போரும் போரின் நிமித்தமும் : அனுபவங்களைச் சொல்லுதல்
எதுவரை இணைய இதழில் (http://eathuvarai.net/?p=4796) வந்துள்ள வைகறைக் கனவு கதையை எழுதிய தமிழினி ஜெயக்குமாரன் என்ற பெயரை இணையத்தில் தான் பார்த்திருக்கிறேன். தமிழின் அச்சிதழ்களிலோ, தொகுப்புகளிலோ அவர் எழுதிய கதைகள் எதையும் வாசித்ததில்லை. கதையை வாசித்து முடித்தபின் கதை எனக்குள் எழுப்பிய வினாக்கள் பலவிதமானவை.
1990 களின் மத்தியில் தமிழ்ச் சிற்றிதழ்களில் எழுப்பப்பட்ட விவாதங்கள் முதலில் நினைவுக்கு வந்தன. தலித் இயக்கங்கள் அரசியல் தளத்தில் வீச்சாக எழுந்த தொடக்கநிலையில் அந்த விவாதம் எழவில்லை. ஆனால் நிலைபெற்றுவிட்டது என்ற எண்ணம் ஏற்பட்டபோது “தலித் எழுத்தைத் தலித்துகள் தான் எழுதவேண்டும்” என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. தலித்தியத்தின் தொடர்ச்சியாகப் பெண்கள் தங்கள் அனுபவங்களை/ சிக்கல்களை/ மன உணர்வுகளைத் தன்மைக் கூற்றில் சொல்லும்விதமாகக் கவிதைகளாக ஆக்கியபோது இந்த விவாதம் இன்னும் உறுதியாக மாறியது. பெண்களின் எழுத்தை மதிப்பிடுவதற்கு ஆண்களுக்கு ஏது உரிமை என்ற குரல்கள் இப்போதும் கேட்கவே செய்கிறது. என்றாலும் ‘பாத்திரமாக ஆதல்/ பாத்திரங்களை உள்வாங்கி உருவாக்குதல்’ (Being a character/ Building a a character ) போன்ற ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறைகளையெல்லாம் வாசித்திருந்ததால் இந்த முன்வைப்பை முற்றிலும் சரியானது எனவும் ஏற்கவில்லை மனம்.
இன்னொருவரின் அனுபவத்தைத் தன்னுடைய அனுபவமாக உள்வாங்குதலும் வெளிப்படுத்துதலும் நடிப்புசார்ந்த பயிற்சிகளால் சாத்தியம் என நம்பும் அதே நேரத்தில், சூழலின் நெருக்கடியால் அது இயலாமல் போவதும் சாத்தியமே என்பதும் உண்மைதான். ஒத்திகைகளிலிருந்து விலகிக் கொண்ட நடிகர்களையும் வெளிப்பாட்டில் தோல்வியடைந்தபோது பின்வாங்கிய நடிகைகளையும் அரங்கியல் மற்றும் திரைக்கலை நூல்கள் விவரிக்கவே செய்துள்ளன.
தமிழ்நாட்டில் உருவான தலித் இலக்கியச்சூழல் தந்த நெருக்கடி அப்படியானது. தலித்தல்லாதவர்களின் ஆர்வமும் செயல்பாடுகளும், தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டில் பங்குபெறும் நோக்கம் கொண்டது என்பதான நேரடிக்குற்றச் சாட்டை முன்வைத்துக் குற்றவுணர்வை உண்டாக்கியது அந்த நெருக்கடி. தலித் எழுத்துகளை வாசிப்பதையும் அவை பற்றி எழுதுவதையும் சமூகக்கடமையென நினைத்துச் செயல்பட்ட பலரும் அதனால் தயக்கம் காட்டினர். தலித் கலை விழாக்களிலும் அரசியல் கூட்டங்களிலும் நிகழ்த்துவதற்காகத் தலித்திய உள்ளடக்கத்தோடு நாடகங்களை இயக்கிய நானும்கூட ‘அந்த முன்வைப்பு’ சரியானது தான் என ஏற்று ஒதுங்கிக் கொண்டேன். இது கடந்தகாலம். இனி நிகழ்காலத்திற்கு ...
