வீடு


[சிறுகதை மூலம்:ம.மதிவண்ணன் எழுதிய திருவாளர் எம்.மின் வீடு

என்னும் கதையும் மேற்படி வீட்டுடனான உரையாடலும்]
இந்நாடகத்தில் பயன்பட்டுள்ள கவிதைவரிகளை எழுதிய கவிகள்
சி.சுப்பிரமணிய பாரதி
ஞானக்கூத்தன்
சு.வில்வரத்தினம்
பழமலய்
பசுவய்யா
சேரன்
மனுஷ்யபுத்திரன்
கண்ணதாசன்
இன்னும் சில விளம்பரங்களின் வரிகள்


====================================================================
[மேடையில் வெளிச்சம் மெலிதானதாகவும் திட்டுத் திட்டாகவும் பரவியிருக்கிறது.செவ்வக வடிவச் சட்டகங்களைத்தாங்கிய ஏழு ஸ்டேண்டுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேடையின் முன்புறம் ஓரங்களில் தொடங்கி உள்நோக்கிப் போகும்போது மேல்மையத்தில் ஒரு சட்டகம் உள்ளது. சட்டகங்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. முடிவடையாத ஓவியங்கள்.பார்வையாளர்களுக்குச் சட்டகங்கள் மட்டுமே தெரியவேண்டும்.ஒவ்வொரு சட்டகத்தின் பின்னும் வரையும் ஓவியர்களின் கால்கள் மட்டும் தெரியவேண்டும் .மேடை இரண்டாகப் பிரிக்கப்பட்டு பின்பாதி வலைமூலம் பார்க்கப்படும்படியாக இருக்கிறது.
வெளிச்சம் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் ஊடுருவி விலகும்போது தபேலாவின் ஒலி மென் தாளமாகக் கேட்கிறது.திரையில் நடன அசைவுகளின் நிழலுருவம் .நடன அசைவு கட்டிட வேலைகளின் பரிமாணங்களாகின்றன.மண்மிதித்தல்,செங்கல்லை தூக்கி எறிதல், சித்தாளின் தலையில் சுண்ணாம்புச் சட்டி, கொத்தனாரின் தூக்கு, கரண்டி, பீச்சியடிக்கும் தண்ணீர் என நிழல்ரூபங்கள் மாறுகின்றன.அதனுடன் மெலிதாகத் தொடங்கிய 'வேண்டும்' , 'வேணும் '; 'வேண்டும்' ,'வேணும்' என்ற வார்த்தைகள் இருபிரிவினரால் மாறிமாறி மந்திரம் போல் உச்சரிக்கப்பட்டு பாடலாக மாறுகிறது.]
-அந்தக்
காணிநிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித்தரவேண்டும் - அங்குக்
கேணி அருகினிலே - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போல ...............
.
['வேண்டும், வேணும்' என்பது திரும்பவும் இருபிரிவாக ஒலித்து.. பாடலாக மாறி,]
- எங்கள்
கூட்டுக்களியினிலே -கவிதைகள்
கொண்டு தரவேணும் -அந்தக்
காட்டுவெளியினிலே - அம்மா,நின்றன்
காவலுற வேணும் - எந்தன்
பாட்டுத்திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேண்டும்....
இடது பக்கமிருந்து
ஒரு குரல்: மகிழ்ச்சி வந்து தங்கும்
மங்களம் பொங்கும் இல்லம்
நகரெங்கும்.. நாடுங்கள் என்றும்
இன்னொரு குரல்
மறுபுறமிருந்து: வீடுகள் விற்பதற்கும் வாங்குவதற்கும் எங்களை அணுகலாம்
விதம்விதமான வீடுகள்; விதம்விதமான குடியிருப்புகள்
அடுக்கு மாடிக் குடியிருப்புகள்

