மெல்லினமும் வல்லினமும்
“இந்தியப்பொருளாதாரம் நிதானமாக இல்லை; வீழ்ச்சியை நோக்கிப் போகிறது” என்கிறார்கள் இப்போது. அப்படிச் சொல்பவர்கள் சிலவகைப் புள்ளிவிவரங்களை முன்வைக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு ‘இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது’ என்பதை நம்பச் செய்யும்படியான புள்ளி விவரங்கள் காட்டப்பட்டன. இந்தப் புள்ளி விவரங்களைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் எனக்குத் தொலைக் காட்சியில் அடிக்கடி பார்க்கும் அந்த விளம்பரம் தான் நினைவுக்கு வரும். ‘’ நான் வளர்கிறேனே மம்மி’’ என்று சொல்லி விட்டு ஒரு சிறுவன் நிமிர்ந்து நிற்பான். அந்த வளர்ச்சியை மனதுக்குள் ரசிக்கும் அவனது தாய் வளர்ச்சிக்குக் காரணமான மென்பானத்தைக் கையில் வைத்தபடி சிரித்துக் கொண்டிருப்பாள். தொடர்ந்து சில ஆண்டுகள் அந்தப் பானத்தைக் கொடுத்து வரும் அன்னைக்குத் தன் மகனின் வேகமான வளர்ச்சிக்குக் காரணம் அந்த பானம்தான் என்ற நம்பிக்கை உண்டாவது இயல்பான ஒன்றுதான். உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அந்தப் பானத்தில் இருப்பது உண்மையாகக் கூட இருக்கலாம். அதனால் மற்றவர்களின் வளர்ச்சியை விட அவனது வளர்ச்சி விகிதம் கூடுதலாக இருப்பதும் சாத்தியம் ...