மே,15, 2026 இன்று மாலை அமெரிக்காவின் டல்லாஸ் நகரிலிருந்து விமானம் ஏறியிருக்க வேண்டும். சென்னையிலிருந்து தோஹா வழியாக வந்த கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் விமானம் டல்லாஸ் நகரில் இறக்கிவிட்ட தேதி நவம்பர், 17, 2025. இன்றோடு அனுமதிக்கப்பட்ட 180 நாட்கள் முடிந்துவிட்டன. நான் பெற்றுவந்த குடிநுழைவு அனுமதியின் பெயர் B -2. மகிழ்ச்சியாகத் தங்கியிருந்தல், விடுமுறையைக் கழித்தல் முதலான காரணங்களோடு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் இந்த அனுமதியில் ஒருவர் தொடர்ந்து 180 நாட்கள் அமெரிக்காவிற்குள் இருக்கலாம். முழுமையான நாட்களும் இருந்துவிட்டேன். ஆனாலும் இங்கிருந்து கிளம்பவில்லை.
பொதுவாக இதுபோன்ற அயல்நாட்டுப் பயணங்களில் வருவதற்கும் போவதற்கும் ஒரே விமானக்குழுமங்களின் விமானங்களையே தேர்வு செய்வது வழக்கம். இறங்கும் இடத்தில் ஏறிச் சொந்த ஊருக்குத் திரும்பும் வட்டச் சுற்றுப் பயணமாக அமையும்போதுதான் பயணச் சீட்டுக்கான பணமும் குறைவாக இருக்கும். 180 நாட்களுக்குப் பதிலாக 170 நாட்கள் இருந்துவிட்டு, மே மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டுக்குத் திரும்பிவிட நினைத்துப் பயணச்சீட்டு வாங்கியிருந்தோம். அந்த நாளில் கிளம்பமுடியவில்லை.
கிளம்பாமல் இருந்தற்குக் காரணம் விருப்பமின்மை அல்ல. அமெரிக்காவிற்கு வந்திறங்கி மூன்று மாதம் ஆன நிலையில் வளைகுடா நாடுகளின் வான்பரப்பிலும் தரைப்பரப்பில் ஏற்பட்ட போர்ப்பதற்றமே முதன்மைக்காரணம். 2026 பிப்ரவரி, 28 அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் நாட்டின் மீது வான்வழித்தாக்குதலைத் தொடங்கியபோது இவ்வளவு நாட்கள் நீளும் போரென்று நான் நினைக்கவில்லை. சில நாட்களில் முடிந்துவிடும் என்றே நினைத்தேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அச்சமும் பயமும் கூடியது. நாட்கள் வாரங்கள் ஆயின. வாரங்கள் மாதங்கள் ஆகிவிட்டன. இடையிடையே உங்கள் பயணத்திட்டத்தை மாற்றிக் கொள்ளலாம்; விரும்பினால் முழுப்பணத்தையும் திருப்பித் தந்துவிடத் தயாராக இருக்கின்றோம் என்று விமானக்குழுமம் செய்தி அனுப்பிக் கொண்டே இருந்தது. பயணத்தேதி நெருங்கியவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்று அதில் கவனம் செலுத்தாமல் இருந்து விட்டோம்.
போர்ச்செய்திகளும் பதற்றச் சூழலும் அமெரிக்கப் பொதுமக்களுக்கு பதற்றம் தருவதாக இல்லை. தொலைக்காட்சிகளில் அன்றாடம் கேட்கும் -பார்க்கும் ஒன்றாகவே இருக்கின்றன. போர்க்களத்திலும் போர்ச்செய்திகளிலும் அமெரிக்காவின் பங்கு இருந்தாலும் அவை பெரும்பாலும் அமெரிக்காவிற்கு வெளியே தான் நடக்கும். அதனால் அமெரிக்காவிற்குள் இருப்பவர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இருக்காது என்றே நினைக்கின்றனர். நாங்கள் அமெரிக்காவிற்கு வந்திறங்கிய ஒருமாத காலத்தில் மெக்ஸிகோ நாட்டின் தலைநகரத்து விமானநிலையம் ஒரு நாள் மூடப்பட்டது. அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோ போகும் விமானங்கள் எல்லாம் ரத்துசெய்யப்பட்டன. எல்ஷாப்போ என்ற போதைக்கும்பலை அடக்குவதற்காக ராணுவம் மேற்கொண்ட அதிரடித்தாக்குதல் காரணமாக அது நடந்தது. மெக்ஸிகோ டல்லாஸ் நகரம் உள்ள டெக்சாஸ் மாநிலத்துக்குப் பக்கத்தில் இருக்கும் நாடு. அதனால் அமெரிக்காவிலும் அதன் தாக்கம் இருக்கும் என்ற நான் நினைத்தபோது அப்படியெல்லாம் எதுவும் இருக்காது என்றே பலரும் சொன்னார்கள்.
