ஷங்கர்: பிரமாண்ட புனைவுகள்

தமிழக முதல்வரிடம் “முதலமைச்சா் பொது நிவாரண நிதி“க்காக ரூ. 3 லட்சமும், ஒரிசா புயல் நிவாரண நிதிக்காக ரூ. 2 லட்சமும் வியாழக்கிழமை வழங்கினார். “முதல்வன் பட இயக்குநா் ஷங்கர்.

புகைப்படத்துடன் இச்செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது தினமணி நாளிதழ் (26. 11. 1999) இக்குறிப்பில் முதல்வன் என்பது மட்டும் ஒற்றை மேற்கோள் குறிக்குள் தரப்பட்டிருந்தது. இதன் மூலம் தினமணி தனது வாசகா்களுக்கு உணா்த்த விரும்பிய குறிப்பு ஒன்று உண்டு.ஷங்கரின் சமீபத்திய படமான முதல்வன் திரைப்படத்தை பார்க்காத வாசகா்களுக்கு அந்தக் குறிப்பு போய்ச் சோ்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் முதல்வன் படத்தைப் பார்த்துள்ள வாசகா்களுக்கு அதன் குறிப்புத் தரும் அா்த்தங்கள் புரிந்திருக்கலாம். அந்தக் குறிப்பு தமிழ் சினிமாவிற்கும் தமிழக அரசியலுக்கும் இடையேயுள்ள உறவையும் முரணையும் விளக்கிக் காட்டும் அா்த்தங்கள் சார்ந்தது. அந்த அா்த்தங்களை ஒற்றை மேற்கோள் குறிப்பு மூலம் விளக்கிவிட முடியும் என தினமணி நினைத்துக் கொண்டதுதான் ஆச்சரியம், முதல்வன் படத்தை ஈடுபாட்டோடு பார்த்து, ஷங்கரின் சமூகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த வாசகனுக்கு – பார்வையாளனுக்கு – இப்போதைய முதல்வா் மீது அதிருப்தியும் கோபமும் இருந்திருக்கும். ஷங்கர், இப்போதுள்ள முதல்வா் கைது செய்யப்பட வேண்டியவா், இறுதியில் சுட்டுக் கொலைசெய்யப்பட வேண்டியவா் எனப் படம் எடுத்துப் பார்வையாளனை நம்பச் செய்துள்ளவா். ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த சி.எம்.மும் அவரது உறவினர்களும் இவ்வளவு சொத்துகளுக்கு உரிமையாளா்கள் ஆனது எப்படி என்று நேருக்கு நேராகக் கேள்வியை எழுப்பியவா்.
இன்றுள்ள முதல்வரின் நாற்காலியைத் தாங்கிக் கொண்டிருக்கும் கால்களில் ஒன்று சாதிச்சங்கம், இன்னொன்று ஊழல் அதிகாரவா்க்கம், மற்றொன்று எல்லாவற்றிலும் பங்கு வாங்கிக் கொள்ளும் கூட்டணிக் கட்சி, வேறொன்று பணக்காரவா்க்கம் எனப் புட்டுப்புட்டு வைத்தவர். படத்தில் வரும் அரங்கநாதன் கதாபாத்திரத்தை இன்றைய முதல்வரோடு முற்றிலும் பொருந்த வைத்த ஷங்கா், தனது படத்தில் அரசியலுக்கு வர மறுக்கும் ரஜினிகாந்த மீதும் கூட விமரிசனக் கணைகளைத் தொடுத்தவா். இத்தகைய துணிச்சலும் அரசியல் தெறிவும் சமூகப் பொறுப்பும் மிகுந்த இயக்கநா் ஷங்கா், தான் பாடுபட்டுச் சம்பாதித்த பணம் ரூ. லட்சத்தை, தானே ஊழல் முதல்வர் எனச் சித்திரித்தவரிடம் தந்துவிட்டு நிற்பதைப் பார்த்து பார்வையாளன் குழப்பத்தில் சிக்கிக் கொள்ளக்கூடும்.

