நினைவுகள்: பேரா.க.ப.அறவாணன்




மரணங்களை நிறுத்துவது மனிதர்கள் கையில் இல்லை. முதுமைக்குப் பின்னான மரணங்களுக்கு வருந்தவேண்டியதும் இல்லை. மரணத்திற்குப் பின்னானதொரு வாழ்க்கை இருப்பதாக நம்புபவர்கள் பிரார்த்தனை செய்து அவ்வாழ்க்கைகுள் அனுப்பி வைக்க முயல்கின்றனர். தெரிந்தவர்களின் மரணங்களை- அக வாழ்க்கையிலும் புறநிலைப் பணிகளிலும் தொடர்புடையவர்களின் மரணச்செய்திகளை அடுத்து அவர்களை நினைத்துக் கொள்வது அனைவரும் செய்வது. இரங்கி நிற்கும் மனம் நினைவுகளில் வழியாக அவர்களது சந்திப்புகளையும் பேசிய பேச்சுகளையும் நினைத்துப் பின்னோக்கிப் பயணம் செய்கிறது. அவர்களது வாழ்க்கைப் பயணத்திலிருந்து உடன்பாட்டு நிலையிலோ எதிர்மறை நிலையிலோ ஏதாவது கற்றுக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் அந்த நாளைப் பயன்படுத்திக் கொள்கிறது

இப்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கால் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக அதன் முன்னைத் துணைவேந்தர்களை அழைக்க விரும்பினார் இப்போதைய துணைவேந்தர். பல்கலைக்கழகம் தேசிய தரமதிப்பீட்டுப் புள்ளியில் இரண்டு அடுக்குகளைத் தாண்டி ஏ என்ற நிலையை ஒட்டி சில மாதங்களுக்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு அது. முன்னைத் துணைவேந்தர்களை அழைத்துச் சிறப்புச் செய்வதும் இப்போதைய வளர்ச்சிநிலைகளைக் காட்டுவதுமான நிகழ்விற்கு அவரை அழைக்க எனக்குப் பணி ஒதுக்கப்பட்டது. அலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஒருவரும் எடுக்கவில்லை. அவரோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஒரு பேராசிரியரிடம் அதைச் சொன்னபோது பயணம் செய்யும் நிலையில் அவரது உடல்நிலை இல்லை என்பதைத் தெரிவித்தார். மூப்பின் வருகை நடமாட்டத்தைத் தடுத்துவிடுவதில் வெளிப்படுகிறது. அந்த நிகழ்விற்கு வந்திருந்தால் அந்த இரண்டு நாளும் அவருடன் இருந்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அந்த வாய்ப்பு ஏற்படவில்லை.

திருநெல்வேலி பல்கலைக்கழகத் தமிழியல் துறைக்கு நான் இணைப் பேராசிரியராக வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னரே பேரா. க.ப. அறவாணன் அங்கே துணைவேந்தராக வந்தார். அந்த மூன்றாண்டுகளில் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு. அதற்கு முன்பு பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் அவர் தமிழ்த்துறையின் தலைவராகவும் நான் விரிவுரையாளராகவும் இருந்தபோது அவ்வப்போதும் சந்திப்போம். சந்திக்கும் போதெல்லாம் நூல் எழுதுவதைப் பற்றி வலியுறுத்துவார். தொடர்ச்சியாக வாசிப்பதையும் எழுதுவதையும் விடாப்பிடியான செயலாகக் கடைப்பிடித்தவர். ஆண்டொன்றுக்குத் தவறாமல் ஒருநூலாவது வெளியிடும் பழக்கம் அவருக்கு உண்டு. அந்தப் பழக்கம் ஒரு பரம்பரைப் பழக்கம். அந்தப் பழக்கத்திற்கு முன்னோடியாக அவரது அவரது ஆசிரியர் ச.வே.சுப்பிர மணியன் இருந்திருக்கக்கூடும். அவரும் ஆண்டுக்குச் சில நூல்களைப் பதிப்பித்துக் கொண்டே இருப்பார். அரசின் நூல்கங்களில் அவர் பதிப்பிக்கும் நூல்களால் நிரப்பி வைத்தார். ஆண்டுதோறும் அவர் ஓய்வுக்குப் பின் வாழ்ந்த தமிழூரில் நூற்றுக்கணக்காரைத் திரட்டிக் கருத்தரங்கம் என்ற பெயரில் கூட்டம் கூட்டிக்கொண்டிருந்தார். ச.வே.சு.விடமிருந்த கற்றுக்கொண்ட பழக்கத்தை அவரது துறையாசிரியர்களிடமும் மாணாக்கர்களிடமும் ஏற்படுத்தி யிருக்கிறார். அறவாணனியம் என்னும் போக்கை ஏற்படுத்திவிட நினைத்து நூல்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். புதியதாக ஒரு தகவலோ,விளக்கும் பாங்கோ, விவாதமுறையோ கட்டுரைகளை ஆய்வுக்கட்டுரைகள் என்ற பெயரில் அவரவர்கள் தங்கள் விருப்பம்போலப் பதிப்பகங்கள் ஆரம்பித்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தனது நூலையும் தனது இல்லாள் தாயம்மாள் அறவாணன் அவர்கள் எழுதும் நூலையும் வெளியிடத் தமிழ்க்கோட்டம் என்ற பெயரில் அவர் பதிப்பகம் ஆரம்பித்ததை அப்படியே நகல் எடுப்பதின் விளைவு இது. அவர் ஆரம்பித்த ஆர் அமைப்பும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து இயங்கி அவரது ஆய்வு முறையியலை முன்னெடுப்பதாக நினைத்துத் தமிழியல் ஆய்வினை மலினப்படுத்துவதில் பங்கெடுக்கிறது.

