கமலென்னும் கட்டியங்காரன்
முன்குறிப்புகளோடு ஒவ்வொரு பாத்திரத்தையும் காட்டி, அவர்களின் முன்னடையாளங்களோடு தொடர்புடைய ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமெனக் கலக்கியெடுத்து உருவாக்கப்பட்ட ஆரம்பம் புதுநிகழ்ச்சிக்கான ஆரம்பம் என்ற அளவில்தான் ஈர்த்தது. அந்தத் தொடக்கம், அடுத்தடுத்த வாரங்களில் நடந்த சின்னச்சின்ன நிகழ்வுகள் வழியாக நல்திற நாடகத்தின் முடிச்சாக(Conflict) மாறியது. அம்முடிச்சுக்குப்பின்னால் பிரிந்துநின்ற அணிச்சேர்க்கை ஒருகுடும்பத்திற்குள் பிரிந்துநிற்கும் பங்காளிகள் அல்லது உறவுகள் என்பதைத்தாண்டியது.
குடும்ப உறுப்பினர்களின் அடையாளமாகப் பார்க்கப்படாமல், தமிழ்நாட்டின் சமூகப் பிரிவுகளின் அடையாளங்களாக மாறின. அந்த மாற்றத்தை நிகழ்வின் வெளியேற்ற விதி சிதைத்துக்கொண்டே இருக்கிறது. அச்சிதைவு நல்திற நாடகக் கட்டமைப்பையும் சேர்த்தே சிதைக்கும் திறன்கொண்டதாக இருக்கிறது. அதன்மூலம் நடப்பியலுக்குப் பின்னான நவீனத்துவப் போக்குகளான குறியீட்டியல், அபத்தவியல், மிகையதார்த்தக் கூறுகள் கொண்டதாக நகரும்போது ஓவியாவின் வெளியேற்றம் முதன்மையான சிக்கலாக (Crisis) மாற்றியது. கடைசிவரை இருந்து வெற்றிக்கனியைப் பறிக்கும் ஓரணியின் தலைமைப்பாத்திரமாக - நாயகப்பாத்திரமாக மாறிய ஓவியாவின் வெளியேற்றம் ஒருவிதத்தில் உச்சக்காட்சி(Climax ) போல் மாறியுள்ளது. இனி முடிவுதான் என்று நினைத்துவிட முடியாது. ஏனென்றால் இன்னும் பாதிக்கும் மேலான நாட்கள் இருக்கின்றன. அதனால் உச்சநிலைக்காட்சிக்குப் பின்னான இன்னும்சில உச்சநிலைக்காட்சிகள் உருவாக்கப்படலாம். அதன்மூலம் நவீனத்துவ நாடகம் என்பதைத் தாண்டிப் பின் நவீனத்துவ வெளிப்பாட்டிற்குள்ளும் நுழையலாம். அப்படியான நுழைவு- காலத்தைக் கவனத்தைக் கொள்ளும் ஒன்றாக- அமையும். அதற்கான குறிப்புகளைக் காட்டியிருக்கிறார் நிகழ்வின் கட்டியங்காரனாகச் செயல்படும் கமல்ஹாசன்.
கமல்ஹாசனின் கட்டியங்காரத்திறன் கச்சிதமாகவும் எதிர்பார்ப்புக்கு அதிகமாகவும் இந்தவாரம் வெளிப்பட்டது. தெற்காசிய நாடுகளின் மரபு அரங்குகளின் மையமான கூறு அது. சம்ஸ்க்ருதச் செவ்வியல் நாடகத்தில் விதூஷகன் என அழைக்கப்படும் அந்தப் பாத்திரத்தின் பரிமாணங்கள் பலவிதமானவை. கிரேக்கச் செவ்வியல் நாடகங்களில் குழுவினரின்(Chorus) செயல்பாட்டிலும் அந்தக் கூறுகள் உண்டு. இதன் கலவையான குணத்தைச் சேக்ஸ்பியரின் நாடகங்களிலும் பார்க்கமுடியும். குறிப்பாக அவரது லியர் அரசனில் (King Lear ) உள்ள முட்டாள்(Fool) பாத்திரம் ஆகச் சிறந்த பாத்திரம். முட்டாள் என்பவன் வெறும் முட்டாளல்ல. லியர் அரசனின் இன்னொரு பிரதி. அவரது தவறை - வீழ்ச்சியைப் புரிந்துகொண்ட பிம்பம். தேர்ந்த நடிகராக அறியப்பெற்ற கமல்ஹாசன் ஆகக்கூடிய நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் வெளிப்பட்டார் நேற்று. கமல்ஹாசனின் வெளிப்பாடு லியர் அரசனின் முட்டாளையும் விஞ்சி நின்றது.
கருத்துகள்