நாடகம் அல்லது திரைப்படம் போன்ற வெகுஜனத் திரளினைப் பார்வையாளா்களாகக் கொண்ட கலைகளின் பார்வையாளா்கள் பற்றி நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரதனிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் கலைக் கோட்பாட்டாளரான போ்ட்டோல்ட் ஃபிரெக்ட் வரை பலரும் பலவிதமான விளக்கங்களை தந்துள்ளனா். பரதன், பார்வையாளன் ஸஹிருதயனாக விளங்க வேண்டும் என்பான் . ஃபிரெக்ட் தூரப்படுத்திச் சிந்திக்கச் செய்ய வேண்டும் என்பார். ஒரு மேடைக் கலையின் பார்வையாளன், மேடையின் நிகழ்வுக்கு தனது ஸஹிருதயத்தைத் தந்துவிடும் நிலையில் புறச்சூழல்களை மறந்து,மேடை நிகழ்வோடு ஒன்றி விடுகிறான். அந்நிகழ்வு உண்டாக்கும் துக்கமும் மகிழ்ச்சியும் அவனது துக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் ஆகிவிடும். அந்நிகழ்வு உண்டாக்கும் கலை முடிவு இவனது முடிவுகளாக ஆகும். அது தரும் போதனைகள் இவனது வாழ்க்கைக் கோட்பாடுகளாக ஆகிவிடும்.

இதற்கு மாறானது ஃபிரெக்டின் தூரப்படுத்தும் உத்தி. அவ்வுத்தியில் அமைந்த ஒரு கலைநிகழ்வு, பார்வையாளனைத் தனக்குள் இழுத்துக்கொள்ளாமல், மேடை நிகழ்வையொத்த சமூக நிகழ்வுகளில் அவனது சிந்தனையைத் திருப்பி விடும். அதுவே அனைத்துவிதமான போதனைகளையும் தந்து விடாமல், சமூக நிகழ்வுகளின் மீது அவனது முடிவுகள் என்ன என்ற கேள்விகளை எழுப்பும். எதிரெதிர் நோக்கங்கள் கொண்ட இந்தக் கலைக் கோட்பாடுகள், எழுதப்படும் – நிகழ்த்தப்படும் – வரையப்படும் சலனமாகும் எல்லாவகைப் படைப்புகளுக்கும் பொருந்தக் கூடியனதான். இவ்விரு எதிர்நிலைக் கோட்பாடுகள் ஒரே படைப்பில் சாத்தியமில்லை என்றாலும் “சமூகப் பொறுப்புள்ள“ தமிழ் சினிமாக்களின் இயக்குநா்கள் அவ்விரண்டையும் இணைக்கும் சாத்தியத்தைச் செய்து சாதனை படைத்து வருகின்றனா் என்பது மட்டும் உண்மையானது திராவிட இயக்க நாடகங்களிலும் திரைப்படங்களிலும் தொடங்கிய அந்த ரஸவாதத் திறன் ஷங்கரின் படங்களில் முழுமை பெற்றுள்ளது.

ஆவலைத் தணியவிடாமல் தக்கவைக்கும் ஒரு நோ்த்தியான நாடகவடிவக் கட்டமைப்பு கொண்ட திரைக்கதை, கண்களுக்கு விருந்து படைக்கும் வண்ண மாற்றங்கள் நிரம்பிய காட்சியமைப்பு உடலை அசைத்துத் தாளம் போடவும் நடனமிடவும் தூண்டும் இசையமைப்பு, முகத்திலறையும் வன்முறைக் காட்சிகளின் கோர்வை என்ற விதிகளுக்குள் இயங்கி வெற்றி பெற்றுள்ள ஷங்கரின் 5 படங்களில் காதலனும் ஜீன்ஸும் ஒருவகையான படங்கள், காதல், மோதல், கல்யாணம் என்று குடும்பப் பரப்பில் இயங்கியவை. ஆனால் ஜென்டில்மேன். இந்தியன், முதல்வன் என்ற மூன்றிலும் காதல், மோதல், கல்யாணம் என்பனவும் இருந்தாலும் அவை சமூகப்பரப்பைத் தளமாகக் கொண்டவை இவற்றின் நாயகா்களுக்குக் காதலைவிட கண்முன்னே நடக்கும் சமூக அநியாயங்கள் முதலில் களையப்பட வேண்டியவை.

