்துகிறார்.
 
பாத்திரங்களின் சந்திப்பால் அல்லது முரண்பாட்டால் உருவாகக்கூடியவை காட்சிகள்; அக்காட்சிகளின் தொகுப்பு அங்கம். அங்கங்களின் இணைவே நாடகப்பிரதி என்பது அடிப்படையான அறியப்பெற்ற வடிவம். இந்த வடிவம் பாத்திரங்களின் ஏற்ற இறக்கங்களின் தொடர்ச்சியால் நகர்த்தப்படும். மரபான இந்த வடிவம் சமகால வாழ்வையோ, அரசியலின் உள்ளோடும் ஏமாற்றுத்தனங்களையோ முன்வைக்க ஏற்றவையல்ல என்பதைச் சொன்னவர்களின் முதன்மையானவர் ஜெர்மானிய நாடகக்கோட்பாளர் பெர்ட்டோல்ட் ப்ரக்ட். எல்லா நிகழ்வுகளுக்கும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்றாலும் அதன் ஒரு ஏற்றத்தோடு இன்னொன்று தொடர்ச்சி காணவேண்டுமென்பதில்லை. தொடங்கிய சிறு ஏற்றத்திலேயே அதன் முடிவும் நிகழ்ந்துவிடுவதுதான் நமது காலத்தின் அமைப்பு. பெரும்பாலும் தற்காலிகத் தன்மைகொண்டவை அவை. தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்வுகளைக் கவனித்தாலே அதன் சலிப்பான போக்கும் அதற்குள் செயல்படும் தொல்படிவக்கூறுகளும் புலப்படும். ஒவ்வொருநாளும் நமது தொலைக்காட்சி ஊடகங்கள் நடத்தும் அரசியல் விவாதங்களை நாம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஏற்கெனவே வெகுமக்கள் மனதிற்குள் பதிந்துகிடக்கும் தேசபக்தி, சமூகநீதி, எதிர்காலம்,புரட்சி, வறுமையொழிப்பு போன்ற மரபான சொற்றொடர்களின் தொன்மத்தன்மையையும், அண்ணா, அம்மா, தலைவர், தளபதி, சிந்தனையாளர், காவலர், குன்று, போன்ற பெயர்ச்சொற்களின் வழியாகக் கட்டமைக்கப்படும் தொல்படிவங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இவற்றைக் கீறிக் காட்டும் சொல்லாடல்கள் நிகழ்வுகளாக்கப்படவேண்டிய காலமிது. இதனைச் சரியான வழியில் நிகழ்த்திக்காட்ட கீழ்த்திசை நாடுகளின் நாட்டார் நாடக வடிவங்களில் காணப்படும் சொல்லுதல் -நிகழ்த்துதல் -அடிக்கோடிடுதல் என்பதான வடிவமுறை ஏற்றது. குரல்மொழியால் சொல்லுதலையும், உடல்மொழியால் நிகழ்விப்புகளையும், இசை, ஒப்பனை, ஒளிக்கோர்வை போன்றவற்றால் அடிக்கோடிடுதலையும் சம அளவில் கலக்கும் உத்தியைக் கையாளும் ஓர் இயக்குநரால் பிரச்சார நாடகம் அழகியலும் கோட்பாடும்கொண்ட நாடகமாக ஆகிவிடும். பிரெக்டிய காவ்யபாணி அரங்கின் அழகியல் சிறப்பு அது.
 
இந்த வடிவத்தில் திரும்பத் திரும்பச் சொல்வதுபோன்ற தன்மை இருந்தாலும், வாழ்க்கையின் அலுப்பை, அதன் ஆழத்திற்குள் இருக்கும் ஏமாற்றுத்தனங்களை அதன்வழியாகவே தான் சொல்லவேண்டியுள்ளது. இதனைத் தனது அரங்கியல் அழகியலாக - இயக்குநர் பார்வையாகக் கொண்டவராகத் தொடர்ந்து வெளிப்படுகிறார் ப்ரசன்னா ராமஸ்வாமி. 90 நிமிடங்கள் நிகழ்த்தப்பெற்ற வர்த்தமானதெ சரிதெவிலும் திரும்பவரல் கூறும், நடிகர்களின் அசைவுகளும் அதனால் உண்டாகும் கோடுகளும் பார்வையாளர்களைத் திசைதிருப்பும் வாய்ப்பை உருவாக்கின. அப்படி உருவாகும்போது இசைக் கோர்வைகளாலும் ஒளியமைப்பின் வழியாக உருவாக்கப்படும் உணர்வூட்டல் வழியாகவும் மேடையை இன்னொரு தளத்திற்கு நகர்த்த முடியும். அந்நகர்த்தல் இந்நாடகத்தில் முழுமையாக நடக்கவில்லை. மஞ்சள், பளிச்சிடும் வெண்மை போன்றவற்றின் வழியாக உருவாக்கப்பட்ட குறியீடும், பலவண்ணங்களைத் தாங்கிய கைப்பொருட்களின் வழியாகச் சொல்ல முயன்ற அர்த்தங்களும் குரல்மொழியோடு இணைந்து புரிதலைச் சரியாகவே வெளிப்படுத்தியதைப் பார்வையாளர்களின் ரசிப்புக்கான சலனங்கள் வழியாக உணரமுடிந்தது.
 
தமிழகப் பரப்பிலிருந்து தனது நாடகங்களில் வழியாக, அவற்றை இயக்கும்போது கடைப்பிடிக்கும் நவீன வெளிப்பாட்டு முறையின் வழியாக இந்திய அளவிலும், சில நிகழ்வுகளின் வழியாகத் தேசங்கடந்த பார்வையாளர்களிடத்திலும் அறியப்பட்டவராக இருக்கிறார் ப்ரசன்னா ராமஸ்வாமி. அப்படி அறியப்படக் காரணமாக இருப்பது அவரது நாடகங்களில் வெளிப்படும் கலையியல்கோட்பாட்டோடும் அரசியல் புரிதலும் என்பதை உறுதியாகக் கூறலாம். அந்தப் புரிதலோடு, தமிழின் நாடக இயக்குநர்களில் நிகழ்கால அரசியலையும், அதன் இயங்கியலையும், அதற்குள் செயல்படும் வெகுமக்களுக்கெதிரான போக்கையும் சுட்டிக்காட்டும் அரங்கியல் ஆளுமை ப்ரசன்னா ராமஸ்வாமி என உறுதியாகக் கூறுவேன். அவரது இயக்கத்தில் மேடையேற்றப்பெற்ற ஒன்றிரண்டு நாடகங்களைப் பார்த்துவிட்டு இப்படிச்சொல்லவில்லை. இதுவரை அவர் இயக்கியுள்ள 25 நாடகங்களில் பாதிக்கும் மேற்பட்ட நாடகங்களைப் பார்த்தவன் என்ற நிலையில் இதனை உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு நாடக இயக்குநரின் பார்வைக்கோணமும், அரங்கியல் அழகியலும், நவீன வெளிப்பாட்டு முறைகளும் ஒன்றோடொன்று இணைந்து வெளிப்படும் அவரது மேடையேற்றங்களைப் பார்த்தவர்கள் யாரும் இதனை ஒத்துக்கொள்ளவே செய்வர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்