[ வேண்டும்...வேண்டும்..வேணும்.. வேணும்.. டும்ம் ..டும்.. நும்ம் ..ம்ம் என்ற ஓசையின் பின்னனியில் வரையப்பட்ட ஒரு ஓவியம்-பின்மையத்தில் உள்ளது பார்வையாளருக்குத் திருப்பப்படுகிறது.அது ஒரு பங்களாவின் படம். மரம்..தோட்டம்.. கார்கள் என விரியும் படம்..]
பின்னணியில் ஒரு குரல்:
கால்சட்டைப் பைக்குள்
நுழைத்துக் கொண்ட கைமாதிரி
மாடிப்படிக் கட்டுமானம் தெரிய
நின்றிருந்தது
வயல் நடுவில்
அந்த வீடு
புதிது.... புதிது...
சேரிப்பக்கத்து நாய்கள்
குரைத்தடங்கிய பின்பு
முதல் நாள் இரவு
நடந்திருக்கக்
கூடும் திருட்டென்று
சொன்னார்கள் அந்தப்
பக்கம் வந்தறியாத
சிறுசேரி மக்கள்
வெளியூர் சென்றுள்ள
வீட்டின் சொந்தக்காரன்
அத்தனை பெரிய பணக்காரனா என்று
வியப்பாய் இருந்தது ஒவ்வொருவருக்கு
திருட்டுக் கொடுத்த வீட்டுக்குள் தாமும்
நுழைந்து பார்த்ததில்
திருப்தியும் பலருக்கு உண்டென்று தெரிந்தது.
திருட்டுக்கொடுத்த வீட்டைச் சுற்றிப்
பார்த்துத் திரும்பிய நபர்கள் சொன்னதில்
புரியாமல் போனது ஒன்றுண்டு.
இடுப்பளவு தெரியும் நிலைக்கண்ணாடியைத்
திருடர்கள் தெறித்து விட்டார்களாம்.ஏன்?
இத்தனைக்கும் கண்ணாடி தன்னிடம்
தோற்றிய பிம்பத்தைத் தானே
தேக்கிக் கொல்வது கிடையாதே.
வயல்நடுவில்
நின்றிருந்தது
திருட்டுக்கொடுத்த வீடு
வயல்புறம் எங்கும்
கத்தின ஓசைப்படாமல் தவளைகள்.
குரல்: கனவு காணுங்கள்..
கணவனும் மனைவியுமாய்க்
கண்ட கனவுகள்..
குடும்பமாகும்.. குட்டிகளாகும்..
உங்கள் கனவை நிறைவேற்ற.. இதோ

INTEREST RATES SLASH ON HOME LOAN.
NOW REDUCED TO 8.5%
BUY YOUR DREAM HOUSE TODAY
NO PROCESSING CHARGES.
NO HIDDEN COSTS
ENTER INTO OUR BANK WITH DOCUMENTS
RECEIVE THE SANCTION ORDER OF A LOAN
அனுபவமுள்ள கட்டிடத்துறை பொறியாளர்கள்மற்றும் கட்டிடக்கலை நிபுணரால்
நிர்மாணிக்கப்பட்டது..பிருந்தாவன் அபார்ட்மெண்ட்ஸ்.
# நான்குமாடிகள் நல்ல காற்றோட்ட வசதி.
# ஒவ்வொன்றும் 1020/ 880/ 820 என்ற அளவுகளில் வீடுகள்.
# குடிநீர் வசதியும் மின்சாரவசதியும் 24மணிநேரமும்
# நிலத்தடி நீ வசதியுண்டு
#கோவில்கள், மருத்துவமனைகள்,கல்விநிலையங்கள் மிகஅருகில்
(வேறுவிதமான குரலில்)
வாழ்தலென்பது
மேய்தலெனக் கொண்டால்
பூமியொரு மேய்ச்சல் தரைமட்டும்தான்
மேய்தல், இரைமீட்டல்
வீடு திரும்புதலெனச்
சுவடகலாச் சுற்றுவட்டம்தான்
நமதுமெனின்
நாமும் விலங்குகள்தான்.
வண்டிக்காரன் தூங்குகிறான்
ஓய்ஞ்ச சலங்கையொடு
வீடுவந்து சேர்கின்றன
தூங்கல் மாடுகள்
மாடுகளுக்குத் தொழுவம் பின்கோடி
வண்டிக்காரனுக்கு முன்கோடி.

[படம் வரைகிறவன் நான்கு படங்கள் முடித்துத் திரும்பி விடுகிறான்.
சலங்கை ஒலி- நடனமிடும் பெண்ணின் சலங்கை ஒலி-கேட்கிறது.]
குரல்: செராமிக் டைல்ஸ்.. தேக்குமரக் கதவுகளும் வாசல்களும்
சிறுவர்களுக்குப் பூங்கா பெரியவர்களுக்கு கேளிக்கைவிடுதிகள்
நடைமேடையும் உண்டு;
போதும் நகரத்தின் வெக்கை.புறநகர் வாசம்; புதுவகை நேசம்..
ஏரிக்கரைமேல் நடந்தால், மேற்கே ஊர் தெரியும்
கிழக்கில் வயல்வெளி கடல் அலையாய்க் காற்று வீசும்
'ஆலங்கட்டி ' மேலே விழும்போது வலிதெரியாது,வேடிக்கைதான்.
காணிநிலம் பெருத்தவர்கள், கல்வீடு உடையவர்கள்-இருக்கிறார்கள்.
என்றாலும் எங்கள் திண்ணையிலும் நன்றாகத்தூக்கம் வரும்.
கூரையில் கூடுகட்டக் குருவிகள் வரும்.
[படங்கள் எல்லாம் திருப்பப் பட்டு விட்டன. ஒவ்வொன்றிலும் மாறிமாறி வெளிச்சம் வந்து போகிறது.பட்பட்டென்று.மாறிமாறி..]