இந்தியன் தாத்தாவிற்கு லஞ்சம் வாங்கும் பியூன், கிளார்க், ஆா். டி. ஓ., போக்குவரத்துக் காவலா், அரசு மருத்துவமனை டாக்டா், தவறாகப் பொ்மிட் வழங்கிய தன் மகன் உட்பட அனைவரையும் கொலை செய்வது முக்கியம். ஜென்டில்மேன் கதாநாயகனுக்கு திறமை மதிக்கப்பட வேண்டும் எனச் சொல்வது முக்கியம். திறமைக்கு வாய்ப்பளிக்காமல், இட ஒதுக்கீடு காரணமாக ஒதுக்கப்பட்டால் அத்திறமையான இளைஞா்கள் வன்முறையாளா்களாக சட்டம் ஒழுங்கை மதிக்காதவா்களாக மாறிப்போவார்கள் எனச் சொல்வது முக்கியம். முதல்வன் பட நாயகனுக்கு இன்றைய அரசாங்கத்தால் கண்டு கொள்ளப்படாத அப்பாவி மக்கள் முக்கியம், சட்டம் ஒழுங்கை மதிக்காத சாதிச் சங்கங்களும் தொழிலாளா்களும் அடக்கப்பட வேண்டியது முக்கியம்.

இந்த “முக்கியங்கள்“ தான் “காதலனும் ஜீன்ஸும் பெறாத சமூகப் பொறுப்புள்ள படங்கள் என்ற பிம்பத்தைப் பெற்றுத் தருகின்றன. ஷங்கரின் படங்களில் சமூகம் சார்ந்த செய்தி – மெஸேஜ் – இருப்பதாகப் பத்திரிகைகளை எழுத வைக்கின்றன. “சமூகப் பொறுப்புள்ள படங்களின் இயக்குநா் ஷங்கா்“ என்ற வாக்கியம் ஷங்கருக்கு பொருத்தம் உடையதா? ஷங்கரின் முதன்மையான நோக்கம் அதுதானா…? இந்த வினாக்களுக்கான விடைகள், ஷங்கரின் படங்களைத் திரையரங்கில் பார்க்கும் பார்வையாளனின் இருப்புநிலையை உணரும் போது கிடைக்கக்கூடும்.

ஒரு கலைப்படைப்பில் ஈடுபடுகிறவன் தனது படைப்புகளுக்கானதாக ஏதாவது ஒரு கோட்பாட்டை கொண்டிருப்பான். அதன் மூலம் தனது பார்வையாளனை – வாசகனை – தனது முடிவு நோக்கிப் பயணம் செய்யவைப்பான். ஆனால் வியாபாரியோ எதையாவது செய்து – நல்லதையும் பொல்லாததையும் கலந்து –லாபம் ஈட்ட விரும்புவான். அவனது சரக்கில் நிஜங்களும் நிஜம் போல்வனவும் கலந்து நிற்கும். பெற்று செல்பவன் எது நிஜம்? நிஜம் போல்வன எவை? எனக் கண்டுணர முடியாமல் திணறடிப்பதில்தான் வியாபாரியின் திறமை தங்கியிருக்கிறது என்பன வியாபார உலகின் தந்திரங்கள்.

