மெல்லினமும் வல்லினமும்


“இந்தியப்பொருளாதாரம் நிதானமாக இல்லை; வீழ்ச்சியை நோக்கிப் போகிறது” என்கிறார்கள் இப்போது. அப்படிச் சொல்பவர்கள் சிலவகைப் புள்ளிவிவரங்களை முன்வைக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு ‘இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது’ என்பதை நம்பச் செய்யும்படியான புள்ளி விவரங்கள் காட்டப்பட்டன. இந்தப் புள்ளி விவரங்களைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் எனக்குத் தொலைக் காட்சியில் அடிக்கடி பார்க்கும் அந்த விளம்பரம் தான் நினைவுக்கு வரும். ‘’ நான் வளர்கிறேனே மம்மி’’ என்று சொல்லி விட்டு ஒரு சிறுவன் நிமிர்ந்து நிற்பான். அந்த வளர்ச்சியை மனதுக்குள் ரசிக்கும் அவனது தாய் வளர்ச்சிக்குக் காரணமான மென்பானத்தைக் கையில் வைத்தபடி சிரித்துக் கொண்டிருப்பாள். தொடர்ந்து சில ஆண்டுகள் அந்தப் பானத்தைக் கொடுத்து வரும் அன்னைக்குத் தன் மகனின் வேகமான வளர்ச்சிக்குக் காரணம் அந்த பானம்தான் என்ற நம்பிக்கை உண்டாவது இயல்பான ஒன்றுதான். உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அந்தப் பானத்தில் இருப்பது உண்மையாகக் கூட இருக்கலாம். அதனால் மற்றவர்களின் வளர்ச்சியை விட அவனது வளர்ச்சி விகிதம் கூடுதலாக இருப்பதும் சாத்தியம் என்று ஏற்றுக் கொள்ளவும் செய்யலாம்.

இந்த உண்மைக்குப் பின்னால் வேறு ஒரு உண்மையும் ஒழிந்திருக்கிறது என்பதும் அந்தத் தாய்க்கு தெரிந்ததுதான். காலையில் ஒரு கண்ணாடி டம்ளரில் அந்தப் பானம்; மத்தியான வேளையில் இரண்டு டம்ளரில் பானம்; இரவில் மறுபடியும் இரண்டு டம்ளரில் கலக்கிய பானம் என்று மூன்று வேளையும் அந்தப் பானத்தை மட்டுமே கலக்கிக் கொடுத்திருப்பாள் என்பது உண்மையல்ல. அந்தப் போஷாக்குப் பானத்தைத் தருவதற்கு முன்னால் அவனுக்குத் தேவையான உணவுப் பண்டங்களைத் தின்னக் கொடுத்திருப்பாள் என்பது மறைந்து கிடக்கும் உண்மை. ஒருவேளை அந்தச் சிறுவன் விளையாட்டு ஆர்வத்தில் வேண்டாம் என்று மறுத்திருந்தாலும் இழுத்து வைத்து ஆசை வார்த்தைகளையும் அன்பையும் சேர்த்து ஊட்டிவிட்டுத்தான் அந்தப் பானத்தைக் கொடுத்திருப்பாள் என்பதும் சொல்லப்படாத உண்மை. 

பொருளாதார வல்லுநர்கள் சொல்லும் பணவீக்கக் கட்டுப்பாடு, பங்கு மார்க்கெட் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு, இத்தனை சதவீத வளர்ச்சி என்பன பற்றியெல்லாம் படிக்கும் போது சந்தேகங்கள் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து நம்பிக்கைகள் துளிர்விடத்தான் செய்கின்றன. அதைவிட ஒரு தடவை தமிழ் நாட்டின் குறுக்கும் நெடுக்குமாகப் பேருந்துப் பயணம் சென்றுவிட்டு வந்தால் சந்தேகம் காற்றில் பறந்துபோய் விடுகிறது, கட்டப்பட்டுள்ள பாலங்களின் உயரமும் போடப்பட்டுள்ள சாலைகளின் அகலமும் நம்பிக்கையை மேலும் வளர்த்துவிடுகின்றன. அந்தச் சாலைகளில் மிதக்கும் பல வண்ணக்கார்களின் வேகம் இந்தியா வேகமாக வளர்கிறது என்று நம்பிக்கையை மேலும் வேகப்படுத்துகின்றன. சந்தேகங்களையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்; இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளதோ என்னவோ தமிழகப் பொருளாதாரம் வளரத்தான் செய்கிறது.