அவரது வாழ்க்கையிலிருந்து நான் எடுத்துக்கொள்ள நினைத்தது நேரந்தவறாமையும் கடமையைச் செய்வதில் காட்டும் அக்கறையும். பல்கலைக்கழகக் கூட்டங்களில் போதுமான அளவு வந்தபின்பே மேடைக்குப் போகவேண்டியவர்கள் வருவார்கள். ஆனால் அவர் துணைவேந்தராக இருந்த காலங்களில் அழைப்பிதழில் இருக்கும் நேரத்திற்கு முன்னதாகவே வந்து முன்வரிசையில் அமர்ந்திருப்பார். நேரம் நெருங்கியதும் மேடையேறிவிடுவார். அதேபோல் அவரது அலுவலக நேரத்தில் பார்க்க வருபவர்களைக் காக்கவைக்கவும் மாட்டார். உள்ளே வந்தபின்பு வெட்டியாக உட்கார வைத்து அரட்டை அடிக்கவும் மாட்டார். தயவுதாட்சயமில்லாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது என்பார். வகுப்பில் பாடம் நடத்தும் வேலையை விட்டுவிட்டுத் துணைவேந்தர் அழைத்தாலும் உடனே வகுப்பை நிறுத்திவிட்டுப் போகமாட்டார். அதை மற்ற ஆசிரியர்களுக்கும் வலியுறுத்தியிருக்கிறார் இதற்கு இன்னொரு ஆசிரியர் வ.அய். சுப்பிரமணியம் முன்னோடி என்று சொல்லியிருக்கிறார். வ. அய். சு. மிகக் குறைவாக எழுதியதால் மதிக்கப்பெற்ற பேராசிரியர்.


பட்டப்படிப்புகளில் தமிழ் இலக்கியம் கற்ற எனக்கு திரு க.ப. அறவாணன் என்ற பெயர் எனது இருபதுகளிலேயே அறிமுகம். நவீன எழுத்துகளை விருப்பத்துடன் வாசிப்பவன் என்ற நிலையில் அவரது எழுத்துகளில் தூக்கலாக இருந்த தமிழ்ப் பழமை, தமிழ்ப்பற்று, தமிழ் உணர்வு போன்றன உடன்பாடற்ற நிலையை உருவாக்கியது. அதே நேரத்தில் சைனர்களின் தமிழிலக்கணக்கொடை, தமிழ்க் கவிதை உயிர் உள்ளம் உடல், கவிதை கிழக்கும் மேற்கும் போன்றன வாசிப்பு ஈர்ப்புகளைத் தந்திருந்தன. அத்தோடு தொப்பு அணிந்த தமிழ்ப்பேராசிரிய உருவமும் எப்போதும் கவனம் ஈர்க்கும் ஒன்றாக இருந்தது. அவரது பெயரும் தொப்பியும் எனது பள்ளிப்பருவ வாசிப்புக்கான பிரதிகளை உருவாக்கிய தமிழ்வாணனோடு ஒப்புமை கொண்டது என்பதும் இப்போது நினைவுக்கு வருகிறது.


