சர்கார்: கலைத்துவம் கலைக்கும் அலை


பத்துப்பத்து நாட்கள் இடைவெளியில் புதுவரவுச் சினிமாக்களைப் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள நேர்ந்துள்ளது. நேர்ந்துள்ளது என்பதைவிட நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும். தானாக உருவாகவில்லை; தமிழ்ச் சினிமாவின் பரப்பு வெவ்வேறு சங்கங்களின் வழியாகத் தன்னை வடிவமைத்துக் கொள்ளத் தொடங்கியிருப்பதின் பின்னணியில் இந்த நெருக்கடி உருவாகியிருக்கிறது. எந்தவொரு சினிமாவையும் ‘பார்க்க வேண்டிய சினிமா’ என்ற எண்ணத்தை உருவாக்கிக்கொள்வதன் பின்னணியில் பல காரணிகள் இருக்கின்றன. அக்காரணிகள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கின்றன.
உச்சநடிகரின் விசிறிகள்

உச்சநிலை நடிகரின் விசிறியாக இருக்கும் ஒருவருக்கு அவரின் ஒவ்வொரு படத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்க்கவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. இதற்கு முன்பு பார்த்த சினிமாவை விடவும் கூடுதலான தடவை பார்க்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது. அப்படிப் பார்க்கத் தூண்டும் காட்சிகள் புதிய படத்தில் இருக்கவேண்டும் என்ற வேண்டுதலும் இருக்கிறது. விருப்பம், ஆசை, வேண்டுதல் எனத் தொடரும் நடிகரின் விசிறி, சினிமாவிற்குச் சூட்டப்படும் பெயரிலிருந்தே உற்சாகம் கொள்கிறார். அந்தப் பெயரைத் தனது வேண்டுதலுக்குரிய நடிகர் எவ்வாறு உச்சரிக்கிறார் என்பதைக் காணும் ஆவலோடு முதல் நாள் முதற்காட்சிக்குத் தயாராகிறார். அவ்வாறே தானும் உச்சரித்து, நடித்துப் பார்க்க நினைக்கிறார். சர்காரின் வரவும் ரசிகர்களின் ஈடுபாடும் அதிலிருந்து விலகியதில்லை. சினிமா தயாராகும் நிலையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில், அந்தப் படம் வரும்போது பார்க்கவேண்டும் என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது என்பதுதான் கடந்தகால அனுபவம். ஆனால் அண்மைக்காலத்தில் முகநூலில் எழுதப்படும் முதற்காட்சி வர்ணனைகள் ஒரு சினிமாவைப் பார்க்கும்படி தூண்டுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. சர்கார் படம் வெளியானதும் உருவான அரசியல் சர்ச்சைகளின் பின்னணியில் ஏ.ஆர். முருகதாஸ் உருவாக்கிய காட்சிகளும், காட்சிகளில் இடம்பெற்ற வசனங்களும் காரணங்களாக இருந்தன என்பதைப் பார்த்தவர்களின் கூற்றுகள் உறுதிசெய்தன. இத்தகைய வசனங்களுக்குப் பொறுப்பானவராக எழுத்தாளர் ஜெயமோகனே இருக்கக் கூடும் என்பதால் சர்காரையும் பார்க்க நேர்ந்தது.