அனுபவத்தை எழுதுவதுதான் சரியான எழுத்தாக இருக்கமுடியுமோ? என்ற மனத்தின் கேள்வி திரும்பவும் இந்தக் கதையை வாசித்தவுடன் தோன்றியது கதையில் இடம்பெற்றுள்ள முக்கியப் பாத்திரங்கள் இரண்டு. மலரினி, மைதிலி. இருவரில் ஒருவரின் நினைவுகளாகக் கதை நிகழ்வுகள் விரிகின்றன. தொடக்கம் இப்படி:
‘மலரினி ஓடிக் கொண்டிருந்தாள். வேகமாக மிக மிக வேகமாக. பூமி அவளது கால்களுக்கு கீழே ஒரு மின்சார ரயிலின் வேகத்தில் பின்னோக்கி நகர்வதைப் போலிருந்தது. நிலத்தைத் தொட்டும் தொடாமலும் உதைத்தெழும்பும் ஒரு மானின் லாவகத்துடன் அவளது கால்கள் அசைந்து கொண்டிருந்தன. பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டு காட்டுப் பாதைகளையும் கட்டாந்தரைகளையும் கடந்து காற்றிலே பறக்கும் வேகக் குதிரையாகயாகவே மாறிவிட்டிருந்தாள் அவள்.
ஆஹா… எத்தனை இனிமையானதொரு அனுபவம் என எண்ணுவதற்குள்ளாகவே அவளது உடல் பாரமாகக் கனப்பதைப் போலிருந்தது.”
பள்ளிக்காலம் தொட்டே ஓடுவதில் விருப்பம் கொண்ட மலரினியின் நினைவுகள் தான் கதை. ஓடியகால்களின் - ஓடிக்கொண்டிருப்பதில் அதீத விருப்பங்கொண்ட மலரினியின் கால்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைச் சொல்லி முடிப்பதுதான் கதை.
யாரோ தகவல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மலரினி எழும்ப முயற்சித்தாள். ஒரு கால் இரும்பாகக் கனத்தது. ஓ….மற்றைய கால் அது தொடைக்கு மேலே வெள்ளைத் துணிப்பந்தமாகக் கிடந்தது. நிலை குலைந்தவளாக பிடரியடிபடப் படுக்கையில் விழுந்தாள். எல்லை கடந்த அதிர்வுகளை உணரந்து கொள்ள முடியாத புலன்களைப் போல அவளது உணர்வுகள் இறுகிக் கொண்டது. மேகங்களுக்கு போட்டியாக காற்றிலே பறந்த வேகக்குதிரையின் கால்களில் ஒன்று காணாமல் போயிருந்தது. இப்போது மலரினிக்கு எந்த வலிகளும் இல்லை. கனவுகளும் இல்லை. நாசியில் சுவாசம் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது.
விவரிப்போடு கதை முடிகிறது. ஒற்றைக் கால் இல்லை என்பதோடு, இப்போது கனவுகளும் இல்லை எனக் கதாசிரியர் கூற்று இருக்கிறது. ஆனால் அவளுக்கு முன்பு ஒரு கனவு இருந்தது. ‘கனவுகாணுங்கள்’ என்று சொன்ன அப்துல் கலாமின் புத்தகத்தைப் படித்துவிட்டு அவள் திரும்பத்திரும்பக் கனவு என நினைத்துக்கொண்ட முன் மாதிரிப் பெண் தான் அவள் கனவு. அந்தப் பெண் மரியான் ஜோன்.
“எனக்கும் ஒரு கனவு அடிக்கடி வருமக்கா. அமெரிக்கா ஒலிம்பிக் ஓட்ட வீராங்கனை மரியன் ஜோன் மாதிரி நானும் வெளி நாட்டு ஆக்களுக்கு முன்னால பெரிய மைதானத்தில ஓடி முதலாவதா வாற மாதிரி எனக்கு சின்ன வயதில இருந்தே அப்பிடி ஒரு ஆசை”
இந்தக் கனவு மட்டுமே இப்போது அவளுக்குத் தொலைந்து போகவில்லை. அத்தோடு சேர்ந்து அவள் வயதொத்த தோழியோடு ஆற்றில் மூழ்கிக் குளிப்பதும், முருங்கைக்காயும் புட்டும் செஞ்சு சாப்பிட வேண்டுமென நினைப்பதும், சிட்டுக்குருவிகளின் கிர்புரென ஒலிக்கும் மெல்லோசையைக் கேட்டுச் சிரித்துக் கொண்டிருப்பதும் கூட நிறைவேறாமல் போய்விட்ட கனவுகளாகிவிட்டன. மலரினியின் இந்தக் கனவுகள் தொலையக்காரணம் யார்? அல்லது எது?