தமிழ்நாடு வளர்ந்துதான் உள்ளது. சென்னை ஒரு நகரமாக இருக்க முடியாது என்ற நிலைதோன்றி மூன்று பத்து ஆண்டுகள் கழிந்து விட்டன. சென்னை மட்டுமல்ல; மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி என்று பெருநகரங்கள் எல்லாவற்றிற்குமே துணை நகரங்கள் தேவைப்படும் காலம் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கும் மாநகராட்சிகள் மட்டுமல்ல; புதிய மாநகராட்சிகளான தூத்துக்குடி, திருப்பூர், போன்றவைகளும் கூட ஐந்தாண்டுகளுக்குள் மும்மடங்கு, ஐந்து மடங்கு என வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மாநகராட்சிகள் என்றில்லை; நகரங்கள்; சிறு நகரங்கள் எனப் பட்டணங்களின் வளர்ச்சி கண்கூடாகத் தெரிந்த பின்னும் இந்தியப் பொருளாதாரம் வளரவில்லை என்று சொன்னால் , சொல்பவனிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்று தான் கணிக்க வேண்டும். அவர்களை எதிர்நிலைச் சிந்தனையாளர்கள் என்று திட்டக் கூடச் செய்யலாம்.

முன்பெல்லாம் ஒரு பட்டணத்தின் வளர்ச்சியை அளக்கும் கருவியாக இருந்தவை தொழிற்பேட்டைகள் தான். ஒரு தொழிற்பேட்டைக்குள் சிறியதும் பெரியதுமான தொழிற்சாலைகள் இருக்கும். அத்தொழிற் பேட்டைகள் மனிதர்களின் அன்றாடத் தேவைகளான தட்டுமுட்டுச் சாமான்களையும் உற்பத்தித் தொழிலுக்குத் தேவையான கருவிகளையும் தயாரித்து அனுப்பிக் கொண்டிருக்கும். சிறு முதலாளிகளின் முதலீட்டிலும், வங்கிகள் தரும் கடனில் தொழில் முனைவோர் மேற்கொள்ளும் முயற்சியிலும் இத்தொழிற்பேட்டைகள் பெரிய தொழிற்சாலைகளுக்குத் தேவையான உதிரிப் பாகங்கள் முதல் கைத்தொழில், விவசாயம் போன்றவற்றிற்குத் தேவையான கருவிகள் வரை உற்பத்தி செய்தன. மரபுத் தொழில் நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கயிறு திரித்தல், கூடை முடைதல், கட்டில் தயாரித்தல், பழச்சாறுகள் தயாரித்தல் , உணவு பதப்படுத்துதல் போன்றவற்றை அந்தத் தொழிற் பேட்டைகள் செய்துவந்தன. ஆம் செய்து வந்தன என்றும், தொழிற் பேட்டைகள் பல இருந்தன என்றும் தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது தொழிற்பேட்டைகள் இருந்த இடங்களில் பழைய சத்தங்கள் இல்லை

காரணம், இப்பொழுதெல்லாம் நகரங்களில் உருவாக்கப்படுபவை தொழிற்பேட்டைகள் அல்ல; தொழில் பூங்காக்கள் தான். மென்பொருட் பூங்காங்கள்; தொழில் நுட்பப் பூங்காக்கள்; கணினிப் பூங்காக்கள் என வகை வகையான பூங்காக்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றில் உற்பத்தி செய்யப்படுபவை என்னவாக இருக்கும்.? தொழில் நுட்பங்கள், மென்பானங்கள், குறுந்தகடுகள், தகவல்கள், சிம்கார்டுகள், சிப்ஸ்கள் போன்றன தான்.