சர்கார்: சொல்லாடலின் அரசியல்

அரசாங்கம், அரசு என்ற சொல்லாட்சிகள்தான் தமிழர்கள் பயன்படுத்த வேண்டிய சொல்லாட்சி என நிலைநிறுத்தப் பெற்றுள்ளது. அந்நிலை நிறுத்தல் வரலாற்றில் தமிழ்நாட்டிலிருந்து விரட்டப்பெற்ற ஒரு சொல் சர்கார். இந்தி ஒழிக( அதன்மூலமான சம்ஸ்க்ருதமும்) எனப் பரப்புரைசெய்து விரட்டப்பட்ட – ஒரு சொல்லாட்சியைத் திரும்பவும் நிலைநிறுத்தும் நோக்கத்தோடு வைக்கப்பட்ட பெயர் ‘சர்கார்’. அந்த சொல்லை நாயகன் சொல்லப்போகும் காட்சியை முன்னோட்டமாக்கித் தந்த இயக்குநருக்கு என்ன நோக்கம் என்ற கேள்வியோடு அந்தப் படத்தைப் பார்க்கும் ஆசை எனக்குள் உருவானது. இந்தி எதிர்ப்பு, சம்ஸ்க்ருத எதிர்ப்பு என்ற நிலைபாட்டில் உருவான திராவிட இயக்க அரசுகளை நீக்கிவிட்டுத் திரும்பவும் இவ்விரு மொழிகளையும் ஆதரிக்கப்போகும் ‘சர்கார்’ ஒன்றை உருவாக்கும் நோக்கம் இப்படத்தோடு தொடர்புடை தயாரிப்பு நிறுவனம் (சன் பிக்சர்ஸ்), இயக்குநர் (ஏ.ஆர். முருகதாஸ்),நடிகர்(விஜய்) ஆகியவர்களுக்கு உண்டு? என்ற கேள்விக்கு உடனடியாகப் பதில் கொடுக்க, தக்க சான்றுகள் எதுவும் இல்லை.

படத்தின் நாயக நடிகர் விஜய்க்கு முதல் அமைச்சராகும் ஆசை இருக்கிறது என்பதைவிட அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்குத் தன் மகனை முதல்வர் ஆக்கிப் பார்ப்பதற்கு ஆசையிருக்கிறது என்பது வெளிப்படை. ஆனால் அவர் உருவாக்க நினைக்கும் அரசு, இப்போதுள்ள ‘அரசு’க்குப் பதிலாக “சர்கார்” ஆக இருக்கும் என்ற குறிப்புகள் எதுவும் இதுவரை வெளிப்படவில்லை. படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் ‘சர்கார்வகை’ப்பட்ட சினிமாவை இப்போதுதான் இயக்கும் புதிய இயக்குநர் அல்ல. விஜயகாந்தை நடிக்க வைத்து ‘ரமணா’வை இயக்கியதிலிருந்து இவ்வகைச் சூத்திரத்தைத் தனது வெற்றிச் சூத்திரமாக்கிக் கொண்டவர். படத்தைத் தயாரித்துள்ள சன் பிக்சர்ஸுக்கு ‘சர்கார்’ வேண்டும் ‘அரசு’ வேண்டாம் என்ற நிலைபாடு இருக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வி.

 தமிழின் பெயரால் அரசை உருவாக்கி சன் குழுமத்தைத் தமிழ்த் தேசிய முதலாளித்துவக் குழுமங்களில் முதன்மையான ஒன்றாக்கிய திராவிட இயக்க அரசு வேண்டாம்; இந்தியத் தனத்தோடு கூடிய சர்கார் தான் வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று இப்போது உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் பணம் தான் எல்லாம் என நம்புபவர்கள் அந்நிறுவனத்தின் முதலாளிகள். அவர்களை வளர்த்தெடுத்த தமிழ்மொழி, அம்மொழி பேசுபவர்களின் தனித்த சிந்தனை, பண்பாட்டுத் தொகுதிகள், அவற்றில் ஏற்பன ஏற்றுத் தள்ளுவன தள்ளும் நவீனத்துவக் கொள்கை, ஏற்பு போன்ற எல்லாம் பணம் சேர்ப்பதற்குப் பயன்படாது என்றால் கைவிட்டுவிட்டு நகர்ந்துவிடலாம் என்பதைச் செயல்மூலம் – செயல்பாடுகளின் வழி காட்டிக்கொண்டிருக்கும் அந்நிறுவனம் ‘சர்கார்’ என்ற வடமொழிச் சொல்லாட்சியைக் கொண்ட அரசை விரும்பினாலும் ஆச்சரியமில்லை. இந்த மூன்று பேரும்- நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் கலாநிதி மாறன்- ஆகிய மூவரும் ‘சர்கார்’ தான் வேண்டும் என்ற விருப்பத்தை நேரடியாகக் காட்டிக்கொள்ளாதவர்கள். ஆனால் வசனம் எழுதிய ஜெயமோகன் நேரடியாக – வெளிப்படையாக இந்தியத் தன்மைகொண்ட ‘சர்கார்’ என்ற சொல்லாடலை – முழு அர்த்தத்தோடு தேவை எனச் சொல்பவர். அதே நேரத்தில் அந்தச் சொல்லின் தமிழ் வயச்சொல்லான சர்க்காருக்காகவும் வாதாடுபவர் என்பதும் உண்மை. இந்தியத்தனத்திற்குள் தமிழ்த்தனம் பேணப்படவேண்டும் என்பது அவரது நிலைபாடு என்பதை அவரது எழுத்துகளின் வழி அறிய முடியும்.