எனது மருமகன் தனது பணிக்காக மெக்ஸிகோ சிட்டிக்குச் செல்லப் பயணச்சீட்டுப் பெற்றிருந்தார். விமானக்குழுமமே பயணத்தை ரத்து செய்துவிட்டது. பணம் திரும்பத் தரப்பட்டது. அவர் போகும்போது நானும் போய்வரலாம் என்று திட்டமிருந்தது. ஆனால் போகமுடியவில்லை. அதேபோல் ஜனவரி மாதத்தொடக்கத்தில் வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் கைது செய்யப்பட்டார்கள். அமெரிக்காவின் உளவுப்படையான சி. ஐ. ஏ.வின் ஆதரவுடன் நடத்தப்பட்ட அதிரடி ராணுவ நடவடிக்கை காரணமாகத்தான் அந்தக் கைது நடந்தது. நிக்கோலஸ் மதுரோ மீது போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதச் செயல்கள் எனக் குற்றச்சாட்டுச்சாட்டுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம் அடுக்கிய செய்திகளைத் தொலைக்காட்சிகளில் கேட்டிருந்தேன். அதனையொட்டி அமெரிக்காவின் தீவுகளில் ஒன்றான போர்ட்டோ ரீகோ போகும் பயணம் தடைபட்டது. அதற்கெனப் போடப்பட்ட விமானச்சீட்டை ரத்துசெய்து பணத்தைத் திருப்பித் தந்துவிட்டது விமானக்குழுமம்.
அந்தப் பயணம் ஒரு தனிக்கதை. எனது ஆறு மாதப்பயணத்திற்குள் ஒருமாதம் கனடாவுக்குள் போய்வரும் உள்பயணம் ஒன்றும் ஒன்று. மகன் ராகுலன் குடும்பம் கனடாவின் ஒட்டா நகரில் இருக்கிறதால் அங்கும் போகவேண்டும். இந்தக் கடுங்குளிர் காலத்தில் கனடாவின் பெரும்பாலான நாட்கள் உறைபனியாகவே இருக்கும் என்பதால் பனிக்காலம் முடியும் நாட்கள் – மார்ச் மாதத்தின் நடுவில் செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தோம். பேரன் முகிலனுக்கும் பேத்தி ஆர்கலிக்கும் பள்ளியில் குளிர்கால விடுப்புக்காலம் அது. அத்திட்டப்படி மகன் குடும்பத்தினர் அமெரிக்காவின் கனக்டிகட் மாநிலம் நியுஹெவன் நகரில் வந்து இறங்குவார்கள். அவர்களோடு சேர்ந்து போர்ட்டோ ரீகோ தீவுக்குப் போய் மூன்று நாட்கள் இருக்கலாம். திரும்பவும் அதே விமான நிலையத்திற்கு வந்து கனடாவின் ஒட்டாவுக்குப் போகலாம். ஒருமாதகாலம் இருந்துவிட்டுத் திரும்பவும் அமெரிக்கா வந்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தோம்.
வெனிசுலா அதிபர் கைதைத் தொடர்ந்து போர்ட்டோ ரீகோ விமானங்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டன. அங்குதான் அமெரிக்காவின் ராணுவத்தளங்கள் பலவும் இருப்பதால் அங்கு பயணிகள் வருவதற்குத் தடை அறிவிக்கப்பட்டது. அதனால் எங்கள் பயணத்திட்டம் மொத்தமும் மாறிவிட்டது. டிக்கெட் போட்ட தேதிகள் மாறின. மாற்றுத்திட்டமாக மார்ச் 17 இல் நியூயார்க் வழியாக ஒட்டாவாவுக்குப் போனோம். அங்கே 25 நாட்கள் இருந்துவிட்டுத் திரும்பும்போது ஏப்ரல் 13 ஆம் தேதி டொரோண்டோ வழியாக டல்லாஸில் வந்திறங்கினோம். மொத்தத்தில் 27 நாட்கள் கனடாவுக்குள் இருந்துவிட்டு வந்தோம். அந்தப் பயணம் தான் இப்போது எங்களுக்கு அமெரிக்காவில் இருக்கும் நாட்களை மேலும் நீட்டித்துக் கொள்ளும் நல்வாய்ப்பைத் தந்துள்ளது .