சிப்ஸ்கள் தயாரிக்கப்படும் என்றவுடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது நேந்திரங்காய்ச் சிப்ஸ் என்று நினைத்து விட வேண்டாம். அவை கம்ப்யூட்டர் சிப்ஸ்கள். சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து கிடைக்கும் ஒரு வகை மண்ணிலிருந்து தயாரிக்கப்படும் சிப்ஸ்கள். கணினிப் புரட்சி, தகவல் தொழில் நுட்ப புரட்சி, மென்பொருள் புரட்சி என்று மேடைதோறும் மென்மையான ஆங்கிலத்திலும், தட்டுத் தடுமாறிய தமிழிலும் பேசும் நமது தொழில் நுட்ப அமைச்சர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் சிலிக்கான் சிப்ஸ்களை உண்டு மனிதர்கள் உயிர் வாழ முடியாது என்பதை யாராவது சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.

இந்த மென்பூங்காக்களைத் தொடர்ந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வந்தன. தாராள வாதத்தின் உச்சகட்டமாக - அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் என்னவாக இருக்கும் எனச் சொல்ல ஆட்கள் இல்லை. அதைப் பற்றிப் பேச்சு இல்லை. தரப்பட்ட சலுகைகளையும், அதனால் கிடைத்த முதலீடுகளையும், ஏற்பட்ட வேலை வாய்ப்புகளையும் பற்றிய புள்ளி விவரங்களைத் தந்த பொருளாதார அறிக்கைகள் அம்மண்டலங்களில் உற்பத்தியான பொருட்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அங்கும் தகவல்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தொழில் நுட்பங்கள் உற்பத்தி செய்யப்பட்டன; மென்பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டன; மெல்லிசைகளும் மென்நடனங்களும் உற்பத்தி செய்யப்பட்டன; நகரவாசிகளின் மென்மையான வாழ்க்கைக்குத் தேவையான மென்மைகள் அனைத்தும் உற்பத்தி செய்துதரப்பட்டன.

மென்பொருட்கள் பற்றி- மெல்லினங்கள் பற்றிச் சிந்திக்கும் வல்லுநர்களுக்கு இந்திய தேசத்தின் எண்பது சதவீத மனிதர்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள் என்பது நினைவில் இருப்பது நல்லது. அவர்கள் தான், மனிதர்கள் உண்ணுவதற்குத் தேவையான தானியங்களை உற்பத்தி செய்கிறார்கள் என்பதும் நினைவில் இருக்க வேண்டும். மனித உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கும் இந்திய தேசத்தவர்கள் உண்ணும் தானியங்களையும் உணவுப் பண்டங்களின் மூலப்பொருட்களையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துவிட்டு, தகவல்களையும் குறுந்தகடுகளையும் அனுப்பிச்சேர்த்த அன்னிய செலாவணி எத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடித்தன என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டன.

நெல்லையும் கோதுமையையும் உற்பத்தி செய்வதற்கான சிறப்பு விவசாய மண்டலங்களைப் பற்றிய யோசனைகள் தான் இந்தியக் கிராமங்களை இருக்க வைக்கும்; வாழ வைக்கும். கிராமத்து மனிதர்களின் வேளாண் நுட்பங்கள் கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, நாட்டுச் சோளம் , தட்டாம் பருப்பு, சிறுபருப்பு , கொழிஞ்சி, அவுரி, வேப்பம்புண்ணாக்கு, தழை உரம் என யோசித்து யோசித்துச் செய்த வேளாண் நுட்பங்கள் காணாமல் போய்விட்டன;அறுபது நெல்வகை இருந்த தமிழ்நாட்டுக் கிராம விவசாயிகள் விதை நெல்லுக்காக அறிவியல் தொழில் நுட்பத்தைச் சார்ந்தவர்களாக ஆக்கப்பட்டு விட்டார்கள், விதைநெல் குலுக்கைகள் கிராமங்களில் இல்லாமலேயே போய்விட்டன. இந்திய விவசாயத் தொழில் நுட்பத்தை ஓரங்கட்டிய மென்மைச் சிந்தனையாளர்கள் கிராமங்களில் வாழ்பவர்கள் வன்மையானவர்கள் என்பதையும் நினைத்துக் கொள்ள வேண்டும். நகர நக்சல்கள் பற்றிப் பேசும் அரசாங்க ஆதரவாளர்கள் திரும்பவும் கிராமங்களிலிருந்து நக்சல்பாரிகளைப் பிறக்கச் செய்துவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்