பெருங்கவிகள் ஏற்படுத்தும் நெருக்கடி ஒரு மொழியில் இயங்கும்/ இயங்கிய பெருங்கவிகளின் கவிதைகளைத் தொகுத்து வகைப்பாட்டிற்குள் வைத்துப் பேசுவது எந்தத் திறனாய்வாளருக்கும் எளிதானதல்ல. திறனாய்வாளர்களைத் திணறடிக்கும் மரபுத்தொடர்ச்சியின் தொடக்கம் தமிழ்க் கவிதைப்பரப்பில் ஔவையும் கபிலரும். செவ்வியல் கவிதைக்குப் பின்னர் அற இலக்கிய காலத்தில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைக் காட்ட முடியும். ராமாயணம் எழுதிய கம்பரின் பிறகவிதைப் பனுவல்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது அந்த வரிசையை அவர் நீட்டித்தார். பக்திக்கவிதைகளில் அப்படியொரு பெரும் ஆளுமையைக்காட்டுவது எளிதல்ல. ஓரளவு ஆண்டாளின் பாவைப்பாடல்களையும் நாச்சியார் திருமொழியையும் ஒரு சிறிய விலகல் என்று சுட்டலாம். சிற்றிலக்கியப்பரப்பில் அப்படியொரு பெருங்கவியைச் சுட்டிக்காட்டமுடியாது. இந்த மரபுத்தொடர்ச்சியில் பெரும்பாய்ச்சல் கவி.பாரதி. அவருக்குப் பின் அந்த இடத்தில் நிற்பவராகக் கவி.மனுஷ்யபுத்திரனையே சொல்லமுடியும். புனைகதைகளில் இப்படியான சுட்டிக்காட்டலுக்குப் பலர் இருக்கிறார்கள். ஈழத்தமிழ்க் கவிதைப்பரப்பில் சேரன், ஜெயபாலன், வில்வரத்தினம், கருணாகரன் போன்றோர் அப்...