எங்கள் பழைய திட்டப்படி இந்தியப் பயணத்திற்காக முன்பதிவு செய்திருந்த விமானம் ஏப்ரல் மாத மத்தியில் ரத்தாகிவிட்டது. டல்லாஸ் நகரிலிருந்து நேரடியாக தோஹாவிற்கு விமானங்கள் இல்லை என அறிவித்துவிட்டு வாசிங்டன் போய் டெல்லி வழியாக இந்தியா போகலாம் என்றொரு வாய்ப்பைத் தந்தது. அதற்கெனப் பயணச்சீட்டை மாற்றிக் கொள்ளலாம் என்று செய்தி வந்தது. அந்த மாற்றுத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்காகத் தேதியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஏற்கெனவே திட்டமிட்ட தேதியில் கிளம்பலாமா? அந்தத் தேதிக்குப் பின்னால் எத்தனை நாட்கள் அமெரிக்காவில் இருக்கலாம் போன்ற தகவல்களைத் தரும் இணையதளத்திற்குச் சென்று பார்த்துவிடலாம் என்று முடிவு செய்து பார்த்தபோது ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. நாங்கள் அமெரிக்காவிலிருந்து கனடா போய்த்திரும்பி வந்த நாளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு திரும்பவும் ஆறுமாதம் -180 நாட்கள் அமெரிக்காவுக்குள் இருந்துகொள்ளலாம் என்ற விவரத்தைத் தந்தது I-94 என்ற அரசுத் தகவல் பக்கம். இந்தத் தகவல் பக்கத்தில் அமெரிக்காவிற்குள் நுழையும் அயல் தேசத்து மனிதர்கள் தங்கள் கடவுச்சீட்டு எண் முதலான விவரங்களை உள்ளீடு செய்தால் நுழைவு நாள், இருப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நாள், வெளியேற வேண்டிய நாள் என அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். அதனைப் பார்த்து, அதற்கேற்ப நமது திட்டமிடல்களைச் செய்துகொள்ளலாம். இப்போது நீட்டிப்புத் தரப்பட்ட நிலையில் மேலும் சில மாதங்கள் இங்கே இருந்துவிட்டுத் தமிழ்நாட்டின் கோடை வெயிலைத் தாண்டியபின் ஆகஸ்டு மாதம் ஊர் திரும்பலாம் எனத் திட்டமிட்டுள்ளேன்.
இந்த நேரத்தில் அமெரிக்க அரசின் குடிநுழைவு, குடியகல்வுத் துறையினர் (Department of Immigrants) தரும் அனுமதிகளின் வகைகளில் சிலவற்றைப் பற்றிய தகவல்களைத் தருவது அமெரிக்காவிற்குப் பயணம் செய்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதால் அதனைக் கொஞ்சம் விவரித்து எழுதுகிறேன். அமெரிக்காவிற்குள் வரும் அயல் தேசத்தவருக்கு நான்கு வகையான குடிநுழைவு அனுமதிகள் -விசாக்கள் (VISA ) வழங்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு
1. வருகையாளர் அனுமதி – வியாபாரம், சுற்றுலா, மருத்துவச் சிகிட்சை போன்றனவற்றிற்கு வழங்கப்படும் அனுமதி. B-1, B-2 என அழைக்கப்படும் இவை கால அளவுடன் கூடிய தற்காலிக அனுமதி. உரிய காலத்தில் வெளியேறாவிட்டால் திரும்ப நுழைவது இயலாமல் போகும்.
2. பரிமாற்ற அனுமதி – கல்விபெறவும் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கவும் வருபவர்களுக்குத் தரப்படும் அனுமதி. F, M, J -இவ்வகை அனுமதியும் கால அளவுடன் தரப்படுவனவே. வருபவர்களின் கல்வி, பண்பாட்டு நிகழ்வுக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அனுமதிக் காலம் இருக்கும். இதில் வருபவர்களும் காலக்கெடுவில் வெளியேறிவிட வேண்டும்.
3. பணி அனுமதி. அமெரிக்க நிறுவனங்களில் கிடைக்கும் பணி வாய்ப்புக்கேற்ப இவ்வகை அனுமதிகள் தரப்படுகின்றன. குறிப்பிட்ட வகையான திறனோடு வரும் தொழிற்துறைத்தொழிலாளர்கள், பண்ணை விவசாயத்தில் ஈடுபடுபவர்கள், அறிவியல், தகவல் தொழில் நுட்பம் போன்ற சிறப்புப் பணியாளர்கள் போன்றோருக்கு வழங்கப்படும் அனுமதிகள். H-1B, H-2A, L, O, P - இவ்வகை அனுமதிகள் தேவைக்கேற்ப நீட்டிக்கப்படுகின்றன.
4. நிலையான அனுமதிகள் -பச்சை அட்டைகளோடு கூடிய நிலையான குடியுரிமை. அமெரிக்கக் குடும்பங்களாலும் தொழில் நிறுவனங்களாலும் தரப்படும் தொழில் வாய்ப்புக்கேற்ப இந்த வகை அனுமதிகள் தரப்படுகின்றன. F1-F4
நான்கு வகை நுழைவு அனுமதிகளும் உள்ளே நுழைபவரின் கடவுச்சீட்டில் இடம்பெற்றிருக்கும். ஆகையால் அமெரிக்காவிற்குள் இருக்கும் அயல்நாட்டினருக்கு அவர்களின் சொந்த நாட்டு -குடியுரிமை பெற்ற நாட்டின் கடவுச்சீட்டே அடையாள அட்டை.
கருத்துகள்