பிரபஞ்சன் :நினைவலைகள்

 

அகல்யாவை மேடையேற்றியபோது


ஒரு மனிதனின் தன்னுடைய செயல்பாட்டிற்காகப் பெருமை கொள்ளவும் முடியும். செய்து முடித்த பின்பு இப்படிச் செய்து விட்டோமே என்று குற்றவுணர்வுடன் சிறுமைக்குள்ளாகவும் முடியும். உங்கள் செயல்பாடு பெருமைக்குரியதா? சிறுமைக்குரியதா? என்பதை மற்றவர்கள் உணர்த்துவதை விட நாம் உணர்வதில் தான் தன்னிலையின் அடுத்த கட்டப் பயணம் இருக்கிறது. ராமாயணத்தை மையப்படுத்தி எனக்கு ஒரே நேரத்தில் பெருமிதமும் குற்றவுணர்வும் உண்டான நிகழ்வு ஒன்று உண்டு. அந்நிகழ்வின் பின்னணியில் இருந்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.
புதுச்சேரி நிகழ்கலைப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த நாள் 01-07-1989.துறையின் தலைவர் இந்திரா பார்த்தசாரதி. எழுத்துவழியாக ஏற்கெனவே அறிமுகமானவர். இரண்டாவது நாள் அவரிடம் பிரபஞ்சன் துறைக்கு வந்ததுண்டா? அவரது முகவரி இருக்குமா என்று கேட்டேன். பிரபஞ்சனைச் சென்னையில்தான் சந்தித்திருக்கிறேன். புதுவையில் பார்த்ததில்லை என்று சொல்லிவிட்டார். அடுத்தநாள் வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த தெருவில் சிண்டிகேட் வங்கி இருக்கிறது. அங்கு ரவிக்குமார் என்றொரு எழுத்தாளர் இருக்கிறார் என்று என்னோடு வேலைக்குச் சேர்ந்த கே.ஏ.குணசேகரன் சொன்னார். அவரும் எழுத்தின் வழியாக - புரட்சிகரக் கவிதைகள் வழியாக அறிமுகமானவர். வங்கிக் கணக்கு ஆரம்பித்துவிட்டுப் பிரபஞ்சன் பற்றிக் கேட்டபோது வீடு பாரதி தெருவில் இருக்கிறது. ஆனால் சென்னையில் தான் இருப்பார்; எப்போதாவதுதான் புதுச்சேரிக்கு வருவார் என்றார். அவர் வரும் தகவலைச் சொன்ன மாணவர் ஒருவரோடு அவரது வீடிருந்த பாரதிதெருவில் சென்று மாடியேறிச் சந்தித்த முதல் சந்திப்பு நினைவில் இருக்கிறது. எழுத்தாளர் அடையாளமாக நிறைய பேனாக்கள் நிரம்பி நிற்கும் மண்ணாலான குடுவை ஒன்றும் சதுரமான உலோகக் குடுவை ஒன்றும் இருந்தது அவரது மேசையில். சிகரெட் சாம்பலைத் தட்டிக்கொள்ள இரண்டு கிண்ணங்களும் அழகியல் வடிவம் கொண்டனவாக இருந்தன. கிழக்குப் பார்த்த வாசல் நல்ல வெளிச்சம் வரும். வெளிச்சத்திற்கு முதுகு காட்டி உட்கார்ந்து பேசுவார். பல தடவை அந்த வீட்டிலும் வெளியிலும் பின்னர் சந்தித்திருக்கிறேன்.