திரைப்பட வெளியீடு அல்லது திரையிடல் சார்ந்து உருவாகியுள்ள நெருக்கடி முழுமையும் வணிகம் சார்ந்த நெருக்கடி. சினிமாவின் உருவாக்கம், கருத்தியல் மற்றும் கலையியல் சார்ந்த முன்னெடுப்புகள், சினிமாவில் பங்காற்றும் படைப்பாக்கக் குழிவினர், தொழில் நுட்பத்துறையினர், உடல் உழைப்புத் தொழிலாளர் ஊதியப் பிரச்சினை போன்றவற்றிற்காக வரைமுறைகளை உருவாக்கிக் கொள்ளாமல், சினிமாவைப் பார்வையாளர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் ‘வெளியீடுகள்/ திரையிடல்கள்’ என்ற அளவில் ஒருவித வரைமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதன்மூலம் வாரந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் படங்களை வெளியிடும் ஒழுங்கைக் கொண்டு வந்திருக்கிறது. இதன் வழியாகத் திரையரங்குகளுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒருவித நெருக்கடிகள் உருவாகியிருக்கின்றன. இவ்வகையான நெருக்கடிகள், வரன்முறைகளை உருவாக்கிச் சந்தைப்படுத்தும் எல்லாவகையான வணிகங்களிலும் இருக்கும் நெருக்கடிதான். இந்த நெருக்கடி மூலம் சினிமா தனது கலைத்துவக் கூறுகளைத் துறந்து வணிகநிலையை நோக்கி இன்னொரு பாய்ச்சலைச் செய்கிறது என்றே புரிந்து கொள்ள வேண்டும். நான் அப்படியே புரிந்து கொள்கிறேன். அது குறித்துத் தனியாக விவாதிக்கலாம். இப்போது அண்மையில் பார்த்த சினிமாக்களின் கலைத்துவத்தைக் கலைக்கும் சர்காரின் வருகை குறித்துப் பேசலாம்.


கலைத்துவத்தேடலின் வெளிப்பாடுகள்

அடுத்தடுத்துப் பார்த்த ஐந்து படங்களில் கடைசியாகப் பார்த்த சினிமா சர்கார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த அந்தப் படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். சர்காருக்கு முன்பு பார்த்த சினிமாவின் பெயர் இயக்குநர் வெற்றிமாறனின் வடசென்னை. வடசென்னைக்கு முன்னால் பார்த்த படம் 96. ப்ரவீன்குமார் என்ற புதியவரின் இயக்கத்தில் த்ரிஷா -விஜய்சேதுபதி நடித்த படம். அதற்கு முன்பு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வந்த பரியேறும் பெருமாள். அதிகமும் பிரபலமாக நடிக, நடிகையர்கள் நடித்த படம். இந்தத் தொடர்ச்சியின் முதல் புள்ளியான மேற்குத்தொடர்ச்சி மலையும் பிரபலமாகாத புதுமுகங்கள் நடித்த படமே.

