லிங்கம்: அதிகாரத்தின் பாதைகள்


"தளபதி, அரசனாக நினைத்துவிட்டால்... ?" - இது சேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் அனுமானம் (Premise ). அந்த அனுமானத்தின் மேல் பின்னப்பட்ட காட்சிகளையும் அங்கங்களையும் சரியாகச் செதுக்கி உருவாக்கிய மேக்பெத் நாடகம் தொடர்ந்து மேடையேற்றப்படும் நாடகம். சேக்ஸ்பியர் எழுதிய ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்டும் தழுவலாக்கம் செய்யப்பட்டும் நிகழ்த்தப்படுகின்றன. அந்நாடகம் எல்லாக்காலத்திலும் விவாதிக்கப்பட வேண்டிய, அதிகாரத்தை நோக்கிய பாதைகளையும் பயணங்களையும் விவாதப் பொருளாக்கியுள்ளதால் கால, தேச வர்த்தமானங்களைக் கடந்ததாக இருக்கின்றது. அரசதிகாரம் என்பதைத் தாண்டி ஒவ்வொரு துறைகளிலும் வெளிகளிலும் நடக்கும் எல்லாவகையான அதிகாரத்தை நோக்கிய பயணத்திற்கும் பொருத்தமானது இந்த அனுமானம்.

லட்சுமி சரவணக்குமார் எழுதி இயக்கியிருக்கும் 'லிங்கம்' தொடர் தமிழ்நாட்டின் தென்கோடிக் கடற்கரைக் கிராமங்கள் சிலவற்றில் நடக்கும் மோதல்களைக் காட்சிகள் ஆக்கியதின் வழியாக வட்டார அரசியலை விவாதிக்கின்றது. காவல்துறையில் அடிப்படை நிலைக் காவலராக ஆக நினைத்த ஓர் இளைஞன், திசை மாறிக் குற்றவாளிப் பட்டியலில் இணைக்கப்பட்டுத் 'தாதா' என்ற அதிகாரத்தை நோக்கி நகர்ந்த கதையாக எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்றத்தொகுதி என்ற எல்லைக்குள் நின்று தமிழ்நாட்டின் வட்டார அரசியலை விவாதிக்கும் தொடரில் கன்யாகுமரி மாவட்ட கிராமங்களின் உண்மை நிகழ்வுகளின் மேல் திரைக்கதை கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது. அவை உண்மை நிகழ்வுகள் என்பதைச் சொல்ல ஆண்டுகளும் ஆட்சியாளர்கள் பற்றிய தகவல்களும் பயன்பட்டுள்ளன.
 
அதிகாரத்துக்கான எல்லாவகையான  பயணங்களும் எதிரிகளை வீழ்த்துவதில் தொடங்குகின்றன. வீழ்த்துவதற்குத்  தேர்ந்தெடுக்கும் கருவிகளும்  ஆயுதங்களும்  வேறுவேறாக இருக்கலாம். அவர்களின் ஆயுதங்களையும் வழிமுறைகளையும் தீர்மானிப்பதில் மொழிக்கு முக்கியமான பங்குண்டு. மொழியால் உருவாக்கப்படும் கருத்தமைவுகளும் சொல்லாடல்களும் வெற்றிக்கான கருவிகளாக இருக்கின்றன. அவற்றுக்கீடாகவே  ரத்த உறவுகள், ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்கள், சாதிக்காரர்கள், மதத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பலவகையான உறவுகளும் வெற்றிக்கும் தோல்விக்கும் வினையாற்றும். அவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு பயணம் செய்யும் அதிகாரப்பித்து எதிலும் நிறைவடையாமல் தவிப்பதுதான் நடைமுறை யதார்த்தம்.இவ்விரண்டையும் சம அளவிலே, தேவைக்கேற்பக் கூடுதல் குறைவாகவோ கலந்து தரும் படைப்பாளி - இயக்குநர் வெற்றி பெறுகின்றார்.
 
 மொழியைப் பயன்படுத்தும் உரையாடல்களை அதிகம் நம்பி எடுக்கப்பட்டுள்ள லிங்கம் தொடரில், மிகையுணர்ச்சி வசனங்களால் ஆண்களின் குற்றச்செயல்கள் நியாயப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் உறவுகளைக் காட்சிப்படுத்தும்போது உரையாடல்களைக் குறைத்து பாத்திரங்களை ஏற்றவர்களின் நடிப்புக்கும் உடல் மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பெண் பாத்திரங்களின் உருவாக்கமும் அவர்கள் இயங்கும் வெளிகளின் இயல்புத்தன்மையும் கவனிக்கத்தக்கனவாகப் படமாக்கப்பட்டுள்ளன.   கடலோரக் கிராமங்களின் இயல்பான தெருக்கள், மாதாகோயில்கள், வீடுகள், வெற்றிடங்கள், கடலின் அலைப்பரப்பு எனக் காட்சி அழகியல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழகியலுக்கான பின்னணி இசையில் அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை. 

எட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள லிங்கம் தொடரை மூன்று, ஐந்து என இரண்டு தடவையில் பார்த்து முடித்தேன்.  இப்படிப் பார்த்த நிலையில் சிதைக்கப்பட்ட ஆண்களின் உடல்களால் நிரப்பப்பட்ட காட்சிகளை அதிகம் கொண்ட தொடர் என்ற எண்ணம் தோன்றியது. நாளொன்றுக்கு ஒன்று எனப் பார்த்திருந்தால் இந்த எண்ணம் தோன்றாமலும் இருந்திருக்கலாம்.     ஒவ்வொரு பகுதியிலும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம், சிதைக்கப்பட்ட உடல்கள் என்பது திரும்பத்திரும்ப காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வன்முறையை - கொலைகளைச் செய்வதற்காகக் கிளம்பும் கும்பல்களைக் காட்டுவதன் மூலம் பரபரப்பு நிலை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது வெளிப்பட்டுள்ளது. இரவில் நடக்கும் நிகழ்வுகள் என்பதற்காகப் பல காட்சிகளில் வெளிச்சமின்மையைத் தேர்வு செய்துள்ள காமிரா, காட்சிகளின் துல்லியத்தன்மையை - காட்சியின் அழகியலைப் பார்வையாளர்களுக்குக் கடத்தத்தவறியுள்ளது. அதே குறையோடுதான் பின்னணி ஒலியமைப்பும் கொண்டிருக்கின்றது. நீங்கள் பார்ப்பது தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட தொடர் என்பதைச் சொல்லிக் கொண்டே இருக்கும் விதமான அறிமுகப்பகுதியைத் தள்ளிவிட்டுப் பார்ப்பது நல்லது. அதேபோல் அவ்வப்போது காட்சிகளை வாய்மொழியால் விவரிக்கும் குரலும் உறுத்தலாகவே இருக்கின்றது. ஒரேமாதிரியான குரல்மொழியாக இருப்பதும் காரணமாக இருக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா : ஓர் இயக்குநர், ஒரு நடிப்பு முறை, ஓர் ஆசிரியரின் இரண்டு நூல்கள்-

ஐயா, உங்கள் காலம் முடிந்து போய் விட்டது

அசோகமித்திரன் 18 வது அட்சக்கோடு: நிலவியல் வரலாற்றுப் பின்னணியில் மனிதர்கள்