கதவைத்திற காற்றுவரட்டும்; சிறகை ஒடி, விசிறியின் சிறகை ஒடி
விசிறிக்குள் காற்று மலடிக்குக் குழந்தை
கதவைத்திற காற்று வரட்டும்
நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களானால் ;அது கண்ணீரின் குருதி.
நீங்கள் ஒடுக்குபவர்களானால்; அது குருதியின் கண்ணீர்.
படம் வரைந்து கொண்டிருந்தவன்:
நான் ஒரு கதை சொல்லப்போகிறேன்..
கதையின் சுவாரசியம் உங்களின் காதுகளில் இருக்கிறது.
கண்களில் அல்ல. கரங்களிலும் வாயிலும்கூட இருக்கலாம்.
சுவாரசியம் கதையா..நானா..?
பின்னாலிருந்து ஒரு குரல்:
போதும் நிறுத்து. உனது கதையை.. நானொரு கவிதை சொல்லப் போகிறேன்
அதன்பின் கதைவேண்டுமா..? வேண்டாமா..?
என்பது தீர்மானிக்கப்படலாம்.
அவன்: கவிதை எதைப் பற்றி..?
குரல்: விளக்கப்படுவதல்ல கவிதை.
அவன்: விளங்காமல் இருப்பதோ..
குரல்: குதர்க்கம் வேண்டாம்.
அவன்: தர்க்கம் உண்டா..?
குரல்: வாயை மூடு.. கவிதையைக்கேள்:
நீண்ட நாளைக்குப் பின்
என் வீட்டிற்குப் போகிறேன்.
நண்பா இன்று நீ என்னோடு வரவேண்டாம்.
அவன்: ஓ ..உனது கவிதையும் எனது கதைதான்..
இருவரும் சேர்ந்தே பேசலாமே..
குரல்: கதையும் கவிதையும் ஒன்றாகுமா..?
கதை வெறும் கதைதான்.. கவிதை ..அது ..கவிதை..
அவன்: (பெரிதாகச் சிரித்துவிட்டு)
உனது கவிதைக்குள் இருக்கும் கதை
எனது கதைக்குள் இருக்கும் கவிதை.
சுவாரசியம் வந்து விட்டது..
கொஞ்சம் எல்லோரும் கை தட்டுங்கள்.
இன்னும் பெரிதாக.. சத்தமாக.. இன்னும் ..சத்தமாக.
(நிதானமாக)

வீட்டிலிருந்து தப்பித்தல் என்பது முடியாத காரியம்..
மீண்டும்..மீண்டும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.
வீடு என்பதற்குக் குடும்பம் என்கிற அமைப்பு என்று பொருள் கொண்டால்
நான் பொறுப்பல்ல.வீடு என்பதே வீடேதான்.
செங்கல்லும் சிமெண்டும் கலந்து கட்டப்பட்ட கூரையும் கூடிய கட்டிடம்.
குரல்: வாரான் இதென்ன பாருங்க.. கட்டியங்காரன் வாரான் ஈதென்ன பாருங்க
வந்தான் இதென்ன கேளுங்க..கட்டியங்காரன் வந்தான் ஈதென்ன கேளுங்க..
மாடமாளிகை கூட கோபுரம் தேடிக் கொள்ளவேண்டாமா..?
அவன்: மாளிகை, இல்லம், மனை, குடில்,வீடு, குடிசை....
சொர்க்கத்தை வீடுபேறு என்று பெயரிட்டவன் கண்டிப்பாக மேல்தட்டில் பிறந்த ஓர் அயோக்கியனாகத்தான்

