சிறுகதை மூலம்: திலிப்குமார்  நாடகவடிவம்: அ.ராமசாமி     முன்மேடை ஒரு நடுத்தரவர்க்கத்தின் வீட்டு ஹால்.   பின் இடது புறம் சமையலறையின் ஒரு பகுதி தெரிகிறது.   பின் நடுமேடையில் ஒரு படுக்கையறையின் கதவு பாதி திறந்து கிடக்கிறது. பின் வலது மேடையில் இருக்கும் அறையில் புத்தக அலமாரி, கணினி போன்றன தெரிகின்றன.      ஹாலின் மையத்தில் படுக்கையறைக்கு முன்னால்   மூவர் அமரக் கூடிய ஒரு சோபா    அதன் இருபுறமும் ஒருவர் அமரும் சோபாக்கள்.   வேலைப்பாடுகள் கொண்ட டீபாய்.   நடு வலது மேடையில் ஒரு மேசைமீது விளக்குடன் ஒரு ஸ்டேண்ட் நிற்கிறது.   அதிலிருந்து வரும் வெளிச்சத்தில் அதன் முன்னால் கிடக்கும் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் அல்லது புத்தகம் படிக்கலாம்.  இடது புறம் நிற்கும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்கலாம்.   தொலைக்காட்சிப் பெட்டி ஒரு மரத்தாலான வேலைப்பாடுகள் நிரம்பிய   ஸ்டேண்டில் வைக்கப் பட்டிருக்கிறது.  சமையலறையிலிருந்து வந்த திருமதி ஜேம்ஸ் ஒரு முறை நின்று   திரு ஜேம்ஸைப் பார்க் கிறாள்.   அவர் தினசரித்தாளை அகலவிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்.  வந்தவள் படுக்கையறைக்குள்போய்விட்டு உடனடியாகத்திர...