பாண்டிச்சேரியில் தொடர்ச்சியாகக் கம்பனின் பெருமையைப் பாராட்டிக் கூட்டங்களும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யும் கம்பன் கழகத்தின் பொறுப்பாளர் புலவர் அருணகிரி துறைக்கு வருவார். இ.பா.வோடு பேசிக்கொண்டிருந்தபோது ராமாயணம் சார்ந்த நாடகம் ஒன்றை மேடையேற்ற முடியுமா என்று கேட்டார். ஆசிரியர்களோடு பேசிவிட்டுச் சொல்கிறேன் என்று சொன்ன இ.பா. எல்லோரிடம் பேசினார். என்னென்ன நாடகங்கள் ராமாயணத்தோடு தொடர்புடைய நாடகங்கள் தமிழில் இருக்கிறது என்பதைப் பட்டியலிட்டுவிட்டு எதனை மேடையேற்றலாம்; யார் இயக்குவது எனக் கேட்டார். கருஞ்சுழி மூலம் பெயர் பெற்றிருந்த ஆறுமுகம் பதில் எதுவும் சொல்லவில்லை. கே.ஏ.ஜி.யும் தயாராக இல்லை. என்னிடம் கேட்டபோது பிரபஞ்சனின் அகல்யாவை மேடையேற்றலாம் என்றேன். அந்தப் பிரதியைக் கம்பன் கழகத்தின் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற சந்தேகமும் இருக்கிறது என்று சொல்லி அதன் பிரதியை செயலர் அருணகிரியிடம் கொடுத்து அனுமதி வாங்கிவிட வேண்டும் என்றும் சொன்னேன். 
தமிழின் மிக முக்கியமான புனைகதை ஆசிரியரும் மனித நேயமும் முற்போக்குப் பார்வைகளையும் கொண்ட பாத்திரங்களையும் படைப்பவராக வலம் வந்த பிரபஞ்சனும் புதுச்சேரிக்காரர் என்பதால் அருணகிரி ஒத்துக்கொண்டார். 
எழுதிய மிகச்சிறிய நாடகம் அது. ராமாயணத்தின் கிளைக்கதைகளுள் இடம் பெறும் அகலிகையை மையப் பாத்திரமாக்கி, இப்போதைய பெண்ணின் பிரதிநிதியாக அவளை மேடையில் கொண்டு வந்து நிறுத்தும் நாடகம். நாடகத்தின் உச்ச நிலையில் அல்லது நிறைவுக் காட்சியில் ராமனின் கால் பட்டு கல்லாக இருந்து உயிர் பெறும் அகல்யாவை ராமனுடன் வரும் விசுவாமித்திரர் ‘தீர்க்க சுமங்கலி பவ’ என வாழ்த்துவார். அப்படி வாழ்த்தியவுடன் அகல்யா கேட்கும் வசனமாக பிரபஞ்சன் எழுதிய வரி இது: ‘யாரோடு? இந்திரனோடா? கௌதமனோடா?’ அகல்யாவின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் விசுவாமித்திரன் திகைத்து நிற்க, அவனோட வந்த ராம லக்குவர்களும் திகைத்து நிற்பார்கள். தனது கேள்விக்கு மூவரிடமிருந்தும் பதில் இல்லை என்ற நிலையில் திரும்பவும் அகல்யா நகைப்புத் தோன்றும் புன்முறுவலுடன் கல்லான நிலையைக் காட்டி நாடகத்தை முடித்து இருந்தோம்
அகல்யா அதன் முதல் வடிவத்தில் மேடையேற்றினால் முக்கால் மணி நேரம் கூட வராது என்பதால், அகல்யாவைச் சந்திப்பதற்கு முன்னால், ராம லக்குவணர்கள் தாடகையென்னும் வனப்பேச்சியை வதம் செய்ததைக் காட்டும் ஒரு காட்சியைச் சேர்க்க நினைத்து பிரபஞ்சனிடம் பேசினேன். காடழித்து நாடாக்கும் ஒரு நிகழ்வின் போக்கில் தான் ராமனும் விசுவாமித்திரரும் வனவாசிகளை - அரக்கர்களாக்கி அழிக்கின்றனர் என்ற புதுவிளக்கத்தோடு கூடிய பிரதியை எழுதிச் சேர்க்கப் பிரபஞ்சன் மனமுவந்து ஒத்துக்கொண்டார். சூர்ப்பனகையின் வாதங்கள் கவிதைகள் தெறிக்கும் வரிகளாக ராமனை நோக்கிக் கிளம்பியது. சூர்ப்பனகையாக வேலு.சரவணன் நடித்தார். கைதட்டல் பெற்ற காட்சிகளாக மாறின அந்த அரங்க நிகழ்வு.