குரல்: வீடுபேறு இருக்கட்டும்;மக்கட்பேறு பற்றித்திருவள்ளுவர் சொல்லியிருப்பது பற்றி தெரியுமா உனக்கு..?குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர்..
குழலின் ஒலி இசையாகி யாழுடன் கலந்து நிரப்புகிறது.அவன் களிநடனம்
புரிகிறான். வியர்த்து ஒழுகும் உடல் தரையில்விழுந்து தவிக்கிறது.]
வசிப்பதற்கு வசதியாய் வீடு என்கிற இடத்தை நிர்மாணித்த அந்தமுதல் மனிதன்மீதுதான் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.மனிதர்கள் மரக்கிளைகளிலும், குகைகளிலுமே வசித்திருந்தால்கூட எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். இது என்னுடைய கிளை; இந்தக்குகையில் நான் தான் வசிக்கிறேன் என்று எனது வாழிடத்தை அசூசையின்றி ஒருவனிடம் காட்டுவதற்குத் தடையில்லாமல் இருந்திருக்கும்.
அவன்: (மெல்ல எழுந்து தடுமாறி ..நாக்குழறி) வீட்டுடனான இந்த ஒவ்வாமை எப்போது
ஆரம்பம்.ஆரம்பப்பள்ளியில் படித்தபோதெல்லாம் இல்லை. மூத்திரம்பெய்ய
இடைவேளை விட்டவுடனே சகமாணவர்களுடன் ஓடிவந்து தண்ணீர் குடித்துவிட்டு
திரும்பவும் ஓடிப்போவோம். பள்ளியிலிருந்து ஓடித்திரும்பும் தூரத்தில் எனது
வீடு.ஆனால், ஒரு தடவை, நண்பனிடம்,"அச்சச்சோ உன்னிடம் பேசிக்கொண்டே இங்குவரை வந்துவிட்டேனே..சரி.. நீ.. போ..நான் வாரேன்" என்று சொல்லி எதிர்த்திசையில் நடந்தேன். நண்பன் மறைந்தபின்னர், திரும்பவும் நடந்தும் ஓடியும் வந்து திருடனைப்போல் வீட்டிற்குள் நுழைந்தேன்..ம்..அப்பொழுது நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன்.

குரல்: ம்..சரி..ஆரம்பப்பள்ளி..உயர்நிலைப்பள்ளி.. கல்லூரிக்கெல்லாம் போகவில்லையா.
அவன்: போனேன்..கல்லூரியிலேயே தங்கிப்படித்தேன்..பின்னர் வேலை. இந்த ஊரில்..அந்த
ஊரில்.. என்று ஏதோவொரு தெருவுக்குள் முகம் புதைத்துக்கொண்டிருப்பது
கொஞ்சம் ஆசுவாசம்தான்.என்றாலும் வீட்டின் ஆளுகையிலிருந்து தப்பிவிட்டநிறைவு
எப்போதும் வரவில்லை.
குரல்: வீடு வரை உறவு; வீதிவரை மனைவி
காடுவரைப் பிள்ளை கடைசி வரை யாரோ..(பாடலாக ஒலிக்கிறது).
அவன்: இல்லை..எல்லாமே வீடுதான்..அது பற்றிய நினைப்பே என்னை
நடுநடுங்கச்செய்கிறது.காரை பெயர்ந்து, ஜன்னல்கதவுகள் பெயர்ந்து கீறல்களுடன்
இருக்கும் அந்தப்பலவீனமான கட்டிடத்திற்கு என்னை மிரட்டும்போது மட்டும் பலம்
வந்து விடுகின்றது.வன்மம் கொண்ட ஒரு கிழட்டுக் குஷ்டரோகியைப்போல
..அழுகும் அவயவங்களில் ஒன்றை உதிர்த்துக்கொண்டே ..அல்லது என்முகத்தில்
விசிறியடித்தபடியே.. அசைவற்று நிற்கும் அந்தக்கட்டிடம்...
குரல்: உனக்குள் இருப்பது பயமா.. எதிர்ப்பா..
அவன்: தொடர்ந்து உங்களை ஒருவன் கண்காணிக்கிறான் என்று
வைத்துக்கொள்ளுங்கள்.அவன் உங்களின் எதிரியா..? அல்லது அதிகாரியா..?
குரல் : அது கண்காணிப்பின் நோக்கத்தைப் பொறுத்தது. உங்களின் எதிர்காலத்தை
உருவாக்கும் நோக்கத்தில்கூட உங்களை கண்காணிக்கலாம் அல்லவா..?
அவன்: என்னுடைய எதிர்காலம் என்னுடையது இல்லையா...?கண்காணிப்பாளர்களின்
கையில் கொடுத்துவிட்டு விரல் சூம்பிக் கொண்டிருக்க வேண்டுமா...?
குரல்: உடனடியாகக் கோபப்படுகிறாய்..அதுதான் உனது பிரச்சினை..
அவன்: எனது பிரச்சினை உனக்குப் புரிந்துவிட்டது. ஆனால் எனக்குப்
புரியவில்லை.அப்படித்தானே சொல்லவருகிறாய். இதைத்தான் நான் கண்காணிப்பு
என்று சொல்கிறேன்.எனது வீட்டைப்போல நீயும் இருக்கிறாய்.. ஒருவேளை அதுதானா..நீ..