சர்கார் அல்லாத - மேற்குத்தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், 96, வடசென்னை ஆகிய- நான்கும் வெவ்வேறு பார்வையோடு வெவ்வேறு வகைப்பாட்டுத் தன்மையோடு வெளிப்பட்ட சினிமாக்கள். இந்நான்குக்கும் தமிழ்ச் சினிமாவில் முன்மாதிரிகளே இல்லையென்று சொல்ல முடியாவிட்டாலும் முழுமையான போலச்செய்தல் படங்கள் அல்ல. கலைத்தன்மையை உருவாக்க நினைத்துக் குறிப்பான வெளி அல்லது குறிப்பான காலம் என்பதைக் கட்டமத்துக்கொண்டு நிகழ்வுகளின் சூழலை விவாதிக்கவும், பாத்திரங்களின் உணர்வுகளையும் மன ப்போராட்டங்களையும் உருவாக்கிக் காட்டவும் முயன்ற படங்கள் அவை. தனித்துவமான உருவாக்க முறைமைகள், குறிப்பான சூழலில் வெளிப்படக்கூடிய உணர்ச்சிக் கோர்வைத் தொகுதிகளின் ஓர்மைகள், அவ்வோர்மைகளின் புறநிலைப் பொருத்தங்கள் ஆகியனவெல்லாம் சேர்ந்து அந்நான்கு படங்களுக்கான இலக்குப் பார்வையாளர்களையும், அவர்களிடம் உருவாக்க நினைத்த தாக்கத்தையும் முதன்மையாக முன்வைத்துள்ளன. அப்படங்கள் ஒவ்வொன்றும் முன்வைத்த உலகம் குறித்த – வாழ்க்கை குறித்த -பார்வை ஏதோ ஒருவிதத்தில் புறநிலையில் இருக்கும் சமூக நடப்போடு இணைந்து நிற்பன; அதனால் நிகழ்காலம் மீது விமரிசனங்களை எழுப்பவல்லன. ஆனால் சர்கார் அப்படியான ஒன்றாக இல்லாமல் நடப்பு சமூகத்தை அப்படியே தொடரும் எண்ணங்களுக்குத் துணைபோகும் தன்மையோடு இருக்கின்றது.


சர்கார் என்னும் சகலகலா வல்லவன்

மையக்கதாபாத்திரம் பேசும் வசனங்களின் வழித் தீவிரமான அரசியல் விமரிசனத்தையும் மாற்று அரசியலை உருவாக்கப்போகும் தலைவர் ஒருவரின் வருகையை முன்னறிவிக்கும் படமாகவும் பேசப்பட்ட சர்கார் படம், இருப்பைத் தக்கவைக்கும் படம் எனச் சொல்வது விதண்டாவாதமாகத் தோன்றலாம். ஆனால் அதன் உருவாக்க முறைமையும், விவாதப்பொருளும் இருப்பை நீட்டிக்கும் எண்ணம் கொண்டவை என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். அதில் பின்பற்றப்பட்டுள்ள பார்வையாளர் கோட்பாட்டு உத்தி ஒன்று இதனைச் செய்கிறது.

தமிழ்ச் சினிமாவிற்குள் இயங்கும் முதல் வரிசை உச்ச நடிகர்களுள் ஒருவரான விஜய் நடித்து வெளிவந்துள்ள சர்கார் வெகுமக்கள் ரசனைக்கான படம். அவ்வகைப்படங்கள் ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களால் முண்டியடித்துப் பார்க்கப்படும் என்பது தமிழ்/ இந்திய சினிமாக்களின் இயங்குநிலை. சர்கார் படத்தையும் விஜயின் ரசிகர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பார்க்கவே செய்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்தது போலவே அவரது முந்தைய படங்களான மெர்சலை, துப்பாக்கியை, கத்தியை, கில்லியைக் கடந்த 10 ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவரது படங்களைப் பார்ப்பதுபோல ரஜினிகாந்தின் படங்களைப் பார்க்கவும், அஜித்குமாரின் படங்களைப் பார்க்கவும், கமல்ஹாசன் படங்களைப் பார்க்கவும் தனித்தனியாக விசிறிகள் கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கவே செய்கின்றன. இந்நால்வரைத் தவிர தனுஷுக்கும் சூர்யாவிற்கும் விக்ரமிற்கும் கூட்டங்கள் இருக்கவே செய்கின்றன. இவ்வகையான கூட்டத்திற்கான கலவையைக் கொண்டு இந்த நடிகர்களை வைத்து இயக்கிட இயக்குநர்களும் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பதும் தமிழ்ச் சினிமாவின் வணிகப் பரப்பிற்குள்ளும் தயாரிப்புப் பரப்பிற்குள்ளும் படைப்பாக்க நடைமுறைகளுக்குள்ளும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதன் நீண்ட கால வரலாற்றின் முழு இயக்கமும் அதுதான். ஆனால் சில நேரங்களில் அதற்குள் நுழையும் சிலரால் இப்போக்குக்கு எதிரான பயணங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அம்முன்னெடுப்புகளைச் செய்தவர்கள் பெரும்பாலும் இயக்குநர்களாகவே இருந்தார்கள்; இருக்கிறார்கள். சகலகலா வல்லவன் என்னும் வணிகத் திருப்புமுனைப் படத்தின் வருகைக்கு முன்பு மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரையா, தொடக்ககால பாரதிராஜா போன்றவர்களின் முயற்சிகள் தமிழில் ஒரு புதிய அலையாக – பெரும் லாப நோக்கத்தைக் கொண்ட வெகுமக்கள் திரளின் ரசனையைத் திசைதிருப்பிய சினிமாக்களைத் தந்ததை இப்போது நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதுபோன்றதொரு அலையை சர்கார் வருவதற்கு முன்பு வந்த சில படங்கள் உருவாக்கியுள்ளன என்பதையும் இணைத்துப் பார்க்கவேண்டும்.

