நிலவோடு கோபம்

அதுதான்
நாங்கள் இருவரும் அமர்ந்து கதைபேசிக் கலவி செய்து பிரியும் இடம்.
ஆனால் அந்த இடத்தை தன் நிழலால் நிரப்பியிருக்கிறதே அந்த மரம்.
தன் உயரத்தைவிட நீளமாக நிழல் பரப்பியிருக்கும்
அந்த மரம் என்ன மரமாக இருக்கும்?
கொன்றை?
 புங்கை?
புன்னை?
வேங்கை?

பகலாக இருந்தால்
இலையைப் பார்த்து என்ன மரம் என்று கண்டு சொல்லிவிடுவேன்.
பகல்போல் நிலவின் வெளிச்சம் இருந்தாலும்  
இலைகளின் வடிவமோ வண்ணமோ தெளிவாகத் தெரியவில்லை.
 என்ன மரமாகவும் இருந்து விட்டுப் போகட்டும்.  

கொப்பும் குலையுமாகக்
குவிந்து கிடக்கும் மரநிழலில் பாதியும்
நிலவின் வெளிச்சத்தில் பாதியுமாகக் கிடக்கும் இலைக்குவியல் மேலெழும்பிக் கீழிறங்கி
அசைந்து கொண்டிருப்பது ஏனென்று தெரியவில்லை.
இலைக்குவியலுக்குள் ஏதாவது விலங்கு இருக்குமோ.
ஓ அந்தக் குவியலிலிருந்து ஒரு சிறு உருவம் கிளம்பி நடக்கிறதே!
புள்ளிபுள்ளியாய் பரவிக்கிடக்கும் அதன் மேனியைப் பார்த்தால்
காட்டுப்பூனை போலத் தெரியவில்லை.
ஆமாம் பூனையல்ல; புலிக்குட்டி.
சந்தேகமே இல்லை. அது புலிக்குட்டி தான்.
அப்படியானால் அசையாமல் பெருமூச்சு எழுப்பும் அந்த உருவம் ?
அதன் தாய்ப் புலியாகத்தான் இருக்கும்.

இது காட்டின் பகுதிதான்
என்றாலும் என் வீட்டிலிருந்து அதிக தூரம் இல்லை.
ஆனால் அவருக்கு நீண்ட தூரம்.
அவர் வீடு இந்தக் காட்டைத் தாண்டிய ஊரில் இருக்கிறது.
என்னைச் சந்திப்பதற்காக அவர் கிளம்பும்போது நிலவு அடிவானத்தில் வட்டவடிவமாய் இருந்திருக்கும்.
இப்போது கீழ் வானத்தில்
மரத்தின் உச்சியைத் தொட்டு விலகுவது போல நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலவு இன்று இரவு முழுவதும் குளிர்ச்சியான வெளிச்சத்தைத் தரும். அதனால் என்னைச் சந்திக்க வரும் என் காதலன் என்னைக் கண்டு,
புணர்ந்து திரும்பும்போதும் நிலவின் துணை இருக்கத்தான் செய்யும். ஏனென்றால் இன்றைய நிலவு நெடுவெண்ணிலவு.

எங்கள் கலவிக்கும் காதலுக்கும் துணையாக நிற்கும் வெண்ணிலவு,
காட்டு மிருகங்களிடம் அவரைக் காட்டிக் கொடுக்கும் வேலையையும் செய்துவிடுமோ என்று அச்சமாகவும் இருக்கிறது.
அப்படி நீ செய்தால் நெடுவெண்ணிலவே!
நீ நல்லவள் அல்லள் எனத் தூற்றுவேன்.
ஆமாம். என் தூற்றுதலிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால்,
 புலியிடமோ, அதன் குட்டியிடமோ எங்களைக் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்யாது இரவு முழுவதும் குளிர்வெண்ணிலவாய் இருந்துவிட்டுப் போ.

[நிலாவிடம் கறாராகப்  பேசிய இந்தப் பெண் தன் பெயரை எழுதி வைக்காமல் விட்டு விட்டாள். அதனால் அவள் நிலவுக்குச் சூட்டிய ‘ நெடுவெண்ணிலவு’ என்ற பட்டப் பெயரையே அவளின் பெயராக ஆக்கிவிட்டார்கள் அதன் பதிப்பாசிரியர்கள்]


கருங் கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை-நெடு வெண்ணிலவே!


குறுந்தொகை 47. /நெடு வெண்ணிலவினார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சம்ஸ்க்ருதம் : செவ்வியல் மொழியாகவும் ஆதிக்கமொழியாகவும்

தங்கலான்: விடுதலை அரசியலின் கருவி

புள்ளிவிவர ஆய்வுகளின் தேவை.