[அந்த ஓவியங்களுக்குள் ஓடித்தேடிப் பார்க்கிறான்.. பின்னால் மறைந்து யாரும் இருக்கிறார்களா.. என்று தேடல்.. இவன் ஓடும்போது கூடவே ஒரு கொலுசு ஒலி கேட்கிறது..நின்று பார்த்தால் சிரிப்புச்சத்தம் ..ஆண்களின் சிரிப்பில் எகத்தாளம்.. பெண்களின் சிரிப்பில் வசீகரம்..மாறி..மாறி. ..வசீகரா.. என்ற சினிமாப் பாடலின் தொடக்கம் கேட்கிறது.]
மூக்கும் முழியுமான வயசுப்பெண்களுடன் நான் உறவாடுவதை ஒரு குறுகுறுப்போடு பார்த்துக் கொண்டே இருக்கும்.ஆம்.. எனது வீடு.. ஒரு பயங்கரமான கண்காணிப் பாளன். அவர்களுக்கும் எனக்கும் குறிப்பிட்ட இடைவெளி இருக்கும் வரையிலும் அதுவெறுமனே ஒரு பார்வையாளன்.ஆனால் இடைவெளி குறைந்ததாகக் கருதினால் போதும், அழுகிய கிழட்டு உடலைத் தூக்கிக் கொண்டு வந்துவிடும்.என்னைப் பார்; என் அழகைப்பார் என்று பழிப்புக் காட்டும் .அந்தப் பெண்களே அதில் புழங்கத் திண்டாடி, கண்ணீர்விட்டு, காறித்துப்பி வெளியேறுவர்.எனது பெருங்கனவுகளோ...
(பலூன்கள் வெடித்துச் சிதறுகின்றன..)
காதல் என்று இல்லை.நட்புக்கும் கூட இந்த வீடு எதிரிதான்.நான் வேலைபார்த்த ஊரில்ருந்து நண்பன் பலதடவை வீட்டிற்கு வருவதாகச் சொல்லிக்கொண்டிருந்தான். எனது சாக்குப்போக்குகளையும் மீறி , ஒருமுறை குடும்பசகிதமாக வந்து இறங்கிவிட்டான். அவ்வளவு நகைகளுடன் எங்கள் தெருவில் முதன்முதலில் வந்தவர்கள் அவர்கள்தான். அவர்கள் எங்கள் தெருப் பெண்களுக்குக் காட்சிப் பொருள் ஆனார்கள்.அம்மாவுக்கோ பெருமையாக இருந்தது. வந்தவர்களுக்கோ ஏமாற்றம். அவ்வளவு சிறிய வீடுகளில் ஏறி இறங்கி அறியாதவர்கள் அவர்கள்.ஆனால் என் வீடோ தனது வெறுமையையே அழகாய் நினைத்துக் கடைவிரித்துப் பல்லிளித்தது. நண்பனிடம் கூட முதலில் சங்கடம் வெளிப்பட்டுப்பின்னர் கடுமையாகக் கசிந்தது
என் நண்பனின் வீட்டாரை வேடிக்கை பார்க்க அக்கம்பக்கத்து வீட்டுக்குழந்தைகள் வாசலில் வந்து கூடிவிட்டனர். அவர்கள் ஒழுங்காக உடுத்துவதென்பது தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அல்லது கோவில் கொடைக்கு. அந்த நிர்வாண உடல்களும் அட்டுப்பிடித்த ஆடைகளும் வந்தவர்களின் முகங்களைச் சுழிக்க வைத்தது. என் தங்கை கூட்டத்தை விரட்டி கதவைச் சாத்தப் போனாள்.தாழ் இல்லாத கதவு திறந்து கொண்டது.
[பன்றிகளின் உறுமலும்.. ஒன்றோடொன்று உரசும், காமங்கொள்ளும் ஒலியும் கேட்கின்றன. பின்வரும் வார்த்தைகளை காட்சியாகவும் காண்பிக்கலாம்]
திறந்த கதவு வழியே வந்தன பன்றிகள்.வந்த வழி மறந்துவிடாதிருக்க கறுப்புத் திரவத்தை வடித்துக் கொண்டே வந்தவை, நுழைந்த பன்றி உடலைக் குலுக்கிவிடுமே என்று பயந்து தம்பி களத்தில் இறங்கினான்.நண்பனின் மனைவி, தன் குழந்தையிடம் 'குட்டி டைனோசர்' என்று வேடிக்கை காட்டும்போது முந்தானை நுனியால் நாசியை மூடியிருந்தாள்
எங்கள் வீடு பரிமாறிய இலையில் பாதியைவைத்து விட்டுக்கிளம்பும்படி அவர்களைத் துரத்தியிருக்கவேண்டும். போய் அவன் கடிதம் எழுதியும், நான் திரும்பக்கடிதம் எழுதியும் ஆறு ஆண்டுகள் ஓடிப் போய்விட்டன.