கேள்விக்கான விடையாக வருவதுதான் இயக்க வாழ்வும்,போரின் காலமும். ஈழத்திற்கான கடைசி யுத்தம் -முள்ளிவாய்க்கால் படுகொலைகள் எல்லாம் முடிந்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் ஈழத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் கிடைக்கும் எழுத்துகள் விடுதலைப்புலிகள் மீதும், அவர்களின் தலைமை மீதும் கடுமையான விமரிசனங்களை வைப்பனவாக வந்து கொண்டிருக்கின்றன. யுத்தத்தையே நினைத்து, யுத்தத்தையே தின்று வாழ்ந்தவர்களாகவும், ‘எங்கட உயிரிலும் மேலானது ஆயுதம்’ என்று கதைத்துத்திரிந்தவர்களாகவும் புலிகள் மீது விமரிசனக் கணைகளை முன்வைக்கின்றன.
தமிழினியின் இந்தக் கதை அப்படியொரு நிலையை எடுக்கவில்லை. கடும் விமரிசனத்திற்கு மாறாகப் பேசும் இந்தக் கதை போருக்கு இயக்கம் மட்டுமே - புலிகளும் அதன் தலைமையும் மட்டுமே காரணம் என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கிறது. மரியான் ஜோன்ஸ் ஆகும் கனவை விட்டுவிட்டு,
“பிறகெப்பிடி இயக்கத்திற்கு வந்தனி” எனக்கேட்கும்போது மலரினி சொல்லும் பதில் இயக்கத்தின் மீதான விமரிசனமோ, எரிச்சலோ அல்ல.
“எங்கடை பள்ளிக்கூடத்தில இயக்கத்தின்ர பரப்புரைக் கூட்டம் அடிக்கடி நடக்கும். கன பிள்ளைகளுக்கு போக விருப்பம், ஆனா றெயினிங்கை நினைச்சா பயம் எனக்கு றெயினிங் எடுக்க விருப்பமாயிருந்திச்சு கூட்டத்திலயே எழும்பி வந்திட்டன்”
“எங்கடை றெயினிங் காம்பில கடைசி வட்டம் ஓடும் போது மாஸ்ரர் அக்கா ‘லாஸ்ட் அன்ட் பாஸ்ட்’ எண்டு சொல்லக்கை நான்தான் நெடுகலும் முதலாவதா ஓடி முடிப்பன், சிறப்புத்தளபதி எனக்கு விசேட பரிசு தந்தவா” அந்த நினைவுகள் தனக்குள் ஆனந்தமாகக் கிளருவதை சுகமாக அனுபவித்தாள் மலரினி.
என எழுதுகிறார் தமிழினி. ஓடுவதில் இருந்த ஆர்வம்தான் அவளை இயக்கப் பரப்புரையின் பால் ஈர்த்தது. போர்ப் பயிற்சியில் ஈடுபடச் செய்கிறது. துப்பாக்கியை உடலின் உறுப்புகளில் ஒன்றாக நினைக்கச் செய்கிறது. இடையிடையே வீட்டின் நினைவுகளும் ஊருக்குத் திரும்புவது இனிச் சாத்தியமில்லை என்ற முடிவுகளும் வரும்போதெல்லாம், போரை யாரும் திணித்ததாக நினைத்ததில்லை. பெண் போராளியாக அவள் செயல்படும் விதத்தில் அவள் காட்டுகின்ற ஈடுபாட்டையும், தீரத்தையும் பாராட்டும்போது-தலைமையிடமிருந்து அதற்கான மரியாதை கிடைக்கும்போது அடையும் குதூகலத்தைத் தன்னியல்பாகவே சொல்கிறாள்.
