துறையும் பல்கலைக்கழகமும் - சில நினைவுகள்
இப்போது வருவது மூன்றாவது வருகை. 2012 முதல் 2017 காலத்தை மதிப்பிடுவார்கள்.. இதற்குமுன் வந்த போதெல்லாம் துறை நடத்திய கருத்தரங்குகளையும் பயிலரங்குகளையும் முன்வைப்போம். எழுத்தாளர்களை வகை பிரித்துப் பட்டியலிடுவோம். இந்தப் பட்டியலில் இருக்கும் எழுத்தாளர்கள் மற்ற பல்கலைக் கழகஙக்ளுக்குப் போயிருக்க வாய்ப்புகள் குறைவு. 20 ஆண்டுகளில் 100 -க்கும் அதிகமான எழுத்தாளர்கள் எனப் பட்டியல் காட்டுகிறது. இவ்வளவு கவிகளும் புனைகதையாளர்களும் செயல்பாட்டாளர்களும் கல்விப்புலப் பேராசிரியர்களும் துறைக்கு வந்து போயிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தோப்பில் முகம்மது மீரான், பூமணி போன்றவர்கள் சாகித்திய அகாடெமி விருதுபெற்றபோது கருத்தரங்குகள் நடத்திக் கொண்டாடியிருக்கிறது. எழுத்தாளர் கி.ரா.வுக்குப் பேரா.சுந்தரனார் விருது அளித்துப் பெருமைப் பட்டுக்கொண்டது. சுந்தரராமசாமியின் எழுத்துகள் குறித்தொரு கருத்தரங்கையும் நடத்தியிருக்கிறது துறை. தொ.மு.சி., தி.க.சி.,போன்ற மூத்த திறனாய்வாளர்களும் ந.முத்துமோகன், தமிழவன், ஞாநி, ரவிக்குமார், ராஜ்கௌதமன், ப்ரேம், க;பஞ்சாங்கம், அழகரசன், க.பூரணச்சந்திரன், தி.சு.நடராசன், அ.மார்க்ஸ், பொ. வேலுசாமி, ந.முருகேசபாண்டியன், ஸ்டாலின் ராஜாங்கம் போன்ற திறனாய்வாளகளும் ஓரிருமுறை வந்திருக்கிறார்கள், கலாப்ரியா, இமையம், ஜெயமோகன், சோ.தர்மன், பா. செயப்பிரகாசம், தோப்பில் முகம்மது மீரான் முதலானவர்கள் இரண்டு மூன்றுமுறையாவது வந்திருக்கக்கூடும். தமிழ்ச்செல்வன், கோணங்கி, பெருமாள் முருகன், ஜெ.பி.சாணக்கியா, குமாரசெல்வா, முருகவேள், ஏக்நாத், செல்லமுத்து குப்புசாமி, சந்திரா, நாறும்பூநாதன் போன்றவர்களும் வந்தார்கள்.