பேரா. க.ப.அறவாணனின் மரணச்செய்தி கிடைத்தவுடன் அவரை முதன் முதலில் சந்தித்த ஈரோடு கல்லூரியின் வகுப்பறையும், அவரது தலைமையில் கட்டுரை வாசித்த அனைத்திந்திய தமிழாசிரியர் மன்ற ஆய்வுக் கருத்தரங்கமும் நினைவுக்கு வந்தது. முனைவர் பட்ட ஆய்வாளராகப் பதிவுசெய்து ஓராண்டுகூட (1983 மே மாதம்.) முடிந்திருக்காத நிலையில் நாயக்கர் காலச் சத்திரங்கள் பற்றியொரு கட்டுரையை அங்கு வாசித்தேன். கவி காளமேகத்தின் தனிப்பாடல்களை இலக்கிய ஆதாரமாகவும் கல்வெட்டுச் சான்றுகளில் கிடைக்கும் விளைச்சல் பங்கீடுகளைத் துணைமை ஆதாரமாகவும் கொண்டு எழுதப்பெற்ற கட்டுரையை அப்போது தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பெற்ற சத்துணவுத் திட்டத்தின் நடைமுறைகளோடு இணைத்துப் பேசிய கட்டுரையைப் பேராசிரியர் வெகுவாகப் பாராட்டினார். அரசுத்திட்டங்களை விமர்சிக்கும் எழுத்துகளைப் பேராசிரியர்கள் பொதுவாக விரும்பாத சூழலில் அதைப் பாராட்டியது என்னுள் அவரைப் பற்றிய பிம்பங்களை மாற்றியது. அந்தப் பாராட்டுக்குப் பின்னரும் அவரது ஆய்வுமுறைமையை நான் பின்பற்றியதில்லை. அவர் முன்வைத்த மானிடவியல், சமூகவியல் போன்ற புலங்களை உதிரிஉதிரியாகப் பார்க்கும் முறைமையைக் கற்றுத் தரும் முறைமையியல். ஒருவிதமான வலதுசாரிப் பார்வைக்கு இட்டுச் செல்லும் அம்முறையியலுக்கு மாற்றான இயங்கியல் பூர்வமான மானிடவியல் மற்றும் சமூகவியல் பார்வையை நான் கற்றிருந்தேன். அதுகுறித்து அவர் அறிவார்; என்னோடு விவாதித்து என்னை மாற்றும் நோக்கம் அவருக்கு இருந்ததில்லை.

அவர் வல்லுநராக இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக நேர்முகத் தேர்வில் என்னை முழுவதும் அறியும் விதமாக என்னோடு விரிவாகப் பேசினார். உள்ளேயே பாராட்டினார். நேர்காணலுக்குப் பின்னர் ஒருநாள் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தபோது நீங்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டியவர்; பரிந்துரைகள் காரணமாகத் தேர்வாகவில்லை என்று உண்மையைச் சொல்லிவிட்டார். பேராசிரியர் க.ப. அறவாணன் எனது பணிவாய்ப்புகளுக்குப் பரிந்துரை செய்தார் என்று சொல்வதைவிட மறைமுகமாக உதவியவர் என்பதைச் சொல்லியாக வேண்டும். புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத் துறையின் நேர்காணலை நடத்த வந்த பேராசிரியர்களோடு பேரா. வ.சுப. மாணிக்கம் மற்றும் பொன்.சௌரிராஜன் ஆகியோருடன் நடந்த முன் - உரையாடலில் என்னைப் பற்றி எதிர்மறையாகப் பேசாமல் உழைக்கக் கூடிய பையன் என்று சொன்ன சொற்களே என்னைத் தேர்வு செய்யும் குழுவினர் இரண்டாம் இடத்தில் வைக்க உதவியது பின்னர் தெரியவந்தது. முதலிடத்தில் இருந்த நண்பருக்கு அடிப்படைத் தகுதிகள் இல்லாததால் இரண்டாமிடத்தில் இருந்த எனக்கு அந்த வாய்ப்புக் கிட்டியது என்பது தனிக்கதை.

அதேபோல் தான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நேர்காணலிலும் மறைமுகமாக அவர் உதவினார் என்பது பின்னர் தெரிய வந்தது. நேர்காணலுக்கு முன்னர் அப்போதைய துணைவேந்தரிடம் ஒருவரைப் பரிந்துரை செய்ய நினைத்திருக்கிறார். செயல்பாடுகள், நேர்காணல் காட்டும் திறமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தேர்வு நடக்குமெனத் துணைவேந்தர் தெரிவித்த நிலையில் தனது பரிந்துரையை வலியுறுத்தாமல் எனது பெயரையே தெரிவுசெய்தார் எனவும் தகவல் பின்னர் கிடைத்தது. அந்தத் தெரிவில் காட்டிய உறுதி ஆச்சரியமானது.


நேர்காணல் அடிப்படையில் மூன்று பெயர்களைத் தரப்படுத்தி 1,2, 3 எனத் தரும்படி கேட்டபோது

1.அ.ராமசாமி
2. அ.ராமசாமி,
3. அ.ராமசாமி


என எழுதித் தந்துவிட்டுக் கிளம்பினார் எனத் தெரிந்துகொண்டபோது நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அதே நேரத்தில் அவர் நினைத்திருந்தால் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையிலேயே என்னை இருக்கச் செய்திருக்க முடியும் என்பதும் இப்போது நினைவுக்கு வருகிறது.

