எழுதப்படுவது நிகழ்காலம் அல்ல; கடந்த காலம்


கடந்த காலத்தை எழுதிக்காட்டுதல் என்பதைக் கடந்த காலத்திற்குள் மறுபயணம் செய்வது என அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். நிகழ்த்தும் காலத்தில் வாழும் பார்வையாளர்களை மனதில் கொண்டு அவர்களை நோக்கிப் பேசும் நாடகக்கலைக்கு மட்டுமே உரியதாக நான் நினைக்கவில்லை. உலக மொழிகள் எல்லாவற்றிலும் பொது வடிவங்களாகத் திகழும் கதை, நாடகம், கவிதை, என்ற மூன்றோடும் தொடர்புடையதாகவே நினைக்கிறேன். இந்தப் பேச்சை அரங்கக் கலையை முன்வைத்து இலக்கியக்கலையைப் பற்றிய பேச்சாகவே நினைக்கிறேன். நிகழ்த்துகிறேன்

ஒவ்வொரு எழுத்தாளர்களும் அவர்களது நிகழ்கால மனிதர்களுக்கான பிரதிகளை உருவாக்கும் வேலையையே முதன்மையாகக் கருதுகிறார்கள், ஆனால், ஒவ்வொரு பிரதி உருவாகும்போதும், உருவாக்குபவரின் கடந்த காலமும், அவர் வாழும் சமூகத்தின் கடந்த காலமும் சேர்ந்தே அப்பிரதியை உருவாக்குகின்றன; இதைப் பலர் ஒத்துக்கொள்வதில்லை. நான் அதை மறுப்பதில்லை. வளர்ச்சியடைந்த கால கட்டத்தில் ஆசிரியன்வாழும் குறிப்பான சமூகம் மட்டும் அல்லாமல், அவனது அறிவுப் பரப்புக்குள் வரும் அனைத்துச் சமூகத்தின் கருத்துக்களும், சிந்தனைகளும் சேர்ந்தே அந்தப் படைப்பை உருவாக்குகின்றன. இந்தப் பின்னணியில் தான் ஒரு பிரதியின் ஆசிரியனாக ஒருவரைக் குறிப்பிடுவதைப் பின் அமைப்பியல் ஏற்பதில்லை.
 
பொதுவாக, எழுத்து என்பது நிகழ்காலத்தேவைக்கு எழுதப்படுவது என நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கையைச் சிதைக்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல; என்றாலும், எழுதிமுடித்த கணத்திலேயே ஒரு பிரதி கடந்தகாலத்தின் பகுதியாக மாறிவிடுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. எழுதியவனிடமிருந்து வாசகனிடம் வருவதற்குள் ஒருபிரதி கடந்தகாலப் பொருளாக ஆகி விடுகிறது; எழுதியவனின் எழுத்தை வாசகன் அப்படியே வாசிப்பதும் இல்லை. அத்துடன் வாசகனின் கவனம், பார்வைக் கோணம், சூழல் ஆகியவற்றோடு சேர்ந்து தான் வாசிப்பு நிகழ்கிறது. இந்தக் காரணங்களை முன் வைத்தே ஆசிரியன் மரணம் அல்லது பிரதியின் மரணம் என்ற சொல்லாடல் உருவாகியுள்ளது.


நிகழ்காலப் பிரதிக்குரிய கடந்த காலம் மட்டுமல்ல; நமது கடந்த காலமும் கூட இரண்டு வகைப்பட்டது. ஆண்டுக்கணக்குகளையும், அவ்வாண்டுகளில் வாழ்ந்ததாகச் சொல்லும் மனிதர்களின் நடவடிக்கைகளையும் குறிப்பாகச் சொல்லும் கடந்தகாலம் ஒருவகைக் கடந்தகாலம். இதனை வரலாற்றுக் காலம் என்கிறோம். ’இவர்கள் இருந்தார்கள்’ என்றும், ’இவர்களால் இவையெல்லாம் உருவாக்கப்பட்டன’ என்றும், நாம் சான்றுகள் தந்து வரலாற்றுக் காலத்தை நிறுவமுடியும். இந்த வரலாற்றுக் காலத்திற்கு மறுதலையானது இன்னொரு கடந்த காலம். வரலாற்றுக்கு முந்திய காலம் என அதனை வரலாற்று நூல்கள் குறிக்கின்றன, ஆனால் இலக்கியவரலாறும் இலக்கியத்திறனாய்வும் அவ்வாறு சுட்டுவதில்லை. காலத்தொன்மை முக்கியமானது என்ற நிலையில் அக்காலத்தை புராண அல்லது இதிகாச காலம் என்ற பெயரால் சுட்டுகின்றன, அப்படிச் சுட்டுவதால் இன்று இந்திய மொழிகளில் கிடைக்கும் புராண, இதிகாசங்கள்- எல்லாம் அக்காலத்தில் தோன்றியன; எழுதப்பட்டன என்று கருதிட வேண்டியதில்லை. அவற்றில் வருகின்ற கதை நிகழ்வுகளும், நிகழ்வுகளில் இடம்பெறும் பாத்திரங்களின் சாயல் கொண்ட மனிதர்களும் வரலாற்றுக்கு முந்திய காலகட்டத்தில் -அதாவது அவர்கள் வாழ்ந்த காலம் இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத காலகட்டத்தில்- வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை கருத்தில் கொண்டால் போதுமானது.