விக்கிரமாதித்தியன் தொடங்கி யவனிகா ஸ்ரீராம், பழமலய், ஹெச். ஜி. ரசூல், சுகுமாரன், யுவன் சந்திரசேகர்,அறிவுமதி, இன்குலாப், பாலா, கனல் மைந்தன், சிபிச்செல்வன், சல்மா, சுகிர்தராணி, தமிழச்சி, சக்தி ஜோதி, உமா மகேஸ்வரி, என்.டி.ராஜ்குமார், யாழன் ஆதி, போகன் சங்கர், சமயவேல் எனக் கவிகள் பலரும் வந்தார்கள்; சென்றார்கள். , தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிரான்சு எனப் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் வந்துள்ளனர். வில்வரத்தினம், சேரன், மௌனகுரு, சோபா ஷக்தி, பால. சுகுமார், அ.சிதம்பரநாதன் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
புதிய நோக்கில் எழுதக்கூடிய பேரா.அ. அ. மணவாளன்,பேரா.தி.சு.நடராசன், பேரா. மருதநாயகம், பேரா.துரை சீனிச்சாமி, பேரா. ம.திருமலை, பேரா. இ. முத்தையா, பேரா. பக்தவச்சல பாரதி, பேரா. ஆ. செல்லப்பெருமாள், பேரா. செ.சாரதாம்பாள், பேரா. ஆ. ஆலிஸ், பேரா. ஆ. திருநாகலிங்கம், பேரா. ஆனந்தகுமார், பேரா.இரா.ஜெயராமன், பேரா. வீ. அரசு போன்றவர்களுடன் புதிய தலைமை முறைக்கல்வியாளர்களான பாண்டிச்சேரி பாரவிக்குமார்,பழனிவேலு, சம்பத், ய.மணிகண்டன் போன்றவர்களும் கலந்துகொண்டு கட்டுரைகள் வாசித்திருக்கிறார்கள். நாடகத்துறையில் அறியப்பட்ட பேரா.சே.ராமானுஜம், பேரா.மு.ராமசுவாமி, செ.ரவீந்திரன், பார்த்திபராஜா, ம.ஜீவா, சிபு எஸ்.கொட்டாரம் போன்றோர் பங்கெடுத்திருக்கிறார்கள்.மொழி, கணினிப் பயன்பாடு குறித்துப் பேசும் பத்ரி சேஷாத்ரி, ஆழி. செந்தில்நாதன் போன்றோரோடு மொழியில் புலத்திலிருந்து முனைவர் எல். ராமமூர்த்தி, இளங்கோவன் போன்றோரும் வந்ததுண்டு. ஓவியா, அருள்மொழி, கமலி, இரா.பிரேமா, அரங்கமல்லிகா போன்ற பெண்ணியச் சொல்லாடல்காரர்களும் அழைக்கப்பட்டதுண்டு.
மற்ற பல்கலைக் கழகங்களின் துறைகள் இப்படிப் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியாது. எம் துறையின் பாடத்திட்டக்குழுவில் பிரபஞ்சன், கார்மெல், காலச்சுவடு கண்ணன், தோப்பில் முகம்மது மீரான் போன்றவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். பின்னை நவீனத்துவம், பெண்ணியம், அமைப்பியல், தலித்தியம், பண்பாட்டு ஆய்வுகள், திறனாய்வுப் போக்குகள், புனைகதைப்போக்குகள், கோட்பாடுகளும் இலக்கியமும், கவிதையின் செல்நெறிகள்,புலம் பெயர் இலக்கியம், புனைகதைப் பார்வைகள், ஆராய்ச்சி நெறிமுறைகள், அணுகுமுறைகள் என ஒவ்வொரு வகையிலும் எழுத்தாளர்களும் திறனாய்வாளர்களும் தொடர்ச்சியாகப் பங்கேற்றுள்ளனர். இதனைத் துறை தொடங்கிய 1997 முதல் தொடர்ச்சியாகச் செய்து நவீனத்தமிழ் இலக்கியத்தோடு தொடர்புடைய துறை என அடையாளப்படுத்தியிருக்கிறோம். இந்த அடையாளம் உருவாக எனது இருப்பு ஒரு காரணம்.
இந்த அடையாளத்திற்கு இணையாகப் பண்பாட்டுப் பொருட்கள் சேகரிப்பையும் நடத்தி வந்தோம். பொருட்களை நிரல்படுத்தத் தனியிடம் தேவை என்ற காரணத்தால் கூடுதலாகக் காட்சிப்படுத்தல் இயலாமல் இருந்தது. இந்த முறை இதனோடு புதிதாகச் சேகரித்துள்ள ஆவணக்காப்பகப் பொருள்களை முன்வைக்கப் போகிறோம்.எம் துறையில் பண்பாட்டாய்வுகளை நெறிப்படுத்தும் பேரா.ஸ்டீபன் இதற்கு முதன்மையான காரணம்.
கருத்துகள்