உச்சநிலையை நோக்கி நகரும் நடிகர்கள், அவர்களை வைத்து வணிக வெற்றியை நோக்கிப் படம் எடுக்கும் இந்தக் கூட்டத்தினரால், பரியேறும் பெருமாள் போன்ற இந்திய சமூக அமைப்பின் சரித்திரத்தின் ஆறாத காயமாகவும் சிலநேரங்களில் வடுவாகவும் தோன்றும் சாதீய விமரிசனப் படத்தைத் தரமுடியாது. குறிப்பான நிலவெளியில் குறிப்பிட்ட தொழில் செய்யும் – மீனவர்களின் – உள்முரணையும் புறநெருக்கடிகளையும் விவாதிக்கும் வடசென்னை போன்ற நிகழ்காலச் சிக்கலைப் பேசும் ஒரு சினிமாவை நினைத்துப் பார்க்கமுடியாது. பள்ளிப்பருவக் காதலை – அதன் நினைவலைகளைச் சுமக்கும் தனிமனிதர்களின் துயரார்ந்த மனப் பதிவுகளின் சுவடுகளை வரிசைப்படுத்தித் தரமான வெளிப்பாடாகத் தரமுடியாது. நிகழ்காலப் பொருளியல் முறையினால் சுரண்டப்படும் ஓர் அப்பாவியின் சிதைக்கப்படும் கனவை -அவனது வாழ்நிலையின் சூழலோடு சேர்த்து விவாதிக்கும் மேற்குத்தொடர்ச்சி மலை போன்ற ஒரு சினிமாவைக் கற்பனை செய்து பார்க்கவும் தயாராக இருக்க மாட்டார்கள் வணிக சினிமாவின் இயக்குநர்களும் உச்சநடிகர்களும்.

ஏ.ஆர். முருகதாஸ் + விஜய் கூட்டணியில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட படங்களின் இன்னொரு நகலே சர்கார் என்றாலும் இந்தப் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் இருப்பும் வசனங்களும் கூடுதலான கவனத்தைப் பெற்றுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அவரது இருப்பினால் சில வித்தியாசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முதல் வித்தியாசம் நிகழ்கால அரசியலோடு நேரடித் தொடர்புடைய காட்சிகளையும் வசனங்களையும் பாத்திரங்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முந்திய மெர்சல், கத்தி, துப்பாக்கி படங்களில் சமூகத்தின் ஏதோ ஒரு தரப்பு மனிதன் தனது வாழ்க்கைச் சூழலில் பாதிக்கப்படும்போது கிளம்பும் ஆத்திரத்தில் அல்லது மகிழ்ச்சியில் சொல்லும் கோப வசனமாகவோ, நகைச்சுவைத் துணுக்காகவோ அரசியல் வசனங்கள் இடம்பெற்றன. ஆனால் இப்படத்தின் அரசியல் வசனங்கள் அரசியல் பேசவேண்டிய பாத்திரங்களின் வழி முழுப் புரிதலுடன் பேசவைக்கப்பட்டுள்ளன.

