கல்விச்சந்தை - 2023


எண்பதுகளில் கல்வியைக் குறிக்கும்போது சந்தை அதனோடு இணையும் சொல்லாக இருந்ததில்லை. இப்போது எல்லாத் துறைகளோடு சந்தை இணைந்துவிட்டது. மருத்துவம், பொழுதுபோக்கு, வேளாண்மை என எல்லாமே சந்தையின் தேவைக்கானதாக மாறிவிட்டன. கல்வியும் இப்போது கல்விச்சந்தை என்ற சொல்லோடு சேர்ந்தே குறிப்பிடப்படுகின்றது.

எப்போதும் தொழில் படிப்புகளான மருத்துவம், பொறியியல் படிப்புகள் முன்னுரிமைப் படிப்புகளாகவே இருக்கின்றன. அதற்கடுத்து முதன்மை முன்னுரிமைப் படிப்பாக வணிகவியல் மாறியிருக்கிறது. எனது பட்டப்படிப்புக் காலத்திலும் வணிகவியல் அதிகம் விருப்பத்திற்குரிய படிப்பாகவே இருந்தது. அதன் பின்னணியில் இந்திரா காந்தி வங்கிகளைத் தேசியமயமாக்கியதும் புதிதுபுதிதாக வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டதும் இருந்தன.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிப்பணியையும் அரசுப்பணியாகவே கருதிய பலரும் வணிகவியல் படிப்பை நோக்கி நகர்ந்தார்கள். ஆனால் வங்கிப் பணியில் சேர வணிகவியல் கட்டாயம் இல்லை. ஏதாவதொரு பட்டம் என்றே விளம்பரங்கள் வரும். பட்டப்படிப்பில் தமிழ் படித்த நானே ஒரு தடவை எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்று நேர்காணலில் தோற்றவன்தான்.
இப்போது திரும்பவும் வணிகவியல் கல்வி மாணவர்களின் விருப்பத்திற்குரிய பாடமாகியிருக்கிறது. அதன் பின்னணியில் புதிய வரிவிதிப்புக்கொள்கையான ஜிஎஸ்டி முறையும் புதிய தொழில்வாய்ப்புகளை ஊக்குவிக்கும் தனியார்மயம், உலகமயம், தாராளமயம் ஆகிய இருக்கின்றன. அதனால் வணிகவியலின் அடிப்படைத்தாள்களோடு சிறப்புப்பாடங்களாகப் பொது& தனிநபர் தணிக்கை, நிதி மேலாண்மை, வரி நிர்வாகம், குழும நிர்வாகம், குழுமச் செயல்பாடு எனப் பலவிதமான படிப்புகள் கண்டறியப்பட்டுத் தனித்தனி வணிகவியல் படிப்புகள் தொடங்கப்படுகின்றன.
ஒரே கல்லூரியில் வணிகவியல் படிப்பில் மட்டுமே 1500 மாணவர்கள் சேரும் அளவிற்கு வணிகவியல் படிப்புகள் உள்ளன. குறிப்பாகக் கோவை போன்ற தொழில் நகரங்களில் இயங்கும் கல்லூரிகளில் வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் படிப்புகளுக்கே போட்டிகள் அதிகம் உள்ளன. தென்மாவட்டக் கல்லூரிகளில் இந்தப்போக்கு குறைவு. அங்கெல்லாம் இன்னும்கூட.

அடிப்படை அறிவியல் படிப்புகளான கணிதம், இயல்பியல், உயிரியல், விலங்கியல் போன்றனவற்றைத் தேர்வு செய்யும் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கொங்கு பகுதியில் அதன்மீதான ஆர்வமே இல்லை. சுயநிதிக் கல்லூரிகள் பலவற்றில் அறிவியல் துறைகளே இல்லாமல் கணினி சார்ந்த பாடங்கள், வணிகம் சார்ந்த பாடங்கள் மட்டுமே கற்பிக்கும் துறைகளே இருக்கின்றன. தகவல் தொடர்பியல், தகவல் அறிவியல், செயற்கை நுண்ணறிவியல், சூழல் அறிவியல், சுற்றுலாப் பண்பாட்டியல், பண்பாட்டுத் தொகையியல், தொல்லியல் தரவுகள் எனப் புதிய துறைகள் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. காலச்சூழலையும் அடுத்துவரும் மாற்றங்களையும் புரிந்துகொண்டு படிப்புகளை உருவாக்கும் கல்லூரிகள், கல்விச்சந்தையில் முதலிடம் பிடிக்கின்றன. அதனைப் பெற்றோர்களும் புரிந்துகொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டவேண்டும்.
இந்த நிலையில் மொழி, இலக்கியக் கல்வி ஒருவிதச் சேவைப் படிப்பாகக் கருதப்படுகின்றன. அடிப்படை அறிவுத்துறைகள் மீது விருப்பமும் தொண்டு மனப்பான்மையும் உள்ள கல்லூரிகள் மட்டுமே இவற்றைத் தொடங்கி நடத்துகின்றன. அண்மையில் தமிழக அரசு, அனைத்துப் போட்டித்தேர்வுகளுக்கும் தமிழ் கட்டாயம் என்று அறிவிப்புச் செய்துள்ளதால் தமிழின் பக்கம் சிறிய அளவு ஆர்வம் காட்டும் மாணாக்கர்களைப் பார்க்க முடிகிறது. தமிழ் இலக்கியம் படிக்கும் மாணாக்கர்களுக்கு நுழைவுத்தேர்வும் நேர்காணலும் நடத்திச் சிறப்பு ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாகத் தமிழ்க் கல்வியை வழங்கும் திட்டத்தை இந்த அரசு முன்னெடுத்தால் கலை, இலக்கியப் படிப்புக்கு உதவிய அரசாக இருக்கும். அரசோடும் அமைச்சர்களோடும் தொடர்புடைய வல்லுநர்கள் இதனை முன்னெடுக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்