என் வீடு என் மரியாதையின் மீது மட்டும்தான் முற்றுகை இடுகிறது. அதற்கோ பல நேசசக்திகள் உண்டு. அந்த ஒரு சம்பவம்.குடித்துவிட்டு வருபவர்களை அரவணைப்பதில் வீட்டுக்கு நிகர் வீடேதான். அப்படியொரு முறை என் பெரியம்மா வீட்டின் அரவணைப்பில் கிடந்தபோது என் இலக்கிய நண்பன் வந்தான்.வந்தவன் ஒருவித இளக்காரச் சிரிப்புடன் போய்விட்டான். அடுத்தமுறை பார்த்தபோது குடிப்பழக்கம் ஏற்படுத்தும் தீமைகள் பற்றியும், பெண்கள் குடிப்பதால் ஏற்படும் கலாச்சார சீரழிவுகள் பற்றியும் அக்கறையோடு முன்வைத்தான்.என்னுடைய பதில் அப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

"குடிப்பது தவறு என்று எனக்குத்தோன்றவில்லை;வாழ்வோடு இயைந்த ஒன்று.பழக்கம் தான்; சாப்பிடுவது பழக்கம் தான்; சாப்பிடுவதற்கு அடிமையாகிவிட்டோம் என்று கலங்குவதில்லையே.. சரி குடிப்பது தவறு என்றே இருப்பினும், 'பெண்கள் குடிப்பது தவறு ' என்று சொல்லும் நீ ஒரு ஆணாதிக்கக்காரன்;ஒழுக்கவாதி; மேல்தட்டு; மேல்சாதிமோகி.."
இந்தப் பதில் அவனைத் தாக்கியபோது, குடியில் நான் இல்லை.என்றாலும் நண்பன் கேட்டான்,'போதை உனக்குத் தெளியப்போவதில்லையா' . அன்று முதல் நானும் அந்த நண்பனும் விவாதம் என்னும் முட்டுச்சந்தில் மோதி விலகிக்கொண்டே இருந்தோம். அவனுக்கோ மட்டந்தட்டும் குரூரம்; எனக்கோ அவனைத்தவிர்த்துவிட விருப்பம்.
ஒரு குரல்: ஹலோ மிஸ்டர் எம். போதும் நிறுத்து. உன் புலம்பல்களை.ஆற்றாமையில் நீ
பேசும் பேச்சுக்கள் வெறும் பிதற்றல்கள் என்பது உனக்குத்தெரியவில்லையா..?
அவன்: யாரது..வெளியே வாருங்கள்.நான் தனியாகத்தான் இருக்கிறேன்.தைரியமாக வந்து
மோதிப்பார்க்கலாம்.

