புலம்பெயர் இலக்கியமும் ஐக்கிய அமெரிக்கத் தமிழர்களும்


புலப்பெயர் இலக்கியம் -புரிதலுக்காக

குறிப்பிட்ட ஒருமொழியைப் பேச்சுமொழியாகக் கொண்ட மனிதர்கள் புலம்பெயர்ந்து, வெவ்வேறு நிலவியல் பின்னணியில் வாழ நேர்வதில் மகிழ்ச்சிகளும் உண்டு; துயரங்களும் உண்டு. 'இது என்நாடு' என்ற எண்ணம் உண்டாக்கும் மகிழ்ச்சிக்குள்ளேயேகூட, எனது ஊரில் சுற்றமும் பந்துக்களும் சூழ வாழ முடியவில்லையே என்ற எண்ணங்களும் உருவாவதைத் தவிர்க்க முடியாது. இவ்வகை எண்ணங்களும் மனவுணர்களும் உலக இலக்கியத்தில் தொடர்ந்து எழுதப்படும் உரிப்பொருட்களாக உள்ளன. தமிழின் செவ்வியல் கவிதையியலில் ‘பிரிவும் பிரிவின் நிமித்த்மும்’ காரணமாக எழுதப்பெற்றவை பாலைத் திணைப்பாடல்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வெவ்வேறு இடங்களுக்குப் பிரிய நேர்ந்த மனிதர்களுக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தன.
இலக்கியத்தை அகம், புறம் என மரபில் பிரிவுகளும் இழப்புகளும் ஏக்கங்களும் இருநிலையிலும் இடம்பெற்றுள்ளன. தலைவன் – தலைவியெனத் தனிமனிதர்களின் பிரிவுத்துயர்களையும் ஏக்கங்களையும் எழுதியன அகத்திலும், போர்கள் ஏற்படுத்திய அழிவுகளும் துயரங்களும் கையறுநிலைத் தன்மையோடு புறக்கவிதைகளாகவும் எழுதப்பட்டுள்ளன. போரில் வெற்றி என்பதோடு ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணங்களும் பிரிவின் – இடப்பெயர்வின் – புலப்பெயர்வின் காரணங்களாக இருந்துள்ளன. அதனால் ஏற்பட்ட மனநிலைகளை எழுதிய எழுத்துக்கள், புலம்பெயர் எழுத்துக்கள் என்ற வகைப்பாட்டில் வைத்துப் பேசத்தக்கன. அவ்வகை எழுத்துக்களில் அதிகமும் வெளிப்பட்டவை இழந்ததின் நினைவுகள் (NOSTALGIA) என்னும் இலக்கிய உரிப்பொருள்களே.

ஆங்கிலத்தில் டயாஸ்போரிக் லிட்டரேச்சர் (Diaspora literature) என வகைப்படுத்தப்படும் இலக்கிய வகைப்பாட்டிற்குள் இருப்பவை உலகப்போர்களும் காலனிய ஆட்சிகளுமே. அதிகாரத்தைப் பரப்பும் நோக்கில் ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றும் மோதிக்கொண்ட பல போர்கள் வரலாற்றிலும் இலக்கியங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. போர்கள் ஏற்படுத்த அழிவுகளாலும் குடும்பச்சிதைவுகளாலும் அலைக்கழிக்கப்பட்ட ஐரோப்பியர்களின் வாழ்நிலையை ஐரோப்பிய மொழிகள் எழுதியன உலக இலக்கியங்களின் பகுதிகளாக மாறியிருக்கின்றன. காலனிய வியாபார நோக்கத்தோடு செய்த பயணிகளின் பயணங்களும், அவர்கள் சென்று சேர்ந்த நாடுகளோடு ஏற்பட்ட உறவுகளும் எழுதப்பட்டுள்ளன. அமெரிக்காக் கண்டத்தின் நிலப்பரப்பில் ஆதிக்குடிகளும் குடியேறிகளும் சந்தித்த முரண்பாடுகளும் இணக்கங்களும் இலக்கியங்களில் பதிவாகிப் புலம்பெயர்தலை உள்ளடக்கங்களாக மாற்றியுள்ளன.