இந்திய/ தமிழகத் தேர்தல் அரசியலில் வாக்களிக்கும் முறையில் இருக்கும் - வாக்காளர்களின் இடத்தைத் திருடிவிடும் ஒற்றைக் கூறொன்றை- கள்ள வோட்டுப் போடுதலைக் கதைசொல்வதற்குரிய முன்வைப்பாக எடுத்துக் கொண்டு மொத்தப் படமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் இதுவெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வியை எழுப்பிப் பதிலைத் தேடவிடாமல் விறுவிறுப்பான காட்சிகளைச் சுட்டுக்களின் வழியாகவும், நிரல்படுத்துதலின் வழியாகவும் புனைவுக்காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வேகமும் விறுவிறுப்பும் உண்டாகக் காரணமாக இருப்பது படத்தின் மிகக்குறைவான – நாட்கணக்கிலான நிகழ்வுக்காலம் என்றுகூடச் சொல்லலாம்.

மாறிமாறித் தமிழகத்தின் ஆளுங்கட்சிகளாக இருக்கும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., இரண்டிலிருந்தும் நபர்களின் செயல்பாடுகள் மற்றும் உருவ அடையாளங்களைப் பிசைந்து உருவாக்கப்பட்டுள்ள பாத்திரங்களை எதிரிணையாக வைத்துக்கொண்டு நாயகன் மோதிச் சிதைக்கிறான். அந்தச் சிதைவுக்குப் பின் அவன் உருவாக்க நினைக்கும் சர்கார் இப்போதுள்ள தேர்தல் அரசியல் வழியில் நினைவளவில்கூடச் சாத்தியமற்ற ஒன்று. என் ஜி ஓ. அரசியல் என்று வரையறை செய்யப்படும் அதன் இயங்கியல் தன்மையிலேயும் அளவிலேயும் நிகழ்கால அரசுகளுக்கெதிரானது. பேரமைப்புக்கெதிராகச் செயல்படும் நபர்களைக் கொண்டு உருவாக்கப்படும் சர்கார் என்பதைப்படம் முன்வைக்கிறது. இந்தக் கருத்தியல் இயக்குநர் முருகதாஸின் சிந்தனையில் உருவானதாக இருக்கலாம். வசனகர்த்தா ஜெயமோகனுக்கு உடன்பாடானது எனச் சொல்ல முடியாது. ஆனால் அவருக்கு உடன்பாடான வேறு சில காட்சிகளும், அவரது வசனங்களைப் பேசும் விதமான பாத்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அவரும் இணைந்தே உருவாக்கியிருக்கிறார் என்றும் சொல்லலாம். இந்த இடத்தில் முன்னர் குறிப்பிட்ட விலக்கல் உத்தி செயல்பட்டுள்ள விதத்தை விலக்கிவிடலாம்.

உருவாக்கிச் சிதைக்கும் உத்தி

கனடாவிலிருந்து வாக்களிப்பதற்காகத் திருவல்லிக்கேணி பள்ளிக்கூடத்திற்கு நேரடியாக வரும் சுந்தர்ராமசாமியின் கார்பரேட் கிரிமினல்தனமான புத்திசாலித்தனத்தைச் சொல்ல அவரோடு நேரடியான தொடர்பற்றவர்கள் வந்துபோகும் பாத்திரங்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அவரது பிடிவாதம், காதல் ஈடுபாடு போன்றவற்றைச் சொல்ல அவரது குடும்பத்தினரின் கூற்றுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவரது படிப்பு, அறிவு, ஏழ்மையான பழைய வாழ்க்கை மற்றும் முன்னேற்றம் போன்றன உரையாடல்களாலும் தனிமொழிப் பேச்சுகளாலும் நிகழ்த்தப்படுகின்றன. தக்காளிக்குப் பின்னால் இருக்கும் கிரிமினல் கதையை உரையாடலாக அவரே சொல்கிறார். ஆனால் மீனவக்குடும்பத்தில் பிறந்தது தந்தையை இழந்து, குடும்பத்தினரின் சுமையைச் சுமந்து படித்து முன்னேறிய பழைய கதையை உணர்ச்சிச் செறிவுமிக்க ஓர் தனிமொழியாகப் பெருங்கூட்டத்தின் முன் நிகழ்த்துகிறார். தனிமொழியின் வழியாக உருவாக்கப்படும் துயரமும் வலியும் சரி, பெருமிதக் கொந்தளிப்பும்சரி முன்னால் உள்ள கூட்டத்தைச் செயல்படத்தூண்டும் இயல்புடையன. உலக அளவில் சிறந்த பேச்சாளர்களாக அறியப்படும் தனிநபர்களும் அரசியல் ஆளுமைகளும் இவ்வுத்தியைக் கவனமாகப் பயன்படுத்துவர். இந்தப் படத்திலும் ஆங்காங்கே கண்களில் கண்ணீரை வரவழைக்கும் தனிமொழிகள் சொந்த வாழ்க்கையின் தனிமொழியாக இல்லாமல் சமூக நடப்பின் வழியாகப் பாதிப்புக்குள்ளான ஒரு கூட்டத்தின் உறுப்பினன் ஒருவனின் பாதிப்பாக நிகழ்த்தப்படுகிறது.