முயற்சி திருவினையாக்கும் என்னும் வள்ளுவர் குறளைக் கெட்டியாகப் பின்பற்றியவர். ஒன்றை அடைவதற்கான இலக்கில் சிறுதுரும்பும் துடுப்பாகும் என்பதில் அவருக்கு மாற்று இல்லை. ஏழ்மையும் வறுமையும் கொண்ட குடும்பமொன்றிலிருந்து தனது கல்வியும் முயற்சியுமே துணைவேந்தராகவும் பல நூல்களின் ஆசிரியராகவும் ஆக்கியது என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் செய்வதே தமிழ்த் தொண்டு என்பதால் தமிழுக்குத் தனியாகத் தனது பணிசார்ந்து எதுவும் செய்யவேண்டியதில்லை என்பது அவரது எண்ணமாக இருக்குமோ என்ற ஐயம் எனக்குத் தோன்றியதுமுண்டு.

அவரது மறைவையொட்டி இரங்கல் கூட்டத்தைப் பல்கலைக்கழகம் நேற்று (24-12-2018) நடத்தியபோது நான் அங்கு இல்லை. விடுமுறைக் காலம் என்பதால் வெளியூரில் இருந்தேன். தொலைபேசியில் இப்போதைய துணைவேந்தர் திரு. கி.பாஸ்கர் அவர்கள் அறவாணன் காலத்தில் பல்கலைக்கழகத்தில் என்னவெல்லாம் நடந்தது என்று கேட்டார். புதிதாக ஒன்றும் நடக்கவில்லை. வழக்கமாக நடக்கும் வேலைகள் மட்டுமே இயல்பாக நடந்தது என்று சொல்லிவிட்டு அவர் காலத்தில் தான் சமுதாயக்கல்லூரிகள் என்ற வடிவத்தைப் பல்கலைக் கழகம் அறிமுகம் செய்தது. பள்ளிக்கல்லூரியில் தேர்வு அடையாதவர்களுக்கும், மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாலும், பொருளாதாரக் காரணங்களாலும் பட்டப்படிப்பையோ, தொழில் படிப்பையோ தேட முடியாதவர்களுக்கு அந்த வடிவம் ஒரு தொழில் வாய்ப்பை உருவாக்கும் வடிவமாக இருந்தது என்பதைச் சொன்னேன். அத்தோடு தனது அன்புக்குப் பாத்திரமாக விளங்கிய பேராசிரியர் ஒருவருக்காகத் தகவல் தொழில் நுட்ப மையம் ஒன்றைத் தொடங்கிப் பல்கலைக்கழக வளாகத்தில் சுயநிதிப் படிப்பை அறிமுகம் செய்தவரும் அவர்தான் என்றேன். 

தமிழியல் துறைக்கு என்ன செய்தார்? என்று கேட்டார் துணைவேந்தர். “ஒன்றும் செய்யவில்லை; துறையை ஏழுபேர் கொண்ட முழுமையான துறையாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது விருப்பம் காட்டவில்லை. அதற்கு, ”நான் தமிழ்த்துறைப் பேராசிரியர், அதனால் தமிழ்த்துறைக்கு மட்டுமே செய்கிறேன் என்ற பெயர் உண்டாகிவிடும். என்னை வலியுறுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டார்” என்றும் சொன்னேன். இப்படிச் சொன்னதின் பின்னணியில் அவரது எண்ணப்படியான தமிழியல் ஆய்வுப்போக்கைத் தொடரும் ஆசிரியர்கள் ஒருவரும் துறையில் இல்லாமல் இருந்தது காரணம் என்று நான் சொல்லவில்லை. நானும் அப்போதைய துறைத்தலைவரும் அவரோடு பதவியேற்ற முனைவர் ஞா.ஸ்டீபனும் அவரது சிந்தனைப்போக்கில் உடன்பாடற்றவர்கள். அவர் காலத்தில் தமிழியல் துறையின் தலைவராகப் பேரா. தொ.பரமசிவன் இருந்தார். அவர்கள் இருவரும் அமர்ந்து விவாதித்தது மிகக் குறைவு. எங்கள் மூவரோடு இன்னொருவரைப் புதிதாகப் பதவியில் சேர்த்தார் . அவருக்குக் கற்பித்தல் அனுபவமோ, ஆய்வு அனுபவமோ இருந்ததில்லை. ஆனால் அலுவலகப் பணியாளராக 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்