முதல்வன் படத்தில் அரங்கநாதன் நிஜம், அவனது கட்சி அரசியல்வாதிகளும் அவனை எதிர்க்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் நிஜமானவா்கள், சட்டம் ஒழுங்குக்குக் கட்டுப்பட மறுத்து, சாதி ஓட்டுகளை இழுத்துப்பேசும் டிரைவா்கள் நிஜம்; இவா்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் வதைபடுவதும் நிஜங்கள். ஆனால் இவற்றிற் கெதிராக நிறுத்தப்படும் “ஒருநாள் முதல்வர்“ புகழேந்தி ஒரு புனைவு அல்லது கற்பனை. அந்த ஒரு நாளில் அதிகாரிகளும் பணியாளா்களும் பணிஇடை நீக்கம் செய்யப்படுவது கற்பனை. ஊழல் அதிகாரிகள், அமைச்சா்கள் தொடங்கி முதல்வர் வரை கைதாவது கற்பனை. புகழேந்தியின் காதலி (தேன்மொழி) நிஜம். அவனது அப்பா நிஜம்;அம்மா நிஜம்; “அரசாங்க வேலைக்காரனுக்குத் தான் தனது மகளைக் கல்யாணம் பண்ணித் தருவேன் எனச் சொல்லும் மாமனார் – தேன்மொழியின் அப்பாவும் கூட நிஜம்தான். ஆனால், தேன்மொழியோடு கம்மங்காட்டில் இருப்பவன், இந்தியாவின் பல மாநிலங்களில் எழில் கொஞ்சும் பிரதேசங்களில் ஆடிப்பாடும் காட்சிகள் புனைவு. அவா்களிருவரையும் சுற்றி நிற்கும் சோளக் கொல்லைப் பொம்மைகள், மண்பானைக் குவியல்கள், பரமபதப் பாம்புகள் என எல்லாம் புனைவுகள். அதுவும் கம்யூட்டா் கிராபிக்ஸ் சார்ந்த அதீதப்புனைவுகள். அந்த அதீதப் புனைவுகளின் பின்னணியில் புகழேந்தியும் தேன்மொமியும் கட்டுப்பாடுகள் அற்றவா்களாய் ஒட்டிக் கொள்வதும் தொட்டுக் கொள்வதும் நிஜமும் அல்ல, புனைவுமல்ல; போதை! உடலுறவு சார்ந்த மறைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதால் கிடைக்கும் போதை.

பெண்ணின் அருகில் நிற்பதையே அனுமதிக்காத தமிழ்ச் சமூகத்தில் உலவும் பார்வையாளனுக்கு இளம் பெண்ணின் இடுப்பு மடிப்புகளிலும் தொப்புள் குழிகளிலும் ஊதி விளையாடும் காட்சிகளும் இரண்டு மார்புகளுக்கிடையில் எழுதிப்பழகுவதும் நிச்சயம் நிஜம் சார்ந்தன அல்ல. அவை புனைவு சார்ந்தன என்று கூறுவதைவிட போதையூட்டுவன என்றே சொல்லலாம். இதே தளத்தில் இடம் பெறுவனதான் ரத்தம் சிதறும் சண்டைக்காட்சிகளும்!

இப்படி நிஜங்களையும் புனைவுகளையும் சரிவிகிதத்தில் கலந்துதரும் ஷங்கரின் திரைப்படக் கட்டமைப்பில் வில்லத்தனங்கள் நிஜங்களாகவும் நாயகத்தனங்கள் புனைவுகளாகவும் இருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று. இப்படியான நிஜங்களையும் புனைவுகளையும் திரையரங்கில் காணும் பார்வையாளனும் ஒரு வித இரட்டை நிலையில் இருப்பவனாக மாற்றப்படும் சாத்தியக்கூறுகள் உண்டு.