இந்தியப் பெருங்கடலில் அந்நியப்படைகளால் கொல்லப்படும் மீனவக்குடும்ப உறுப்பினனாக- நாயகனாக- நிறுத்திக் கண்ணீரை வரவழைக்கும் காட்சிக்கு இணையாக இன்னொரு காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டியைக் கட்ட முடியாமல் குடும்பத்தோடு தீவைத்துக் கொழுத்திக் கொண்ட குடும்பம் குறித்த நடப்பு நிகழ்வு சித்திரிக்கப்படுகிறது. அந்நிகழ்வு கூட்டத்தினரிடம் கண்ணீர் வரவழைப்பதாக அமைக்கப்படாமல் நாயகனின் கண்களின் வழியும் கண்ணீர் வழியாக அவனது இரக்கக்குணம் முன்வைக்கப்படுகிறது. இவ்வகைக் காட்சிகள் எல்லாம் படத்திற்குள் இருக்கும் கூட்டத்தினரிடம் உண்டாக்கும் உணர்வுக்கு இணையாகச் சினிமாவைப் பார்க்கும் பார்வையாளத்திரளை படத்தோடு ஒன்றிணையச் செய்யும் நோக்கம் கொண்டன. காட்சியில் உருவாக்கப்படும் சோகத்தையும் துயரத்தையும் பார்வையாளத்திரளுக்குக் கடத்திச் செயல்படத்தூண்டும் என்பதையும் மறுக்கமுடியாது. ஆனால் ஏ.ஆர். முருகதாஸ் இவ்வுணர்வுக் கொந்தளிப்புகளை உருவாக்கி உடனடியாக உடைத்து எதிர்நிலைக்குள் தள்ளி விடுகிறார். உணர்ச்சிமயமான ஒரு சொற்பொழிவுக்குப் பின்னால் அர்த்தமில்லாத சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாடலும் அதற்கான ஆட்டமும் உருவாக்கப்பட்ட துயர மனநிலையிலிருந்து விலக்கிக் களிப்பு மனநிலைக்குள் தள்ளுகிறது.


ஆளுங்கட்சி நடத்தும் சதியாலோசனைகளையும் அதிகார மீறல்களையும் விலக்கிப் பேசிவிட்டுப் பெருங்கூட்டமாக மோட்டார்ச் சைக்கிள்களில் செல்லும் இளைஞர்களை நிழலாக நிறுத்திவிட்டுத் தான் மட்டும் மேடையேறிக் கலாய்த்துப் பேசும் காட்சிகளில் வெளிப்படும் வசனங்களில் வெளிப்படும் எள்ளல் தொனி பார்வையாளர்களைக் காட்சியிலிருந்து விலக்கிவைத்து நடிகர் விஜயின் உடல் மொழியை ரசிக்கும் ரசிக மனநிலைக்குள் தள்ளிவிடுகிறது. இத்தகைய காட்சிகள் படம் முழுக்க நிரல்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் பார்வையாளர்களைப் படத்தோடு இணைத்துவிட்டு உடனடியாக விலக்கியும் விடுகின்றன. இந்த உத்தியை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் திட்டமிட்டே செய்கிறார். அதன் மூலம் தனது சினிமா கொண்டாட்டமும் களியாட்டமும் – ஆடலும் பாடலும் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகளும் தூக்கலாகக் கலந்து தரும் வெகுமக்கள் சினிமா ரசனைக்குள் இருக்கும் ஒன்று என்பதாகவே தரவிரும்புகிறார். படத்தின் ஆங்காங்கே உருவாக்கப்படும் துன்பியலின் மிதப்புகள் உடைந்துபோகும் குமிழிகளாக மட்டுமே இருக்கவேண்டும் என்பது வெகுமக்கள் சினிமா சூத்திரங்களில் ஒன்று. அதனையும் சரியாகவே செய்திருக்கிறார் முருகதாஸ். இதன் மூலம் புறநிலை அரசியல் மீதோ, சமூக நடப்புகளின் மீதோ படம் எழுப்பும் விமரிசனங்களை ஏற்றுப் பார்வையாளர்கள் செயல்பட வேண்டும் என்பதற்குப் பதிலாகப் படத்தைப் பார்த்துவிட்டுக் களிப்புடன் போனால் போதும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. இருப்பைப் பேசுவதென்பது மாற்றுவதற்கல்ல; பொழுதுபோக்குகளில் ஒன்றாக – விற்பனைச் சரக்குகளில் ஒன்றாக மாற்றுவது மட்டுமே அவரது நோக்கம். இதற்கு ஜெயமோகனின் புத்திசாலித்தனமான வசனங்களும் பயன்பட்டுள்ளன.