இடப்பெயர்வும் புலப்பெயர்வும்

இடப்பெயர்வுகள் முதன்மையாகப் பொருளாதாரக் காரணங்களால் நடக்கின்றன. அலைகுடி வாழ்க்கை, வேட்டைச் சமுதாயத்தின் அடையாளம். அதன் நீட்சியே இடப்பெயர்வுகளின் காரணங்களாகவும் இருக்கின்றன. வேலைதேடியும் தொழில் செய்வதற்காகவும் அலையும் மனிதர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துயரங்களும் இணைந்த நிகழ்வும். இவ்வுணர்வுகளைத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றின் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இந்திய மொழிகளில் இங்கிலாந்திற்கும் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் தனியார் நிறுவனக் கூலிகளாகவும் சிறுகுறு வியாபாரிகளாகவும், தொழில் ஆர்வலர்களாகவும் புலம் பெயர்ந்தவர்களின் இலக்கியங்கள் அதிகம் கிடைக்கின்றன. குறிப்பாகக் குஜராத்திகளும் ராஜஸ்தானிகளும் அதிகமாக மேற்கு நாடுகளில் சிறுவியாபாரிகளாக இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டுத் தமிழர்களில் உயர் மத்தியதர வர்க்கம் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர் சம்பளக்காரர்களாகப் பெயர்ந்துள்ளார்கள். அங்கேயே நிலைபெற்றுவிட்ட வாழ்க்கையில் வாழ்ந்துள்ளார்கள். அப்போது சந்தித்த பண்பாட்டுச் சிக்கல்கள் இலக்கியங்களில் பேசப்பட்டுள்ளன. அதன் மறுதலையாக வளைகுடா நாடுகளுக்குக் கூலிகளாகச் சென்றவர்களின் பாடுகளைத் தமிழின் புனைவுகளும் மலையாளப்புனைவுகளும் எழுதிக் காட்டியுள்ளன. தமிழ்மொழிக்குக் கூடுதலாகக் கிடைத்த புலம்பெயர் எழுத்துக்கள் என்பன ஈழத்தமிழர்களின் புலம்பெயர் எழுத்துக்கள். இலங்கைக்குள்ளொரு தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கைக்குப் பல காரணங்கள் இருந்தன. மொழி அடிப்படையிலான பேரினவாதமுரண்பாடும், பண்பாட்டு அடிப்படையிலான பௌத்த- சைவ முரண்பாடுகளும் போராட்டங்களாகத் தொடங்கின, பின்னர் போர்களாக மாறிப் புலப்பெயர்வுகளுக்குக் காரணங்களாகின. அப்படி வெளியேறிய ஈழத்தமிழர்கள் தொடர்ந்து தங்களின் உணர்வுகளை எழுதிக் கொண்டே இருந்தனர். கடந்த 40 ஆண்டுகளாக அவ்வகை இலக்கியங்கள் கவிதைகளாகவும், புனைகதைகளாகவும் நாடகங்களாகவும் காட்சி ஊடகங்களாகவும் வாசிக்கவும் பார்க்கவும் கிடைக்கின்றன.

இந்தியத் தமிழர்களின் புலப்பெயர்வுப் பின்னணியில் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு காரணங்கள் இருந்தன. காலனி ஆதிக்கம் முதல் காரணம். ஐரோப்பா தவிர்த்துத் தங்களின் ஆளுகைக்குட்பட்ட காலனித்துவ நாடுகளின் மனிதர்களை அவர்களின் உற்பத்தி மற்றும் வணிகப்பிரிவுப் பணிகளில் கூலிகளாக மாற்றினார்கள். மாற்றப்பட்ட கூலிகள் புலம் பெயர்க்கப்பட்டார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கையின் மலையகம், மொரீசியஸ் போன்ற நாடுகளுக்குப் பெயர்ந்து அந்நாட்டின் குடிகளாகவே மாறியது முதல் புலப்பெயர்வு காலகட்டம். அக்காலகட்டத்தில் புலம் பெயர்ந்தவர்கள் தங்களுக்குள் பேச்சுமொழியாகத் தமிழைத் தொடர்ந்துகொண்டே, எழுத்து மொழியாகவும் கற்றல் மொழியாகவும் அந்தந்த நாட்டு மொழிகளுக்குள் இயங்கியிருக்கிறார்கள். தாய்லாந்து, மொரீசியஸ் நாட்டுத் தமிழர்களிடம் தமிழ் இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. இரண்டாவது புலப்பெயர்வு 1990- களுக்குப் பிறகு உருவானது. இதன் பின்னணியில் தகவல் தொழில்நுட்பப் பெருக்கம் இருந்தது/ இருக்கின்றது. இவ்விரு புலப்பெயர்வுகளே தமிழ்மொழியை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் இலக்கியத்தைப் பன்னாட்டு அடையாளத்திற்குரியதாக ஆக்கியிருக்கின்றன.