இந்தப் பின்னணியில் கடந்த காலத்திற்குள் பயணம் செய்தல் என்பதை வரலாற்றுக் காலத்திற்குள் நுழைதல் எனவும் , புராண காலத்திற்குள் நுழைதல் எனவும் பிரித்தே பேசவேண்டியுள்ளது. உலக மொழிகளில் இருக்கின்ற இலக்கிய வடிவங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகக் கடந்த காலத்திற்குள் பயணம் செய்திருக்கின்றன. அப்படிப் பயணம் செய்வதன் மூலம், அதன் வடிவத்திற்கேற்பக் கடந்த காலத்தைத் தனதாக்குகின்றன; அப்படித் தனதாக்குவதன் மூலம் கடந்த காலத்தை நிகழ்கால வாசகனுக்கு நினைவூட்டுகின்றன அல்லது நிகழ்கால வாசகனைக் கடந்த காலத்திற்குள் அழைத்துச் செல்கின்றன.

ஒற்றை உணர்ச்சியின் மேடுபள்ளங்களைச் சொல்வதை முதன்மை நோக்கமாகக் கொண்ட கவிதைக்குக் கடந்தகாலம் ஒரு பயன்பாட்டுக்கருவி மட்டும்தான். உவமை, உருவகம், உள்ளுறை என்ற மரபான கருவிகளாகவும், படிமம், குறியீடு போன்ற புதுவகைச் சொற்களாலான கருவிகளாகவும், கவிதைக்குள் கடந்தகாலம் சிதறிக் கிடப்பதை நாம் வாசித்திருக்கலாம். அதே கவிதை பல உணர்ச்சிகளின் குவியலாக மாறிவிடும்போது காப்பியம் என்னும் புது வகை இலக்கியமாக வடிவம்கொள்ளும். உணர்ச்சிகளின் தொகுப்பைக் கவிதையாக்க முயலும் படைப்பாளி முதலில் எடுத்துக் கொள்வது ஒருத்தி அல்லது ஒருவனை மையப்படுத்திய கதையை. கதையைத் தழுவிக் காவியம் செய்யும் போது அப்படைப்பாளி வேறு வழியே இல்லாமல் கடந்தகாலத்திற்குள் தான் பயணம் செய்தாக வேண்டியிருக்கிறது.
 
”ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும், அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்” என்ற முத்திற முடிவுகளைச் சொல்ல நினைத்த இளங்கோ எடுத்துக் கொண்ட கதை கண்ணகியின் கதை. அவளது வாழ்க்கையை- துயரத்தை- பத்தினியாக அல்லது தெய்வப் பெண்ணாக உயர்த்தப் பட்டதை இளங்கோ நேரில் பார்த்தவனல்ல; அவனுக்குச் சொன்னவர் சீத்தலைச்சாத்தன்; சீத்தலைச் சாத்தனுக்குச் சொன்னது யாரோ? ஒருவரா? பலரா? செவிவழிச் செய்தியா? என்பதை அவர்களும் உறுதியாகச் சொல்லவில்லை; நாமும் உறுதியாகக் கூறிட முடியாது. ஆனால் கண்ணகியும் அவளது வாழ்க்கையும் இளங்கோவுக்கும் சாத்தனுக்கும் தொன்மைக்காலத்து நிகழ்வு அல்ல; அண்மைக்காலத்து நிகழ்வு என்பதைச் சிலம்பை வாசிக்கும் நுட்பமான வாசகன் உணரக்கூடிய ஒன்று. ஆனால் தொன்மைக் காலத்துக் கதை ஒன்றை அண்மைக்காலத்துக் கதையாகச் சொல்ல முடியும் என்பதற்கும் நமக்கு உதாரணம் இருக்கிறது. பாரதியின் பாஞ்சாலி சபதம் ஓர் எடுத்துக் காட்டு. திரௌபதியின் முடியாக்கூந்தலைத் தன் காலத்துப் பாரதமாதாவின் அலையும் கூந்தலாக ஆக்கிய பாரதி தனது வாசகர்களை நோக்கிக் கவிதையாக்கி உள்ளான்.
 