குரல்: (பலமான சிரிப்புடன்) பேச்சே மோதலாகி விடுமா..? வெறும் வார்த்தைகளுக்குச்
சக்தியை ஊட்டுவதாக நினைத்துக் கொண்டு உங்கள் பலவீனத்தை வெளிப்படுத்தும்
தொழிலை நிறுத்தமாட்டீர்களா.?
அவன்: நீ சொல்வது உண்மையாக இருக்கலாம். அது ஒன்றும் என் ஒருவனின் வெளிப்பாடு
அல்லவே.. நீயும் நானும் அவனும் அவளுமான மனிதர்களின் வெளிப்பாடுதானே.
குரல்: ஆம்..மனிதர்களின் வெளிப்பாடுதான்.. மனிதக் கூட்டத்தில் என்னை ஏன் சேர்க்கிறாய்.
அவன்: அப்படியானால்..நீ..
குரல்: நான் மனிதன் அல்ல. வீடு வெறுமனே செங்கல்லும் சிமெண்டாலும் கட்டப்பட்ட வெறும் கட்டடம் என்று தானே வீட்டைக் கருதிவந்தாய்..நான் விசுவாசம் நிரம்பியவன்;பொறுப்புடையவள்;எனக்கும்நேசங்களும் பாசங்களும் உண்டு. கோபங்களும் வன்மங்களும் உண்டு.உன்மேல் எனக்குப் பரிவும் பச்சாதாபமும் கூட உண்டு.
எனக்குள் மறைந்து நீ படும் வேதனைகளைவிட
ரகசியங்களையே வெளியில் சொல்லியிருக்கிறேன்.
ரகசியங்களெனப் பூட்டப்பட்டவை
வேதனைகள்.
வேதனைகளெனச் சொல்லப்பட்டவை
ரகசியங்கள்.
இருட்டும் வெளிச்சமும்
உருவாக்கப்பட்டன அல்ல.
உடனுறை நிகழ்வுகள்.
அவன்: (தனக்குள்) கதையில் நான் கட்டிய வீடு என்னைத்தேடியே வந்துவிட்டது.எனது விளக்கங்களை-இல்லை இல்லை எனக்கான தெளிவுகளைக் கேட்டுப் பெற்றுவிட வேண்டியதுதான்.
குரல்: என்ன முணங்குகிறாய்..உன் சதிகளை விரிக்கப்போகிறாய்..
அவன்: என் முனகல்களைச் சதியெனச் சொன்ன நீ அடிப்படையில் கோளாறான பார்வையுடையவன் என்பதை முதலில் ஒத்துக்கொள். அதன்பின்பே உன்னோடு நான் பேசமுடியும்.
குரல்: ( சிரித்து விட்டு) மனிதர்களின் இயல்புகளை எல்லாம் என்மீது ஏற்றி விடப்பார்க்கும் உனது பார்வையில் அடிப்படைக் கோளாறு எதுவும் இல்லை அப்படித்தானே..
அவன்: அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். 'மனிதர்கள் அனைவரையும் ஒன்றாகப் பாவித்துக் கொண்டு நீ பேசக்கூடாது' என்பதுதான் எனது வேண்டுகோள்.
குரல்: அதேபோல் 'வீடுகள் எல்லாம் ஒன்றாகப் பாவிக்கத்தக்கதல்ல' என்பதையும் நீ அறிந்து கொள்ளவேண்டும்.
அவன்: அதனால் தான் உன்னைத் ' திருவாளர் எம்.மின் வீடு' என்று சொன்னேன்.
குரல் : அதாவது , 'இந்த வீட்டின் உரிமையாளன் எம்.' அவனைப்பற்றி எனக்கு நிறையவே
தெரியும்.(தனக்குள் ) என்னைப் பற்றி எனக்குத் தெரியாமல் வேறு யாருக்குத்
தெரியப்போகிறது.
அவன்: அவனைப் பற்றி என்ன தெரியும். தெரிந்ததைச்சொல்ல முடியுமா..?
[ வீடுகள் ஒவ்வொன்றாக இடம் மாறிக்கொண்டிருக்கின்றன]