நாடகம் முடிந்த போது பாண்டிச்சேரி கம்பன் கழகத்தில் நிரம்பியிருந்த இரண்டாயிரம் பேரும் கரவொலி எழுப்பிப் பாராட்டினார்கள். ஆனால் என்னிடம் நாடகம் போட வேண்டும் எனக் கேட்டு முன் பணம் தந்த கம்பன் விழா ஏற்பாட்டாளருக்கு அந்த நாடக நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.என்றாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் கம்பன் கழகம் புதுமைக்கும் வழி வகுக்கும் எனப் பேசிச் சால்வையை அணிவித்து விட்டுப் பின்னர் தனியாகத் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். நாங்கள் காண்பிக்க விரும்பும் ராமன் கடவுள்; எல்லாக் கேள்விகளுக்கும் அவனிடம் பதில் உண்டு; ஆனால் உங்கள் நாடகம் அவனைத் திகைத்து நிற்கும் ஒரு மனிதனாகக் காட்டி விட்டது எனச் சொன்னார். பார்வையாளர்கள் ரசித்தார்களே எனக் கேட்ட போது கும்பல் எல்லாவற்றையும் ரசிக்கத்தான் செய்யும். ஆனால் அந்தக் கும்பலுக்கு எதனைத் தருவது என்பதை இதுவரை நாங்களே முடிவு செய்தோம். ஆனால் இந்த நாடகத்தின் மூலம் அதை மாற்றி விட்டீர்கள். வருத்தத்தான்; ஆனால் வாழ்த்துகிறேன் என்றார்.
ஒரு பெண்ணிய நாடகத்தை- அதற்கு எதிரான மனநிலை கொண்ட பார்வையாளர்களின் முன்னால் நடத்திக் கைதட்டல் வாங்கிய பெருமிதம் அந்தப் பெரியவர் – கம்பன் கழகச் செயலர் புலவர் அருணகிரியின் பெருந்தன்மைக்கு முன்னால், எதிராளியின் கருத்தை- கலைப் பார்வையை- முன் வைக்கும் திறனை மதிக்கும் நேர்மைக்கு முன்னால் நான் கொஞ்சம் சிறுத்துத் தான் போனேன். எனது செயலில் நான் நேர்மையோடு இருக்கிறேன் எனப் பெருமிதம் கொள்ளும் அதே நேரத்தில் புலவர் அருணகிரியும் அவ்வாறே இருந்தார் என்பதை அறிவார்த்தமாக யோசித்த போது எனது பெருமிதம் குற்றவுணர்வுக்குள்ளானதை இப்போதும் மறுக்க முடியாது. வென்றிலன் என்ற போதும் என்ற கம்பனது வரிக்கு உதாரணமாக அருணகிரி நின்றார் என்பது புரிந்தது. 