மொத்தத்தில் கதை தழுவியதாக இலக்கியம் மாறுகிறபோது கடந்த காலத்திற்கூடான பயணம் தவிர்க்கமுடியாத ஒன்றாகக் கருதப் பட்டிருக்கிறது; ஆகியிருக்கிறது அப்படிக் கருதப்பட்டதற்கும் ஆனதற்கும் பல காரணங்கள் இருக்கக் கூடும். ஆனால் மூன்று காரணங்கள் முக்கியமானவை மூன்று காரணங்களும் மூன்றுவித நோக்கங்களின் விளைவுகள் தான்.
முதல்காரணம் தான்சொல்ல நினைத்தவை சரியான விதத்தில் வாசகர்களை அல்லது பார்வையாளர்களைச் சென்றுசேரவேண்டும் என்ற படைப்பு நோக்கம் சார்ந்தது. எழுத்தின் நோக்கமே அவர்கள் வாழுகிற காலத்தின் சமூகப்போக்கோடு ஒத்துவாழும்படி வலியுறுத்துவதும், ஒத்துவாழாத நிலையில் அடையக்கூடிய துயரங்களைக் காட்டிப் பயமுறுத்தித் திசைமாற்றம் செய்வதும் தான். அந்தநோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முந்திய காலத்து மனிதர்களை உதாரணங்களாக்கிப் பேசுவதுதானே சரியான உத்தியாக இருக்கமுடியும். வாசகர்களுக்கு அல்லது பார்வையாளர்களுக்கு நிகழ்கால மனிதர்களை எடுத்துக்காட்டிப் பேசுவது என்பதைவிடக் கடந்தகால மனிதர்களை உதாரணங்களாக்கிப் பேசுவது எளிது என்பதைக் கருதி எழுத்தாளர்கள் கடந்தகாலத்திற்குள் பயணம் செய்வதை முதன்மைக் காரணமாகக் கருதுகின்றனர். அப்படிக் கருதிப் படைப்புகள் செய்த படைப்பாளிகளே வெற்றிகரமான படைப்பாளிகளாக வரலாற்றில் வாழ்கின்றனர்: சிறந்த படைப்பாளிகள் எனக் கொண்டாடவும் படுகின்றனர்.

இரண்டாவது காரணம் தான் எழுதியதால் நேரக்கூடிய விளைவுகளை உத்தேசித்து எழக்கூடிய தனது பாதுகாப்பு சார்ந்த உள்ளுணர்வு காரணமானது. இரண்டாவது காரணம் படைப்பாளி தனது சமகாலத்தை எழுதும்போது சந்திக்கும் நேர்விளைவுகள் சார்ந்தது. அதிலும் அதிகாரத்துவம் சார்ந்த நபர்களையும், நிறுவனங்களையும் படைப்பின் பகுதியாகக் கொள்ளும்போது- விமரிசிக்கும் விதமாகவோ, விவாதிக்கும் விதமாகவோ படைப்பாக்கும் போது- எழுத்தாளன் நேர்த்தாக்குதலைச் சந்திக்கநேரிடும். தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இதைத் தவிர்க்கும் பொருட்டும் படைப்பாளி கடந்த காலத்திற்குள் நுழைந்துகொண்டு நிகழ்காலத்தின் சாயலை உருவாக்குகிறாள்/ன்.
 
மூன்றாவது காரணம் கடந்த காலத்திலிருந்து பாடங்கற்றுக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து, அதிலிருந்து ஒருவித மரபுத் தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற கருத்தியல் நோக்கம் சார்ந்தது. அத்துடன் மரபிலிருந்து முன் மாதிரிகளை எடுத்துக் கொள்ளும் நோக்கமும் கொண்டது. நிகழ்த்திக் காட்டும் போது மட்டுமே தனது முழுமையை அடையும் நாடகக்கலைக்கு அதன் படைப்புக்கான சுரங்கமாகக் கடந்தகாலம்தான் இருக்கிறது. நாடகக்கலை கடந்த காலத்தைச் சுரண்டிச்சுரண்டியே தனது பார்வையாளர்களுக்கு விருந்து வைத்துள்ளது. இப்படிச் சொல்லும்போது நாடகக்கலை இரண்டுவகைக் கடந்தகாலத்தையும் ஒன்று போலக் கருதிப் பயணம் செய்வதில்லை என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். வரலாற்றுக் காலம் என்னும் கடந்தகாலத்தினூடான பயணத்திற்கும், தொன்மம் என்னும் கடந்த காலத்தினூடான பயணத்திற்கும் அடிப்படையான வேறுபாட்டை நாடகக் கலை கொண்டுள்ளது. அதனை விரிவாக விளக்க உலக அளவில்/ இந்திய அளவில்/ தமிழின் எல்லைக்குள் பல எடுத்துக் காட்டுகளை முன் வைத்துத் தனியாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதவேண்டும். நேரம் கிடைக்கும்போது எழுதிக்காட்டுகிறேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்