குரல்: திருவாளர் எம். ஒரு கதைக்காரன். அவனுக்குப் பெயர் மோகன் அல்லது மோகனாங்கி. படித்த நபர். கதையெல்லாம் எழுதுவது பெருமையான விசயம்தான்.ஆனால் அவன் மேலேயே அவனுக்கு வெறுப்பும் பயமும் இருக்கிறது. அந்த இயலாமை ஏன் என்று தெரியவில்லை.அதற்காக நான் வருத்தப்படுகிறேன்.
அவன்: உன்னைப் பற்றி மோசமாக எழுதிவிட்டான் என்பது அவனின் இயலாமையா..?
குரல்: ஆம். அதுதான் எனது முடிவு. எனக்கு வயதாகியிருக்கலாம்.பலவீனமாகக்கூட இருக்கலாம்.யாருக்குத்தான் இவை வராது. ஆனால் என்னைக்குறித்து அவமானமடைவதும் இழிவானதாகக் கருதுவதும் ஏன்..? என் அடையாளத்தை அணிந்து கொள்ளப் பார்க்கிறான்.இவனுக்கு வேண்டுமானால் நான் உதவவில்லை என்று தோன்றலாம்.அவனது தாத்தன் என்னைக்காட்டித்தானே ஒரு இளவயசுப் பெண்ணை மணந்துகொள்ள முயன்றான்.அது ரொம்ப வருடங்களுக்கு முன்புதான்.'தான் ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரன் என்றும்,தன்னை மணந்து கொண்டால் அவ்வீடு அவளுக்கே வந்து சேரும் என்றும் ஆசை காட்டிப்பேசினானே.. அவன் என்னைக் குறித்துப்பட்டது பெருமை..இவனுக்குத்தான் நான் சிறுமையாகத் தோன்றுகிறேன்
அவன்: இன்றைய தோற்றம் அவ்வளவு உவப்பானதாக இல்லை என்பதை நீ ஒத்துக் கொண்டபின், உன்னைப் பற்றிய அவனின் குற்றச்சாட்டு எப்படித்தவறாகும்
குரல்: என்னைக்குற்றம் சாட்டுவதில் என்ன இருக்கிறது . என்னை நிர்மாணித்தது யார்?
கட்டும்போது என்ன நினைத்துக் கட்டினார்கள். ஒரு தற்காலிகக் காங்கிரீட் குடிசை என்ற அளவில்தானே.. இந்தக்காலனியில் 31 வீடுகள் திருவோட்டில் வீசப்படும் பிச்சைக்காசு எவ்வளவு சிரத்தையுடன் வீசப்படுகிறதோ அவ்வளவு சிரத்தையுடன் தானே நாங்கள் நிர்மாணிக்கப்பட்டோம். அதற்கு முன்பு அந்த இடம் என்னவாக இருந்தது.குப்பைகளைக் கொட்டி வைக்கும் டெப்போ.திட்டமிட்டவர்களும் காண்றாக்டர்களும் எடுத்தது போக மிச்சமிருந்ததை வைத்துத்தானே நாங்கள் கட்டப்பட்டோம். இன்றைய நிலை புரிந்து கொள்ளத்தக்கது.

அவன்: கடந்தகால நிகழ்வுகள் எதற்கும் நீ பொறுப்பல்ல என்கிறாய். அப்படித்தானே.
குரல்: ஓ..அந்தக் கதாசிரியன் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது ,நண்பனின் முன்னால், தெருவுக்குள் நுழைய கூச்சப்பட்டுக் கொண்டு எதிர்த்திசையில் நடந்ததாகச் சொன்னானே.. அதற்காக..
அவன்: அதற்கும், அது மாதிரியானவற்றிற்கும்...
குரல்: என்னையும் என்னையொத்த வீடுகள் நிரம்பிய தெருவையும் குறித்த அவனது அசூயை என்பது அவனைக் குறித்த அசூயைதான் என்பதை நீங்கள் உணர வேண்டும்.ஏனெனில் அப்பொழுதெல்லாம் நான் ஒன்றும் சிதிலமடைந்திருக்கவில்லை.
அவன்: உன்னைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு எல்லா வீடுகளையும் உள்ளடக்கிப் பேசுவது சரிதானா.. உனக்கு உண்டான பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் பொதுவானவைகள் தானா..?
குரல்: எல்லாவற்றிற்கும் பொதுவானவை என்று சொல்லமுடியாது. இந்தக் காலனி வீடுகளில் உள்ளவர்கள் எல்லோரும் அப்படி உணர்கிறார்கள் என்று சொல்ல முடியாது . இந்தக்கதாசிரியன் மாதிரி ஒன்றிரண்டு கூமுட்டைகள் அப்படி உணரலாம்.
அவன்: அப்படியானால் ..அவர்கள் படித்த கல்வியில் கோளாறு இருக்கிறது என்று சொல்லலாமா..?

குரல்: உறுதியாக அப்படித்தான் தோன்றுகிறது. இல்லையென்றால் தெருக்குழந்தைகளையும் குடிக்கும் தாய் தகப்பனையும் குறித்து ஒருவன் வெட்கமடைய நேருமா..?அவர்களைவிட்டுப் பிரிந்து வளர்ந்தபோது ..பெற்ற கல்வியில் மறைந்துள்ள கொடூரம் எத்தகையது என்பது கேள்வி அல்ல.ஆத்திரம்.. கேள்விகள் என்றால் பதில்களைத்தயார் செய்து விடுவார்கள். ஆத்திரங்களுக்கு என்ன பதில்களைத்தந்துவிட முடியும் உங்களால். யோசித்துப் பாருங்களேன். இருந்ததென்றால் இன்னொருமுறை சந்திக்கும்பொழுது முதலிலேயே மேடைக்கு வந்து விடுங்கள். அந்தப்பதிலிலிருந்து உரையாடலைத்தொடங்கலாம்
======================================================================================
இந்நாடகத்தை மேடையேற்றவிரும்புபவர்கள் தகவல் தெரிவித்து விட்டு மேடையேற்றிக் கொள்ளலாம் ]





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்