அகல்யா நாடகத்தை- நாடகத்தின் அந்த முடிவைப் பார்வையாளர்கள் முன்னால் வெறும் வசனங்களாகச் சொல்லியிருந்தால் அந்தக் கரவொலி கிடைத்திருக்காது என்பதை நான் அறிவேன். அகலிகையும் இந்திரனும் முன்பிருந்தே காதலர்கள்; கௌதமன் தான் இடையில் புருஷன் என்ற அதிகாரத்துவப் பதவியில் வந்து அவளை வதைத்தவன் என்பதாகப் பிரபஞ்சன் உருவாக்கியிருந்த நாடக நிகழ்வின் வசனங்கள் பெண்ணின் மன உணர்வை மட்டும் உடலின் மொழியையும் பேசவல்லனவாகவே எழுதப்பட்ட பிரதி. காதலும் காமமும் எனப் பிரிக்க முடியாத கவிதை வரிகளை எனது நடிகர்களான மனு ஜோஷும் உஷாரகுராமனும் தங்கள் உடல் மொழியால் பலவிதமான காட்சித் தளங்களுக்குள் கொண்டு போனார்கள்; பார்த்துக் கொண்டிருந்த பெருங்கூட்டத்தைக் கட்டிப் போட்ட அந்த நடன அசைவுகளும், உடலின் கோடுகளும், வீணை இசையின் ஆலாபனைகளும் சேர்ந்து அகலிகையின் நிலையை-கண்டு கொள்ளாத கணவனால் புறக்கணிக்கப் படும் பெண்ணின் – நிகழ்காலப் பெண்ணின் ஏக்கமாக மாற்றிக் கட்டமைத்துக் காட்டிய போது பார்வையாளர்களின் மனம் திளைத்துப் போய் கைதட்டி நின்றது. 
********
புதுச்சேரிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்குக் க.நா.சுப்பிரமண்யம், கி.ராஜநாராயணன் போன்றோரை வருகைதரு பேராசிரியராக அழைத்தது போல நாடகத்துறையிலும் ஒருவரை அழைக்கலாம் எனப் பேசியபோது உடனடியாக நினைவில் வந்த பெயர் பிரபஞ்சன். நாடக இலக்கியம் என்றொரு தாள் ஒவ்வொரு பருவத்திலும் உண்டு. செவ்வியல் நாடகங்கள் வரிசையில் இந்திய, ஐரோப்பிய நாடகங்களும், நவீன நாடகங்கள் வரிசையில் இந்திய, தமிழ்நாடகங்களும் கற்பிக்கப்படும். அந்தத்தாள்களைப் பாடம் நடத்துவதற்காகப் பிரபஞ்சனை அழைப்பது என்று முடிவுசெய்யப்பட்டது. எல்லா நாளும் துறைக்கு வரவேண்டியதில்லை. வாரத்தில் இரண்டு நாட்கள் வந்து பாடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்ற கட்டுப்பாடற்ற விதிகளோடு அழைத்தது துறை. பெரும்பாலும் முற்பகல் வந்து ஒரு வகுப்பும் பிற்பகலில் ஒருவகுப்பும் என மாணாக்கர்களோடு பேசிவிட்டுப் போவார். தொடர்ந்து அந்தப் பணியில் இருக்கவேண்டும் என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. திரும்பவும் சென்னைக்குப் போகப்போவதாகச் சொல்லிவிட்டு விலகிக்கொண்டார்.

 மனிதாபிமானி

எட்டாண்டுக் காலம் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்த நான் பிரபஞ்சனின் கதை வெளிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அங்குலம் மாறாமல் தெருக்களையும், வண்ணங்கள் மாறாமல் கட்டடங்களையும், வாசம் மாறாமல் சூழலையும் எழுதுவதன் மூலம் தனது கதைகளின் பாத்திரங்களை புதுச்சேரிக் காரர்களாகக் காட்டியிருக்கிறார்.
புதுச்சேரிப் பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் கௌரவ விரிவுரையாளராக இரண்டு பருவங்கள் பணியாற்றினார். வாரத்திற்கு இரண்டு நாள் வருவார். வருபவர் மாணவிகளோடும் மாணவர்களோடும் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டே இருப்பார். மொழிபெயர்ப்பில் தமிழில் கிடைத்த பெரும்பாலான நாடகங்களை வாசித்தவர். ஆண்டன் செகாவின் செர்ரிப்பழத்தோட்டம் நாடகத்தைப் பாடம் நடத்தியபோது நானும் ஓரத்தில் மாணவனாக அமர்ந்து கேட்டிருக்கிறேன். மாணவர்களைத் தள்ளி நிறுத்தாத உரையாடல் அவருடையது.