உள்நாட்டுப் போர் காரணமாக இலங்கைத்தமிழர்களின் புலப்பெயர்வுகள் நிகழ்ந்த காலகட்டத்திற்கு முன்னும் பின்னும் இந்தியத் தமிழர்களின் புலப்பெயர்வுகளும் நடந்தன என்றாலும் அந்த அளவுக்கு எழுத்தில் பதிவுசெய்யப்படவில்லை. அதற்கான முதன்மைக் காரணமாக ஈழத்தமிழர்களுக்கு இருந்தது போலொரு நெருக்கடி இந்தியத் தமிழர்களுக்கு இல்லை என்பதே . பொதுவாக மனிதர்களின் கலை இலக்கிய முயற்சிகளுக்கு வாழ்க்கைச் சூழல் தரும் நெருக்கடி காரணங்களே முதன்மைக்காரணங்களாக இருக்கின்றன. அதனோடு தொடர்ந்து இன்னொரு நாட்டில் வாழ நேரும்போது உண்டாக்கும் பண்பாட்டு நெருக்கடிகள் தங்களின் மூதாதையர்கள் அடையாளங்களைத் தேடும்படி தூண்டும். அந்தத் தேடுதலின் விளைவுகள் பலவிதமாக வெளிப்படும்.

தேசம் என்னும் பேரடையாளத்தில் தொடங்கி, மொழி, சமயம், சாதி, ஊர் எனச் சிற்றடையாளங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும். இந்நகர்வுகள் ஒவ்வொன்றும் எழுதுவதற்குரிய உரிப்பொருளாக – உள்ளடக்கமாக ஆகமுடியும். அப்படி ஆக்கும்போது சமகால எழுத்தாக ஆகும். இதற்கு மாறாக எழுத்தில் வெளிப்படாமல், குடியேறிகளாக வாழும் மனிதர்களின் கொண்டாட்டங்களிலும் கூடுகைகளிலும் கூட அந்த வெளிப்பாடுகள் தோன்றி மறைந்துபோவதும் நடக்கும். அவற்றில் வெளிப்படுவது ஒருவிதத் தற்காலிகத் தன்மை.

உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் தமிழ்ச்சங்கங்களின் கொண்டாட்டங்கள் தற்காலிக நோக்கங்களைக் கொண்டவையே. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பு(FeTNA/பெட்னா) நடத்தும் ஆண்டுக்கொண்டாட்டங்களுக்கும் கூட தற்காலிக மதிப்பு மட்டுமே உண்டு. அவற்றிற்கு நிரந்தரத்தன்மையை உருவாக்க வேண்டும் என்றால், அந்த நாடுகளிலிருந்து அவர்களின் சமகால வாழ்க்கையின் நெருக்கடிகளையும் சந்திக்கும் முரண்பாடுகளையும் புனைவெழுத்தாக மாற்றும் எழுத்தாளர்கள் உருவாக வேண்டும். அவர்கள் தாங்கள் வாழ நேர்ந்துள்ள நாட்டின் பண்பாட்டையும் வாழ்வியலையும் தனது சொந்த நாட்டின் பண்பாட்டையும் வாழ்வியலையும் சந்தித்துக் கடக்கும் பாத்திரங்களை எழுதித் தரவேண்டும். அந்த எழுத்துப் பொது நிகழ்ச்சிகளை எழுதும் எழுத்தாக மட்டும் வெளிப்படாமல், அந்த நாட்டின் வாழ்க்கையில் தனிமனிதர்கள் சந்திக்கும் பொதுப்பிரச்சினைகளையும் குறிப்பான பிரச்சினைகளையும் விவாதிக்க வேண்டும். அத்தோடு இலக்கியத்தின் பொதுக்கூறுகளான காலம், இடம் போன்றவற்றில் சமகாலத்தன்மையைக் கொண்டுவருவது முக்கியமானது அந்த நோக்கத்தோடும் சில வெளிப்பாடுகளை அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள் முன்னெடுக்கின்றன .