கதையில் விவரிக்கும் போர்க்காட்சிகள் குறிப்பாகப் பெண் போராளிகளின் பங்கேற்பு, வேலைப்பிரிவினைகள், அவர்களுக்கு இயக்கம் அளித்திருந்த பணிகள், கிடைத்த பாராட்டுகள் என அனைத்தும் மிகுந்த நம்பகத்தன்மையோடு எழுதப்பட்டுள்ளன. இப்படியான நம்பகத்தன்மையான எழுத்தைப் போரில் ஈடுபடாமல் வெளியிலிருந்து எழுதிக்காட்டிட முடியாது என்று சொல்லும் அளவுக்குக் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளன.
மலரினியெனப் பெயரிடப்பட்டுள்ள பாத்திரம் தமிழினி தானோ எனச் சந்தேகம் கொள்ளத்தக்க அளவுக்கு நம்பகத்தன்மையோடு எழுதப்பட்டுள்ளது. இந்த நம்பகத் தன்மையோடு கதையின் தொனியில் ஒலிக்கும் மென்மையான சோகமும், சில நினைவோட்டங்களும் கதையை இன்னொரு தளத்திற்குள் நகர்த்துவதையும் கவனிக்க வேண்டியுள்ளது. பின்வரும் நினைவோட்டத்தை வாசித்தால் கதை நகரும் அந்தத்தளம் புரியலாம்.
கைவிடப்பட்டிருந்த வீடுவாசல்களையும் சிதறிக்கிடக்கும் பொருட்களையும் பார்க்கும் போதெல்லாம் ‘பாவம் சனங்கள்’ என மனசுக்குள் வேதனை பரவிக் கொள்ளும்.
‘நானும் செத்துப் போனனெண்டால் என்ர அம்மாவை எப்பிடிக் கண்டு பிடிச்சு பொடி குடுக்கப்போயினம்’ பெருமூச்சொன்று முட்டிக் கொண்டு வெளியேறிச் செல்லும். ‘நான் மட்டுமே என்னைப் போல எத்தினை பேர்’. கோதையை நினைத்துக் கொள்வாள் ‘அவளின்ர இடம் மட்டக்களப்பு, ஊருக்கே பொடி போகாது .பாவம் கோதையின்ர அம்மாக்கள்’ இப்படி அவள் நிறைய விடயங்களில் நாட்டுக்காகத்தானே என்ற நினைவுடன் சமாதானமாகிக் கொள்வாள்.
நிகழ்வுத் தளத்திற்கும் உரையாடல் தளத்திற்கும் மாறாகக் கதையின் நினைவோட்டத் தளம் போரிலிருந்து விலகிய நிலையாக விரிகிறது. அந்த விரிப்பில், போரின் அர்த்தமற்ற நீட்சியின் மீது போராளிகளுக்குச் சலுப்பும், தப்பித்தலற்ற குழியில், மீளமுடியாத சுழலுக்குள் மாட்டிக்கொண்டுவிட்டோம் என்ற புரிதலும் இருந்தது என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. இந்தக் கோடிகாட்டுதல் மூலம் தமிழினி ஏற்கத்தக்க விமரிசனம் ஒன்றை வைக்கிறார் என்பதாகப் புரிந்துகொள்ள முடியும். மற்றவர்களெல்லாம் வைக்கும் விமரிசனம் ஒரு முடிவெடுத்துப் போரையும் போர்க் காலத்தையும் அறிந்துகொள்ளாமலும் புரிந்துகொள்ளாமலும் ஏற்றுக் கொண்ட ஒன்று எனப் பேசுவதாக இருக்கிறது. ஆனால் தமிழினியின் இந்தக் கதை போரையும், போர்க் காலத்தையும் விரும்பியேற்றவை; தவிர்க்கமுடியாமல் உள்ளிழுத்த சுழற்சி எனப்பேசுகிறது. இந்தப் புரிதலோடு யோசிக்கும்போது இன்னொரு போரை - போரின் சுழற்சியைத் தவிர்ப்பதே தீர்வாகக் கூடும் என்று முடிவைச் சொல்ல நினைத்துச்சொல்லாமல் விட்டுள்ளது என்றும் புரிந்து கொள்ளலாம்.
நல்ல கதையின் அடையாளம் முடிவை வாசகனின் நினைவுக்குள் தள்ளிவிடுவதில் இருக்கிறது.
கருத்துகள்