முதல்வன் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளன், மகிழ்ச்சியூட்டும் ஒரு புனைவுக் கதையைக் (Fantasy) கண்டு களிப்பவனாக இருக்கும் அதே நேரத்தில், ஜனநாயகத்தில் தவறாக வாக்களித்த அல்லது வாக்களிக்க மறந்த வாக்காளனாகவும் இருக்க வைக்கப்படுகிறான். வாக்காளன் – பார்வையாளன் என்ற இரட்டை நிலையில் தனது இருப்புநிலை வைக்கப்படும் பொழுது, படத்தோடு ஒன்றுவதும் விலகுவதுமான மனநிலையும் அவனுக்குள் வந்து விடுகிறது. இந்த இரட்டை மனநிலையில் படம் முன் வைக்கும் தீர்வுகளை எப்படி எதிர் கொள்வான்? ஒன்றுபட்டு விட்ட நிலையில் அம்முடிவுகளை ஏற்பவனாக இருப்பான். விலகிய நிலையில் “இல்லை; இது சாத்தியமில்லை“ என்று உணா்பவனாகக் குழம்புவான். இந்தக் குழப்பத்தேடு திரையரங்கை விட்டு வெளியே வந்து முடிவுகளற்ற மனிதனாகவே உலவுவான். அவனது சிந்தனைக்கான கேள்விகளைக் கூட எழுப்பாமல் அனுப்பும் ஷங்கரின் நோக்கம் கூட அதுதான்! அத்தோடு அந்தப் பார்வையாளனிடமிருந்து பணத்தை வசூலித்து விடுவதும். தொடா்ந்து தனது பார்வையாளனாக மாற்றுவதும் கூட அவரது நோக்கம்தான். இந்த நோக்கத்தை ஷங்கா் தனி ஆளாய் நின்று சாதிக்கிறார் – நிறைவேற்றுகிறார் என்று சொல்லிவிட முடியாது தனது முந்தைய பாடல்களின் இசையையே திரும்பவும் மாற்றிப் போட்டால் கூட உடலைத் துள்ள வைக்கும் இசைக் கோலங்களை எழுப்பும் ஏ. ஆா். ரகுமான் உடன் இருக்கிறார். அத்துள்ளல் இசைக்குள் தேன் தமிழ் வார்த்தைகளைச் சிறை வைக்கும் கவிப்பேரரசு வைரமுத்து இருக்கிறார். கம்ப்யூட்டா் திரைக்குள் கனவுலகைக் கட்டியெழுப்பும் வெங்கி இருக்கிறார். இவா்களுக்கெல்லாம் மேலாக வெகுஜனத் தமிழ் வாசகா்களின் நாடி துடிப்பை முழுதும் உணா்ந்த பாலகுமாரன், சுஜாதா போன்ற எழுத்துலக ஜாம்பவான்களும் உடன் இருக்கிறார்கள். சுஜாதாவிடம் கேட்டல் அகப்பாடல் மரபிலிருந்து ஆண்டானின் விரகதாபம் வரை மட்டுமே சொல்லித்தருவார் என்பதில்லை. ஐரோப்பிய நான்கு அங்க நாடகங்களின் கட்டமைப்பு குறித்து ஒரு நாள் முழுவதும் உதாரணங்களோடு வகுப்பெடுப்பார். இவ்வளவு ரதகஜதுரகபதாதிகளோடு யுத்தம் தொடங்கும் ஷங்கர், வியாபார வெற்றி அடையாமல் போனால்தான் ஆச்சரியம்.

பின்குறிப்பு

சமூகத்திற்கான செய்தி எனும் ரஸம் பூசிய ஷங்கரின் பூதக்கண்ணாடிகள் இதுவரை பார்வையாளா்களை இரட்டை மனநிலையில் நிறுத்தி, சிலவற்றை நிஜம் என நம்பும்படியும் பலவற்றைப் புனைவு எனக் கருதிப் பங்கேற்கும்படியும் வலியுறுத்தின. ஆனால் தமிழக முதல்வரையே கடுமையாக விமரிசித்துப் படம் எடுத்துவிட்டு, ஐந்து லட்சம் ரூபாயை நேரில் சந்தித்துத் தருவதன் மூலம் முதல்வன் படம் முழுவதும் புனைவு என்று பார்வையாளன் நம்ப பேண்டும் என வலியுறுத்துகிறா. ஷங்கர் முதல்வர் மு. கருணாநிதி விமரிசிக்கப்பட்ட அரசியல்வாதியாக த் தன்னைக் கருதிக் கொள்ளவும் வாய்ப்புண்டு. புனைவியல் பங்கேற்கும் பார்வையாளனாகக் கரைந்து போகவும் வாய்ப்பு உண்டு அவரவா் பாத்திரங்களை அவரவா் தீா்மானிப்பது கூட சாத்தியமில்லையோ…..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்