*****

கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்காவிலும் கனடாவிலும் நடக்கும் தமிழ்சார்ந்த விழாக்களைக் கவனித்து வருகின்றேன். எனது முதல் பயணம் 2016. கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த ’புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ கருத்தரங்கில் பங்கேற்றுக் கட்டுரை வாசிப்பதே அதன் முதன்மை நோக்கம். அதனைத் தொடர்ந்து பாஸ்டன் நகரில் தகவல் தொழில் நுட்ப பொறியாளராக இருந்த மகனோடு மூன்று மாதங்கள் இருந்தேன். அந்தப் பயணத்திலேயே வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கக் கூட்டமைப்புப் பெருவிழாவில் பங்கேற்றேன். மகனைத் தொடர்ந்து மகள் குடும்பமும் அமெரிக்காவில் குடியேறியது;மகன் குடும்பம் கனடாவிற்கு இடம்பெயர்ந்தது. எனவே பல்கலைக்கழகப் பேராசிரியப் பணி ஓய்வுக்குப் பின்னர் இரண்டு தடவை பயணங்கள் மேற்கொண்டு 2023 இல் மூன்று மாதங்களும் 2026 இல், ஆறுமாதங்களும் இருந்துள்ளேன். இந்த மூன்று பயணங்களிலும் ஒரு சுற்றுலாப்பயணியாக ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் குறுக்கும் நெடுக்குமாகப் பயணித்துள்ளேன். இந்திய, தமிழ்க் குடும்பங்களின் கொண்டாட்டங்களிலும் குடும்பச் சடங்கு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளேன். சில தமிழ்ச்சங்கங்களின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளேன். கனடாவில் வாழும் ஈழத்தமிழர்களின் இலக்கிய நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொண்டுள்ளேன். மொத்தத்தில் ஒரு பருந்துப் பார்வையாக தமிழர்களின் வாழ்க்கை முறையைக் கவனித்துள்ளேன்.

எனது பயணங்களையும் பங்கேற்புகளையும் கவனித்துத் தொடர்கட்டுரைகள் எழுதியவன் என்ற நிலையில் ஈழத்தமிழர்களின் ஈடுபாடும் ஆர்வமும் உருவாக்கிய அளவிற்கு இந்தியத் தமிழர்களிடம் இலக்கிய உருவாக்கங்களும் புத்தக வெளியீடுகளும் நடக்கவில்லை. அதற்கான காரணம் நான் முன்பே சொன்னது போலப் படைப்பிலக்கிய உருவாக்கத்திற்கான நெருக்கடிகள் இவர்களுக்கு இல்லை. அதே நேரம் இந்த நிலையை மாற்றுவதற்குப் பெட்னாவின் செயல்பாடுகள் முயல்வதாகவும் தோன்றுகின்றது. ஒவ்வொரு பெட்னா நிகழ்விற்கும் அழைக்கப்படும் விருந்தினர்களில் சமகால /நவீனத்தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. அங்கு வருபவர்களை அழைத்து வெவ்வேறு நகரங்களில் உரையாற்ற வைப்பதும் நடக்கின்றது. அதன் காரண்மாக ஐக்கிய அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துகளில் சில மாற்றங்களும் நடக்கின்றன. ஆனாலும் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் ஐக்கிய அமெரிக்காவின் தமிழ் எழுத்து தனது முழுமையான அடையாளங்களோடு பதிவாகிவிடவில்லை.

எனது பயணங்களில் கிடைத்த அனுபவத்திலிருந்து சிலவற்றைச் சொல்லத்தோன்றுகின்றது. ஐக்கிய அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் இந்தியாவின் சாதியோடும், ஊர்த்தெய்வங்களோடும் குலதெய்வ வழிபாட்டோடும் தான் பயணித்துள்ளார்கள். மனதில் அவற்றை வெளியேற்றாமலேயே வாழ்கின்றார்கள். அதனை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்துவது எனது நோக்கமல்ல. அப்படிச் சொல்லத்தொடங்குவது அரசியல் பேச்சாக மாறிவிடும் ஆபத்துடையது என்பதை அறிவேன். இங்கே எனது குறிப்புகள் ஒரு இலக்கியத்திறனாய்வாளனின் கவனக்குவிப்புகள் மட்டுமே.