பொதுவாகத் தமிழ்ச் சினிமாவை வணிகப்பண்டமாக மட்டுமே பார்ப்பவர்கள் முழுப் படத்தின் வடிவத்தையும் எழுதிமுடித்துக்கொண்டு படப்பிடிப்பைத் தொடங்குவதில்லை. முழுவடிவத்தை எழுதி முடிப்பவர்கள்கூட அதனை உதவி இயக்குநர்களிடமோ, நடிக்கும் நடிகர்களிடமோ காண்பித்து விவாதிப்பதில்லை. அனைவரும் பங்கேற்று உருவாக்கும் கூட்டு உருவாக்கத்தில் நம்பிக்கை கிடையாது. இயக்குநரின் முழுச்சொத்தாக மட்டுமே படத்தின் ஆக்கம் நினைக்கப்படுகிறது. சில இயக்குநர்கள் படத்திற்குத் தேவையான காட்சிகளைத் தாண்டியும் எடுத்துக் கொண்டுவந்து படக்கோர்பு (எடிட்டிங்) நிலையில் தங்கள் திரைக்கதையை உருவாக்கவும் செய்கிறார்கள். இதற்குப் பின்னால் இயக்குநர்களின் வேலைபாணி இருப்பதோடு “ரகசியம் காத்தல்” என்ற கூறும் உள்ளது. படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர். முருகதாஸ் உருவாக்கும் காட்சிகளை அப்படத்தில் இணைந்து வேலை செய்யும் உதவி இயக்குநருக்கோ, நடிகர்களுக்கோ சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்பதை அப்படத்தில் பணியாற்றிய பலரது நேர்காணலில் (பழ.கருப்பையாவின் தொலைக்காட்சி நேர்காணல்) காணமுடிந்தது. படம் எழுப்பும் உணர்வுகள் இப்படிச் சிதைக்கப்படும்; திசைதிருப்பப்படும் என்பதைப் படத்திற்கு வசனம் எழுதும் எழுத்தாளர்களுக்கு இயக்குநர்கள் சொல்வதும் இல்லை. அது தெரிந்திருந்தால் ஒருவேளை அவர்கள் இத்தகைய படங்களில் வேலை செய்யாமல் விலகிக்கொள்ளவும் கூடும். ஏனென்றால் இதுவரை வணிக சினிமாவிற்கு வசனம் எழுதியுள்ள நவீன எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் போன்றவர்கள் அவர்களின் புனைவெழுத்துகளில் இத்தகைய உத்திகளையும் எழுத்து முறைகளையும் மேற்கொண்டவர்கள் அல்ல. ஆனால் எழுத்தாளர் சுஜாதாவின் புனைவெழுத்துகள் உடன்பட்டுப் போகும் புனைவெழுத்துப் பாணி. அவர் அறிந்தே தமிழ்ச் சினிமாவின் வணிகத்திற்கு உதவினார். மற்றவர்கள் எழுத்திற்கு ஒரு முகத்தையும் சினிமாவிற்கு வேறொரு முகத்தையும் தயாரித்து வைத்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்