ஒரு கதை உண்டாக்கும் நம்பகத்தன்மையே அதன் வாசகத் தளத்தை விரிவுபடுத்துகிறது. ஒரு சிறுகதையோ நாவலோ வாசகர்களைத் தன் பக்கம் இழுக்கவும், அவர்களுக்கு நெருக்கமானதாகத் தோன்றுவதற்கும் புனைவெழுத்தின் மூன்று அடிப்படைகளில் ஏதாவது ஒன்று அவனது சொந்த வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருந்தால் போதும். அந்தப் புனைவெழுத்தை - கதையை- வாசகர்கள் நடந்திருக்கக் கூடிய கதையாக அல்லது நடக்கக் கூடிய கதையாக நம்பி வாசிப்பர். காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றில் எதாவது ஒன்று தொடர்பு பட்டதாக இருந்தால் போதும். நம்பகத்தன்மை உண்டாகி விடும்.
பிரபஞ்சனின் கதைகள் உண்டாக்கும் நம்பகத்தன்மை என்பது அவர் வெளிகளை- இடங்களைச் சித்திரிக்கும் எழுத்துமுறையில் இருக்கிறது என்பது எனது கணிப்பு. குறிப்பான இடங்களில் கதை நிகழ்வதாக எழுதுவது மூலம் அக்கதையின் காலத்தையும், இடம் பெற்றுள்ள பாத்திரங்களையும் நம்பத் தக்கவர்களாக மாற்றி விடுவார்.வட்டாரம் சார்ந்த கதைகள் என்ற வகைபாடுகளின் பின்னணியில் அந்தந்தப் பிரதேசத்தின் வட்டாரமொழிப் பிரயோகம் இருக்கிறது என்றாலும், இடங்களைச் சித்திரித்துக் காட்டும் படைப்பாளியின் திறமையினால் தான் நம்பகத்தன்மை கூடுகிறது.
மனிதாபிமான வெளிப்பாடு நவீனத்துவக் கதைகளின் முதன்மையான கூறாகக் கருதப்பட்ட காலத்தின் பிரதிகளாக அவரது சிறுகதைகள் ஒவ்வொன்றும் வெளிப்பட்டன. சிறுகதைகள் அளவிற்கு நாவல்களில் முழுமையை உருவாக்கவில்லையென்றாலும் புதுச்சேரி வரலாற்றை உள்வாங்கிக் கொண்டு எழுதிய வரலாற்றுப் புதினங்கள் தமிழ் வரலாற்றுப் புதினங்களில் திசை விலகல்களை ஏற்படுத்தியவை.

அவர் எழுதிய இரண்டு நாடகங்களும் எனக்கு நெருக்கமானவை. புனைகதைகளிலிருந்து விலகியவை. குறியீடுகளைப் பொதிந்து வைத்து எழுதிய முட்டையில் ஒரு நடிகனாக இருந்திருக்கிறேன். ராமாயணக் கிளைக்கதையான அகல்யாவைத் திரும்பவும் எழுத வைத்து இயக்கி வெற்றிகரமான மேடையேற்றமாகத் தந்திருக்கிறேன். முதலில் அவர் எழுதிய பிரதியில் சூர்ப்பனகை இல்லை. எனக்காகச் சூர்ப்பனகையையும் இணைத்து எழுதித்தந்தார். அதற்காக அவரோடு தொடர்ந்து விவாதங்கள் நடத்தியதுண்டு. அவரது எழுத்துகள் குறித்தும் எழுதியதுமுண்டு. அப்படியெழுதிய இந்தக் கட்டுரைக்குரிய கதையை அர்த்தமுள்ள குறும்படமாக யாராவது எடுக்கலாம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்