இந்தியச் சமூக அமைப்பின் நுண் அலகுகளையும் பேரலகுகளையும் சுமந்து வந்துள்ளவர்கள், அங்கு நடந்த நகர்மயமாதலின் பின் விளைவுகளால் உருவானவர்கள் என்பதும் உணரப்பட வேண்டிய ஒன்று. பணப்பெருக்கத்தைத் தாராளமாக அனுமதிக்கும் முதலாளிய வாழ்க்கைக்குள் இருக்கும்போது ஏற்படும் நெருக்கடிகள் பலவிதமானவை. பணியிடத்தில் தொடங்கி விரியும் முதலாளிய உறவுகளால் தீர்மானிக்கப்படும் அன்றாட நடவடிக்கைகளும் சமூக உறவுகளும் எழுதப்பட வேண்டிய உரிப்பொருட்களாக இருக்கின்றன. இவை எழுதப்படும்போது அமெரிக்காவில் வாழ நேர்ந்துள்ள வெளிகள் நேரடி வெளியாகவும், சொந்த ஊரின் வெளிகள் மனதில் அலையும் புனைவு வெளியாகவும் அலைதலாகப் பதிவாகும். இந்திய மனங்களைப் பொதிகளாகச் சுமந்துவந்திறங்கும் இந்திய / தமிழ் மனிதர்களின் தன்னிலைக்குள் தனிமனிதர்களாகவே வாழவிரும்பும் அமெரிக்க மனிதர்களின் தன்னிலைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் இவ்வகைப்புனைவுகள் உள்ளோட்டமாக இடம்பெற்று விரியும்.

எனது பயணங்களில் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டே இருந்த சொல்லாடல்கள் கற்கை சார்ந்த சிக்கல்களாகும். இந்தியக் கல்விமுறையில் உயர்கல்வி வரை கற்ற தலைமுறையினர், தங்களின் பிள்ளைகளை – வாரிசுகளை அமெரிக்கக் கல்வி முறையில் கல்வி கற்க அனுப்பும்போது சந்திக்கும் சிக்கல்கள் பேசப்பட வேண்டும். பதின்பருவம் தொடங்கியே ஆண் –பெண் ஈர்ப்புகளைத் தடுக்காத -சொந்தக் காலில் வாழும்படி தூண்டும் சூழலுக்குள் தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தயாராவதில் இருக்கும் சங்கடங்கள் அல்லது விருப்பங்கள் ஐக்கிய அமெரிக்கப்பெற்றோர்களின் சொல்லாடல்கள் திரும்பத் திரும்பக் கேட்கும் ஒன்றாக இருந்தன. இவ்விரு உரிப்பொருட்களும் பேசப்படும்போது குடியேற்ற அனுமதிகள் தொடங்கி, ஒவ்வொரு நிலையிலும் இன்னொரு நாட்டிலிருந்து வந்து வாழும் இரண்டாம் நிலைக் குடிகளாக உணரும் தருணங்கள் பதிவாகாமல் போகாது.

இந்தக் கட்டுரையில் எல்லாவற்றையும் சுட்டிக்காட்டி எழுதிவிடவும் முடியாது. ஒரு பயிலரங்காகத் திட்டமிட்டு விவாதித்து எழுதப்பட வேண்டியனவற்றை உள்ளிருந்து பெற்று உருவாக்கும் படைப்பரங்க நிகழ்வுகள் வழியாக ஐக்கிய அமெரிக்காவின் தனித்துவ அடையாளங்களைக் கண்டறிய முடியும். அந்த நோக்கத்தில் சமகால/ நவீனத்துவ எழுத்தாளர்களும் திறனாய்வாளர்களும் அழைக்கப்பட வேண்டும். விவாதங்கள் நடக்கவேண்டும். அவ்வகை படைப்பாக்கப் பயிலரங்குகள் இப்போது நடக்கும் பெருவிழாக்களிலிருந்து விலகிக் கலையியல் நோக்கங்களையும் படைப்பு நுட்பங்களையும் உலக/ இந்திய/ தமிழின் சமகாலப் போக்குகளையும் அறிமுகம் செய்வன அமைந்து புதியபுதிய எழுத்தாளர்களை உருவாக்கி அளிக்கும். .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா : ஓர் இயக்குநர், ஒரு நடிப்பு முறை, ஓர் ஆசிரியரின் இரண்டு நூல்கள்-

ஐயா, உங்கள் காலம் முடிந்து போய் விட்டது

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்