இது முதல் கதை நீலம் இதழில் வந்துள்ள ‘அவள் ஒரு காலப்பயணி’ சித்ரா பிரகாஷ் என்பவர் எழுதி நான் வாசிக்கும் முதல் கதை. நான் வாசித்த வகையில் தலித் சிறுகதைகள் சிலவகையான பொதுத் தன்மைகளைத் திரும்பத் திரும்ப எழுதுவதாக உணர்ந்துள்ளேன். ஒதுக்குதல் - ஒதுக்கப்படுதல் காரணமாக உண்டாகும் துயரங்கள், தீண்டாமை செயல்படும் விதங்கள், வெளிகள், பொதுச் சமூகத்தின் ஆணவப்போக்கு, ஆதிக்க மனிதர்களைத் தட்டிக்கேட்க முடியாத இயலாமை அல்லது கையறுநிலை ஏமாற்றப்படுவதின் விளைவுகள், ஒடுக்கப்படுவதை உணர்ந்து மீறத்துடிக்கும் போது சந்திக்கும் வன்முறை, ஒன்றிணைந்து எதிர்ப்பைக் காட்ட நினைத்து அடையும் தோல்விகள் போன்றன திரும்பத்திரும்ப எழுதப்படுகின்றன. இந்தப் பொதுப்போக்கிலிருந்து சிலர் மாறுபட்ட தலித் கதைகளை எழுதியதும் உண்டு. கதைக்கான வெளிகளில் வேறுபட்ட தேர்வுகள்,, பாத்திரங்களின் செயல்பாடுகளை விவரிக்கும் மொழிநடை, வாசிப்புக்குப் பின் உருவாக்கும் உணர்வுநிலை போன்றவற்றில் வேறுபாடுகளைக் காட்டிய சிறுகதைகளைத் தந்தவர்களாக ஜே.பி. சாணக்கியாவும் சுதாகர் கதக்கும் வெளிப்பட்டார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து சிறுகதைகள் எழுதுவதிலிருந்து விலகியிருக...